திராவிட இயக்கம் கோரி நின்ற சமூக மாற்றம் உருவானால், அது தரப்போகும் சமத்துவ வலிமை குறித்து முதலில் உணர்ந்தவர்கள் உழைக்கும், சாமானிய மக்கள். அவர்களை முதலில் அரசியல்படுத்தியதில், பொதுக்கூட்ட மேடைகள், தலைவர்களின் பேச்சுகள், போராட்டங்கள், பத்திரிகை எழுத்துகள் ஆகிய வடிவங்களுக்கு முதன்மைப் பங்கிருந்தது. ஆனால், நாடகம், சினிமா இரண்டையும் திராவிட இயக்கம் கைப்பற்றியபோது ஆதிக்க வர்க்கம் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொண்டது. அதன் நீரோட்டத்தில் கலப்பதைத் தவிர, அதற்கு வேறு வழி இருக்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான அந்தக் காலக்கட்டத்தில், தொழில்முறை நாடகக் குழுக்கள் புராண நாடகங்களையே அதிகமும் சார்ந்திருந்ததால் தேய்வைச் சந்திக்கத் தொடங்கியிருந்தன. மேலும், பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகம் சந்தித்த தடையும் அதன் தொடர்ச்சியாகத் திராவிட இயக்கச் சீர்திருந்த நாடகம் ஒரு இயக்கமாக உருவெடுத்ததும் புராண நாடகங்கள் மீதான நாட்டத்தைக் குறைத்தது.
குறிப்பாக, எம்.ஆர்.ராதாவின் ‘கீமாயணம்’, என்.எஸ்.கிருஷ்ணனின் ‘கிந்தனார்’, ஜலகண்டபுரம் கண்ணனின் ‘வீர வாலி’, அண்ணாவின் ‘சந்திரோதயம்’, ‘நீதிதேவன் மயக்கம்’, மு.கருணாநிதியின் ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, திருவாரூர் தங்கராசுவின் ‘ரத்தக் கண்ணீர்’, துறையூர் மூர்த்தியின் ‘இலங்கேஸ்வரன்’ உள்ளிட்ட பல நாடகங்கள் எதை நோக்கி நகர வேண்டும் என்கிற திசையில் ஒளி பாய்ச்சின. கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மக்கள் இயக்கமாக மேற்கு வங்கத்தில் வளர்ந்துகொண்டிருந்த இதே காலக்கட்டத்தில், திராவிட இயக்கத்தைப் போலவே அங்கே இடது சாரிகள் சீர்திருத்த நாடகத்தை ஒரு கலை ஆயுதமாகக் கையிலெடுத்திருந்தனர்.
‘கலையின் நிலைமை’ - இப்படியொரு காலக்கட்டத்தில் புராண நாடகங்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற முனைப் போடு, பம்மல் சம்பந்தனார் தலைமையில், 1944, பிப்ரவரியில் ஈரோடு சென்ட்ரல் திரையரங்கில் ‘தமிழ் மாநில நாடகக் கலை வளர்ச்சி மாநாடு’ நடைபெற்றது.
நாடக மேடையிலிருந்து திரையுலகில் நுழைந்து ஒரு நட்சத்திரமாகப் புகழ்பெற்றுவிட்ட எம்.கே.டி. இந்த மாநாட்டுக்கு முன்னிலை வகித்தார். ஆனால், இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று திராவிட இயக்கத்தை ஆதரித்த ‘முத்தமிழ் நுகர்வோர் சங்கம்’ என்கிற அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்த முற்பட்டனர்.
அன்றைக்குச் சீர்திருந்த நாடகாசிரியராகப் புகழ்பெற்றுவிட்ட அண்ணா அவர்களைத் தடுத்தார். அது மட்டுமல்ல; அந்த மாநாட்டில் கலந்துகொண்ட அண்ணா, ‘கலையின் நிலைமை’ என்கிற தலைப்பில், ‘புராண நாடகங்கள் தற்கால அரசியல், சமூகச் சூழ்நிலையில் பொருத்தமிழந்தது குறித்தும் சீர்திருந்த நாடகங்களின் தேவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும்’ உரையாற்றினார்.
எந்த நோக்கத்துக்காக அந்த மாநாடு கூட்டப்பட்டதோ, அதையே புரட்டிப்போட்டார் அண்ணா. சொன்னதுடன் நிற்கவில்லை. கே.ஆர்.ராமசாமியின் குழுவுக்காக ‘ஓர் இரவு’, ‘வேலைக்காரி’ ஆகிய நாடகங்களை எழுதினார். தொடர்ந்து ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ ஆதிக்க வர்க்கத்தின் சாதியப் பாகுபாட்டின் மீது கலைப் பேரிடியாக இறங்கியது.
அண்ணா காட்டிய வழியில்... சீர்திருந்த நாடகங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைக் கண்ட தொழில்முறை நாடகக் குழுக்கள், புராணக் கதைகளை உதறியெழுந்து, சமூகத்தின் நடப்புகளை எப்படி நாடகமாக்குவது என்பதை, அண்ணாவின் முன்மாதிரிகள் வழியாக அடையாளம் கண்டன.
