தமிழ் சினிமாவில் தொடக்கம் முதல் கையாளப்பட்டுவரும் ஒரு முக்கியமான அம்சம். இது இல்லையேல் பல தமிழ்ப் படங்களோ, அவற்றில் இடம்பெறும் பல காட்சிகளோ இருந்திருக்காது. தமிழ் இயக்குநர்களுக்கு மிகவும் உதவும் ஓர் இன்றியமையாத, இணைபிரியாத அந்த விஷயம் ‘காப்பி’.
தமிழ் சினிமாவுக்கு இன்றியமையாத ஆபத்பாந்தவனாக அவ்வப்போது வந்து ‘உதவி’ செய்யும் இதை, ‘நகலெடுத்தல்’ என்கிற நாகரிகச் சொல்லால் தமிழில் அழைத்தாலும், ஒவ்வொரு ‘சுட்ட கதை’யின் பூர்விகத்தையும் துருவிப் பார்க்கப் போகிறோம். அவற்றை வாசிக்கும்போது சுடப்பட்ட விதத்தில் சுவாரசியம் நல்ல ‘ட்ரீட்’ ஆக இருக்கும்.
மின்னல் வெட்டும் வேகத்தில் வாசித்து முடித்துவிடக்கூடிய இந்த வாமன அளவுத் தொடரில் வன்மம் துளியும் இருக்காது. நகைச்சுவையும் பகடியுமே இருக்கும். படிக்கும் உங்களின் இதழ்களில் புன்முறுவலை வரவழைப்பதே நோக்கம். கூடவே எங்கிருந்தெல்லாம் தமிழில் படங்கள் கதைக்கான ஊட்டச்சத்தை உருவிக்கொண்டன என்பது தெரிந்தால் சில வேளைகளில் ஆச்சரியமாகக்கூட இருக்கும். ஆதியிலிருந்து என்றில்லாமல், 2000த்திலிருந்து வைத்துக்கொள்வோம்.
2000 அக்டோபரில் தீபாவளி வெளியீடாக வந்த ‘தெனாலி’ படம்தான் நம்மிடம் சிக்கிய முதல் எலி! கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பு, கிரேஸி மோகனின் தூள் பறக்கும் நகைச்சுவை வசனங்கள், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜெயராமின் நடிப்பு என கே.எஸ்.ரவிகுமார் இயக்கி சூப்பர் ஹிட்டான படம். அப்படியே ரீவைண்ட் செய்தால், 1991இல் ‘What about Bob?’ என்று ஒரு திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியானது.
அதில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், தனக்குக் குணமாக வேண்டும் என்கிற எண்ணத்தில் அவரது மனநல மருத்துவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அவரைத் துரத்திக்கொண்டு அங்கே சென்றால் என்ன ஆகும் என்பதே கதை. இதில் போனஸ் என்னவென்றால், அந்த மனநல மருத்துவரின் குடும்பத்துடனும் ஒன்றிவிடுவார் இந்த நோயாளி.
இப்படி ‘What about Bob’ படத்திலிருந்து சரமாரியாகச் சுட்டிருந்தாலும் தமிழுக்கு ஏற்றவாறு எல்லாவற்றையும் மாற்றியதே ‘தெனாலி’யின் சாதனை. மருத்துவர் மாத்ருபூதத்தின் பெயரை நினைவுபடுத்தும் பஞ்சபூதம் என்கிற பிரமாதமான கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் நடிப்பில் அதகளம் செய்திருந்தார். ‘What about Bob’ படத்தில் நடித்திருந்தவர் பில் மர்ரி (Bill Murray). ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். அதிலும் இரண்டு படங்களுக்கும் ஒற்றுமை! இரண்டு படங்களிலுமே இரண்டு சிறப்பான நடிகர்கள்.
அடுத்த வாரம் என்ன படம்?
- rajesh.scorpi@gmail.com
(சூடு பறக்கும்)