இளமை புதுமை

கடல் அளவு வாய்ப்பு! | காபி வித் ராணவ்

இந்து குணசேகர்

பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்த ராணவ், ‘பிக்பாஸ் 8’ இல் ஒரு போட்டியாள ராகப் பங்கேற்றதன் மூலம் ஏராள மான ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். அந்த ரியாலிட்டி ஷோவின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாத அவருடன் நடத்திய ஒரு காபி கோப்பை உரையாடல்.

சூரிய உதயத்தைப் பார்க்கும் பழக்கம் உண்டா? - வேலைதான் என் நாளைத் தீர்மானிக்குது. எனவே, வேலையைப் பொறுத்து இது மாறும்.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - இரண்டுமே முக்கியம். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வெறும் ஒர்க் அவுட் மட்டும் போதாது. உணவுக் கட்டுப்பாடும் முக்கியம். நான் இரண்டையும் ஃபாலோ பண்ணுவேன்.

உங்களின் தனித்துவமான குணம்? - நான் எதையும் என் மனசுல வெச்சுக்க மாட்டேன். என்னைக் காயப்படுத்தினாலும் அதைக் கடந்து வந்திடுவேன். இந்தக் குணத்துனாலதான் சோர்வடையாமல் தொடர்ந்து ஓடிட்டு இருக்க முடியுதுனு நம்புறேன். அதேநேரம் உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

இந்த வேலை இல்லை என்றால்..? - நான் ஒரு வழக்கறிஞர். சின்ன வயசிலிருந்து சினிமா கனவு இருந்ததால், அதை நோக்கியே ஓடிட்டு இருக்கேன். சினிமா இல்லைனா, என் அம்மா என்னை நீதிபதியா பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க. அம்மாவுக்காக முயற்சி பண்ணிருப்பேன்.

மறக்க முடியாத தருணம்? - நடிகர் அதர்வாவுக்காக ஒரு படத்தில் டூப் போடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்புதான், ‘பிரேக் ஃபாஸ்ட்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை எனக்குப் பெற்று தந்தது. ராணவ் ஹீரோவான தருணத்தை மறக்க முடியாது.

புத்தக வாசிப்பா, சினிமா அனுபவமா? - நான் ஒரு மூவி லல்வர். எல்லாத் திரைப்படங்களையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிடுவேன்.

பிடித்த சமூகவலைதளம்? - இன்ஸ்டகிராம், எக்ஸ்.

உறங்கவிடாதது? - சினிமா வாய்ப்புக்காகத் தேடி அலையும்போது, அடுத்து நாம என்ன செய்யப் போறோம்னு மனசுக்குள்ள போராட்டமா இருக்கும். சினிமாவில் ஜெயிக்கணுங்கிற தேடல்தான் என்னை உறங்கவிடாமல் வைத்திருக்கிறது.

மனதில் பதிந்த சொல்? - ‘செயல்’. வார்த்தைகளால் சொல்வதைவிட ஒரு செயலைச் செய்து முடிப்பதில்தான் நமக்கான அடையாளம் கிடைக்கும். அந்த வகையில செயல்தான் எப்போதும் நின்று பேசும்.

மறக்கவே முடியாத நபர்? - எப்போதும் நிகழ்காலத்தில் வாழணும்னு நினைப்பேன். இந்தத் தருணத்தில் என்னை நேர்காணல் செய்யும் நீங்களும் எனக்கு முக்கியமான நபர்தான்.

திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்? - கடற்கரை. சந்தோஷம், சோகம் எதுவாக இருந்தாலும் கடலைப் பார்க்கப் போயிடுவேன். நம்ம முன்னாடி கடல் எவ்வளவு பெருசா இருக்கோ, அந்த அளவு வாய்ப்புகளும் இருக்கிறதா நான் பார்க்கிறேன்.

பிக்பாஸ் பயணம் எதைக் கற்றுக்கொடுத்தது? - நாம நினைக்கிறதைத் தைரியமா பண்ணணும். நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும்.

உங்களுக்கு நீங்களே கூறும் மோட்டிவேஷன் வாசகம்? - உன்னை நீ முதலில் நம்பு, இந்த உலகமும் ஒரு நாள் உன்னை நம்பும்.

SCROLL FOR NEXT