படகோட்டியே படகைக் கவிழ்த்துவிட்டால்?

By எஸ்.எஸ்.வாசன்

போற்றுதற்குரிய ஆற்றல் மிக்க பலரது வாழ்வில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் அவர்களைத் திகைக்கவைப்பது கண்கூடு. மற்றவர்களின் வேதனையைப் போக்கும் சாதனை புரியும் அவர்கள், தங்களுக்கு நேரிடும் சில சோதனைகளை உடனே தீர்க்க முடியாமல் மனம் வருந்தும் உணர்வு திரையில் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆற்றாமை உணர்வை அழகாக வெளிப்படுத்தும் மிகப் பிரபலமான இந்திப் பாடலையும் அதற்கு இணையான தமிழ்ப் பாடலையும் பார்ப்போம்.

ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் நடித்து 1972 -ம் ஆண்டு வெளிவந்த அமர் பிரேம் (அழியாத காதல்) படத்தின் அனைத்துப் பாடல்களும் புகழ்பெற்றவை. எனினும் ஆர்.டி. பர்மன் இசையில் ஹஸ்ரத் ஜெய்பூரியின் வரிகளில், கிஷோர் குமார் பாடிய, இந்துஸ்தானி பைரவி ராகத்தில் அமைந்த, சாகா வரம்பெற்ற பாடல் இது. எளிய வரிகள், ஆழமான கருத்து, மனதைத் தொடும் இசை, இதமான குரல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அந்தப் பாடல்:

(ச்)சிங்காரி கோயி தட்கே,

தோ சாவன் உஸ்ஸே புஜாயே

சாவன் ஜோ அகன் லகாயே,

உஸ்ஸே கோன் புஜாயே

ஓ... கோன் புஜாயே

பத்ஜட் ஜோ பாக் உஜாடே

ஓ பாக் பஹார் கிலாயே

ஜோ பாக் பஹார் மே உஜ்டே

உஸ்ஸே கோன் கிலாயே

ஓ கோன் கிலாயே...

பாடலின் பொருள்:

(திடீரென எழுகின்ற) தீச்சுவாலையை

(அப்போது பெய்யும்) மழை அனைத்துவிடும்.

மழையே தீயை உருவாக்கினால்

அதை யார் அணைப்பது? யார் அணைப்பது

இலையுதிர் காலம் உதிர்க்கும் தோட்டத்து இலைகளை

வசந்த காலம் புதுப்பிக்கும்

வசந்த காலத்திலேயே

உதிர்ந்து நிற்கும் தோட்டத்தை

எவரால் மலரச் செய்ய முடியும்.

என்னிடம் கேட்காதே

எப்படி (நம்) கனவு இல்லம் இடிந்தது என்று

அது உலகம் செய்த செயல் அல்ல

நாம் எழுதிய கதை

எதிரி (உள்ளத்தில்) கோடரியை

பாய்ச்சினால், ஆறுதல் அளிக்க

நம் நண்பர்கள் இருப்பார்கள்

நெருங்கிய நண்பர்களே (நம் மனதை) காயப்படுத்தினால் யார் சரி செய்வார்கள்

என்ன நடந்திருக்குமோ தெரியாது

என்ன செய்திருப்பேனோ தெரியாது

சூறாவளிக்கு முன் எந்தச் சக்தியும் நிற்க முடியாது

(என்பதை) ஏற்கவே வேண்டும்

இயற்கையின் குற்றம் அல்ல அது

(எனில்) வேறு எதோ சக்தியுடைய குற்றம்.

கடலில் செல்லும் படகு தடுமாறினால்

படகோட்டி (எப்படியாவது) கரை சேர்த்திடுவான்

படகோட்டியே படகைக் கவிழ்த்துவிட்டால்

(படகில்செல்பவரை) யார் காப்பாற்றுவார்

ஓ…யார் காப்பாற்றுவார்.

கதையின் அடிப்படையிலும் பாத்திரங்களின் இயல்பிலும் வேறுபட்டிருந்தாலும் இதற்கு

இணையாக விளங்கும் தமிழ்ப் பாடல் வெளிப்படுத்தும் ஆற்றாமை உணர்வு இப்பாடலுடன் நெருங்கி இருப்பதைப்

பார்க்கலாம். கடமை தவறாத காவல் அதிகாரியாக இருந்தும் தறுதலைப் பிள்ளையைத் திருத்த முடியாமல் அவன் செய்கையால் கலங்கும் கழிவிரக்க உணர்வைக் கன கச்சிதமான நடிப்பால் வெளிப்படுத்தும் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த தங்கப் பதக்கம் என்ற வெற்றிப் படத்தின் பாடல்.

இசை விஸ்வநாதன். பாடல் கவிஞர் கண்ணதாசன்.

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது

அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல

நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல

பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல

எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல

ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல

அந்தத் திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல

(சோதனை மேல் சோதனை)

வசனம்: மாமா… காஞ்சிபோன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதல் அடையும்.

அந்த நதியே காஞ்சி போய்ட்டா?

துன்பப்படுறவங்க எல்லாம் அந்தக் கவலையைத் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

ஆனா தெய்வமே கலங்கி நின்னா?

அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்???

பாடல்: நானாட வில்லையம்மா சதையாடுது

அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது

பூவாக வைத்திருந்தேன் மனமென்பது

அதில் பூநாகம் புகுந்துகொண்டு உறவென்றது

அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா

இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

(சோதனை மேல் சோதனை)

“துன்பப் படுறவங்க எல்லாம் அந்தக் கவலையைத் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

ஆனா தெய்வமே கலங்கி நின்னா??

அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?”

பாட்டின் இடையே வரும் இந்த வசனம் பல தருணங்களிலும் தளங்களிலும் மேற்கோளாகக் காட்டப்படுவது இங்கு குறிப்பிடத்தகுந்தது.

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்