படங்கள் உதவி: ஞானம் 
இந்து டாக்கீஸ்

பெண் விடுதலை பேசிய ஆண் படைப்பாளி! | கண் விழித்த சினிமா 24

ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில், ‘காளிதாஸ்’ (1931) படம் வழியே குழப்பத்தோடுதான் பேசத் தொடங்கியது தமிழ் சினிமா. ஆனால், பத்து ஆண்டுகளை நிறைவு செய்யும் முன்னரே சமூகப் புரட்சிக்கான ஒரு கலையாக அது தன்னைத் தகவமைத்துக்கொண்டது. அதற்குக் காரணமாக இருந்தவர்களில், ‘தமிழ் சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படும் கே.சுப்ரமணியம் முக்கியமானவர்.

அவரது இயக்கத்தில் 1939ஆம் ஆண்டு வெளியான ‘தியாக பூமி’ படத்தில் ஒரு நீதிமன்றக் காட்சி: “என் மனைவி என்னுடன் சேர்ந்து வாழவேண்டும். அதற்கு இந்த கோர்ட் உத்தரவிட வேண்டும்” என்று கேட்கிறார் கணவன். “என் கணவரோடு என்னால் சேர்ந்து வாழ முடியாது; வேண்டுமானால் அவருக்கு மாதா மாதம் ஜீவனாம்சம் தருகிறேன். எனக்கு வேண்டி யது விவாகரத்து (விடுதலை).

இவருக்கு மீண்டும் அடிமையாக வாழ்வதைவிட, என் தேசத்தின் விடுதலைக்காகப் பாடு படுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்” எனத் தீர்க்கமான குரலில் துணிவுடன் கூறுகிறார் மனைவி. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இப்படம், ஆணாதிக்கத்தை எதிர்த்து, பெண் விடுதலையை உயர்த்திப் பிடித்த துடன், கனலாகத் தகித்துக் கொண்டிருந்த சுதந்திர வேட்கைக்குத் தீ மூட்டி, தேச விடுதலையோடு தீண்டாமையிலிருந்தும் நமக்கு விடுதலை தேவை என்பதை வெளிப்படையாகப் பேசியது.

தடை அதை உடை: இதே படத்தில் இன்னொரு காட்சியைப் பாருங்கள்.. கதையின் நாயகி சாவித்திரியின் (எஸ்.டி.சுப்புலட்சுமி) தந்தை சாம்பு சாஸ்திரி நெடுங்கரை என்கிற கிராமத்தில் வாழ்பவர். ஆற்று வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்.

அவர்கள் தங்குவதற்கு ஆச்சார அனுஷ் டானங்கள் அனுமதிக்காத கோயிலைத் திறந்து விடுகிறார். இதனால் சொந்தச் சாதி மக்களின் கோபத்துக்கு ஆளாகிறார். சாதிப் பிரஷ்டம் செய்து ஊரை விட்டே அவரை ஒதுக்கி வைக்கிறார்கள்.

வெள்ளம் வடிந்தாலும் ஆதிக்கச் சாதி மக்களின் உள்ளத்தில் சாதியம் வடியா மல் அப்படியே இருக்கிறது. யாரைக் காப்பாற்றினாரோ அவர்களே தங்கள் வாழ்விடத்தில் சாஸ்திரிக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். படம் வெளியாகிவிட்டது. திரையரங்கு களில் கூட்டம் அலைமோதியது.

சாவித்திரியாக இருந்து உமாராணியாக மாறும் புரட்சிகரமான கதாபாத்திரமாகக் கதையின் நாயகி சித்தரிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரபல்யம் காரணமாக உமா ராணியின் பெயரால் புடவைகளும் இன்னும் பல பொருட்களும் விற்பனைக்கு வருகின்றன.

நாயகி காங்கிரஸ் கொடியுடன் பாடிக்கொண்டே(பாரதியின் பாடலைப் பாடியவர் டி.கே. பட்டம்மாள்) சுதந்திரப் போராட்ட ஊர்வலத்தில் செல்வது போன்ற இறுதிக் காட்சி இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. இது மக்களை உசுப்பேற்றுவதாக ஆங்கிலேய அரசுக்கு உளவுத் தகவல் வந்தடைந்தது. அதை ஊர்ஜிதம் செய்துகொண்டபின் படத்தைத் தடைசெய்ய அரசாங்கம் தீர்மானிக்கிறது.

இந்தச் செய்தி முன்ன தாகவே படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.எஸ்ஸுக்கு வந்து சேர, போட்ட முதலீட்டைப் பற்றிக் கவலைப்படாத அவர், படத்துக்குத் தடை உத்தரவு வரும்முன் மக்கள் பார்க்கட்டும் என்று அனுமதி இலவசம் என்று அறிவிக்கிறார். தடையை அறிவித்ததும், ‘படத்தைத் தடைசெய்ய விடமாட்டோம்’ என்று மக்கள் திரை யரங்கு முன்மறியல் செய்கிறார்கள்.

பிரிட்டிஷ் அரசோதடியடி நடத்தி மக்களைக் கலைக்கிறது. சுதந்திர உணர்வை, சமூக விழிப்புணர்வை, சமத்துவத்தை முழு வீச்சில் பிரச்சாரம் செய்த ஒரு படத்துக் காகத் தடியடி வாங்குவதைப் பற்றி மக்கள் கவலைப்படவில்லை. அது மட்டுமல்ல; திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றபின், அதன் உள்ளடக்கத் துக்காகத் தடை செய்யப்பட்டத் தமிழ்ப் படம் என்கிற தனிச் சிறப்பையும் ‘தியாக பூமி’ பெற்றுக் கொண்டது.

