ஒளிப்பதிவாளர் ஜீவாவின் ‘படைப்பாற்றல்’ மிகவும் பொறுப்புணர்வு மிக்க ஒன்று. சரியான காரணம் இருந்தால் தவிர, ஃபிரேமில் எதுவொன்றும் எதன் ஆதிக்கத்திலும் மறைந்துபோய்விடக் கூடாது என்று மிக கவனமாகப் பார்த்துக் கொள்வார். அப்படித்தான் அன்று விஜய் அணிந்திருந்த டி-ஷர்ட்டின் கலரும் பேக்ரவுண்டின் கலரும் ஒன்றாக இருந்தது.
ஜீவா என்னிடம் ‘விஜயை வேறு கலர் டி-ஷர்ட் மாற்றச் சொல்லுங்கள்; கலர் மெர்ஜ் ஆகிறது’ என்றார். நான் விஜயிடம் சற்றுத் தயங்கியபடி ‘விஜய் வேற டி-ஷர்ட் மாத்திக்க முடியுமா?.. கலர் இஷ்யூ..’ என்றேன். விஜய் ‘இதோ மாத்திடுறேங்கண்ணா.’ என்றபடி தன்னுடைய உதவியாளரை அழைத்தார். ‘குடைய விரிச்சு என்னை மறைச்சுப்பிடிச்சுக்கப்பா..’ என்றார்.
வெட்டவெளி யில் அந்தக் குடையின் மறைவிலேயே வேறு கலர் டி-ஷர்ட்டை நொடியில் மாற்றிக்கொண்டு ‘இது ஓகேவா?’ என்றார். நான் ஜீவாவைப் பார்த்தேன். அவர் கேமராவுக்குப் பின்னாலிருந்து ‘தம்ஸ் அப்’ காட்டினார். செய்யும் வேலைப் பிடித்துப் போய்விட்டால், விஜயைச் சுற்றியிருப்பவர்கள் உருவாக்கிய பத்துக் கட்டளைகள் எதுவும் அவர் முன் செல்லுபடியாகாது. எல்லா வற்றையும் உடைத்துத் தள்ளிவிட்டு நம்மிடம் அவரை ஒப்ப டைத்து விடுவார்.
சச்சின் 2005இல் ரிலீஸ் ஆனபோது ‘என்னய்யா இது?! என்னதான் ஊட்டியா இருந்தாலும் பனிப் புகைங்கிற பேர்ல, படம் முழுக்க இப்படியா புகை போடுவீங்க?’ என்று கிண்டல் அடித்தவர் கள் உண்டு. ஆனால், இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சர்ரியலிஸ்டிக் எஃபெக்ட்டை 2கே ஜென் நெக்ஸ்ட் தலைமுறை, ‘படம் எவ்வளவு ட்ரீமியா இருக்கு!’ என்று ரசிக்கிறார்கள். ஜீவா எதையுமே முன்னோக்கிச் சிந்திக்கக் கூடியவர்.
அவரிடம் ‘ஒரு பிரெஞ்சு படம் மாதிரி, அதேநேரம் மிஸ்டியான ஒரு லவ் ஸ்டோரி பண்ணுவோம்’ என்றேன். எனது எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்ட அவர்; ‘ஜான் என்னை நம்பு.. படம் முழுக்கவே அந்த மிஸ்டி ஃபீலைக் கொண்டு வருவோம்’ என்றார். அப்படித்தான் ‘சச்சின்’ படத்தில் அந்தப் பனிப்புகை இடம்பெற்றது. படத்தில் உண்மையான பனிப்புகை எது; அதற்கு மாற்றாகப் போடப்பட்ட செயற்கையான புகை எது என்று கண்டறியமுடியாதபடி காட்சி களை ‘மேச்’ செய்து படமாக்கினார் ஜீவா.
