இந்து டாக்கீஸ்

பம்பாய் படவுலகின் பீம் பாய்! - கண் விழித்த சினிமா 21

ஆர்.சி.ஜெயந்தன்

ஒரு சலனத் திரைப்படம் எப்படி உருவாகிறது, அதில் எவ்வாறு நடிப்பது, சண்டைக் காட்சியில் எப்படி நடிப்பது என எதுவும் அறிந்திராத ராஜா சாண்டோவுக்கு பாம்பே நேஷனல் ஸ்டுடியோவில் நடத்தப்பட்ட ‘டெஸ்ட் ஷூட்’ ரணகளமாக முடிந்தது. தனது உதவி இயக்குநர் செய்த தவறையும் சண்டைக் காட்சிகளில் வீரதீரமாகத் தாக்குவதுபோல் எப்படிப் பொய்யாக நடிக்க வேண்டும் என்பதையும் சாண்டோவுக்கு எடுத்துச் சொன்னார் இந்தியாவின் சலனப் பட முன்னோடிகளில் ஒருவரான எஸ்.என்.பதாங்கர், ‘சண்டைக் காட்சியில் நடிக்க ஏற்றவர்’ என்று ராஜா சாண்டோவை முடிவு செய்துவிட்டார்.

ஆனால், அவரின் அழகிய முகத்தோற்றமும் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்த அவரின் மேற்கத்திய ஸ்டைலையும் பார்த்து, மற்ற உணர்ச்சிகளுக்கு சாண்டோவால் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டார். அதனால், அதையும் அப்போதே பரிசோதிக்க விரும்பினார். அதற்கான ‘டெஸ்ட் ஷூட்’டைத் தன்னுடைய மேற்பார்வையில் நடத்திய பதாங்கர், சாண்டோவிடம் நடிக்க வேண்டிய காட்சியை விளக்கிக் கூறினார்.

“ஒரு கிராமத்தின் குடிகள் படிப்படியாகக் கெட்ட மனிதர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள். ஒரே ஒருவன் மட்டும் உத்தமனாக, பக்திமானாக இருக்கிறான். அந்த ஒருவனுக்காக மட்டும் இனி இங்கே வசிக்க முடியாது என்று முடிவு செய்கிறது அந்தக் கிராமத்தின் காவல் தேவதை. அதிகாலைப் பொழுதில் அந்த ஊரின் ஆலயக் கருவறையிலிருந்து காவல் தேவதை வெளியேறுகிறாள். அப்போது அவளை வழிபட்டு வந்த உத்தம பக்தன், பதறித் துடித்து ‘அம்மா.. சேய் குற்றம் செய்தால் தாய் அதைக் கண்டித்து, தண்டித்துப் புத்தி புகட்டிக் காப்பாள்.

எங்களைத் தண்டிக்க உனக்கு உரிமையிருக்கிறது; ஆனால், எங்களைக் கைவிட்டுப் போய்விடாதே.. அப்படிப் போவதானால் முதல் பலியாக என் உயிரை எடுத்துவிட்டுப் போ..’ என்று கூறி தேவதையின் காலில் விழுந்து கதறி அழுது பக்தன் நடிக்க வேண்டும். நான் சொன்ன வசனங்களைத்தான் நீ பேச வேண்டும் என்பதில்லை; நீ என்ன வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிப் பேசு.. ஆனால், அதில் நீ தொழுது மன்றாடுவது தெரிய வேண்டும்’ என்று சொல்லிக் கொடுத்தார்.

அழ வைத்த சாண்டோ: ராஜா சாண்டோ பக்தனாகவும் சுந்தரி என்கிற பெண் கிராம தேவதையாகவும் நடிக்கத் தயாரானார்கள். கேமரா ஓடத் தொடங்கியது. சுந்தரி கையில் சூலாயுதத்துடன் கருவறையிலிருந்து வெளியே வந்து, போக முயன்றார். அப்போது அவர் காலில் விழுந்த ராஜா, ‘அம்மா தாயே.. நீ எங்களை விட்டுப் போகாதே’ என்றார். சுந்தரி அதைக் கேட்காமல் இரண்டு அடி எடுத்து வைக்க, ராஜா சட்டென்று நகர்ந்து சுந்தரியின் காலை இறுகப் பிடித்துக்கொண்டு அவரைப் போகவிடாமல் தடுத்துப் பேசத் தொடங்கினார்.

