இந்து டாக்கீஸ்

மரபை உடைத்தார்! | கண் விழித்த சினிமா 22

ஆர்.சி.ஜெயந்தன்

‘அன்பே..!’ என்பான் காதலன். ‘ஆரமுதே..!’ என்பாள் காதலி. ‘கண்ணே..!’ என்றழைப்பான் கணவன். ‘பிராண நாதா..!’ என்பாள் மனைவி. காதலி ஒரு மரத்தைத் தொட்டப்படி நின்றால், பத்தடி தூரத்திலிருக்கும் மற்றொரு மரத்தைப் பிடித்தபடி நிற்பான் காதலன். கணவன் - மனைவி என்றால் வீட்டின் முற்றத்துத் தூண்களைப் பிடித்துக் கொள்வார்கள்.

1931இல் தொடங்கி தமிழ் சினிமாவில் நான்கு ஆண்டுகள் இடம்பெற்று வந்த காதல் காட்சி களில் அவ்வளவு ‘தீண்டாமை’ இருந்தது. ஆனால், ராஜா சாண்டோ தாம் இயக்கிய ‘மேனகா’ (1935) படத்தில், காதலின் நெருக்கம், வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று மாற்றிச் சித்தரித்தார். ஸ்ரீ சண்முகானந்தா சபாவை வெற்றிகரமாக நடத்திக்கொண்டி ருந்த டி.கே.எஸ் சகோதரர்களின் முதல் திரைப்பிரவேசம்தான் ‘மேனகா’. பிற்காலத்தில் ஜுபிடர் பிக்சர்ஸ் என்கிற ஸ்டுடியோ சாம்ராஜ் யத்தை நிறுவிய மொய்தீன் - சோமசுந்தரம் இருவருக்கு ‘மேனகா’தான் முதல் தயாரிப்பு. அதன் படப்பிடிப்புக் காக சபாவின் மொத்த நடிகர்களும் மும்பை போய்ச் சேர்ந்தனர்.

ஆனால்,படத்தின் இயக்குநர் ராஜாசாண்டோவுக்கு அது முதல் சமூகப் படமல்ல; அவர் ‘மேனகா’வை இயக்குவதற்கு முன்பே பல சமூக, சலன, பேசும் படங்களில் நடித்து அவற்றை இயக்கிய அனுபவத்தைப் பெற்றவர். ஒரு திரைப்படம் உருவாக்கத் தேவைப்படும் அனைத்துத் துறைகளிலும் அனுபவமும் அறிவும் பெற்றிருந்தார். நடிகரே ஒரு படத்தை எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்க முடியும் என்பதற்கு அவரே முதல் முன்மாதிரி யாகவும் ஆகியிருந்தார். அவரைப் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்த அனைத்து முன் தீர்மானங்களையும் அவரைச் சந்தித்தபின் மாற்றிக் கொள்ளும்படி ஆகிவிட்டது என்று டி.கே.சண்முகம் தன்னுடைய ‘எனது நாடக வாழ்க்கை’ நூலில் பதிவு செய்தி ருக்கிறார்: “மேனகா படத்தின் டைரக்டர் ராஜா சாண்டோவின் ஆடம்பரத்தை யும் அந்தஸ்தையும் பற்றி நாங்கள் பலவிதமாகக் கற்பனை செய்து வைத்திருந்தோம்.

அவற்றுக்கு மாறாக அவர், ஒரு குடையைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தே நாங்கள் தங்கியிருந்த கம்பெனி வீட்டுக்கு வந்தபோது வியப்புற்றோம். பல ஆண்டுகளாக வடநாட்டிலேயே இருக்கிறாரே, தமிழ் மொழியையே மறந்து, ஆங்கில மோகத்தில் ஆழ்ந்தி ருப்பாரோவென நினைத்தோம். தமிழ்மொழியை மறவாதது மட்டுமல்ல; தமிழிலே அருமையாக எழுதும் ஆற்றலும் பெற்றிருந்தார். நடிப்புச் சொல்லிக் கொடுப்பதில் ராஜாவுக்குஇணையான இயக்குநர் இந்திய நாட்டிலேயே இல்லையென்பது, அன்று வடநாட்டாரும் ஒப்புக் கொண்ட உண்மை. ராஜா பாரத நாட்டின் ஒப்புயர்வற்ற நடிகப் பேரரசன். அவரிடம் பயிற்சி பெறும் போது, நடிப்பவன் சலிப்படைவானே தவிரச் சொல்லிக் கொடுக்கும் ராஜா சிறிதும் சளைக்கமாட்டார்” என்கிறார்.

