பான் இந்திய சினிமா என்கிற பெயரில், 5 மொழிகளில் பெரிய பட்ஜெட் படத்தை உருவாக்கி வசூல் பெறுவதே இன்றைய போக்கு. ஆனால், அவை, மாநில அளவில் கலாச்சார வேறுபாடுகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங் களைக் கொண்டிருப்பதில்லை. அண்டை மாநில சினிமாவாக இருந்தாலும் தெலுங்கு சினிமா ரசனையை, தமிழ் ரசனையுடன் ஒப்பிடவே முடியாது. பாடல்கள், சண்டைக்காட்சிகள், கதாபாத்திர அணுகுமுறை, க்ளைமாக்ஸ் எனப்பலவற்றில் இருமொழிப் படங்களும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன. ‘குஷி’ படத்தைத் தமிழில் இயக்கி வெற்றி கொடுத்த கையோடு, அதே தயாரிப்பாளருக்காக அதன் தெலுங்குப் பதிப்பை மறுஆக்கம் செய்தார் எஸ்.ஜே.சூர்யா. அதில் நாயக னாக நடித்தவர் இன்றைய ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண். தமிழ், தெலுங்கு பதிப்புகளில் தான் கையாண்ட மாற்றங்கள் பற்றிய மனப்பதிவை இந்த அத்தியாயத்தில் பகிர்ந்திருக் கிறார் எஸ்.ஜே.சூர்யா.
“இயற்கையின் சில விதிகளை ஒரு திரைக்கதைக்குள் பொருத்திவிட்டால், கலாச்சாரம் கடந்து உலகின் எந்த மொழி ரசிகர் களையும் அதை ரசிக்கச் செய்துவிடலாம். எடுத்துக்காட்டுக்கு ‘வண்ணத்துப் பூச்சி விளைவு’ என்கிற இயற்கையின் விதி. எங்கோ ஒரு வனாந்தரத்தில் கூட்டுப் புழுவாக இருந்து, அதிலிருந்து வெளியேறி சிறகை அசைக்கும்போது, இறைவனின் படைப்பில் மிகச்சிறியதாக இருக்கும் அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகசைவினால் காற்றில் உண்டாகின்ற நகர்தல், சங்கிலித் தொடர்போல் செயல்பட்டு மிகப்பெரிய புயலாக உருவாகக்கூடும் என்பதுதான் அந்த வண்ணத்துப்பூச்சி விளைவு!
‘குஷி’யில் அந்த வண்ணத்துப்பூச்சி விளைவைப் பயன்படுத்தினேன். கொல்கத்தாவில் பிறந்த சிவாவையும் குற்றாலத்தில் பிறந்த ஜெனிஃபரையும் இயற்கை எப்படி இணைக்கப்போகிறது என்பதையே திரைக்கதையாக்கினேன். மொழியால், இனத்தால், மதத்தால் இவர்கள் வேறுபட்டிருந்தாலும் இவர்களுக்குள் இயற்கையின் சிறகடிப் பாகிய காதல் எப்படி உருவாகி வளரப் போகிறது என்பதுதான் ‘பிளே’. அதை இயற்கையின் விளையாட்டு என்று கூடவைத்துக்கொள்ளலாம். ‘குஷி’ வெற்றி பெற்றால் அது பல மொழிகளுக்கு எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அப்படியே மறுஆக்கம் செய்யப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், தெலுங்கு, இந்தி மறுஆக்கங்களையும் நானே இயக்குவேன், இயற்கை, என்னையே அந்த வேலையைச் செய்யப் பணிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால்,தெலுங்கிலும் இந்தியிலும் மறுஆக்கம் செய்யும்போது, என்னதான் இயற்கையின் விதியோடு அமைக்கப்பட்ட கதையாக இருந் தாலும் நடிகர்களுக்காகச் சில மாற்றங்கள் கோரப்பட்டதை மறுப்பதற்கில்லை.
தமிழ் ‘குஷி’யைப் பொறுத்தவரை நான் கதையாக என்ன சொன்னேனோ, அதிலி ருந்து ஒரு காட்சியில்கூட விஜய் மாற்றம் கேட்கவில்லை. கதையைக் கேட்டு ஓகே சொன்ன பிறகு எந்த மாற்றத்தையும் கேட்க மாட்டார். காரணம் அவர் ஓர் இயக்குநரின் மகன் என்பதுதான். திரைக்கதை என்கிற தன்னுடைய குழந்தையின் மீது இயக்குநர் எவ்வளவு அக்கறையும் நம்பிக்கையும் வைத் திருப்பார் என்பது அவருக்குத் தெரியும். அவரைப் போல் எல்லா நட்சத்திரங்களும் இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.
