விஜய் - அட்லி கூட்டணியில் உருவான படங்களில் ‘பிகில்’ படம்தான் வசூல் ரீதியாக டாப் எனத் திரையரங்க உரிமையாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது. ‘பகவதி’ ‘போக்கிரி’, ‘ஜில்லா’ போன்ற படங்களில் ‘கேங்ஸ்டர் டச்’ கொண்ட கதாபாத்தி ரங்களில் விஜய் நடித்திருந்தாலும் அதுவரை இல்லாத வகையில் ‘பிகில்’ படத்தில் ராயப்பன் என்கிற முற்று முழுவதுமான தாதாவாக விஜயை நடிக்க வைத்தவர் இயக்குநர் அட்லி. அந்தக் கதாபாத்திரம் எப்படி உருவானது என்பதை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
“கதை பிடித்து ஒப்புக்கொண்டபின் அதைத் தன்னுடைய படமாக நினைப்பது தான் ஓர் உச்ச நட்சத்திரம் செய்யும் முதல் சிறந்த பங்க ளிப்பு! இது என்னுடைய படம் என்று உணர்ந்த பிறகு, அதன் கதையும் காட்சி அமைப்பு களும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக வரவேண்டும் என்பதற் காக, நமக்குக் கிடைத்த உச்ச நட்சத்திரம் ரிஸ்க் நிறைந்த காட்சிகளில் எவ்வளவு துணிச்சலும் அர்ப்பணிப்பும் காட்டக் கூடியவர் என்பது இயக்குநருக்கு முக்கி யம். அதைத் தாண்டி, தனது பிம்பத்தைக் கட்டமைக்கும் துணைக் கதாபாத்திரங்களையும் அவற்றில் நடிப்பவர்களையும் எவ்வளவு மதிக்கிறார் என்பதும், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர்களை எவ்வளவு அரவணைத்துப் போகிறார் என்பதும் அதைவிட முக்கியம். இந்த இரு முக்கியமான தேவைகளில் விஜய் அண்ணாவின் அணுகுமுறை டாப் கிளாஸ் என்பதை அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்.
துணைக் கதாபாத்திரங்களுக்கு எந்த பெரிய ரிஸ்க்கும் ஒரு மாஸ் படத்தில் இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒருசில காட்சிகளில் அமைந்துவிடலாம். அப்படித் துணைக் கதாபாத்திரங்களுக்கு ரிஸ்க் இருந்தால் அவர்களுக்கு ‘பாடி டபுள்’ பயன்படுத்தும்போது ரசிகர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், விஜய் அண்ணா போன்ற உச்ச நட்சத்திரம், ஆக்ஷன் காட்சிகளில் ‘பாடி டபுள்’ பயன்படுத்திக்கொண்டே இருந்தால், அது ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். இதை அவர் நன்கு உணர்ந்தவர். அதனால்தான் ‘தெறி’ படத்தில் ‘பாடி டபுள்’ மறுத்து, 90 அடி உயரப் பாலத்திலிருந்து குதித்தார். இதுபோல் பல ரிஸ்க்கான காட்சிகளில் வம்படியாகத் தன் உழைப்பைக் கொடுத்து உயிரைப் பணயம் வைத்தவர்.
உச்ச நட்சத்திரங்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் ‘ஆல்வேஸ் ரிஸ்க்’ என்றால், வசனக் காட்சிகளை எளிதாகப் பண்ணி விட்டுப் போய்விடுவார்கள் என்பதில்லை. குறிப்பாகச் குழந்தைகளோடு நடிக்கும்போது அவர்களின் குழந்தைத்தன்மைக்கு மதிப்புக் கொடுத்து நடிக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய அர்ப்பணிப்பு வேண்டும். திடீரென்று சிறார் நடிகர் வசனத்தைத் தப்பாகப் பேசிவிடுவார். அந்தச் சமயத்தில் உச்ச நட்சத்திரம் பொறுமையுடன் இருப்பது தான் அர்ப்பணிப்பு. அந்த அர்ப்பணிப்பில் விஜய் அண்ணாவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அதனால்தான் அவருக்காக எழுதப்படும் கதைகளில் சிறார் கதாபாத்தி ரங்களைத் தயக்கமில்லாமல் உருவாக்க முடிகிறது. ‘தெறி’யில் விஜய் அண்ணா - நைனிகா கூட்டணியை எந்த ரசிகரும் மறக்கப் போவதில்லை. ஏனென்றால், அந்த இருவரின் இணைவு, நிஜ அப்பா - மகளின் உணர்வை அப்படியே கொண்டிருந்ததுதான்.
