இந்து டாக்கீஸ்

நன்றிக்கு இலக்கணம்! | ப்ரியமுடன் விஜய் 27

Guest Author

‘நடிப்பு அரக்கன்’ என்று ரசிகர்களால் இன்று கொண்டாடப் பட்டு வந்தாலும், ‘இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா’வுக்காக ரசிகர்கள் காத்திருக்கவே செய்கிறார்கள். மிரட்டும்வில்லன் - கதாநாயகன் என மாறி மாறிப் பயணப்பட்டு வரும் அவர், ‘கில்லர்’ என்கிற படத்தை எழுதி, இயக்கவிருக்கிறார். அப்படிப்பட்டவர், தன்னுடைய ‘குஷி’ படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி களில் இயக்கிச் சாதனைப் படைத்தவர். ‘குஷி’ உருவான நாள்கள் பற்றி இந்த வாரமும் அவருடைய மனப்பதிவுகள் இதோ: “பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு, மதுரையில் இன்ஜினியரிங் படிக்க சீட் கிடைத்தது. நான் பி.ஈ. சேரவில்லை. சென்னையில் தங்கியிருந்து திரைப்பட இயக்குநர்களைச் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளவே சென்னை வந்து லயோலா கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியலில் சேர்ந்து படித்துப் பட்டம்பெற்றேன். ஆறு வருடப் போராட்டத்துக்குப் பிறகு, வசந்த் சாய் சாரிடம் உதவி இயக்குநராக, அஜித் நடித்த ‘ஆசை' படத்தில் பணியாற்றினேன். அவர்தான் செல்வராஜ் ஜஸ்டின் என்கிற என் பெயரை எஸ்.ஜே.சூர்யா என்று மாற்றினார்.

பிறகு லிவிங்ஸ்டனுடன் ‘சுந்தர புருஷன்' படத்தில் பணியாற்றினேன். பின்னர், ‘உல்லாசம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தபோது, மீண்டும் அஜித்தை சந்தித்தேன். அப்போது அவர், “இன்னமும் நீங்க உதவி இயக்குநராதான் இருக்கீங்களா? அப்படின்னா எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுங்க” என்றார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற ‘வாலி’ திரைக்கதையை எழுதி அவருக்குச் சொன்னேன். அஜித் தான் என்னை இயக்குநர் ஆக்கினார். அன்றைக்கு அஜித்தின் உதவும் மனம் எப்படிப் பரந்த வானம்போல் இருந்ததோ. இன்றைக்கும் தல அப்படித்தான். அதேபோல் தளபதி விஜய் என்றால் நன்றியுணர்வின் இலக்கணம் எனலாம். அதற்கு எடுத்துக்காட்டு, நான் இசையமைத்து, எழுதி, இயக்கி நடித்த ‘இசை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் சிறப்பு விருந்தினராக வருகை தந்து பேசிய பேச்சு!

அதை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்: “என்னுடைய பிலிம் கேரியர்ல.. ஒரு முக்கியமான நேரத்துல.. ஒரு முக்கிய மான படம்தான் ‘குஷி’. அந்தப் படத்துக்கு முன்னால் வாழ்வா - சாவா என்கிற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டேன். அடுத்த படமும் ஓடலன்னா என்ன என்கிற நிலை அது. அந்தச் சமயத்தில் ‘குஷி’ என்கிற படத்தை எனக்குக் கொடுத்து மீண்டும் என்னைத் தூக்கிவிட்ட இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. என் வாழ்க்கையில் அதைஎன்றைக்கும் மறக்க மாட்டேன். அதற்காக இந்தச் சந்தர்ப்பத்திலும் நன்றியைத் தெரிவிச்சுக் கிறேன். ‘குஷி’ வெளியாகி யிருந்த நேரத்தில் இயக்குநர் விக்ரமன் சார் எனக்கு போன் செய்து,‘எப்படி விஜய் ‘குஷி’ படத்தை சூஸ் பண்ணீங்க!? அதுல கதைன்னு என்ன இருக்கு?’ என்று கேட்டார். நான் பதறாமல் ‘நீங்க சொல்றது கரெக்ட்தான் சார்.. எஸ்.ஜே.சூர்யா… எஸ்.ஜே.சூர்யான்னு ஒருத்தர் இருக்கார் சார்.. அவரு கதை சொல்லி நீங்க கேட்கணும் சார்.. ஒரு கதைய விவரிக்கிறதுல அவர் கிங்..! அவர் சீன்களப் பிடிச்ச விதம்.. அதை எங்கிட்டசொன்ன விதம் என்னை ‘மெஸ்மரைஸ் பண்ணிடுச்சு் சார்…! சொன்னதை அப்படியே எடுக்குறதுலயும் அவர் கெட்டிக்காரர்’ என்று அவரிடம் சொன்னேன்” என்று பேசி என்னைப் பெருமைப்படுத்தினார். அவரை நான் தூக்கிவிட்டேன் என்று என்னுடைய படத்தின் விழா மேடையில் வந்து பேசியதெல்லாம் அவருடைய பெருந்தன்மை.

