நட்சத்திரங்கள் எப்போதுமே நேச்சுரலாகத்தான் இருக்கிறார்கள். கால்களைத் தரையில்தான் பாவியிருக்கிறார்கள். ஆனால், அவர்களைச் சுற்றியிருப்பவர்களும் ரசிகர்களும்தான் அவர்களுக்குப் பெரிய பிம்பத்தைக் கட்டமைக்கி றார்கள். நான் விஜய்க்கு கதை சொல்லச் சென்றபோது என்னோடு எஸ்கார்ட்டாக அனுப்பப்பட்டவர், எனது கதை ஓகே ஆகிவிட்டது என்று தெரிந்ததும் என்னை எப்படியாவதுப் படப்பிடிப்பில் கட்டுப்படுத்திவிட வேண்டும் என்று புதிய 10 கட்டளைகளைத் தூக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். ‘ஜான்.. விஜய் சார்.. காலையில 9 மணிக்கு செட்ல இருப்பார்.. சாயங்காலம் 6 மணிக்கு நீங்க அனுப்பிடணும். 5.30க்கு எல்லாம் கார் வந்துடும். அதேமாதிரி சன்ரைஸ் கால்ஷீட் எல்லாம் அவர்கிட்டசாத்தியமே இல்ல. நைட் ஷூட் இருக் குன்னா முன்னாடியே சொல்லிடணும்’ என்று வரிசையாக அடுக்கினார். இவை எல்லாம் இவர்களாகவே கற்பனை செய்துகொண்டது. வேலை என்று வந்துவிட்டால், விஜய் எவ்வளவு ‘இன்வால்வ்மெண்ட்’ காட்டுவார் என்பதற்கு ஊட்டி படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
2004, டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி. புத்தாண்டு பிறக்கப் போகிறது. ‘சச்சின்’ படக்குழுவில் அனைவரும் விருந்து சாப்பிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். நான், ஒளிப்பதி வாளர் ஜீவா, விஜய் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ‘பத்து கட்டளை’ அன்பர் சற்று தூரமாக இருந்து எங்களை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது விஜய்: “அண்ணா.. நாளைக்கு நியூ இயர். சென்டிமென்டலா ஒரு ஷாட் எடுத்துட்டு நாம பேக்-அப் பண்ணிக் கலாம். என் கையால யூனிட்ல இருக்க எல்லாருக்கும் நான் கிஃப்ட் கொடுக்க விரும்புறேன். நாளை அவங்க லீவு மாதிரி எஞ்சாய் பண்ணட்டும்” என்றார். நாங்கள் ஓகே என்றதும் ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிவிட்டுத் தூங்கப் போய்விட்டார். உடனே அந்த அன்பர் ஓடிவந்து ‘விஜய் சார் என்ன சொல்லிட்டுப் போறார்?’ என்று பதற்றமாகக் கேட்டார். விஷயத்தைச் சொன்னதும் இவர் சீரியஸ் ஆகி: ‘நாளை ஒரு ஷாட்டுக்கு மேல எடுக்காதீங்க.. விஜய் தம்பி டென்ஷன் ஆகிடப் போறார். ஜாக்கிரதை..’ என்று எச்சரித்துவிட்டுப் போனார்.
அடுத்த நாள் காலை 7 மணிக்கு ஷாட் வைத்திருந்தேன். அது ‘இண்டர்வல் பிளாக்’ சீன். கல்லூரிச் சுவரில் சச்சின் - ஷாலினி இருவரையும் இணைத்து வைத்து சந்தானம் கேரக்டர் கிறுக்கி வைத்திருக்கும் சீன். விஜய் வந்தார். முதல் ஷாட்டில் நடித்தார். ஷாட் ஓகே ஆனதும் நான் அவரிடம்: ‘விஜய் பேக் பண்ணிடலாமா?’ என்றேன். ‘என்ன அண்ணா.. எவ்வளவு முக்கியமான சீன்! போற வரைக்கும் போகட்டுமே..’ என்றார். படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. நேரம் ஓடியதே தெரியவில்லை. நான் விஜயிடம் போய்: ‘விஜய்.. இப்போ என்ன டைம் தெரியுமா?’ என்றேன். ‘என்ன டைம்?’ என்றார். ‘இரவு 9.30..’ என்றேன். பதறிப்போய்.. ‘சாரிண்ணா.. நாளைக்கு கண்டினியூ பண்ணுவோம்.. யூனிட் ரெஸ்ட் எடுக்கட்டும்’ என்றார். கதையிலும் காட்சிகளிலும் விஜய் கொண்டிருக்கும் இன்வால்வ்மெண்ட் தான் இப்படி அவர் நேரம், காலம் பார்க்காமல் உழைக்கக் காரணம். அதேபோல், ‘பேக்-அப்’ பண்ணிய பிறகு கூப்பிட்டாலும் மறுக்காமல் வந்து நடிப்பார் விஜய். அதற்கொரு சம்பவம்.
