இந்து டாக்கீஸ்

விஜயிடம் கதை சொன்ன கதை! | ப்ரியமுடன் விஜய் 29

Guest Author

தன்னுடைய கதாபாத்திரங் களின் வழியாக நம்முடன் உரையாடியவர் இயக்குநர் ஜெ.மகேந்திரன். வசனமும் காட்சி மொழியும் இசையும் இணைந்த தியானம் போல் தன்னுடைய தனித்துவமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவுக்கு அமுதூட்டி யவர். அவருடைய மகன் ஜான் மகேந்திரன் எழுத்து, இயக்கத்தில் விஜய் நடித்த கொண்டாட்டமும் குளிரும் நிறைந்த காதல் திரைப்படம் ‘சச்சின்’. கமல்ஹாசனுக்குப் பிறகு அழுத்தமான காதல் கதைகளில் ஜொலித்த விஜய்க்கு மறைந்த ஜீவாவின் ஒளிப்பதிவில் ‘சச்சின்’ ஓர் அழகான ஓவியமாக அமைந்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு,இப்போது ‘சச்சின்’ மறு வெளியீடு கண்ட நேரத்திலும் கொண்டாடப் பட்டது. அப்படம் உருவான நாள்கள் பற்றிய தன்னுடைய மனப்பதிவை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் ஜான்:

“ஓஷோ ரஜனீஷை முழுவதும் படிக்காதவர்களுக்கு அவரைப் பற்றிய ஒரு பிம்பம் இருக்கும். அவருடைய எழுத்துகள், போதனைகளைப் படித்தவர்களுக்கோ வாழ்க்கையை முற்றிலும் புதிய ஒன்றாகப் பார்க்கத் தோன்றும். ரஜனீஷின் எழுத்துகளை வாசித்த தாக்கத்தில் நான் எழுதிய ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ கதாபாத்திரம்தான் சச்சின். ஒரு சிறந்த, மாறுபட்டக் கதாபாத்திரம் கிடைத்துவிட்டால், அதுவே தன் கதையை எழுதிக்கொள்ளும். சமூகத்தோடு இயைந்து செல்ல முடியாத சச்சின் போன்ற ஒருவன், சமூகம் என்ன சொல்லும் என்பதற்காகவெல்லாம் கவலைப் பட்டுக்கொண்டிருக்காமல் வெளிப் படையாக, தன்னுடைய இயல்பான நகைச்சுவை உணர்வைக் கட்டுப் படுத்தி வைக்காமல் வாழ விரும்பு கிறவன். ஒளிவு மறைவு இல்லாத அவனைப் போன்ற ஒருவன், ஷாலினி போன்ற ஒரு பெண்ணைப் பார்த்தால் எப்படி புரபோஸ் பண்ணுவான், ஒரு காதல் தோல்வியை எப்படி ரீசீவ் பண்ணுவான் என்பதுதான் ‘சச்சின்’ என்கிற இளைஞனுடைய கதை.

இந்தக் கதையை விஜயை மனதில் வைத்து நான் எழுத வில்லை. அப்போது, ‘கில்லி’, ‘மதுர’, ’திருப்பாச்சி’ என்று வரிசையாக ஆக்‌ஷன் கதைகளில் நடித்துக்கொண்டு இருந்தார் விஜய். ‘திருப்பாச்சி’க்குப் பிறகு தாணுவுக்குப் படம் பண்ண ஒப்புக்கொண்டிருந்தார் விஜய். நானோ இதற்கெல்லாம் முன்பே, ‘சச்சின்’ கதையில் யாரை வைத்து எடுக்கப் போகிறோம் என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் திரைக்கதை எழுதி முடித்துவிட்டு தாணு சாரிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்தேன். தாணு சார் குறைந்தது 2 மணி நேரமாவது கதை கேட்பார். கதை பிடித்துப்போய்விட்டால், வேறு எதுவும்
பேசமாட்டார். அவருடைய மேஜைக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும் அழைப்பு மணியின் சுவிட்ச்சு நோக்கி தன்னிச்சையாக அவருடைய கை நீளும். அங்கே அவர் சுவிட்ச்சை அழுத்தினால், அவரது அலுவலகத்தின் காசாளர் அறையில், அவரது மேசையில் இருக்கும் மணி ஒலிக்கும்.