‘வாலி’ படத்தின் பிரீமியர் காட்சிக்கு வந்திருந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் ‘விஜய் சாருக்கு உங்களிடம் கதை இருக்கிறதா?’ என்று கேட்டார். அவருக்கு ‘குஷி’ கதையைச் சொன்னேன். அதன் பிறகுதான் விஜயிடம் கதை சொல்ல நேரம் வாங்கிக்கொடுத்தார். ‘குஷி’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு பத்திரி கைக்கு விஜய் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் ‘‘குஷி’ படத்தில் உங்களைவிட ஜோதிகாவின் கதா பாத்திரம்தான் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று விமர்சகர்கள் சொல்கிறார்களே?’ என்று நிருபர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு விஜய்: “உண்மையில் ஜோதிகாநடித்துள்ள ஜெனிஃபர் கதாபாத்திரம் மிகவும் சதூர்யமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஜெனிஃபரை நளினம், குறும்பு, புத்திசாலித்தனம், நடிப்பு, நடனம் என எல்லாக் கோணத்திலும் துள்ளலும் வேகமுமான ஒரு பெண் ணாக பக்காவான டைமிங்கில் ஜோதிகா செய்திருந்தார். அதனால்ஜெனிஃபர் கதாபாத்திரம் இயல்பாகவே அனைவருக்கும் பிடித்துப்போய்விட்டது. படத்தில் எனது கதா பாத்திரமும் முக்கியமான ஒன்றாக இருந்தாலும் ‘குஷி’யில் என்னைவிட ஜோதிகா நடிப்பில் அதிகமாக ஸ்கோர் செய்திருக்கிறார் என்பது உண்மைதான்” என்று பதில் கூறியிருந்தார். இயக்குநர்கோரும் நடிப்பைவிட 200 மடங்குசிறப்பாகச் செய்து அசத்திவிடும் விஜய்,சக கலைஞர்களின் திறமையைப் பாராட்டுவதில் பெரிய மனதுக்காரர்.

ஒரு திரைக்கதையை எழுத நான் குறைந்தது 6 மாதம் எடுத்துக்கொள்வேன். அப்படி அவகாசம் எடுத்து, நாம் கன்சீவ் செய்த கதையின் காட்சிகளுக்கு வசனம் எழுதும்போதுதான் தியேட்டரில் கிளாப்ஸ் விழும். ‘குஷி’யில் அனைத்து வயதினரையும் கவர்ந்து ரசிக்க வைத்தது ‘இடுப்பு சீன்’. அப்படிக் கதையிலும் கதாபாத்திரங்களிலும் காட்சியின் சூழ்நிலையிலும் மனதை ஊற வைத்துஎழுதிய வசனங்கள் அவை. அந்தக்காட்சியின் வசனங்களில் செயற்கைத் தனம் என்பதே இருக்காது. முக்கியமான காட்சி என்றால் இன்றைக்கு அதை மூன்று நாள்கள்கூட ஷூட் செய்வார்கள். ஏனென்றால் பிலிம் ரோல் கிடையாது. ஆனால் இரண்டாயிரத்தில் நான் அந்த ஒரு காட்சியை 3 நாள் ஷூட் செய்தேன். யூனிட்டில் உள்ள அனைவரும் ‘என்னய்யா இந்த ஆள்.. ஒரு டயலாக் சீன், அதுலயும் குளோஸ் அப்ஸ்தான் அதிகமாக இருக்கு.

அதுக்குப் போய் இந்த இழு இழுக்கிறான்’ என்று எரிச்சலின் உச்சிக்கே போய் விட்டார்கள். அப்படித்தான் அந்தக் காட்சிஉருவானது. அந்தக் காட்சியில் விஜயும் ஜோதிகாவும் மறைந்துபோய்.. சிவாவும் ஜெனிஃபரும்தான் இருந்தார்கள். அந்தஅளவுக்கு இருவரும் உயிர் கொடுத்தார் கள். ஜெனிஃபர் கதாபாத்திரத்துக்கு முதலில் ஜோதிகாவைத் தேர்வு செய்யவில்லை. தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘பத்ரி’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டி ருந்த அமிஷா பட்டே லைத்தான் தேர்வு செய்திருந்தோம். - எஸ்.ஜே.சூர்யா

(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT