இளமை புதுமை

எனக்குள் நான்! | காபி வித் சியென்னார்

கார்த்திகா ராஜேந்திரன்

தமிழ் சுயாதீன இசைப் பிரியர்கள் மத்தியில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் பாடகர், இசையமைப்பாளர், சியென்னார். ‘பொன்னிற மாலை’, ‘பொறுப்பு’, `முயல் தோட்டம்’, ’வா போகலாம்’ போன்று சியென்னாரின் பெரும்பாலான பாடல்கள் மறுபடியும் கேட்கத் தூண்டுபவை. ‘துளிர்’ எனும் ‘Ambient’ பியானோ தனியிசை உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்தவரோடு ஒரு காபி கோப்பை உரையாடல்.

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் எழுத்துப் பயிற்சி, இசைப் பயிற்சி போன்றவற்றைத் திட்டமிடுவேன் என்பதால் காலை 6-7 மணிக்கு எனக்கு விடிந்துவிடும்.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - சைக்கிள் ஓட்டப் பிடிக்கும். ஆனால், தற்போதைக்கு ஒர்க்-அவுட், டயட் இரண்டுமே இல்லை.

மறக்க முடியாத தருணம்? - 2015 முதல் கிட்டத்தட்ட 80 இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் ஏதாவது ஒரு தருணம் மறக்க முடியாததாக அமைந்துவிடுகிறது.

இந்த வேலை இல்லையெனில்? - ஐடியாவே இல்லை. சிறு வயதிலிருந்தே இசையின் மீது நாட்டம் இருந்ததால், இசையை விட்டால் வேறு பாதை இல்லையென நினைக்கிறேன்.

‘பக்கெட்-லிஸ்ட்’ ஷேரிங்ஸ்? - பல இசையமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். இசைத் துறையில் நிறையப் படைப்புகளை உருவாக்க வேண்டும்.

புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - ஒரு விஷயம் இரண்டு வடிவங்களிலும் வெளியாகி இருந்தால், என்னுடைய ‘சாய்ஸ்’ புத்தகங்கள்தான். ஆனால், பொதுவாக வாசிக்கவும் பிடிக்கும், படங்கள் பார்க்கவும் பிடிக்கும்.

பொழுதுபோக்கு? - சும்மா இருப்பதுதான் என்னுடைய ‘ஹாபி’. என்றாலும், அண்மைக் காலமாக எலெக்ட்ரானிக் இசையைக் கற்று வருகிறேன்.

பிடித்த சமூக வலைதளம்? - சோஷியல் மீடியாவில் ‘அட்டென்ஷ’னுக்கு ‘ரிட்டென்’ஷன் இருப்பதால் அதோடு பெரும்பாலும் ‘லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப்’பில் இருப்பவன் நான்.

மறக்கவே முடியாத நபர்? - எப்போதும் எனக்குள்ளேயே நடக்கும் உரையாடலிலிருந்து என் செயல்கள் மாறும் என்பதால் ‘நான்’தான் மறக்க முடியாத நபர்!

மனதில் பதிந்த பாடல் வரி? - ஒரே ஒரு தண்ணீர்த் துளியில் நான் கண்ட பிரபஞ்சம்தான், அதே துளி நீரைக் கொண்டதுவோ... (‘ஒரே ஒரு’ எனும் பாடலில் இருந்து).

உறங்கவிடாத ஒன்று? - நிறைய விஷயங்கள் தூங்கவிடுவதில்லை. ஆனால், ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பிறகும் ஏற்படும் ‘எனர்ஜி-பூஸ்ட்’ என்னைச் சரியாகத் தூங்க விடாது. நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் பயங்கரமாகத் தூங்குவேன்!

திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்? - வீட்டில் என்னுடைய நாற்காலி இருக்கும் இடம்தான், ‘ஃபேவரைட் ஃஸ்பாட்’.

அதென்ன ‘Ambient’ தனியிசை? - ‘Ambient’ இசை என்பது ஒருவரை ‘ரிலாக்ஸ்’ செய்யக்கூடிய, ஆசுவாசப்படுத்தக்கூடிய இசை. ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும்போது அல்லது தூங்கும்போது, ஓய்வு எடுக்கும்போது கேட்கக்கூடிய ‘Ambient’ இசைத் தொகுப்பு.

SCROLL FOR NEXT