உண்மையான பனிப்புகைக் காட்சி களுக்காகக் கலை இயக்குநர் தோட்டா தரணியையும் அவரது டீமையும் அழைத்துக் கொண்டு ஜீவாவும் நானும் ஊட்டியின் தொட்டபெட்டாவுக்குப் போனோம். அங்கே கல்லூரி செட் போட்டு படமாக்கலாம் என்பது திட்டம். தொட்டபெட்டா சிகரத்தில் மிஸ்ட் எவ்வளவு அதிகமோ, அதே அளவுக்கு அங்கே எதிர்பாராத வகையில் மழையும் பெய்யும் என்பது தெரிந்ததும் தரணி சார் சொன்னார்: ‘இங்கே கல் லூரியின் செட்டைப் போட்டால், திடீரென்று பெரிய மழை பெய்து, செட் ஊறிப்போய் உப்பி விட்டால், செட் அதன் இயற்கைத்தன்மையை இழந்துவிடும். அப்படி ஏதும் நடந்தால், செட் ரெடியாகும் வரை விஜய் மாதிரியான ஒரு பிஸி ஆர்ட்டிஸ்டை ஊட்டிக்கு அழைத்து வந்து காத்திருக்கச் சொல்ல முடியாது’ அதனால், நமக்குத் தேவைப்படும் செட்டை சென்னையிலேயே போட்டுக் கொள்வோம். நமக்குத்தான் ஜீவா இருக்கிறாரே..’ என்றார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்! விஜயும் ஜெனிலியாவும் முதல்முறை யாக மழையில் நனைந்தபடி சந்தித்துக் கொள்ளும் காட்சி ஊட்டியில் எடுத்தது என்று ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! அந்தக் காட்சி, சென்னை கேம்பா கோலா வளாகத்தில் தரணி சார் போட்டுக்கொடுத்த செட்டில் படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் மழை வருவதற்கு முன் சூறைக் காற்று அடிக்கும். அதில் விஜய் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வருவார். அந்தக் காட்சிக்காகப் போடப்பட்ட கடைத்தெரு, கடைத்தெருவுக்கு அருகேயுள்ள மலைக் குன்றுகள், அதன்மீது பசுமையான பாசி, சிறு தாவரங்கள் இருப்பதுபோன்று ஊட்டியை ‘ரீகிரியேட்’ செய்து, அந்தச் செட்டை மிகவும் நம்பகமாக தரணி சார் அமைத்துவிட்டார்.
அந்த செட்டில் படப்பிடிப்பு நடத்தியபோது சென்னையில் வெயில் கொளுத் தியது. முழுக் கதையும் ஊட்டியில் நடப்பதால், விஜய், ஜெனலியா இருவருக்குமான நவீனமான குளிர் ஆடை களை நான் தேர்வு செய்தேன். வெளி நாட்டில் ‘விண்டர் வியர்’ ஆடைகளின் விலை அதிகம்.
அதனால், ஐரோப்பாவில் பணிபுரியும் சென்னைவாசிகள் பலரும், குளிர்காலத்தை சமாளிக்க, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘வில்ஸ்’ என்கிற கடையில் அவற்றை வாங்கிச் செல்வார்கள். அங்கேதான் நான் விஜய்க்கு குளிர் ஆடைகளைத் தேர்வு செய்து வாங்கினேன். அத்தனையும் நவீன ஃபேஷனில் அமைந்த ஸ்டைலான விண்டர் டி-ஷர்டுகள், ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்டுகள். பல வண்ணங்களில் நான் வாங்கி வந்திருந்த ஆடைகளைப் பார்த்து விஜய் ஆச்சரியப்பட்டுப்போய், ‘சார்.. உண்மையாவே இந்த விண்டர் டிரெஸ்லாம் சென்னையிலதான் வாங்கி னீங்களா? இதுல பல ‘டாப்ஸ்’களை என்னோட ஃபர்செனல் யூஸுக்கு பணம் கொடுத்து வாங்கிக்கிறேன் சார்.. எனக்காக நீங்க மறுபடியும் தேவைப்படுற அளவுக்கு பர்சேஸ் பண்ணிடுங்க ப்ளீஸ்’ என்று ஆசை ஆசையாக அப்போதே பணத்தை செட்டில் செய்துவிட்டு, அந்த ஆடைகளில் பலவற்றைச் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டார்.