உடனே காசாளர் அட் வான்ஸ் நிரப்பப்பட்டக் காசோலையை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போவார். அப்படித்தான் எனக்கும் முன்பணக் காசோலை கொடுத்து, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுமா.. இந்தக் கதையை நாம பண்றோம்.. ஆர்ட்டிஸ்ட் யாரு.. என்னங்கிறதெல்லாம் அதுவா டிசைட் ஆகும். இந்தக் கதை தனக்கான ஆர்ட்டிஸ்ட்டை அதுவே தேடிக் கண்டு பிடிச்சுடும்’ என்று சொல்லி அப்போது அனுப்பிவிட்டார். தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கிறார் என்றதும் எனக்குத் தெரிந்த பல உதவி இயக்குநர்கள் அற்புதமான ஆக்‌ஷன் கதைகளுடன் தாணு சாரை சந்தித்துக் கதை சொல்லி ஓகே லிஸ்ட்டில் இருந்தார்கள். அவர்களை ஒவ்வொருவராக விஜயிடம் அனுப்பிக் கதை சொல்ல வைத்தார். ஆனால், விஜய் ஒவ்வொரு கதையையும் இடைவேளை வரைக் கேட்டுவிட்டு, ‘இல்லைங்கண்ணா.. நான் எதிர் பார்க்கிறது இது இல்ல’ என்று சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தார்.

தாணு, எப்படி, எங்கே விஜயிடம் என் கதையைப் பற்றிச் சொல்லியிருந்தார் என்று தெரியவில்லை. விஜய், தாணுவிடம் ‘ஜான்னு யாரோ ஒருத்தர் நல்ல லவ் ஸ்டோரி சொன்னாருன்னு சொன்னீங்கள்ல சார்.. அதைக் கேட்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார். தாணு அதிர்ச்சியாகி ‘தம்பி அதுவொரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி.. இப்போ நீங்க வரிசையாக ஆக்‌ஷன் ஹிட் கொடுத்திட்டு வரீங்க.. உங்களுக்கு ஓகேவா?’ என்று தெளிவாகக் கேட்க, ‘சும்மா கேட்கலாமே சார்..’ என்று விஜய் சொல்ல.. என்னிடம் தாணு சார் ‘இன்னைக்கு ஈவ்னிங் 3 மணிக்கு விஜய் வீட்டுக்குக் கதை சொல்லப் போயிடும்மா..’ என்று சொன்னார்.

ஏற்கெனவே விஜய்க்குக் கதை சொல்லித் திரும்பியிருந்த சில நண்பர்களிடம் ‘விஜய்க்கு கதை சொல்லப் போகிறேன்’ என்றேன். உடனே அவர்கள், ‘இந்தச் சுவரைப் பார்த்துக் கதை சொல்லி, நல்லா பிராக்டீஸ் பண்ணிட்டுப் போங்க சார்.’ என்றார்கள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது! ஒரு நல்ல கதை சொல்லிக்கு நன்றாகக்கதை கேட்பவர்கள் இருந்தால்தான் தங்கு தடையில்லாமல் கதை சொல்ல முடியும். எந்த உணர்ச்சியையும் காட்டாத வர்களிடம் கதை சொல்வது வீண்! எனக்கோ விஜய்க்கு எப்படிக் கதை சொல்லப் போகிறோம் என்று டென்ஷன் ஆகி விட்டது. எனக்கிருக்கும் டென்ஷன் போதாது என்று, என்னை விஜயிடம் கதை சொல்ல அழைத்துச் சென்ற அன்பர், ‘விஜயிடம் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்’ என்று ஒரு பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார். அவர் விஜய் குடும்பத்துக்குப் பரிச்சயமானார். ‘விஜயைச் சந்திக்கும்போது இந்த விஷயங்களையெல்லாம் பண்ணிடாதீங்க; அவருக்குப் பிடிக் காது’ என்று என்னைக் குழப்பி விட்டார். சரி பார்த்துக்கொள்ளலாம் என்று விஜய் வீட்டுக்குப் போய், அவரைச் சந்தித்து ‘ஹலோ விஜய்’ என்று கை குலுக்கினேன்.