ஒரு நாள் மாலை 5 மணிக்கு ஷூட்டிங் முடிந்து ‘பேக்-அப் ஆகிவிட்டது. விஜய், ஜெனலியாவைக் கிளம்பச் சொல்லி விட்டேன். ஒளிப்பதிவாளர் ஜீவா என்னிடம் வந்து: ‘நாளைக்கு முதல் ஷாட் என்ன ஜான்?’ என்றார். ‘நாளைக்கு அதிகாலையில, விஜயும் ஜெனிலியாவும் ‘சன்ரைஸ்’ல மீட் பண்ற மாதிரி ஒரு மாண்டேஜ் ஷாட்’ என்றேன். ஜீவா உடனே.. ‘சன் ரைஸ் - சன் செட்.. ரெண்டும் ஒன்னுதானே..’ என்று சொல்லிவிட்டு, லைட்களை இறக்கிக்கொண்டிருந்த லைட் மேன் களைப் பார்த்து: “எல்லாரும் உடனே லைட்டை ஏத்துங்கப்பா..’ என்றவர்.. என்னைப் பார்த்து, ‘விஜய் - ஜெனிலியா ரெண்டு பேரையும் உடனே அழைச்சுட்டு வாங்க.. ஷாட்டை இப்பவே முடிச்சுடுவோம்’ என்றார். உடனே எனது உதவியாளரைப் பார்த்தேன். காரை நோக்கிப் போய்க் கொண்டிருந்த விஜயை இடைமறித்து அழைக்க, என்ன.. ஏது என எதுவும் கேட்காமல் வந்து விஜய் நடித்தார்.
சச்சின் படத்தை எஸ்.ஏ.சி.சார் பார்த்துவிட்டு என்னிடம் கேட்டார்: ‘வடிவேலுக்கு ஈடுகொடுத்து விஜய் நெளிஞ்சு வளைஞ்சு நடிக்கிற அந்த பாடி லாங்குவேஜை படம் முழுக்க எப்படி அவருக்குள்ள கொண்டு போனீங்க ஜான்?’ என்று கேட்டார். விஜய் கதை கேட்டபோது: ‘அண்ணா நீங்களே எல்லா ஷாட்லயும் நடிச்சுக் காட்டி டுங்க.. அந்த இன்ஸ்பிரேஷன்ல நான் பண்ணிடுறேன்’ என்றார். நம்மை பாராட்டுகிறார் என்றுதான் நானும் அப்போது அதை எடுத்துக் கொண்டேன். ஆனால், வடிவேலு - விஜய் காம்போ காட்சிகள் அனைத்தி லும் நான் நடித்துக் காட்ட வேண்டும் என்று அன்பாக வற்புறுத்தினார். நான் செய்து காட்டியதைக் கற்பூரம் மாதிரிப் பிடித்துகொண்டு அதில் அவரது ஸ்டைலைப் புகுத்திக்கொண்டார். ஒரு நடிகனாக தன்னை இயக்குநரிடம் ‘சரண்டர்’ செய்வதில் விஜய்க்கு இணை அவர் மட்டும்தான்!
இன்னொன்றையும் பகிர விரும்பு கிறேன். ஒவ்வொரு நாளும் அன்றைக்கு எடுக்கப் போகும் காட்சிகளுக்கு காஸ்டியூம்களை முன்னதாகவே செலக்ட் செய்து வைத்தாலும் ஸ்பாட்டில் பேக்ரவுண்டு கலருக்கும் மெயின் கேரக்டர் அணிந்திருக்கும் டிரெஸ்ஸின் கலருக்கும் ஒத்து வராது. அப்படித்தான் ஒரு இடத்தில் விஜய் அணிந்திருந்த ஆடையும் பேக்ரவுண்டும் ஒரே கலரில் இருந்தது. விஜய் டீ ஷர்ட்டை மாற்றியே ஆக வேண்டும். ஆனால், காரவன் அங்கே கிடையாது. உடை மாற்ற இடமில்லை; வெட்டவெளி. இப்போது விஜய் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? - ஜான் மகேந்திரன்
(ப்ரியம் பெருகும்)