கெஞ்சல், கதறலோடு சுந்தரியின் மனதை உருக்கும்படியாகப் பேசினார்: ‘தாயே.. இந்தக் கிராமம் உன் வீடு.. இது இவ்வளவு பசுமையாக.. குளமும் குட்டைகளும் ஏரியும் மழை நீரால் நிரம்பி வழிய உன் கருணைதானே எங்களுக்கு ஆதாரம். இந்த ஊரின் வயல்கள் விளைந்து செழிக்க.. பட்டினியின்றி நாங்கள் பசியாற.. உன் பாசம்தானே எங்களுக்குப் பாதுகாப்பு! உன்னை இழந்தால் நாங்கள் கண்கள் இருந்தும் குருடர்கள் ஆவோம் தாயே.. உன் குழந்தைகளை நீ அப்படித்தான் விட்டுச் செல்ல விரும்புகிறாயா? நாங்கள் செய்த தவறுக்கு எங்களைத் தண்டித்துத் திருத்து.

ஆனால், எங்களைக் கைவிட்டுப் போய்விடாதே… அப்படிப் போவதென்று நீ உறுதியாக இருந்தால்.. உன் கோபத்தின் முதல் பலியாக என் உயிரை எடுத்துக்கொண்டபின் இங்கிருந்து புறப்படு’ என்று உருக்கமாகப் பேசியபடி சாண்டோ கண்ணீர் விட்டு அழ.. சாண்டோவின் வசன மொழியைக் கேட்டு சுந்தரி அழ… செட்டில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் அழ.. பதாங்கரும் தன்னையறியாமல் அழுதார்.

‘கட்’ சொல்லிவிட்டு ராஜா அருகில் போய்.. ‘ராஜா நீ இவ்வளவு அருமையாக நடிப்பாய் என்று நான் நினைக்கவில்லை..! இனி இந்தப் ‘பக்த போதனா’வின் கதாநாயகன் நீதான். உனக்கு என்ன சம்பளம் வேண்டும் கேள்’ என்றார். சாண்டோவோ ‘எனக்கு மாதம் 1100/- ரூபாய் வருமானம் வருகிறது. எனவே எனக்கு எதுவும் வேண்டாம்.’ என்றார். பதாங்கரோ விடுவதாக இல்லை. 1915இல் தொடங்கி தன்னுடைய சலனப் படங்களில் நடித்து வந்த கதாநாயக நடிகர்களுக்கு 60 ரூபாயும் கதாநாயகி நடிகைகளுக்கு 40 ரூபாயும் சம்பளம் கொடுத்து வந்தார்.

சாண்டோவை விட்டுவிடவே கூடாது என்று, ‘பக்த போதனா’வில் அவர் நாயகனாக நடிக்க 100 ரூபாய் சம்பளம் கொடுத்தார். பாம்பாய் சினிமாவில் ஒரு சலனப் படத்துக்கு 100 ரூபாய் ஊதியம் பெற்ற முதல் நாயக நடிகராக ஆனார் சாண்டோ. இரண்டே மாதத்தில் தயாராகி வெளியான ‘பக்த போதனா’ அதுவரை பதாங்கர் தயாரித்து, இயக்கிய படங்களைப் போல் இல்லாமல் 4 வாரங்கள் வெற்றிகரமாக ஓடியதில் மகிழ்ந்து மேலும் 50 ரூபாயை சாண்டோவுக்கு ஊதியமாகக் கொடுத்தார்.

உச்சம் தொட்ட நாயகன்: இன்று முன்னணி நட்சத்திரமாகத் திகழும் நாயக நடிகர், நாயகி நடிகை களுக்குப் பொருத்தமான கதை, கதாபாத்திரங்களைக் கதாசிரியர்களும் இயக்கு நர்களும் உருவாக்குவது போல், ராஜா சாண்டோவின் கம்பீரமான தோற்றத்துக்குப் பொருந்தும் வகையிலான புராண, சமூகக் கதைகளைத் தேர்ந்தெடுத்தார் பதாங்கர். கர்ணன் கதாபாத்திரம் சாண்டோவுக்குக் கச்சித மாகப் பொருந்தும் என்று குறிப்பிட்டு, ‘குந்தி புத்ர கர்ண’ என்கிற சாண்டோ நடித்த இரண்டாவது படத்தையும் இயக்கினார்.

சாண்டோ நடித்த ‘சூர்யகுமாரி’ என்கிற மூன்றாவது படமும் நான்கு வாரங்கள் ஓடி வெற்றியடைந்துவிட, சாண்டோவை ‘பம்பாயின் பீம் பாய்’ என்று புகழ்ந் தார்கள். சாண்டோவை ஒப்பந்தம் செய்ய பட நிறுவனங்களுக்குள் கடும் போட்டி எழுந்தது.

