இளமை புதுமை

இங்க நாங்கதான் கிங்கு! | ஈராயிரத்தில் ஒருவன்

ப. சூரியராஜ்

சமூக வலைதளம் என்பதே உலகம் மொத்தமும் நாடு, மொழி, இனம் கடந்து ஒரு சமூகமாக மனிதர்கள் பரஸ்பரம் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தளம்தான். ஆனால், இப்போதோ நாடு, மாநிலம் என ஆரம்பித்து மாவட்டம், தாலுகா, கிராமம் வரை இன்ஸ்டகிராமை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் இந்த ஈராயிரக் குழந்தைகள்.

ரயில் நிலையங்களில் நெட்டுக்குத்தலாக நிற்கும் ஊர்ப் பெயர் பலகைக்குக் கீழே நின்றபடி ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள நான்கு சிறுவர்கள், தங்கள் ஊர்ப் பெருமைகளைப் பேசிவிட்டு, காலரைத் தூக்கிவிட்டு, நாக்கை மடித்துக்கொண்டு, சிரித்த முகத்துடன் ‘ஸ்லோமோஷ’னில் நடந்து கொண்டிருப்பார்கள்.

இந்த நொடி ஏதோவொரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி நீங்கள் தமிழகத்துக்குள் பயணித்தீர்களானால், அது அதிவேகமாகக் கடந்து செல்லும் சில ஆள் அரவமற்ற ரயில் நிலையங்களின் பிளாட்ஃபார்ம்களில் சிலர் மெதுவாக நடந்து கொண்டிருப்பதைக் காண முடியும். உதாரணமாக, ஊர்ப் பெயர் டோலக்பூர் என வைத்துக்கொள்வோம். ஊர்ப் பெயர் பலகைக்குக் கீழே நின்றபடி, `அஞ்சுக்குப் பிறகு ஆறு. அஞ்சாத டோலக்பூரு' என்பதுபோல எதையோ ஒன்றை உளறிவிட்டு வைரமுத்துவைப்போல் பெருமித நடை ஒன்று நடப்பார்கள்.

விந்தையான ரீல்ஸ்: கிழக்கின் ஏதென்ஸ், பாண்டியத் தலைநகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் இப்போதைய பெருமை என்ன தெரியுமா? `வணக்கமுடா புள்ள. மதுரையில இருந்து. எங்கட்ட பழகுனா பாசம் தெரியும். பகைச்சா கோபம் தெரியும். இலவச வெட்டு. பெரியாஸ்பத்திரி கட்டு. சூடா சுண்டலு. மதுரை மென்டலு. இதுதான் கணக்கு. இதுதான் வழக்கு. எங்கட்ட கரெட்டா இருந்தா புரோட்டா. இல்லாட்டி மண்ட பூரா சால்னா. எப்புன்னும் அப்புன்னும். மதுர பயலுகடா.' இப்படி இன்ஸ்டகிராமில் இன்னும் விதவிதமான, விசித்திரமான, விநோதமான, விந்தையான ரீல்ஸ்கள் கொட்டிக்கிடக்கின்றன.

இந்த வாசகங்களைக் கேட்டு, கேட்டு காது அவிந்து போன ஓர் இளைஞர், இந்தக் கணக்கையும் வழக்கையும் கலாய்த்து ரீல்ஸ் போட, பதிலுக்குக் காது புளிக்கும் அளவுக்குக் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்துவிட்டு, `வண்டியூர் கம்மா. தேடுவாங்க அம்மா. போடா தம்பி சும்மா' என வசனத்தையும் போடுகிறார்கள். இதே பாணியில் திருச்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை என எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு பஞ்ச் வசனம் உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களோ இன்னும் தனி ரகம்!

வடக்கே அதுக்கும் மேலே: இப்படித் தெற்கே தேய்கிறதே, வடக்காவது வாழ்கிறதா எனப் பார்த்தால், அங்கு நிலைமை இன்னும் மோசம். ஊர் பெருமை வசனங்கள் எல்லாம் பேசி முடித்து ‘ஸ்லோமோஷ’னில் நடந்த நடையில் இந்தியப் பெருங்கடலே வந்துவிட்ட காரணத்தால், இப்போது வேறொரு டிரெண்டைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

அதாவது, தங்கள் ஊரில் உள்ள நெடுஞ்சாலையையோ, ரயில் நிலையத்தையோ கடந்து செல்லும் வண்டி, ரயில்களைப் பார்த்து நாக்கைக் கடித்துக்கொண்டு, பயமுறுத்துவது போல கையைக் சுழற்றிவிட்டு, ஆள்காட்டி விரலால் ஒரு கெட்டவார்த்தையுடன் அதட்டலைப் போட்டுவிட்டு நடந்துகொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம், சாலைகளில் செல்லும்போது சம்பந்தமின்றி துரத்தும் ஜீவராசிகளைக் கண்டு மட்டும்தான் பயந்தோம்.

இந்த ரீல்ஸின் கீழே குவிந்துகிடக்கும் கமென்ட்டுகளில் `ஏண்டா ஊர்ப் பெயரைக் கெடுக்குறீங்க' என்று பலர் நொந்துகொண்டாலும் இவர்கள் நிறுத்துவதாக இல்லை. காரணம், ஆயிரக்கணக்கில் லைக்குகள் வந்து விழுகின்றன. `டேய் இவனே' என ஆரம்பித்து ஒவ்வொரு பெருமையையும் காப்பை ஏற்றிக்கொண்டு பேசியே வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் ஒருவர்.

தென்காசி நாயகன், திருவள்ளூர் புள்ள, கூடுவேஞ்சேரி கிறுக்கல், கோயம்புத்தூர் மாப்ள எனப் பெயரை வைத்துக்கொண்டு லட்சங்களில் லைக்ஸ் அள்ளுகிறார்கள்! அந்தந்த ஊரில் நடக்கும் ஏதேனும் விழாக்களில் இவர்களையே அந்த ஊரின் அடையாளமாகக் கருதி சிறப்பு விருந்தினர்களாகவும் அழைக்கிறார்கள் எனில் `ஊரால எங்களுக்குப் பெருமை இல்ல. எங்களாலதான் ஊருக்கே பெருமை' என வசனம் பேசத்தானே செய்வார்கள்!

- iamsuriyaraj@gmail.com

SCROLL FOR NEXT