காங்கிரஸ் அபிமானி யாகவும் ராஜாஜியின் மாணவராகவும் விளங்கிய பத்திரிகையாளர், விமர்சகர், எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, அன்றைய சமூகச் சீர்திருத்த நாடகங்கள் திராவிட இயக்கத்தின் பெரும் களமாக அமைந்துவிட்டதையும் அதில் அண்ணாவின் பங்கு ஒரு பெரும் தொடர்ச்சியை உருவாக்கியிருப்பதையும் ‘ஓர் இரவு’ நாடகத்தைப் பார்த்தபின் எழுதினார்: ‘தமிழகத்தில் இப்ஸன் இல்லை, பெர்னாட் ஷா இல்லை என்று இனி யாரும் புலம்பத் தேவையில்லை. இங்கேயொரு அண்ணாதுரை இருக்கிறார்’.
அவர் குறிப்பிட்டதைப் போலவே ‘தென்னாட்டு பெர்னாட் ஷா’ என்று மக்களால் அழைக்கப்பட்ட அண்ணா முன்மாதிரியாகக் காட்டிய வழியில், அவருடைய தம்பியாக தன்னுடைய சீர்திருந்த நாடகங்களைப் படைத்தார் மு.கருணாநிதி. இவருடைய நாடகங்களில் முதன்மைக் கதாபாத்திரங்கள் பெரும்பான்மையும் அடித்தட்டு மக்களாகவே இருந்தன. கருணாநிதி எழுதி அரங்கேற்றிய அவருடைய முதல் நாடகம், ‘பழனியப்பன்’. இது, திருவாரூர் பேபி டாக்கீஸ் அரங்கத்தில் 1944இல்அரங்கற்றப்பட்டது. இதுவே பின்னர் ‘நச்சுக்கோப்பை’ என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் நடிக்கப்பட்டது.
எம்.ஆர்.ராதாவுக்காக கருணாநிதி எழுதிய நாடகம் ‘தூக்குமேடை’. அதை வாசித்து வியந்த எம்.ஆர்.ராதா, மு.கருணாநிதிக்கு அளித்த பட்டம்தான் ‘கலைஞர்’. அதைத் தொடர்ந்து, ‘சிலப்பதிகாரம்’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘திருவாளர் தேசியம் பிள்ளை’,‘பரதாயணம்’ உட்பட 21 நாடகங்களை எழுதிக் குவித்தார்.
‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அதைப் பகடி செய்து ‘பரப்பிரம்மம்’ என்கிற தலைப்புடன் கேலிச் சித்திரம் வெளியிட்டது அக்காலத்தின் பிரபலப் பத்திரிகை. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள விரும்பிய கலைஞர் மு.கருணாநிதி, ‘பரப்பிரம்மம்’ என்கிற அதே தலைப்பில் எழுதிய நாடகம் தமிழகமெங்கும் பயணப்பட்டது.
மாடர்ன் தியேட்டர்ஸில் கலைஞர்: பாரதிதாசன், அண்ணா, மு.கருணாநிதி ஆகியோரின் நாடகங்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ணுற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம், புராணங்களை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, இலக்கிய, சமூகக் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வந்தார். அப்படி அவர் முதலில் கையிலெடுத்தது பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ என்கிற கவிதை உரைவீச்சுக் காவியம். இதற்கான திரைக்கதை, வசனத்தை பாரதிதாசனே எழுத, தமிழ் தெரியாத ஆங்கிலேய இயக்குநரான எல்லிஸ் ஆர்.டங்கனை இயக்குநராக நியமித்தார்.
அவருக்கு உதவியாக கே.சோமுவை உதவி இயக்குநராக அமர்த்தினார். அந்தப் படம்தான் ‘பொன்முடி’ (1950). எடுத்தவரை போட்டுப் பார்த்த சுந்தரம், ‘படத்தின் பின்பகுதியில் இன்னும் கொஞ்சம் கதையை வலுப்படுத்த வேண்டும்; அதற்காக என்ன செய்யலாம், யாரை எழுதச் சொல்லலாம்’ என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் மு.கருணாநிதியை அழைத்துவந்து சுந்தரத்திடம் அறிமுகப்படுத்தினார் கவி கா.மு.ஷெரீஃப்.
அவரிடம் ‘பொன்முடி’யின் பின்பகுதிக் கதையை எழுதும்படி டி.ஆர்.எஸ்.சொல்ல, மறுக்காமல் ஸ்டுடியோவிலேயே தங்கி மு.கருணாநிதி எழுதிக்கொடுத்ததுதான் படத்தில் ‘கபாலிகர்கள்’ வரும் பகுதி.‘பொன்முடி’ வெளியாகி வெற்றிபெற்றதுடன், மாடர்ன் தியேட்டர்ஸ் என்கிற ஒரு பெரும் திரைப்பட சாம்ராஜ்யத்தில் மு.கருணாநிதி அடியெடுத்து வைக்கக் காரணமாகவும் அமைந்தது.
(விழிகள் விரியும்)
- jesudoss.c@hindutamil.co.in