இதனால் சாண்டோவின் சம்பளமும் படத்துக்குப் படம் உயர்ந்து கொண்டே போனது. பம்பாய் கோஹினூர் பிலிம் கம்பெனியின் முதலாளியும் பம்பாய் நகரில் 1915இல் புகழ்பெற்றுவிட்ட இம்பீரியல் நிரந்தரத் திரையரங்கின் உரிமையாளருமான துவாரகாதாஸ், 6 மாத காலம் தங்கள் நிறுவனத்தின் படங்களில் நடித்துக் கொடுக்க 9000 ரூபாய்க்கு சாண்டோவிடம் ஒப்பந்தம் போட்டார். கோஹினூர் தயாரித்த அத்தனை படங்களும் வெற்றிபெற.. ராஜா சாண்டோவை வளைத்த மற்றொரு பம்பாய் சலனப்பட நிறுவனம் மெஜஸ்டிக் பிலிம் கம்பெனி.

அந்த நிறுவனம் ‘ரஸியா பேகம்’ என்கிற ஒரு படத்தில் நாயகனாக நடிக்க மட்டுமே 2000 ரூபாய் சம்பளம் கொடுத்தது. ராஜா சாண்டோ அதுவரை நடித்திருந்த சலனப் படங்களில் இதுவே சமூகக் கதையைக் கொண்டிருந்த முதல் படம். ஒரு படத்துக்கு 2000 ஆயிரம் ரூபாய் ஊதியம் என்பது அன்று பிரபலமாக இருந்த மற்ற சலனப்படக் கதாநாயகர்களை விட 19 மடங்கு அதிகம். மெஜஸ்டிக் பிலிம் கம்பெனியின் ‘வீர் பீம்சென்’ படம் 125 நாள் ஓடியது.

ரஞ்சித் ஸ்டுடியோவுக்கு நடித்துக் கொடுத்த படங்கள் உள்பட, அவர், 58 இந்தி சலனப் படங்களில், சரி சமமான அளவில் சமூகக் கதைகளிலும் நடித்து முடித்திருந்த போது நட்சத்திர நாயகனாகப் பெரும் புகழைப் பெற்றிருந்தார். இவற்றில் பல நிறுவனங் களுக்காகப் பல படங்களை அவரே இயக்கி, நடித்தார்.

பம்பாய் சலனப்பட உலகில் பணியாற்றி வந்த தென்னிந்தியர்களை ‘சாலா மதராஸி’ எனத் தரம் தாழ்ந்து அழைப்பதைத் தடுத்து நிறுத்தியிருந்தார். ராஜா சாண்டோ மற்றொரு மைல்கல்லையும் சலனப்படக் காலத்தின் இறுதியில் சாதித்தார். 1918க்குப் பின் தணிக்கைச் சான்றிதழுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை மட்டுமே படம் தொடங்கும்முன் காட்டி வந்தனர்.

தணிக்கை அதிகாரிகளை நேரில் சந்தித்த ராஜா சாண்டோ, ‘நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இல்லாமல் ஒரு திரைப்படம் இல்லை’ என்பதை எடுத்துக்கூறி, அவர்களின் பெயர்களையும் படத்தின் டைட்டிலில் இடம்பெற வேண்டும் என்கிற அனுமதியைப் பெற்றுக்கொடுத்தார்.

இப்படி ராஜாவின் புகழ் பம்பாயில் ஓங்கிக் கிடந்த நேரத்தில் தமிழ் சலனப் படங்களை எடுக்க பம்பாய் வந்திருந்த மற்றொரு தமிழரான ‘அசோசியேட்டட் பிலிம்ஸ்’ ஆர்.பத்மநாபன், ராஜா சண்டோவைச் சந்தித்து, ‘சொந்த மண்ணை மறந்துவிட்டீர் களா? மதாராஸுக்கு வந்து தமிழ்ப் பட வுலகை அபிவிருத்தி செய்வது உங்கள் கடமையல்லவா?’ என்கிற வேண்டுகோளை வைத்தார்.

அவரின் வேண்டுகோளை ஏற்று, அவரது நிறுவனத்துக்காக பம்பாயிலேயே ‘பேயும் பெண்ணும்’, ‘அனாதைப் பெண்’, ‘கருந்திருடன்’, ‘ராஜேஷ்வரி’ ஆகிய சமூகப் படங்களை இயக்கிய சாண்டோ, அவற்றில் நடிக்கவும் செய்தார். வாய்மொழி இலக்கிய மாகப் புகழ்பெற்றிருந்த பல நாட்டார் கதைகளில் ‘நல்லதங்காள்’ கதையையே அவர் ‘ராஜேஷ்வரி’யாக மாற்றினார். திரைப்பட இயக்கத்தில் அவர் இறங்கியபோது சலனப் படம், சமூகப் படங்களின் நீண்ட அணி வகுப்பாக மாறியதை அடுத்த அத்தியாயத்தில் வாசிப்போம்.

(விழிகள் விரியும்)

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT