கார்த்தி நேர்காணல்: எனது உணவுமுறை தலைகீழாக மாறிவிட்டது!

By கா.இசக்கி முத்து

“கரோனா காலத்தில் மக்கள் ரொம்பவே இறுக்கமாகிவிட்டார்கள். திரையரங்குக்கு படம் பார்க்க வேண்டும் என்று அவர்கள் வரும்போது, மனம் விட்டு சிரித்து, மகிழ்ந்து, சுற்றுலா போய்விட்டு வந்த அனுபவத்தைத் தரக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது 'சுல்தான்'.” என உற்சாகம் கரைபுரள உரையாடுகிறார் நாயகன் கார்த்தி. அதிலிருந்து ஒரு பகுதி:

‘சுல்தான்' படத்தின் கதை என்ன?

தனக்காக ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று மகனிடம் அப்பா சொல்கிறார். அதை எடுத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்கிற எண்ணம் நாயகனுக்கு வருகிறது. அப்பாவுக்காக அவர் கேட்டத்தை முயற்சியாவது செய்துபார்த்துவிடலாம், தோற்றாலும் பரவாயில்லை என்று செயலில் இறங்குகிறான். அது என்னவென்றால் 100 ரவுடிகளைச் சமாளிக்க வேண்டும். அதை மகன் எப்படிச் செய்து முடிக்கிறான் என்பதுதான் கதை. ‘ரெமோ’ படத்தை முடித்துவிட்டு வந்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் எனக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் கதையைச் சுருக்கமாகச் சொன்னர். உடனே பிடித்துவிட்டது. அப்படித் தொடங்கிய ‘சுல்தா’னை இன்று பிரம்மாண்ட விருந்தாக ரசிகர்களுக்கு படையல் வைத்திருக்கிறோம்.

யோகி பாபுவுடன் முதல்முறையாக இணைந்திருக்கிறீர்கள்?

ரொம்ப நல்ல மனிதர். படத்தில் ‘இவங்களுக்கு சோறு போட்டே நான் செத்துவிடுவேன்’ என்று புலம்பிகொண்டிருக்கும் கணக்காளர். ஓட்டை லாரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த கேரக்டருக்கு அவரைத் தாண்டி வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை. நானும் அவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் ரொம்பவே ரசிக்க வைக்கும். நெப்போலியன் சார் என்னுடைய அப்பாவாக நடித்திருக்கிறார். சின்ன கதாபாத்திரம் என்றாலும் ரொம்ப நன்றாக இருக்கும். எமோஷன், ஆக்‌ஷன் என எல்லாமே கலந்தது லால் சார் ஏற்றுள்ள கதாபாத்திரம்.

ஒவ்வொரு காட்சியிலும் 100 ரவுடிகளுடன் இணைந்து நடித்தது பற்றி?

அதுதான் படமே! இந்தக் கதையில் அவர்கள் சிரிக்க வேண்டும், நடிக்க வேண்டும், அழ வேண்டும் என எல்லாமே செய்ய வேண்டும். முதல் நான்கு நாள்கள் பெரியச் சவாலாக இருந்தன. ஏனென்றால் 100 பேரையும் ஒரே பிரேமில் கொண்டுவந்து காட்சிப்படுத்த வேண்டும். ஜாலியாக செய்துவிடலாம் என்று போனோம், நிறைய சவால்கள் காத்திருந்தன. நிறைய கஷ்டப்பட்டோம். ஆனால், அதற்கான பலன் படத்தில் கிடைத்திருக்கிறது.

பல மாதங்களுக்குப் பிறகு படம் வெளியாகிறது. எப்படியிருக்கிறது மனநிலை?

தயாரிப்பாளர்கள் எல்லாம் எப்போது நிலைமை சரியாகும் என்று பதைபதைத்துப்போய் காத்திருந்தார்கள். மாதா மாதம் கடனுக்கான வட்டி ஏறிக்கொண்டே இருக்கும் அல்லவா? 'மாஸ்டர்' படம் வெளியானபோது, மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. கரோனோவுக்கு பயப்படுவதெல்லாம் சுத்த வீண் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். முக்கியமாகப் படம் நன்றாக இருந்தால், மக்கள் நிச்சயமாகத் திரையரங்குக்கு வருவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்ட பிறகு, திரையரங்கை நேசிக்கும் மக்களை நம்பி ‘சுல்தான்’ வெளிவருகிறது. அதைக் கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

உங்களுடைய அண்ணின் படம் ஓ.டி.டி.யில் வெளியானது. அப்போது என்ன நினைத்தீர்கள்?