அவர் அந்த குளிர் ஆடைகளை எவ்வளவு ஆசைப்பட்டுப் படப்பிடிப்பில் அணிந்தாரோ; அவ்வளவு சிரமத்தையும் அனுபவித்தார். ஆனால், அதைக் கொஞ்சம்கூட எங்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. கொளுத்தும் வெயிலில் வின்டர் வியர் அணிந்து நாள் முழுவதும் நடித்ததால் விஜய்க்கு வியர்த்துக் கொட்டிக்கொண்டே இருந்தது. மழையில் நனைந்த விஜய், ஒரு இடத்தில் ஒதுங்கி நின்று சிறார்களுடன் பேசியபடி குளிரால நடுங்கும் உடலை சூடேற்ற, தனது கைகள் இரண்டையும் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக்கொள்வதை அவ்வளவு தத்ரூபமாக நடித்தார். ஸ்வெட்டர்தான் அழகே தவிர, கொளுத்தும் வெயிலில் அது உருவாக்கிய உஷ்ணத்தால் கொட்டும் வியர்வையைப் பனிபோல் பாவித்து, பல மணி நேரம் நடித்துக்கொடுக்க எவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டும். அதை விஜய் நிறைவேற்றினார்.
அதேபோல், இயக்குநரின் திரைக் கதையில் அதன் அடித்தளமாக இருக்கக் கூடிய, அதன் மையத்தை நோக்கி எழுதப்பட்டக் காட்சிகளில் விஜய் காட்டும் ‘இன்வால்வ்மெண்ட்’ தனி ரகம். அதேநேரம் தனது படங்களில் நல்ல பாடல்கள், நடனம், சண்டைக் காட்சிகளை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்காகச் சில விஷயங்களை விஜய் எதிர்பார்ப்பார். ஆனால், அதை ‘இப்படித்தான் எனக்கு வேண்டும்’ என்று நம்முடைய கதை சொல்லலில் எந்தவொரு குறுக்கீட்டையும் ஏற்படுத்தும் விதமாகக் கேட்கமாட்டார். அதை ஒரு வேண்டுகோளாக, ‘அண்ணா.. இந்த இடத்தில் ஃபேன்ஸ்லாம் சீட்லேர்ந்து எழுந்து நின்னு ஆடுற மாதிரியான ஒரு பாட்டு வச்சுக்கலாமா? அது ஸ்கிரிப்ட்டை ரிலேட் பண்ற மாதிரி உங்களால பண்ண முடியும்.’ என்பார்.
அப்படித்தான் ‘சச்சின்’ படத்தில் அவரும் ஜெனிலியாவும் இணைந்து ஆடும் ‘ஃபோக் சாங்’ அமைத் தேன். பிபாஷா பாஸு கேரக்டரை அமைத்ததும் அவருடைய மாஸ் ரசிகர்களுக்காகத்தான். அதே மாதிரி ‘இந்த ஃபைட் நல்ல ‘மாஸி’யான ஐடியால இருந்தா நல்லா இருக்கும்’ என்பார். பிரசவ வலியில் துடித்தபடி ஆட்டோவில் ஒரு பெண் மருத்துவமனைக்கு அம்மாவுடன் சென்றுகொண்டிருப்பார். உள்ளூர் அரசியல்வாதி சாலைப் போக்குவரத்தை தடுத்து வைத்திருக்கும் அந்த சண்டைக் காட்சியை அமைத்ததும் விஜய்க்காகத் தான்.
விஜய்க்காக சேர்க்கப்பட்ட அவ்வளவு பொழுதுபோக்கு அம்சங்களையும் அப்போது எவ்வளவு ரசித்தார்களோ அதைவிட அதிகமாக இப்போது ‘சச்சின்’ வெளியானபோது ‘இது 20 வருஷத்துக்கு முன்னாடி வந்த படமா; இவ்வளவு மாடர்ன் பிலிமா இருக்கே?!’ என்று ஆச்சரியத்துடன் ரசித்தார்கள். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து ‘சச்சின்’ படத்தைப் பார்த்தாலும் இதே உணர்வு கிடைக்கும். ஏனென்றால் விஜய் - ஜெனிலியா இணையின் நடிப்பு, ஜீவாவின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் கலை இயக்கம், தேவி பிரசாத்தின் இசை, இந்தக் கதையின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் தாணு என அத்தனை பேரின் பங்களிப்பும் நம்பிக்கையும்தான் ‘சச்சின்’ மீதான ரசிகர்களின் காதலுக்குக் காரணம். - ஜான் மகேந்திரன்
(ப்ரியம் பெரும்)
படங்கள் உதவி: ஞானம்