கட்டாய ஒத்திகை: சலனப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த 20களில் ஆர். பத்மநாபனின் அழைப்பை ஏற்று சென்னைக்கு வந்து, பல சலனப் படங்களில் நடித்து, இயக்கிக் கொடுத்த சாண்டோ மீண்டும் பம்பாய்க்குப் புறப்படத் தயாரானார். அப்போது எஸ்.ஜி. கிட்டப்பாவின் உதவியாளர் சாண்டோவைத் தேடி வந்து, ‘கிட்டப்பா உங்களைக் காண விரும்புகிறார்’ என்று சொன்னார். சாண்டோ இரு பத்தாண்டுகளாக பம்பாயில் வசித்துவந்த காரணத்தால் கிட்டப்பாவின் புகழ் குறித்து எதுவும் அறிந்திராத நிலையில்: “கிட்டப்பாவா.. யார் அவர்?” என்றுகேட்டார். அதிர்ந்து போன உதவியாளர்: ‘அவர் நமது தமிழ்நாட்டின் கலைப் பொக்கிஷம், அவர் பாடினால் ஊர்கள்திரண்டு வரும். மிகச்சிறந்த தேச பக்தர், ஆற்றல்மிக்க நாடக நடிகர்’ என்று சொன்னார்.

சாண்டோவுக்கு ‘நாடக நடிகர்’என்கிற வார்த்தைகள் பெரும் ஒவ்வாமை என்பதை உதவி யாளர் அறிந்திருக்கவில்லை. ‘இப்போது சந்திக்க நேரமில்லை’ எனச் சொல்லிவிட்டு சாண்டோ கிளம்பிப் போய் விட்டார். ஓர் இயக்குநராக, நடிகராக வடநாட்டு நாடக நடிகர்களின் மிகை நடிப்பை பம்பாயில் கையாண்டு வெறுப்புற்றி ருந்த ராஜா சாண்டோ இப்படிச் சொன் னதில் வியப்பில்லைதான்! ‘மேனகா’ படத்துக்கு அவர் இயக்குநராக ஒப்பந்தம் ஆனதும் தயாரிப்பாளர்கள் அவரிடம்: “ ‘மேனகா’ நாடகத்தைப் படமாக்கும் காப்பி ரைட் டி.கே.எஸ். சகோதரர்களிடம்தான் இருக்கிறது; அவர்கள் சிறந்த நாடக நடிகர்கள். எவ்வளவு நடிக்க வேண்டுமோ அவ்வளவு அளவாக நீங்கள் சொல்லிக் கொடுப்பதுபோல் நடிப்பார்கள்” என்று சாண்டோவை ஒப்புக்கொள்ளச் செய்தார்கள். ஆனால், படப்பிடிப்புக்கு முன்பு சாண்டோ கட்டாய ஒத்திகைக்கு ஏற்பாடு செய்தார்.

‘மேனகா’ படத்தில் நைனா முகமதுவாக டி.கே.சண்முகமும் அவரது மனைவி நூர்ஜஹானாக கே.டி.ருக்மணியும் நடிக்கும் காதல் காட்சியைப் படமாக்கும் முன்பு சண்முகத் துக்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்தார் சாண்டோ. அக்காட்சியின் ஒத்திகையின்போது சாண்டோவிடம் தான் பட்ட பாட்டையும் தன்னை திரை வெளிக்கான ஒரு நடிகனாக எவ்வாறு அவர் திருத்தி வார்த்தார் என்பதையும் டி.கே. சண்முகம் தனது நூலில் குறிப்பிடும்போது: “பெண் வேடமிடும் ஆண்களோடுதான் நான் நடித்திருக்கிறேன். பருவப் பெண்க ளோடு காதல் காட்சியில் நடிப்ப தென்பது அன்றுதான் எனக்கு முதல் அனுபவம். இந்த நிலையிலேதான் எனக்கும் கே.டி.ருக்மணிக்குமான காதல் காட்சி ஒத்திகை தொடங்கியது.