தெலுங்கு பதிப்புக்குப் பவன் கல்யாணு டைய கால்ஷீட்டைப் பெற்றுவிடுவது என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சார் பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பவன், ‘பத்ரி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். ஒருவழியாக அவர் கதை சொல்ல நேரம் ஒதுக்கித்தர, அவரைச் சந்தித்து 3 மணி நேரம் 10 நிமிடம் கதை சொன்னேன். சொல்லி முடித்ததும் படம் பார்த்துவிட்டு ‘ஸ்டாண்டிங் ஓவேஷன்’ கொடுப்பதுபோல் எழுந்து நின்று கைதட்டிவிட்டு, என் கையைப் பிடித்துக் கொண்டு ‘இந்தப் படத்தை நான் உறுதியாக உடனே பண்ணுகிறேன்; லைன் அப்பில் இருக்கும் படங்கள் இருக்கட்டும்” என்றார். அவர் சொன்ன மாதிரியே தனது இரண்டு படங்களை ஒத்திவைத்துவிட்டு ‘குஷி’க்கு முன்னுரிமை கொடுத்தார். அடுத்த நாளே பிரஸ்மீட் வைத்து “இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா எதிர்பார்ப்பதில் நான் பாதியைச் செய்தாலும் போதும், இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகும். எனக்கு நேரமில்லாமையால் கதையைக் கேட்க முடியா மல் இயக்குநரையும் தயாரிப்பாளரையும் இழுத்தடித்தது எனக்கு மன வருத்தத்தைத் தருகிறது” என்று பத்திரிகையாளர் களிடம் கூறினார். அதுதான் பவன் கல்யாண்.
நான் தமிழ் ‘குஷி’யை உருவாக்கிய போது, விஜய் ஒரு பெரிய நட்சத்திரம். ஜோதிகா வளர்ந்துகொண்டிருந்தார். விஜய் என்கிறநட்சத்திரத்தின் காலுக்கு ஏற்றவாறு காலணியை வடிவமைக்க வேண்டும் என்று நான் குஷி கதையை உருவாக்கவில்லை. ஏனென்றால், அதில் சிவா - ஜெனிஃபர் என்கிற இரண்டு கதாபாத்திரங்கள்தான் இருந்தார்கள். அதனால்தான் ‘குஷி’ என்கிறஅழகான, மேஜிக்கலான சிண்ட்ரெல்லாகாலணியை நாங்கள் வடிவமைத்துவிட் டோம். தெலுங்கு ‘குஷி’யை அதற்குள் பொருத்த முயன்றேன். இரண்டாவது செயல் முறை சற்று சிக்கலாக இருந்தது. ஒரு படத்தை ரீமேக் செய்வது அவ்வளவு கடினம்.
பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் ஒரு நட்சத்திரம் என்பதால், படத்தில் மேலும் மூன்று சண்டைக் காட்சிகளைச் சேர்க்கச் சொன்னார். கதையின் ஓட்டத்துக்குச் சண்டைக்காட்சிகள் தேவையற்றவை என்று எனக்குத் தோன்றியது. அவர் சண்டைக் காட்சிகள் இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், நாங்கள் ஒன்றாக அமர்ந்து அதைப் பற்றி விவாதித்தோம். அவர் படத்தின் தொடக்கத்திலேயே ஓர் அறிமுகச் சண்டைக்காட்சியை விரும்பி னார். அதற்குத் திரைக்கதையில் ஓர்இயல்பான சூழ்நிலையைத் தயார் செய்தேன். தன் கண் முன்னால் கதா நாயகிக்கு ‘ஈவ் டீசிங்’ நடக்கும்போது ஒரு சண்டைக் காட்சி இருக்க வேண்டும் என விரும்பினார். நான் இன்னொரு ஸ்லாட்டை உருவாக்கினேன். கூடுதல் சண்டைக் காட்சிகளைக் கதையின் திருப்பங்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பார்த்துக் கொண்டேன். சண்டைக்காட்சிகளை அவரையே இயக்கும்படியும் கேட்டுக்கொண் டேன். கூடுதல் சண்டைக்காட்சிகள் பட மாக்கப்பட்டபோது நான் படப்பிடிப்புத் தளத் துக்குப் போகவில்லை. படத்தின் எடிட்டிங் முடிந்ததும் கூடுதல் சண்டைக்காட்சிகள் எப்படி வந்திருக்கின்றன என்பதைப் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன். பவன் ஒரு கச்சித மான வேலையைச் செய்திருந்தார். தெலுங்கு ‘குஷி’ வெளியாகி திரையரங்குகளில் ரசிகர் களோடு படத்தைப் பார்த்தபோது, ‘கூடுதல் சண்டைக் காட்சிகள் வேண்டாம்’ என்கிற எனது கருத்தை மாற்றிக்கொண்டேன். ஏனென்றால், அந்தச் சண்டைக் காட்சிகளில் வன்முறை என்பதை பவன் மிகவும் கட்டுப்படுத்திக் கையாண்டிருந்தார்.
