முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஹாலிவுட் படங்களில் தமிழ் நடிகர்கள் நடிப்பது என்பது வானில் வானவில் தெரிவதுபோல் எப்போதாவது நிகழும். 1988இல் ரஜினி நடித்து, வெளியான ‘பிளட் ஸ்டோன்’ படத்தை ரசிகர்கள் ஆச்சரியமாகவே பார்த்திருக்கக்கூடும்.
ஆனால், இன்றைய டிஜிட்டலின் பாய்ச்சல் இந்தப் போக்கை மாற்றியிருக்கிறது. சந்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஹாலிவுட் நிறுவனங்கள் அனைத்து திரைத்துறையையும் அணுகத் தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில் தமிழ்ப் பின்னணியைக் கொண்ட இளம் கலைஞர்கள் பலரும் தற்போது கணிசமான எண்ணிக்கையில் ஹாலிவுட்டில் தடம் பதித்து வருகிறார்கள். குறிப்பாகப் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான திரை வாய்ப்பு ஆங்கிலத் தொடர்களில் அதிகரித்துள்ளது.
சிமோன் ஆஷ்லே: நெட் பிளிக்ஸின் ‘செக்ஸ் எஜூகேஷன்’ என்கிற தொடரில் ஒலிவியா ஹனனாக நடித்தவர் சிமோன் ஆஷ்லே. தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த சிமோன், பிரிட்டனைச் சேர்ந்தவர். ஆங்கிலத் திரைப்படங்கள், தொடர்கள் என அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்திலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் சிமோன்.
அதன் தொடர்ச்சியாகவே ‘பிரிட்ஜெர்டன் சீசன் - 2’ இல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு சிமோனுக்குக் கிடைத்தது. இத்தொடரில் ஆஷ்லே நடித்த கேட் என்கிற கதாபாத்திரம் உலகம் முழுவதும் கணிசமான ரசிகர்களை அவருக்குப் பெற்றுத் தந்தது.
மைத்ரேயி ராமகிருஷ்ணன்: கனடாவைச் சேர்ந்த மைத்ரேயி இலங்கைத் தமிழர். ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) என்கிற தொடரில் தேவி விஷ்வகுமராக நடித்த மைத்ரேயி, 2கே கிட்ஸ்கள் மத்தியில் மிகப் பிரபலம். அவ்வப்போது தமிழ் குறித்தும் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் இணையத்தில் பதிவிடும் மைத்ரேயிக்குத் தமிழகத்திலும் ரசிகர்கள் உண்டு. தனது தமிழ் அடையாளத்தைப் பல இடங்களில் பெருமையாகப் பகிரும் மைத்ரேயி நடிப்புடன் பெண் கல்வி, பெண் உரிமைகள் குறித்தும் பேசி வருகிறார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ‘மை லிட்டில் போனி’ போன்ற அனிமேஷன் தொடர்களுக்கு மைத்ரேயி டப்பிங் குரல் கொடுத்துவருகிறார்.
அசிஃப் அன்சாரி: தமிழ்க் குடும்பப் பின்னணியைக் கொண்ட அசிஃப் அன்சாரி அமெரிக்க நடிகராவார். மேடை நிகழ்த்து கலைஞரான அசிஃப் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். ‘மாஸ்டர் ஆஃப் நன்’ (Master of None) என்கிற நகைச்சுவைத் தொடரில், நியூயார்க்கில் திரை வாய்ப்பைத் தேடும் இளைஞராக தேவ் ஷா என்கிற கதாபாத்திரத்தில் அன்சாரி நடித்திருந்தார். இக்கதை அன்சாரியின் சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது 2018இல் நகைச்சுவைத் தொடரில் நடித்ததற்காகக் கிடைத்தது.
சரித்ரா சந்திரன்: தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட சரித்ரா சந்திரனின் பெற்றோர் ஸ்காட்லாந்துக்குக் குடிபெயர்ந்தவர்கள். ‘அலெக்ஸ் ரைடர்’, ‘பிரிட்ஜெர்டன் சீசன் - 2’ போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் அனைவருடைய கவனத் தையும் பெற்றார். திரைப்படங்கள், தொடர்கள் மட்டுமல்லாமல், கவனிக்கத்தக்க குறும்படங்களிலும் சரித்ரா நடித்திருக்கிறார். சமூக அமைப்பு, குடும்பச் சூழல், திரைத் துறையில் நிற வெறி எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சரித்ரா பலமுறை சாடியது இளைஞர்கள் மத்தியில் அவருக்கான வரவேற்பைக் கூட்டியது.