‘தெறி’யைப் பற்றிப் பேசும்போது மூத்த படைப்பாளி, நம் தமிழ் சினிமாவின் பெருமிதம் மகேந்திரன் சாரைப் பற்றி இன்னும் ஒரு விஷ யத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மகேந்திரன் சார் ஒரு குழந்தை. ஒரு பெரிய ஆதரவாக ‘தெறி’ படப்பிடிப்புத் தளத்தில் என் அருகில் நான் நேசித்த ஒரு ‘மென்டார்’ ஆக எனக்கு இருந்தார். எனது முதல் படமான ‘ராஜா ராணி'க்கு அவருடைய படங்கள்தான் உத்வேகம் அளித்தன. ‘காதல் தோல்விக்குப் பிறகும் காதல் உண்டு’ என்பதை என்னால் அந்தப் படத்தில் சொல்ல முடிந்தது என்றால், அதற்கு அவருடைய படங்களைப் பார்த்ததுதான் காரணம். இதை நான் அவரிடமே சொல்லி யிருக்கிறேன். ஒரு காட்சியை எப்படி அமைக்க வேண்டும், இசையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு அவர்தான் எனக்குப் பெரிய உத் வேகம். அவரே என்னுடைய இயக்கத்தில் நடிக்கும்போது அவர் படப்பிடிப்பில் இருந்த ஒவ்வொரு நாளும் விஜய் அண்ணா இருக்கிறார் என்பதை எல்லாம் மறந்து, அவரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். அவர் மென்மையான மனம் கொண்டவர். அவரது மனதின் மென்மையை ‘ஜானி’யின் கதாபாத்திரங்களிடம் நாம் பார்த்தோம் அல்லவா? அந்த மென்மையிலிருந்து உறுதியான வில்லன் ஒருவரைச் சிருஷ்டித்துக் காட்ட எனக்கு அவர் வரம் கொடுத்தார். அவர் என்னை எப்போதும் ‘கோச்' என்றுதான் அழைப்பார். நான் ‘கோச்’ எல்லாம் கிடையாது. என்ன வேண்டுமோ அதை நடித்துக் காட்டுவேன், அதை அப்படியே அவர் பிரதிபலித்துவிடுவார். நான் நடித்துக்காட்டுவதை ஒரு சிறிய புன்முறுவலுடன் கவனித்துக் கொண்டி ருப்பார். என்னில், அவர் தனது இளமைக் காலத்தை ஓட்டிப் பார்க்கிறாரோ என்று எனக்குத் தோன்றும். அந்தத் தருணத்திலெல்லாம் இன்னும் பெருமிதமாகவும் நெருக்கமாகவும் ‘தெறி’யின் நாள்கள் என்னை உணர வைத்தன.
இனி ‘பிகில்’ ராயப்பனுக்கு வருவோம். ‘எங்கள் தளபதியை வைத்து முழுமையான கேங்ஸ்டர் படம் எப்போ பண்ணப் போறீங்க அட்லீ?’ என விஜய் அண்ணாவின் ரசிகர் ஒருவர் ‘மெர்சல்’ படப்பிடிப்பில் இருந்த நேரத்தில் என்னிடம் கேட்டார். என் மனதிலும் அந்த எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. இதுவரை விஜய் அண்ணாவுக்காக நான் எழுதியதிலேயே ‘மெர்சல்’ வெற்றிமாறன் தான் என்னுடைய ஃபேவரிட். அந்தக் கதாபாத்திரத்துக்கு ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் அவ்வளவு பொருத்தமாக அமைந்துபோனது. ஆனால், ‘பிகில்’ ராயப்பன் கேரக்டரில் விஜய் அண்ணா நடித்த பிறகு அதுதான் இப்போது என்னுடைய ஃபேவரிட். அந்தக் கதாபாத்திரத்தை முதலில் விஜய் அண்ணாவுக்காக நான் எழுதவில்லை. அதில் பாலிவுட்டிலிருந்து பிரபலமான ஒரு நட்சத்திர நடிகரை அழைத்து நடிக்க வைத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், மண்டைக்குள் ‘ஜில்லா’வும் ‘தலைவா’வும் ஓடிக்கொண்டிருந்தன. அப்போதுதான் என்னுடைய உதவியாளர்களிடம் என் மனக் குழப்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டி ருக்கும்போது ‘ராயப்பன் கேரக்டரை விஜய் அண்ணாவே நடித்தால் எப்படியிருக்கும்?’ என்று கேட்டேன்.
அவர்கள் ‘இது ஆகிற கதையில்ல..!’ என்றார்கள். அப்படியும் நான் சமாதானம் அடையாமல் விஜய் அண்ணாவைச் சந்தித்து, ‘அண்ணா.. ராயப்பன் கேரக்டருக்கு கேஸ்டிங்..’ என்றேன். அவரிடம் சொல்லி முடிப்பதற்குள்.. ‘ரொம்ப ஆர்வமா இருக்கேன் அட்லி; யாரு அதுல நடிக்கப் போறாங்க; செலக்ட் பண்ணீட்டிங்களா?’ என்று கேட்டார். உடனே நான், ‘அதுக்காகதான் வந்தேன்.. மைண்ட்ல கொஞ்சம் குழப்பமா ஓடிகிட்டு இருக்கு.. அந்த கேரக்டரை நீங்க பண்ணா எப்படியிருக்கும்?’ என்றேன். சில நொடிகள் யோசித்தவர், ‘செம ஐடியாப்பா! நல்லாயிருக்குமே.. ஆனா.. நீதான் முடிவெடுக்கணும். எனக்கொரு லுக் டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு முடிவு பண்ணு. ஃபெர்பாமென்ஸ் வேற மாதிரி பண்ணிக்கலாம்’ என்றார். லுக் டெஸ்டுக்குப் பின்னர், எல்லாருமே மிரண்டு போனோம். ராயப்பன் கேரக்டர் விஜய் அண்ணாவையே தேர்ந்தெடுத்துக் கொண்டது. நடிப்பிலும் விஜய் அண்ணா ராயப்பன் என்கிற பாசமான ஓர் அப்பாவாக, ஒரு எத்திக்கல் தாதாவாக மிரட்டிவிட்டார். ராயப்பனின் முன்கதையை ஒரு முழுமையான திரைப்படமாக விஜய் அண்ணாவை வைத்து எடுக்க வேண்டும் என்கிற கனவு இன்னும் என்னிடம் அப்படியே இருக்கிறது - அட்லி
(நிறைவடைந்தது)
தொடர் எழுத்தாக்கம்: ரசிகா
படங்கள் உதவி: ஞானம்