ஊரடங்கு உருவாக்கிய ‘சவால்கள்’ - வெங்கட் பிரபு பேட்டி

By கா.இசக்கி முத்து

கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல தமிழ்ப் படங்கள் இணையத் திரையில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் ‘லாக்கப்’ படமும் இணைந்துள்ளது. விரைவில் ஜீ5 தளத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தை மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியிருக்கிறார். இதில், வெங்கட்பிரபு வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இதில் முதன்முறையாக வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. மற்றொரு பக்கம் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற இணையத் தொடர், சிம்பு நடித்து வந்த ‘மாநாடு’ திரைப்படம் ஆகியவற்றை இயக்கிவந்தார். இவை குறித்து அவரிடம் உரையாடியதிலிருந்து...

கரோனா ஊரடங்கில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

நடைப்பயிற்சி செல்லத் தொடங்கியிருக்கிறேன். தினமும் 11 கிமீ வரை நடக்கிறேன். ஊரடங்கின் தொடக்கத்தில் நிறையப் படங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது நிறைய எழுதத் தொடங்கியிருக்கிறேன். நிறையப் படங்களுக்கு ஐடியாவாக எழுதி வைத்திருக்கிறேன். ஒரு படமாக ஒப்பந்தமாவதற்கு முன்னர்தான் கதையை முழுமையாக எழுதி முடிப்பது வழக்கம். ஆனால், இப்போது முழுமையான திரைக்கதையாகவே எழுதிக்கொண்டிருக்கிறேன்.

‘லாக்கப்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு என்ன காரணம்?

திரைக்கதைதான். இயக்குநர் சார்லஸ் கதை சொல்லியிருந்த விதம் ரொம்பவே பிடித்துவிட்டது. முன்னும், பின்னுமாக விறுவிறுவென நகரும் கதை. எனது கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். ஒரு கொலையை மையமாகக் கொண்ட, பாடல்கள் இல்லாத த்ரில்லர் படம் இது. இதுவரை ஜாலியாகச் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இதில் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் எனக்குச் சவாலாகவே இருந்தது. சார்லஸின் கதைதான் படத்தில் ஹீரோ. படத்தைப் பார்த்து முடித்ததும் ரசிகர்களுக்கு முழுமையான திருப்தி கிடைக்கும்.

உங்களுடைய ‘சென்னை 28’ படத்தில் நடித்த நிதின் சத்யா, ‘லாக்கப்’ படத்தின் தயாரிப்பாளர். எப்படி உணர்கிறீர்கள்?

நிதின் சத்யாவுடைய வளர்ச்சி சந்தோஷமாக இருக்கிறது. தயாரிப்பை மிகச் சரியாகத் திட்டமிட்டிருக்கிறார். நண்பர்களை வைத்தே படக்குழுவை அமைத்திருக்கிறார். மிக மிக முக்கியமாக ஒரு நல்ல கதையைத் தேர்வு செய்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக அவருடைய முயற்சிகள் கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியவை.

கரோனா ஊரடங்கு முடிந்ததும் கோலிவுட்டில் எப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

போட்டி அதிகமாகும். ஒவ்வொரு இயக்குநரும் வித்தியாசமாக யோசித்துக் கதைகளைத் தயார் செய்திருப்பார். அதனால், இனிப் புதுப்புதுக் கதைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கடந்த 5 மாதங்களாக ஓடிடி தளத்தில் அனைவருமே வித்தியாசமான படங்களையும் தொடர்களையும் பல்வேறு மொழிகளில் பார்த்துவிட்டோம். ‘மணி ஹெய்ஸ்ட்’, ‘கிங்டம்’ உட்படப் பல பிரபலமான இணையத் தொடர்களைப் பார்த்து ரசிகர்கள் வியந்திருக்கிறார்கள்.

இனித் திரையரங்குக்கு வரும்போது ஊரடங்கு காலத்தில் கண்டு ரசித்த, வியந்த இணையத் தொடர்களுடன் ஒப்பிட்டுப் படம் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஊரடங்கு உருவாக்கியிருக்கும் மிகப் பெரிய சாவல்களில் ஒன்று இது. அதற்கு ஏற்ற வகையில் அனைத்து இயக்குநர்களுமே வித்தியாசமாகச் செய்வார்கள் என நினைக்கிறேன்.

ஓடிடி தளங்களில் நேரடியாகத் திரைப்படங்கள் வெளியாவது சரியா?