தவிர அவற்றில்போதனை என்கிற அம்சம் சேர்க்கப்பட்டி ருந்ததால், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கைதட்டி, எம்பிக் குதித்து ரசித்தனர். ‘குஷி’ தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களை இயக்கி முடித்தபோது, திரைக்கதை எழுது வதில் ஒரு புதிய பரிமாணத்துக்கு மாறினேன். அது வேறொன்றுமல்ல; ஒரு நட்சத்திரத்தை இயக்குவதாக இருந்தால் என் படங்களுக்கு இரண்டுவிதமான திரைக்கதைகளைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் அது. ஒன்று கதையோட்டத்தை முன்னிறுத்தி எழுதப்படும் திரைக்கதை. இரண்டாவது நாம் இயக்கப் போகும் நட்சத்திரத்தை எவ்வாறு கையாள்வது என்பதை முன்னிறுத்தி எழுதிக்கொள்ள வேண்டிய திரைக்கதை.
தெலுங்கு பதிப்போடு ஒப்பிடும்போது தமிழ்ப் பதிப்பின் பாடல்கள் மிகவும் அற்புதமாக அமைந்து போயின. பாடல் காட்சிகளில் விஜயின் நடனம் மட்டுமல்ல; பாடல் காட்சிகளில் உணர்வுகளை அற்புதமாக வெளிப் படுத்துவார். தமிழ் குஷி வெளியாகி வெற்றிபெற்றிருந்தபோது விஜயிடம் ஒரு சீனியர் நிருபர், ‘கட்டிப்பிடி கட்டிப்பிடிடா மாதிரியான பாடல், ‘குஷி’ படத்தின் கதைக்கு அவசியமா? நீங்கள் அதில் நடிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கலாமே?’ என்று கேட்டார். அதற்கு விஜய்; “நீங்க மட்டும்தான் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள். என்னுடைய இருபால் ரசிகர்கள், ‘குஷி’ படத்தில் ‘கட்டிப்பிடிடா’ பாடல் செமன்னு சொல்றாங்க! இதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க? இந்தப் பாடலில் இருக்கும் கவர்ச்சியைப் பார்த்தீர்கள் சரி; அது ஜெனிஃபரைக் கோபப்படுத்தக் கதைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் பாருங்கள்.
அதுகூட வேண்டாம்; இந்தப் பாடல் காட்சியின்போது தியேட்டர்களில் எவ்வளவு ஆரவாரம் என்பதை நீங்களே பார்த்திருப் பீர்களே.. என்னைப் பொறுத்தவரைக்கும் ரசனையில் வேறுபாடு இருக்கவே செய்யும். இப்படிச் சொல்றதால உங்கள் ரசனை யையோ, உங்கள் கேள்வியையோ நான் மதிக்கலன்னு அர்த்தமில்ல. அது உங்க பார்வை” என்றார்.தமிழ் ‘குஷி’யின் கிளைமாக்ஸில் சிவாவும் ஜெனிஃபரும் ‘லிப்லாக்’ முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி மிகவும் அவசியமானது. ஏனென்றால் படத்தின் தொடக்கத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளாக முதன்மைக் கதாபாத்திரங்களைக் காட்டும்போது: ‘பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இந்த இரண்டு இதயங்களும் எப்படி இடம்மாறிக்கொள்ளப் போகின்றன; இந்த இரண்டு இதழ்களும் எப்போது முத்தமிட்டுக்கொள்ளப் போகின்றன?’ என்று கதாசிரியரின் குரல் வாய்ஸ் ஓவரில் இடம் பெற்றி ருக்கும். அதை ஆடியன்ஸ் பத்திரமாக நினைவில் வைத்திருப்பார்கள். ‘லிப்லாக் கண்டிப்பா வச்சே ஆகணுமா?’ என்று விஜய் சங்கடமாகக் கேட்டார். அவருக்கு அந்த வசனத்தை நினைவூட்டியதும், ‘சாரி.. உங்கஜட்ஜ்மெண்ட்படியே போங்க.. நான் ஒய்ஃப்கிட்ட பர்மிஷன் வாங்கிடுறேன்’ என்று மனைவியிடம் அனுமதி பெற்றே அந்த முத்தக் காட்சியில் நடித்துக் கொடுத்தார். ஜோதிகாவும் தொடக்கத்தில் மறுத்தாலும் அவருக்குப் புரியவைத்ததும் அவருடைய அம்மாவிடம் அக்காட்சியின் அவசியத்தை எடுத்துச் சொல்லி அனுமதி பெற்றே நடித்தார்.
‘குஷி’ 25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளுக்கு வரப்போகிறது. காதல் என்றாலும் திருமண வாழ்க்கை என்றாலும் அதில் எந்த ஈகோவும் இருக்கக் கூடாது என்பதைத் தேன் தடவிச் சொன்ன படம். அது எல்லாக் காலத்திலும் எல்லாத்தலைமுறைக்கும் இனிக்கும் என்று நம்புகிறேன். திரையில் மீண்டும் அக்காவியத் தைக் காண ஆவலாக இருக்கிறேன். - எஸ்.ஜே.சூர்யா