'சூரரைப் போற்று' படம் எடுத்து முடித்து நீண்ட காலமாகிவிட்டது. எவ்வளவு நாள்தான் ஒரு படத்தை அப்படியே வைத்திருக்க முடியும். எந்த படமென்றாலும் அதில் சம்பந்தப்பட்டப் பலருக்கும் அதுவே வாழ்க்கை. பணம் மட்டுமேயல்ல. அந்தப் படத்துக்கு எது நல்லது என்ற முடிவை எடுக்க வேண்டியதும் அப்போது முக்கியமாக இருந்தது. இன்று கரோனாவுக்குத் தடுப்பூசி வந்துவிட்டது. விடுமுறை நாள்கள் வருகின்றன. ஆகையால் மக்கள் கண்டிப்பாகத் திரையரங்கு நோக்கித் துணிந்து வருவார்கள். ஆனால், அப்போது நிலைமை அப்படியில்லையே... வெளியே வரவே மக்கள் பயந்து வாழ்ந்த நாள்கள் என்பதை மறக்கமுடியாதில்லையா?

தொடர்ச்சியாக வெவ்வேறு கதைக்களங்களில் பயணிக்கிறீர்கள்! எப்படி அமைகிறது?

'கைதி' படத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதுவுமே கிடையாது. அந்தப் படத்தில் இருந்த சின்னக் குழந்தைக்கான எமோஷன் அனைவரையும் ஒன்றிணைந்தது. ஜாலியாகப் பார்ப்பதற்கு 'கைதி' படத்தில் என்ன இருக்கிறது? ஆனால், அனைவருமே 'கைதி 2' எப்போது வரும் என்று கேட்கிறார்கள். அதேநேரம் 'கைதி'யைப் போன்ற படங்களையே தொடர்ந்து பண்ண முடியாது. வேறுவேறு கதைகளை முயன்று பார்ப்பதுதான் நடிகர்களுக்கு அழகு.

அதனால்தான் புதிய கதைக்களங்களைத் தேடிக்கிட்டே இருக்கிறேன். அவசரப்பட்டு படங்கள் பண்ணுவதில்லை. இப்போது 'பொன்னியின் செல்வ'னில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இது முற்றிலும் வேறு களம். கடந்த காலம். நமது வரலாற்றில் பொற்காலமாக இருந்த ஒரு காலப் பகுதி. புத்தகத்தில் வாசித்த, பாடத்தில் படித்த கதாபாத்திரங்களை திரையில் பார்க்கப்போவது ரசிகர்களுக்கு அலாதியான அனுபவமாக இருக்கப்போகிறது.

'பொன்னியின் செல்வன்' எப்படி வளர்ந்துவருகிறது?

ரொம்பவும் அழகான கதை. மணி சார் அங்குலம்அங்குலமாக செதுக்கிக்கொண்டு இருக்கிறார். இத்தனை நடிகர்களுடன் நான் நடித்ததில்லை. ‘பொன்னியின் செல்வன்’ கதையின் புரிதலுக்காக கரோனா ஊரடங்கு சமயத்தில் அப்பா எனக்குச் சில புத்தகங்களை வரவழைத்துக் கொடுத்தார். பின்பு நண்பர்கள் சிலர், அதில் வரலாறு எவ்வளவு கற்பனை எவ்வளவு என்பதைப் புரிந்துகொள்ள சிலத் தகவல்களையும் ஆய்வேடுகளையும் கொடுத்து உதவினார்கள். அதை வாசித்துப் பார்த்தபோது 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியெல்லாம் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்களா என்று வியப்பாக இருக்கிறது. அதைப் பற்றி முழுமையாகப் பேசுவதற்கு இன்னும் நேரம் வரவேண்டும்.

இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டீர்கள். உணவுமுறையில் ஏதேனும் மாற்றம் செய்திருக்கிறீர்களா?

அரிசியைக் குறைத்துக்கொண்டு, முழுக்க சிறுதானியங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை சாப்பிடத் தொடங்கியிருக்கிறேன். என் குழந்தைகளும் அதைத்தான் சாப்பிடுகிறார்கள். சென்னையில் கடையில் கிடைக்கும் சிறுதானியங்களை பாலிஷ் செய்து விற்பதாக அறிந்தேன். பாலிஷ் செய்தால் அவற்றில் உள்ள நுண்சத்துகள் அகன்றுவிடும். எனவே, அறுவடைக்குப்பின் புடைத்து, தூசி, கல் நீக்கப்பட்ட இயற்கையான சிறுதானியத்தையே வீட்டில் பயன்படுத்துகிறோம்.

அவற்றில் விதவிதமான, சுவையான உணவு வகைகளை செய்யமுடியும். அரிசியில் சோறு, இட்லி, தோசையைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை. இந்தக் கரோனா சமயத்தில் வீட்டில் மாடியிலேயே தோட்டம் அமைத்துள்ளோம். வீட்டில் விளைந்த புடலங்காய், வெண்டைக்காய் என அம்மா சமைத்துக் கொடுக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வெள்ளை சர்க்கரை, மைதா ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்துவிட்டேன். நாட்டுச் சக்கரை, கறுப்பு உளுந்து, சிவப்பு அரிசி என உணவுமுறையை முழுமையாக மாற்றிவிட்டதால் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

58 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்