இளமை புதுமை

‘மொக்கை’யாகலாமா பூமர், க்ரிஞ்ச்? | ஈராயிரத்தில் ஒருவன்

ப. சூரியராஜ்

தொண்ணூறுகளில் பிறந்தவர்களின் வாயில் ‘மொக்கை’ எனும் வார்த்தைச் சிக்கிக்கொண்டு ஒரு காலத்தில் அல்லோலகல்லோலப்பட்டது. மூளை வேலை செய்யாமல் ஏதேனும் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தால் மொக்கை, சிரிப்பே வராத பல் தடம் பதியக்கூடிய கடிகளை நகைச்சுவையெனக் கக்கினால் மொக்கை, வகுப்பறையில் நடு வகிடு எடுத்து சீவி நட்டநடு பெஞ்சில் அமர்ந்திருந்தால் மொக்கை, அலுப்பு உண்டாக்கினால் மொக்கை, சலிப்பு உண்டாக்கினால் மொக்கை, கடுப்பு உண்டாக்கினால் மொக்கையென எங்கேயும் எப்போதும் எதற்கும் `மொக்கை' என்கிற வார்த்தையை இட்டு நிரப்பினார்கள்.

ஈராயிரங்களில் பிறந்தவர்களோ கிட்டதட்ட மனிதகுலத்தின் மகத்தான அத்தனை உணர்வுகளையும் காதைப் பிடித்துத் திருகி, வெறும் இரண்டே இரண்டில் ஒரு வார்த்தையை மூன்று முறை சொல்லி புதிய பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில், முதலாமாவது `க்ரிஞ்ச்'. அடுத்தது, `பூமர்'. இந்த உலகத்தில் எது க்ரிஞ்ச், எது க்ரிஞ்ச் இல்லை எனக் குழப்பம் அடைய தேவையில்லை.

ஏனெனில், இந்த உலகத்தில் எல்லாமே க்ரிஞ்ச்தான். ‘ஆண்டிப்பட்டி கனவா காத்து...’ பாடலுக்குத் தலையாட்டி ரீல்ஸ் போடுவது க்ரிஞ்ச், ‘காதல் கப்பல்...’ பாடலுக்குத் தனியறையில் டான்ஸ் ஆடினால் க்ரிஞ்ச், ‘மாலை டும்டும்...’ பாடலுக்கு மணவறையில் டான்ஸ் ஆடினால் க்ரிஞ்ச், க்ரிஞ்ச், க்ரிஞ்ச் எல்லாமே க்ரிஞ்ச்தான்.

க்ரிஞ்ச் புராணம்: கண்ணீர் வழிய சிரிக்கும் சிரிப்பு எமோஜியைத் தவிர, இதர எமோஜிகள் குறிக்கும் அத்தனை உணர்வுகளும் 2கே கிட்ஸுக்கு க்ரிஞ்ச்தான். காதல், அழுகை, வெட்கம், பயம், பெருமிதம் என அடுக்கிக்கொண்டே போகலாம். `ஏன் இப்படி க்ரிஞ்ச் குடோனாக ஒரு போலியான, செயற்கையான வாழ்க்கையை வாழ்கிறீர்கள்? இயல்பான, யதார்த்தமானதொரு சந்தோஷமான வாழ்க்கையை வாழலாமே' என்பார்கள் வைரல் மீம் டெம்பிளேட் ஷேர் செய்யும், சில ஈராயிரக் குழந்தைகள். ஆனால், உண்மையில், இந்த யதார்த்த குடோன்களைவிட க்ரிஞ்ச் குடோன்களே மகிழ்ச்சியானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையை நாம் சொல்வோமானால், நாம்தான் இப்போது பூமர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மசமசவென பிறந்து, வளர்ந்த தலைமுறையே அதிகாரப்பூர்வ பூமர்கள். எனவே, பேசும்போது பழைய பஞ்சாங்கத்தை எடுத்துப் புரட்டும் முதியவர்களை இவர்கள் பூமர் என அழைக்கத் தொடங்கினார்கள்.

பிறகு, நவீன உலகுக்கு ஒவ்வாத பழமையையும் பிற்போக்குத்தனத்தையும் பிடிவாதமாக அக்குளில் வைத்துக்கொண்டு சுற்றும் எந்தத் தலைமுறை ஆள்களையும் பூமர் என அழைக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகுதான் நிலைமை மோசமாகி, வாய் பேச முடிகிற எல்லாரையுமே பூமர் ஆக்கிவிட்டார்கள்.

பூமர் அண்ணா: என் நண்பர் ஒருவர் 90'களில் பிறந்தவர். அவருடைய தம்பியோ புதிய பைக் வாங்குகிற யோசனையில் இருக்க, இவரும் அதிக சிசி கொண்ட ரேஸிங் வகையறா பைக்குகள் வேண்டாம். பெட்ரோல் போட்டே காசு காலியாவதோடு முதுகு வலியும் வந்து சேரும் என அக்கறையோடு அறிவுறுத்தியிருக்கிறார்.

அதற்கு `போடா டேய் பூமரு' எனச் சிரித்துவிட்டு சென்ற 2கே கிட் தம்பி, இப்போது முதுகுவலியில் படுத்துக் கிடக்க, அண்ணன்தான் அட்டெண்டராகச் சாத்துக்குடி ஜூஸ் பிழிந்துகொண்டிருக்கிறார். `நான்தான் அப்பவே சொன்னேனே' என மீண்டும் அங்கலாய்த்த அண்ணனுக்கு, `பூமர் மாதிரியே பேசாதடா' என மீண்டும் பதில் வந்து விழுந்திருக்கிறது. கடுப்பான அண்ணன், தம்பிக்கு பிழிந்த ஜூஸைத் தானே அருந்திவிட்டுக் கிளம்பிவிட்டார்.

`ஏன்பா இப்படி?' எனக் கேட்டால் பூமர், `இப்படி பண்ணியிருக்கலாமே' எனச் சொன்னால் பூமர், `இப்படியெல்லாம் நடக்குமா' என அதிர்ச்சியானால் பூமர், இப்படிக் கட்டுரை எழுதினால் பூமரோ பூமர். ஆக, எனதருமை 2கே கிட்களே க்ரிஞ்சுக்கும், பூமருக்கும் சரியான சொல், பொருள், விளக்கம் அறிந்து இடம், பொருள், ஏவல் அறிந்து பயன்படுத்தவும். அதைவிட்டு ஏகத்துக்கும் பயன்படுத்த வேண்டாம். பிறகு, ‘மொக்கை’ ஆகிவிடும்!

- iamsuriyaraj@gmail.com

SCROLL FOR NEXT