முதல் சிறார் திரைப்படம்: திரைக் கலையைச் சமூக மாற்றத்துக் காகவும் தேச விடுதலைக்காகவும் கையாள முடியும் என்கிற கே.எஸ்ஸின் தொடர் முனைப்பு ‘தியாக பூமி’யோடு நின்றுவிடவில்லை. தனது பல படங்களில் இதைச் சாதித்துக்காட்டினார். தமிழ் சினிமாவின் முதல் சிறார் திரைப்படமாக அமைந்த அவரது ‘பால யோகினி’(1937). தீண்டாமைக்கு எதிராக ஒரு சிறார் கதாபாத்திரம் வழியே அழுத்தமான குரலை முன்வைத்தது. இந்தப் படத்தின் முதன்மைச் சிறார் கதாபாத்திரத்தில் நடித்த பேபி சரோஜாவின் பெயரை, பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டினார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் அனல் பறக்கும் அரசியல் பின்னணி, சீர்கெட்டுக் கிடந்த சமூகப் பின்னணி ஆகிய இரண்டையும் துணிவோடும் அழகுணர்ச்சியோடும் சித்தரித்தார் கே.எஸ். சாதிய இழிவுகள் பெரியவர்களின் மனதில் களையாக மண்டிக்கிடக்கிறதே தவிரக் குழந்தைகளிடம் அது இல்லை; அதை அவர்கள் மண்டையில் ஏற்றாதீர்கள் என்பதை, ‘பால யோகினி’யில் சரோஜா கதாபாத்திரம் வழியே உணர்த்தினார்.

பெண் விடுதலையின் தீர்க்கமான குரல்! - புகழ்பெற்ற வட இந்திய எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் எழுதிய நாவலின் உரிமையைப் பெற்று ‘சேவா சதனம்’ (1938) என்கிற படத்தை இயக்கினார். வயது முதிர்ந்த ஆண்களுக்குச் சிறுமி களைத் திருமணம் செய்து கொடுக்கும் சமூகக் கொடுமைக்கு எதிராகப் பேசிய இந்தப் படம், ‘தியாக பூமி’க்கு முன்பே பெண்ணடிமைத் தனத்தைக் கண்டித்தது. பால்ய விவாகம் செய்யப் பட்டு மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமைக்கு ஆளாகும் கதை நாயகி, துணிச்சலாகக் கணவன் வீட்டிலிருந்து வெளியேறி பிரபலப் பாடகியாக உருவெடுக்கிறாள்.

கலை வாழ்வில் ஈட்டிய செல்வத்தைக் கொண்டு ‘சேவா சதனம்’ என்கிற கைவிடப்பட்ட பெண்களுக்கான அமைப்பைத் தொடங்குகிறாள். அவளது முன்னாள் கணவர், ‘சடங்கு, சம்பிரதாயங்களே இதற்குக் காரணம்’ என்று கூறி பூணூலை அறுத்தெறிகிறார். இந்தப் படம் ஏற்படுத் திய தாக்கத்தின் விளைவாக அன்றைய மதராஸ் மாகாணத்தில் நிஜத்திலும் ஒரு ‘சேவா சதனம்’ தொடங்கப்பட்டது.

புராணப்படத்தின் கதையிலும் தீண்டாமைக்கு எதிரான சித்தரிப்பைப் புதுமையுடன் தூக்கிப்பிடித்தவர் கே.எஸ். இவர் இயக்கிய ‘பக்த சேதா’வில் (1940) கதையின் நாயகன் சேதா ஒரு செருப்புதைக்கும் தொழிலாளி. அவரது பக்தியை மெச்சும்விதமாக விஷ்ணுபிரான் தினமும் அவருக்குக் காட்சி கொடுக்கிறார். இதைப் பார்த்த கௌரவர்களின் குருவான துரோணரின் மகள் வியப்படைகிறாள். சேதாவின் மகன் சேவாவைக் காதலிக் கிறாள். இதையறிந்த துரோணர் சேதாவுக் குப் பலவகையிலும் இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறார்.

இறுதியில் அவர்கள் வாழும் சேரியைக் கொளுத்தச் சொல் கிறார். ஆனால், தனது மகளும் அதே சேரியில்தான் வசிக்கிறாள் என்பதை அறிந்து அவளுக்கு என்ன ஆனதோ எனப் பதறியபடி ஓடுகிறார். ஆனால் விஷ்ணுபிரான் தயவால் அவள் அமைதியாக, இறைவனைத் துதித்து கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து நிம்மதியடையும் துரோணர், கடவுள் முன் அனைவரும் சமம் என உணருகிறார்.

மொத்தம் 20 படங்களை இயக்கிய கே.சுப்ரமணியம் அதில் பத்துப் படங்களைச் சமூக மாற்றத்துக்கான திரைப் படங்களாக உருவாக்கினார். திராவிட இயக்கத்தின் எழுச்சியால் தமிழ் சினிமா பெற்றுக்கொண்ட தாக்கமும், அதன் விளைவாகப் புதிய அலையை உருவாக்கிய பகுத்தறிவு சினிமாக்களுக்கும் முன்னோடியாகப் பாதை அமைத்துக் கொடுத்தச் சீர்திருத்த சினிமாக்களை இயக்கிய கே.சுப்ரமணியத்தின் பங்களிப்பு இத்துடன் நின்றுவிடவில்லை.

(விழிகள் விரியும்)

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT