இந்து டாக்கீஸ்

விஜய் அடித்த சிக்ஸர்! | ப்ரியமுடன் விஜய் 34

Guest Author

“சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் தயாரிப்பில் விஜய் அண்ணா நடித்த 6வது படம் ‘ஜில்லா’. அந்த கம்பெனி தயாரிப்பில் ஏற்கெனவே அவர் நடித்திருந்த 5 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டுகள்.

என்னை அழைத்த சௌத்ரி சார், ‘யோவ் உன் வாழ்க்கையில, நீ திரும்பவும் ரெண்டு பெரிய ஸ்டார்களை ஒரே படத்துல டைரக்ட் பண்ணணும்னு நினைச்சா, அது நடக்காமக் கூடப் போகலாம். ஆனா, இப்போ அதை சாதிச்சுட்ட! இந்தப் படம் எங்களுக்கு மட்டுமில்ல; விஜய்க்கும் சிக்ஸரா இருக்கணும். அதுக்கு சூப்பர்குட் முழு ஒத்துழைப்பு தரும். நீ படத்தை எவ்வளவு மாஸா கொடுக்க முடியுமோ; அந்த மாதிரி கொடுக்க முயற்சி செய்’ என்றார். அவர் இப்படிச் சொன்னதற்குக் காரணம்; லாலேட்டன் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று தொடக்கத்தில் நினைத்தார்.

நான் லாலேட்டனுக்குக் கதை சொல்லச் சென்றிருந்தபோது ‘திரிஷ்யம்’ படத்தின் கடைசிக் கட்ட அவுட்டோர் படப்பிடிப்பில் இருந்தார். மொத்தப் படக்குழுவும் ஹோட்டலில் தங்கியிருந்தார் கள். நான் காலையில் போய் இறங்கி யதும் எனக்கு ஓர் அறை தயாராக இருந்தது. குளித்து தயாராகி காலை 6 மணிக்கெல்லாம் லாலேட்டனைப் பார்க்கப் போனேன். ‘அவர் இன்னும் 15 நிமிடத்தில் ஷூட்டிங் கிளம்பிவிடுவார்’ என்றார்கள். அப்படியானால் அவர் படப்பிடிப்பு முடிந்து மாலை திரும்பி வந்ததும் எப்படியாவது கதைசொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண் டேன். அவர் புறப்படும் முன் என்னை உட்கார வைத்து, என் கண்களை ஊடுருவிப் பார்த்தவர்: “விஜய் சார் படத்துல எனக்கு என்ன ரோல் இருக்கப் போகுது?” என்றார். நான் ‘சார் நீங்க கதை கேட்டுவிட்டு முடிவு பண்ணுங்க. எனக்கு அரை மணி நேரம் போதும்..’ என்றேன். ‘சரி சாயங்காலம் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார்.

படப்பிடிப்பு முடித்துவிட்டு, மாலை நேராக என்னுடைய அறைக்கு வந்த லாலேட்டன், 2 மணி நேரம் பொறுமையாக உட்கார்ந்து கதை கேட்டபின் சொன்னார்: ‘யோவ்.. மொத்தப் படத்தை யும் ஓட்டிக் காட்டுறியே..!’ என்றார். ‘ஆமா சார்.. படம் முழுக்க நீங்க இருக்கீங்க எனும்போது முழுக்கதையையும் சொன்னாதான் என்னால தூங்க முடியும்.. நீங்க இதுல நடிக்கலன்னா எனக்கு லைஃப் கிடையாது சார்!’ என்றேன். என்னை மீண்டும் ஊடுருவிப் பார்த்தவர், ‘நாளைக்குக் காலையில சொல்றேன்; இப்போ டின்னர் சாப்பிட்டுட்டு தூங்கு’ என்று முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். மறுநாள் காலை அவர் படப்பிடிப்புக்குப் புறப்படும் முன் எனக்கு போன் செய்து, ‘நேசா.. நான் இந்தப் படம் பண்றேன் டா’ என்றார்.

எனக்கு அந்த நிமிடமே வாய்விட்டுக் கத்திவிடலாம் போல இருந்தது. இவர் கதைக்காக ஒப்புக்கொண்டாரா, விஜய்க்காக ஒப்புக்கொண்டாரா என்று தெரிந்துகொள்ளும் ஆவல் என் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. ஒரு நாள் படப்பிடிப்பில் அவரிடம்ஒப்புக்கொண்ட காரணத்தைக் கேட் டேன். “உன் லைஃபுக்கு இந்தப் படம் ஃபர்ஸ்ட் ஸ்டெப்ன்னு சொன்னியே.. அதுக்காகத்தான் ஒத்துகிட்டேன். மத்ததெல்லாம் அப்புறம்” என்றார்.

தென்னிந்தியப் படவுலகில் பலநடிகர்களை நான் பார்த்துக்கொண்டிருக் கிறேன். தொழில் ஒழுக்கம், அர்ப்பணிப்பு என்றால் அதை லாலேட்டன், விஜய் இரண்டு பேரிடமும் தான் முதலில் பார்த்தேன். ‘புது டைரக்டர்.. அவன் கிடக்குறான்’ என்று அவர்கள் நினைத்தால் படப்பிடிப்புக்கு லேட்டாக வரலாம். அப்படி வந்தாலும் யாரும் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் எனக்குத் தந்த ஒத்துழைப்பும் மரியாதையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. லாலேட்டன்-விஜய் இருவரிடமும் ஓர் ஒற்றுமையைப் படப்பிடிப்பு முழுவதும் பார்த்தேன். என்ன காட்சி என்பதை இருவரிடமும் விளக்கிவிட்டு ‘டேக்’ போவதற்கு முன் மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகள், துறைகளையெல்லாம் தயார் செய்து கொண்டிருப்பேன்.