வேறு என்ன பண்ண முடியும்? ‘பாவம் தயாரிப்பாளர்கள், கரோனாவினால் கஷ்டப்படுகிறார்கள்’ என்று அவர்கள் கடன்வாங்கிய பணத்துக்கு வட்டிகட்ட யாரேனும் முன் வருவார்களா? கண்டிப்பாக வரமாட்டார்கள். இந்த மாதிரியான நேரத்தில் எப்படிப் பிரச்சினைகளைப் புத்திசாலித்தனமாக எதிர்கொள்வது என்பதுதான், தற்போதைய தேவை. திரையரங்க வெளியீடு, ஓடிடி வெளியீடு இரண்டுமே தனித் தனிதான். ஆனால், நஷ்டத்தை எப்படியாவது சரிக்கட்ட நினைப்பதுதானே முக்கியம். ஓடிடி தளங்களிலும் எவ்வளவுதான் படங்களை வாங்கி வெளியிடுவார்கள்.

ஓடிடிக்கு என்றே படங்கள், தொடர்கள் இயக்குவதில் விதிமுறைகள் இருக்கின்றனவா?

கண்டிப்பாக... ஓடிடி தளத்துக்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற தொடரை இயக்கியிருக்கிறேன். காஜல் அகர்வால், வைபவ், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. ஓடிடி தளங்களுக்கு எந்தக் கதையை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்பதெல்லாம் கிடையாது. அவர்களும், ‘எங்களுக்கு இந்த மாதிரியான விதிமுறைகளுடன் படங்கள், தொடர்கள் வேண்டும்’ என்று சொல்கிறார்கள். அங்கும் பல நிபந்தனைகள் உள்ளன.

பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே இனித் திரையரங்கில் வெளியாகும் என்ற நிலை வந்துவிடுமா?

கிட்டத்தட்ட அதுதானே நடந்துகொண்டிருக்கிறது. ‘அவெஞ்சர்ஸ்’, ‘டெனெட்’, ‘அண்ணாத்த’, ‘இந்தியன் 2’, ‘வலிமை’, ‘மாஸ்டர்’, ‘டாக்டர்’, ‘சூரரைப் போற்று’, ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மாநாடு’ போன்ற பெரிய படங்களைத் திரையரங்குகளில் பார்த்தால்தான் சிறப்பாக இருக்கும். அவற்றின் பட்ஜெட்டுக்கு ஏற்ப விலை கொடுத்து ஓடிடி வெளியீட்டுக்கு வாங்குவார்களா என்பது தெரியவில்லை. உலகமெங்கும் வெளியீடு, பிற மொழி உரிமைகள் என அனைத்தையும் விற்றே போட்ட முதலீட்டை எடுப்பார்கள். கண்டிப்பாக மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு, பெரிய படங்கள் வெளியாகும்போது மக்கள் திரையரங்குக்கு வருவார்கள். திரையரங்கில் படம் பார்த்தல் என்ற கொண்டாட்ட மனோபவம் நம் ரத்தத்தில் ஊறிப்போனது.

‘மாநாடு’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்கும் முன், சிம்புவை வைத்து இன்னொரு படம் இயக்க இருப்பதாகத் தகவல் வெளியானதே...

உண்மைதான். தற்போது நிலவும் சூழலுக்கு ஏற்ற வகையில் சின்ன படமாக ஒன்று பண்ணலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். ‘மாநாடு’ படப்பிடிப்பு கரோனாவால் நின்றுவிட்டது. ஆகையால் தயாரிப்பாளருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும். நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட முன்தொகை, ஹைதராபாத்தில் போடப்பட்ட அரங்குகளுக்கான செலவு, தங்கும்விடுதிச் செலவு, படக்குழுவுக்கான செலவு என எல்லாமே செய்துவிட்டுப் பாதியிலேயே படத்தை நிறுத்திவிட்டு வந்துவிட்டோம். எனவேதான் இந்த இடைக்கால முயற்சி. ஒரு சின்ன படத்துக்கான ‘ஐடியா’ ஒன்றைப் பேசினோம். சிம்புவுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. வரக்கூடிய சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்தே படப்பிடிப்புக்குத் திட்டமிட வேண்டும். அதனைத் திரையரங்கில் வெளியிட முடியாது, ஓடிடியில்தான் கொடுக்க முடியும்.

உங்களுடைய பெரியப்பா இளையராஜாவுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது கொடுக்க வேண்டும் என்று, அவருடைய ரசிகர்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்களே...

அரசாங்கம் எப்போது கொடுக்க வேண்டுமோ அப்போது கொடுக்கட்டும். மக்கள் விருதே பெரிதாக இருக்கிறது. மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பே மிகப் பெரிய விருது. அது காலத்தால் அழிக்க முடியாத விருது. தாதா சாகேப் பால்கே விருது வந்தால் சந்தோஷம். ‘

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்