உடனே அந்த அன்பர் சற்றுதூரத்திலிருந்து, ‘நான் பெருங்குற்றத்தைச் செய்துவிட்டதைப் போல்’ தனது கைகளைப் பதற்றத்துடன் உதறி, என்னைப் பார்த்துப் பல்லைக் கடித்தபடி தலையில் அடித்துக் கொண்டவர், கிசுகிசுப்பான குரலில் ‘என்ன சார் நீங்க கை கொடுக்குறீங்க.. அவர் கொடுத்தாத்தான் நீங்க கை கொடுக்கணும்.. நான் சொன்ன ரூல்ஸை மறந்துட்டீங்களா?’ என்று பதறினார். அது மட்டுமல்ல, உடனடி யாக தாணு சாருக்குப் போன் செய்து, மீண்டும் கிசுகிசுப்பான குரலில் ‘சார்.. உங்க ஆளு.. விஜய் சார்ன்னு சொல்லாம, ஹலோ விஜய்ன்னு சொல்லி கைய வேறப் பிடிச்சுக் குலுக்குறாரு.. இது ஆகிற கதையில்ல..’ என்று பதறினார். அவரது பதற்றத்தைத் தணிக்கும்விதமாக நான் விஜயிடம் ‘விஜய்.. எனக்கு சார் வரமாட்டேங்குது.. யூ ஆர் ஸோ யங்கர் தென் மீ. உங்களுக்கு ஏதும் சங்கடம் இல்லையே?’ என்று கேட்டேன். விஜய்.. ‘அதெல்லாம் ஒரு பிராப்ளமும் இல்லைங்கண்ணா..’ என்று அவர் சொன்னதும் கதை சொல்லத் தொடங்கினேன். வெற்றிபெற்ற ஓர் இயக்குநர் ஒரு பெரிய ஹீரோவுக்கு ஒரு வரியில் கதை சொன்னால் கூடப் போதும். ஆனால், ஓர் அறிமுக இயக்குநர் கதை சொல்லும்போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நடித்துக் காட்ட வேண்டும். இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் மொத்தப் படத்தையும் நம்முடைய நடிப்பால் ஓட்டிக்காட்ட வேண்டும். நானும் அதைத்தான் செய்தேன்.

கதை சொல்லத் தொடங்கிய 4வது நிமிடத்தில் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிய விஜய்.. 30வது நிமிடத்திலேயே ‘அண்ணா.. இந்தக் கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம இந்தப் படத்தைப்பண்ணுவோம். அது உறுதியாகிடுச்சு.. அதுக்காக இப்போ முழுக் கதையை யும் கேட்காம நான் இங்கேயிருந்து நகர்றதா இல்லை’ என்றவர், அப்போதே போன் போட்டு தாணு சாருக்கும் சொல்லிவிட்டார். அதன்பின் இரண்டரை மணிநேரம் கதையைக் கேட்டு ரசித்தவர், இன்னொன்றையும் என்னிடம் வேண்டுகோளாக வைத்தார். ‘சச்சின் கேரக்டரை நீங்க கைகளை நிறைய அசைச்சு எக்ஸ்பிரஸ் பண்ணது, அந்தக் கேரக்டருக்கான பாடி லாங்கு வேஜ் எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு.. ஆனா, கைகளை நீங்க அசைக்கிற அதே ஸ்டைல்ல பண்ணனும்னு நினைக்கிறேன். சச்சின் வர்ற எல்லா ஷாட்லயும் நீங்க எனக்கு நடிச்சுக் காட்டணும்’ என்றார். - ஜான் மகேந்திரன்

(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT