‘படிப்பு மேல கவனம் இல்லாம மீசை வைக்கிறீயோ..?’ என்று, பதின்ம வயதில் துளிர்க்கும் மகனின் மீசையை மழித்துவிடும் கண்டிப்பான அப்பாவாகச் சேரனின் ‘ஆட்டோ கிராஃப்’ படத்தில் தோன்றிய ராஜேஷை 2கே கிட்ஸ் மறக்கவே மாட்டார்கள். 80களின் குழவிகளுக்கு கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ போதும். அப்படத்தில் வரும் டாக்டர் ஆனந்த். தற்கொலைக்கு முயன்ற தன்னுடைய புது மனைவியைக் காதலனுடன் சேர்த்து வைக்க முயலும் நேர்மையாளர்.
காதலின் காதலர். ‘இப்படியொரு ஜென்டில்மேனா?’ என்று ரசிகைகளை ராஜேஷ் அதிகமாகப் பெற்ற நாள்கள் அவை. அவர்தான் பின்னர் ஆர்.சி. சக்தியின் ‘சிறை’ படத்தில் அந்தோணி என்கிற முரட்டு மனிதனாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்! கால வரிசையில் முன் பின்னாக இங்கே குறிப்பிட்டிருந்தாலும் அத்தனையும் 100 நாள்களைத் தாண்டி ஓடிய மெகா வெற்றிகள். ஆனால், ராஜேஷ் திரை வாழ்க்கையைத் தொடங்கியது தோல்வியின் வாசலில் நின்றபடிதான்.
கீழத் தஞ்சையின் மன்னார்குடியில் பிறந்து, பட்டுக்கோட்டையின் அணைக் காட்டில் வளர்ந்தவர் ராஜேஷ். கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தாலும் இவருடைய அப்பாவும் அவருடைய சகோதரர்களும் திராவிடக் கழகத்தில் தீவிரமாகச் செயல் பட்டவர்கள். திண்டுக்கல், மேலநத்தம் ஆகிய ஊர்களில் பள்ளிக் கல்வியைப் படித்து, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யு.சியை முடித்திருக்கிறார். பின்னர் சென்னை வந்து, பச்சையப்பா கல்லூரியில் இளங்கலைப் பட்டம்.
கல்லூரி முடித்த கையோடு திருவல்லிக்கேணியில் உள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப் பள்ளி யிலும் கெல்லட் மேல்நிலைப் பள்ளியிலும் ஏழு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடியிருக்கிறார். எம்.ஜி.ஆரைப் போல் புகழும் சிவாஜியைப் போல் நடிப்பில் பெயரும் பெற வேண்டும் என்பதைப் பள்ளிக்காலத்திலேயே அவருக்குப் புகட்டியவர் அவருடைய அப்பா.
தன்னை உணர்ந்தவர்! - ‘உதிரிப் பூக்கள்’ படத்தின் வழியாக சினிமாவைக் காட்சியின் கலையாக உயர்த்திய இயக்குநர் மகேந்திரன், ராஜேஷின் அத்தை மகன். திரையுலகில் மகேந்திரனின் வெற்றி, ராஜேஷுக்கு ஊக்கமாக அமைந்துபோனது. பல நட்சத்திரங்களை உருவாக்கிய கே.பாலசந்தர் தனது ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்துக்கு முதலில் ராஜேஷைத்தான் தேர்வு செய்தார். ஆனால், ராஜேஷின் வாளிப்பான உடலும் கம்பீரமான கணீர் குரலும், பின்னர் கமல் ஏற்ற அந்த விடலை இளைஞன் கதாபாத்திரத்துக்குப் பொருந்தாது என முடிவு செய்து ராஜேஷை நீக்கினார்.
இதைக் கேள்விப்பட்ட பாரதிராஜா, தனது ‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்கு ராஜேஷைத் தேர்வு செய்தார். படப்பிடிப்புக்குச் சில தினங்கள் முன்பாக ‘உன் முகமும் பாடி லாங்குவேஜும் நடிகர் திலகத்தை ஞாபகப்படுத்துதுப்பா.. கம்பீரமா இருக்க.. ஒரு ஏழை, நாவிதர் வீட்டுப் பையன்னு சொன்னா நம்புற மாதிரி இருக்கணும்” என்று சொல்ல, இதை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தார் சிவாஜி கணேசனின் பரம ரசிகர் ஒருவர்.
சிவாஜியை வைத்து தன்னுடைய அண்ணனைப் போல் ஒரு படம் எடுத்து விட வேண்டும் என்கிற கனவை வரித்துக் கொண்டிருந்த தேங்காய் வியாபாரியான எஸ்.ஏ.ராஜ்கண்ணுதான் அந்த சிவாஜி ரசிகர். அவர் தயாரித்த ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் திமிறும் காளையை அடக்கும் இளங்காளையாக தன்னுடைய சினிமா பயணத்தை அசத்தலான வெற்றியுடன் தொடங்கினார் ராஜேஷ். அவரை ‘காம்ரேட் ஹீரோ’ ஆக்கியவர் நாடகாசிரியர், எழுத்தாளர், கோமல் சுவாமிநாதன். கீழத் தஞ்சையின் விவசாயத் தொழிலாளர்கள் - நிலச்சுவான்தார் கூலிப் பிரச்சினை, ஆண்டான் - அடிமை முறை, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எழுச்சி ஆகியவற்றைப் பால்யம் முதல் பார்த்து வளர்ந்த வர் ராஜேஷ்.
தான் பிறந்து, வளர்ந்த மண்ணை, அதன் வரலாற்றை நன்கு உணர்ந்தவர் என்றறிந்து தனது ‘அனல் காற்று’ திரைப்படத்தில் புரட்சிக்கு இளைஞர்களைத் தயார் செய்யும் கல்லூரிப் பேராசிரியர் ரத்னவேலுவாக நடிக்க வைத்தார். வசன உச்சரிப்பில், உடல் மொழியில் சிவாஜி கணேசனை மிஞ்ச வேண்டும் என்கிற வேட்கை கொண்டி ருந்த ராஜேஷுக்கு அந்தப் படம் நல்ல தீனியாகவே அமைந்தது. தன்னுடைய சொந்த ஊரான மன்னார்குடிக்குக் கோமல் சுவாமிநாதனை அழைத்துச் சென்று, மன்னார்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்படிப்பு நடத்த வைத்தார்.
அதன் பின்னர் தா.பாண்டியன் திரைக்கதை, வசனம் எழுதிய ‘சங்க நாதம்’ படத்தில் மீண்டும் புரட்சிப் பேராசிரியர் வேடம்.
நல்ல வேளையாக, ‘கம்ரேட் ஹீரோ’ என்கிற அவருடைய பிம்பத்தை ‘அச்ச மில்லை அச்சமில்லை’ படத்தின் மூலம் துடைத்துப்போட்டார் இயக்குநர் சிகரம் கே.பி. சுதந்திரத்துக்குப் பிறகு முளைத்த திராவிடக் கட்சிகளில் அடிமட்டத் தொண்ட னாக வாழ்க்கையைத் தொடங்கும் உலக நாதன், சந்தர்ப்பவாதியாக மாறி, ஊழல் அரசியல்வாதியாக வளர்ந்து, அமைச்சர் பதவியைப் பிடிக்கும் கதாபாத்திரத்தில் தன்னுடைய முந்தைய உடல்மொழியை முற்றிலும் கைகழுவிவிட்டு நடித்தார் ராஜேஷ்.
படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற துடன் தேசிய விருதையும் பெற்றது. இதன் பின் தன்னுடைய ஆதர்ச நடிகர்களைப் போலச் செய்வதைக் கைவிட்டு, தன் பலத்தை உணர்ந்து பயணிக்கத் தொடங்கியவருக்கு வாய்ப்புகள் அருகியபோது, 8 ஆண்டுகள் ரியல் எஸ்டேட், உணவகம் எனக் களமிறங்கி ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வெற்றி பெற்றார். என்றாலும் ஒரு சிறந்த கலைஞனைச் சினிமா எப்போதும் கைவிட்டுவிடுவ தில்லை. அறிமுகமான காலம் தொடங்கி, தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொள்ளும் காலம் வரை 40 ஆண்டுகள் நடித்துக்கொண்டே இருந்தது அவரது தனித்துவத்துக்கான வெற்றி.
நன்றியும் எளிமையும்: ராஜேஷ் வீட்டுக்குப் போனால், தன்னைக் கதாநாயகன் ஆக்கிய எஸ்.ஏ.ராஜ் கண்ணுவின் ஒளிப்படத்தைக் காணலாம். உணவு மேஜைக்கு முன்னால் அமரும் முன்பு அந்த போட்டோவை பார்த்துவிட்டு உணவு உண்பதை வழக்கமாகக் கடைப் பிடித்து வந்தவர். கிறிஸ்துவராகப் பிறந்து வளர்ந்தாலும் ஜாதகத்தின் மீது ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். அது தொடர்பான புத்தகத்தையும் ஹாலிவுட் நடிகர்கள், படங்கள், திரைக்கதை குறித்த தன் அவதானிப்புகள் அனைத்தையும் பல நூல்களாகவும் எழுதி, வரும் தலைமுறைக் குத் தன்னிடம் இருந்த கலையறிவைக் கடத்திச் சென்றிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியின் முதல்வராக 2 ஆண்டுகள் பணியாற்றிய ராஜேஷ், எடுத்ததுறை எதுவாயினும் அதில் சிறந்து விளங்கினார். அது திரை நடிப்பு என்றாலும் தொழில் முயற்சி என்றாலும். சினிமாவுக்கு வெளியே தொலைக்காட்சி உலகில் பல வெற்றிகரமான தொடர்களில் தனித்துத் தடம் பதித்தார். அதற்கும் பின்னால், ஒருவெற்றிகரமான யூடியூபர் என்கிற தற்காலத் தின் ஊடகப் போக்கிலும் வெற்றி முத்திரை பதித்தார். அவர் தொட்டவை துலங்கின.
- jesudoss.c@hindutamil.co.in