நான் ருக்மணியின் மீது முத்த மழை பொழிய வேண்டும். ராஜா இரண்டு முறை நடித்துக் காண்பித்தார். எனக்கு என்னவோ போலிருந்தது. ‘பெண்ணின் மீது கை வைத்துத் தொட்டு நடிக்க வேண்டிய தர்மசங்கடத்தையெல்லாம் ஸ்டுடியோவில் படம் பிடிக்கும்போது வைத்துக்கொள்ளக் கூடாதா? நமக் கென்று ஒரு கலாச்சாரம் இல்லையா?’ என்று சாண்டோவைப் பார்த்து மனதுக் குள்ளாகவே சபித்தேன். ஆனால், அவர் விட்டால்தானே.. அன்று நடந்த ஒத்திகை முழுவதும் எனது கூச்சத்தைப் பார்த்து ருக்மணி சிரிக்க.. பதிலுக்கு நானும் சிரிக்க, நாளே முடிந்துவிட்டது. காதல் காட்சி ஒத்திகையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணன் ‘இதுதான் காதல் சிரிப்பு’ என்று நக்கலடித்தார்’.

அடுத்த நாள் ஒத்திகையைச் சற்று ஒத்தி வைப்பார் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். மறுநாள் சாண்டோ விடம் பாராட்டுப் பெற்றுவிடுவது என்கிற நோக்கத்துடன் துணிவோடு ஒத்திகையில் நடித்தேன். ராஜா எப்படிச் சொல்லிக் கொடுத்தாரோ அப்படியே நடித்தேன். உடனே சாண்டோ கலகலவென்று சிரித்துவிட்டுச் சொன்னார்: “நான் செய்வதை அப்படியே காப்பியடிக்காதே! அது நடிப்பல்ல. சொல்லுவதைக் கேட்டுப் புரிந்துகொண்டு, அந்தக் கருத்தை மனத்தில் பதிய வைத்துக் கொள். உனக்கு இயற்கையாக அமைந்த உடல்மொழியில் எப்படி வருகிறதோ அப்படிச்செய். ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல் அமைப்புக்கு ஏற்ப இது வேறுபடும். ஒருவரைப் பார்த்துக் காப்பியடிப்பது அவரவர்க்கு உண்டான இயற்கையான நடிப்பைக் கெடுத்துவிடும்” என்று, அதுவரை இதுதான் நடிப்பு என்று நான் எண்ணி யிருந்த எண்ணத்தை மட்டுமல்ல; நம் நடிப்பின் மரபையே உடைத்தார். சாண்டோவின் அந்த அறிவுரைதான் நான் நடிப்புத் துறையில் வளர்ச்சி பெறப் பெரும் தூண்டுகோலாக இருந்தது” என்று நெகிழ்ந்திருக்கிறார்.

தோற்றத்தைத் திருத்தினார்: காட்சிக்கான நடிப்பைக் கற்றுக் கொடுப்பதுடன் சாண்டோ நின்றுவிட வில்லை. கதாபாத்திரங்களின் முகத் தோற்றம், சிகை அலங்காரம், ஆடை அலங்காரம் எப்படி அமைய வேண்டும் என்பதிலும் அதிக ஈடுபாடு காட்டினார். ‘நைனா முகமதுவுக்கு பாகவதர் கிராப் பொருந்தாது’ என்று சிகை அலங்காரக் கலைஞரை அழைத்து சண்முகத்துக்குக் கிராஃப் வெட்டிவிடச் சொல்லிவிட்டு, கூடவே மீசையை எப்படித் திருத்தி அமைக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டுப் போனார். திரும்பி வந்து பார்த்தபோது தாம் சொன்னபடி கிராப்பும் வெட்டப்படவில்லை, மீசையும் சரி செய்யப் படவில்லை என்பதை அறிந்ததும் கையில் கத்திரிக்கோலை எடுத்தார். சண்முகத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் கண்ணாடி யின் முன்னால் உட்கார வைத்தார். சாண்டோஎன்ன செய்யப்போகிறார் என்று மொத்த நடிகர்கள் குழுவும் அங்கே பெருங்கூட்டமாகக் கூடிவிட்டது.

(விழிகள் விரியும்)

SCROLL FOR NEXT