‘ஷாட் ரெடி’ என்றதும் அமைதியாக எழுந்து வருவார்கள். ‘ஆக்‌ஷன்’ என்றதும் இரண்டு பேரும் தரும் பெர்ஃபாமென்ஸ் கூடு விட்டு கூடுபாய்ந்த மேஜிக் மாதிரி இருக்கும். சற்றுமுன் பேசி சிரித்துக் கொண்டிருந்த வர்களா இவர்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.
‘ஜில்லா’வில் மோகன்லால் சாருக்கு அட்டகாசமான ஆக்‌ஷன் பிளாக்குகள் அமைத்திருந்தேன். பெரிய ஜாம்பவன், அவரைச் சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அவரிடம், ‘சார் ஒருமுறை மானிட்டர்ல ரிகர்சல் பார்த்துட்டு டேக் போயிடலாம்’ என்றார். ஆனால், லாலேட்டன், ‘மாஸ்டர் அதெல்லாம் எதுக்கு? நேரம், புரொடியூசர் பணம்.. ரண்டையும் மனசுல வைங்க.. நேரா டேக் போயிடுங்க.. ரெடி.. ரெடி.. டேக்!” என்று சொல்லிவிட்டு டேக்குக்குத் தயாரானார்.

சில்வா தயக்கத்துடன் ‘ஆக்‌ஷன்’ சொன்னார். அவ்வளவுதான்! மின்னல் வேகம் என்று சொல்வார்களே.. அப்படியொரு வேகம்.. அந்த ஒரு டேக்கில் எத்தனை பஞ்ச்கள், பிளாக்குகள் இருந்ததோ.. அதையெல்லாம் சில்வா எதிர்பார்த்ததைவிட அதிரடியான வேகத்தில், தன்னுடைய ஸ்டைல் குறையாமல் அடித்து முடித்துவிட்டார். சில்வா வாயடைத்துப்போய்.. மானிட்ட ரில் டேக்கை ரீவைண்டு செய்து பார்த்து தவறைக் கண்டறிய முயன்று,முடியாமல் ஓடிப்போய் லாலேட்டனின் கைகளைப் பிடித்து வணங்கிவிட்டு வந்தார். என்னிடம் சில்வா, ‘இந்த வயசுலயும் உடம்பை சார் எவ்வளவு ‘பிளெக்ஸிபிள்’ ஆக வச்சிருக்கார். சான்ஸே இல்ல!’ என்று வியந்தார். கிளைமாக்ஸ் ஃபைட்டில் விஜய் - லாலேட்டன் இருவரில் யார் ‘ஸ்பீட்’ என்பதைக் கண்டறிய முடியாத அளவுக்குத் துவம்சம் செய்தார்கள். நடிப்பு, ஆக்‌ஷனில் மட்டுமல்ல; நடனத்திலும் விஜய்க்கு லாலேட்டன் ஈடு கொடுத்ததை ‘சிவனும் சக்தியும்’ பாடலைப் படமாக்கியபோது பார்த்தோம்.

அந்தப் பாடலைப் படமாக்கிய போது ராஜு சுந்தரம் மாஸ்டர் ‘ஒரு முழு பி.ஜி.எம்மை ஒரே டேக்கில் எடுத்துவிடுவோம்’ என்றார். நான் லால் சாரைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று கட் பண்ணி எடுத்துக்கலாம் என்றேன். லால் சாரோ.. ‘நோ..
நோ.. ரெடி ரெடி.. நேரா டேக் போய்க்கோ’ என்று சொல்லி விட்டு, ‘விஜய்.. கமான்..’ என்றார். ஒரு சிறு தொய்வுகூட இல்லாமல் அவ்வளவு பெரிய பி.ஜி.எம்முக்குச் சின்ன விலகல் கூட இல்லாமல், விஜயின் வேகத்துக்கும் ஸ்டைலுக்கும் நடனத்தில் ஈடுகொடுத்து ஆடினார்.

‘ஜில்லா’ படத்தின் கேரளா உரிமையை லாலேட்டன் சாரே வாங்கியிருந்தார். படம் ரிலீஸ் ஆகி முதல் வார முடிவில் லாலேட்டன் சார், சௌத்ரி சாருக்குப் போன் செய்து ‘நேரடி மலையாளப் படத்தைவிட ‘ஜில்லா’ அதிகமா வசூல்பண்ணிக்கிட்டு இருக்கு’ என்று சொன்னார். சௌத்ரி சார், ‘விஜய் - லாலேட்டன் - சூப்பர்குட்’ மூன்று தரப்புக்குமே ‘ஜில்லா’ ரெவின்யூல ஒரு பெரிய சிக்ஸர்! நல்ல கமர்ஷியல் டைரக்டர்ன்னு பேரு வாங்கிட்டிங்க நேசன்’ என்று பாராட்டினார். மாஸ் படங்கள் எல்லாம் முதல் வாரத்திலேயே சுருண்டு கொண்டிருந்த வேளையில் ‘ஜில்லா’ 100 நாள் படமானது. ஓர் உதவி இயக்குநராக நான் ‘ஜில்லா’ கதையைச் சொன்ன போது விஜய் அண்ணா எனக்குக் கைகொடுத்தார். அவர் கைகொடுத்தார் என்பதை எனக்குத் திரையுலகில் வாழ்க்கை கொடுத்தார் என்று எடுத்துக்கொள்கிறேன். - ஆர்.டி.நேசன்

(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT