இந்து டாக்கீஸ்

விக்ரம் சுகுமாரன் | சாதியின் தலையில் சத்தமில்லாமல் குட்டியவர்! - அஞ்சலி 

திரை பாரதி

நடிப்பதற்காக ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவர்களில் விக்ரம் சுகுமாரனும் ஒருவர். ‘சினிமாவை நோக்கி உங்களை இழுத்து வந்தது எது?’ என ‘மதயானைக் கூட்டம்’ வெளியாகியிருந்த நேரத்தில் இயக்குநர் விக்ரம் சுகுமாரனிடம் கேட்டேன். “தேவர் மகன், கிழக்குச் சீமையிலே போன்ற தமிழர்களின் பண்பாட்டைப் பிரதி செய்த தமிழ்ப் படங்கள்தான் என்னைச் சென்னைக்குக் கூட்டி வந்தன” என்றார். ஆனால், அப்படங்களில் இருந்த சாதிப் பெருமிதத்தை அவர் தன் முதல் படைப்பில் நுழைய அனுமதிக்கவில்லை.

அப்படிப்பட்ட விக்ரம் சுகுமாறன், இன்றைக்கும் தமிழகத்தின் வறட்சியான மாவட்டமாகத் தொடரும் ராமநாதபுரத்தின் பரமக்குடியைச் சேர்ந்தவர். கமல்ஹாசன், விக்ரம், வேல.ராமமூர்த்தி, சீமான் போன்ற சிறந்த கலைஞர்களைத் தந்த அதே மண்ணிலிருந்து வந்தவர்.

வன்முறையை கைவிட மறுக்கும் மனிதர் களிடையே இசையின் குழந்தையாக வளர்ந்தவர். மின் வாரியத்தில் பணியாற்றிக் கொண்டே மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்தவர் விக்ரம் சுகுமாறனின் அப்பா. மகனையும் தமிழ் சினிமாவில் பாடகராக்கிவிட வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்திருக்கிறது. விக்ரம் சுகுமாரனுக்கோ நடிப்பின் மீதுதான் பிடிப்பு! தனியார் கல்லூரி ஒன்றில் நடிப்புப் பயிற்சியைக் பெற்றுக் கொண்டு.

நடிக்க வாய்ப்புக் கேட்டு சந்தித்தவரை, படைப்பின் பாதையில் மடை மாற்றிவிட்டவர் பாலுமகேந்திராதான். முத்தையா இயக்கிய ‘கொடி வீரன்’ படத்தில் கதாநாயகியின் அண்ணனாக, துரை என்கிற கதாபாத்திரத்தில் அவ்வளவு கச்சிதமான நடிப்பைக் கொடுத்திருப்பார். “நான் நன்றாக நடிக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் பாலுமகேந்திரா சார் தான்” என்று தன்னுடைய ஆசிரியரை நினைவுகூர்ந்த விக்ரம் சுகுமாறன், “பலவிதமான கதாபாத்தி ரங்களைப் படைக்கும் ஆற்றல் கொண்ட ஓர் எழுத்தாளர், எழுதும்போதே தன்னுடைய எல்லாக் கதாபாத்திரங்களிலும் வாழ்ந்து முடிக்கிறான்.

எழுத்தாளர்களுக்குள் சிறந்த நடிப்புக் கலைஞர்கள் இருக்கிறார்கள். வேலா அண்ணனுக்குள் இருந்த நடிப்புக் கலைஞனைத் தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்து சேர்த்ததில் எனக்குக் கர்வம் உண்டு.” என, வேல.ராமமூர்த்தியின் திரைப் பயண வளர்ச்சி பற்றிய கேள்விக்கு ஆழமான பதிலைச் சொன்னார். இத்தனை இளம் வயதில், தன்னுடைய கனவுப் படைப்பைக் கொடுக்கும் முன்பே அவர் விடை பெற்றுக்கொண்டது அவரது குடும்பத் துக்கு மட்டுமல்ல; தமிழ் சினிமாவுக்கும் பேரிழப்பு!

திரைப்படம் என்பதைக் கொண்டாட்டம் நிறைந்த பொழுது போக்காக, தரமான படம் என்கிற போர்வையில் வறட்டு நீதி போதனை அல்லது நேரடிப் பிரச்சாரமாகக் கொடுத்துவிடுகிற கலையறியாத வியாபாரிகள் நிறைந்த தமிழ் சினிமாவில், விக்ரம் சுகுமாரன், தான் பால்யம் முதல் பார்த்து, கடந்து வந்த வாழ்க்கை, பாலுமகேந்திராவிடம் கற்றுக் கொண்ட சினிமா ஆகிய இரண்டையும் ஒரு படைப்பாக முகிழச் செய்த படம்தான் ‘மத யானைக் கூட்டம்’.

அப்படத்தின் முதன்மைக் கதாபாத்திர மான ஜெயக்கொடித் தேவர், தன்னுடைய தாத்தாவின் தாக்கத்தில் உருவானதாக விக்ரம் சுகுமாரன் என்னிடம் கூறியிருக் கிறார். தனது பால்யத்தில் நிகழ்ந்த தாத்தாவின் மரணம், தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும் படத்தில் தான் இடம்பெறச் செய்த பல சம்பவங்களைத் தான் பால்யத்தில் எதிர்கொண்டதாகவும் அவர் கூறியபோது, பழைய நினைவுகளில் ஆழப் புதைந்துகொண்டார். வணிகக் கூறுகளைத் திணிக்காமலும் நல்ல திரைப்படங்களைத் தரமுடியும் என்று புதிய தலைமுறை இயக்குநர்கள் சிலராவது இன்னும் நம்பி அதற்காகப் போராடுகிறார்கள் என்றால், அவர்களுக்கான முன்மாதிரிகளில் ஒன்றாக ‘மதயானைக் கூட்ட’த்தை விட்டுச் சென்றவர் விக்ரம் சுகுமாரன்.

மனித நேயம் ததும்பும் கதைகளை யதார்த்தத்தின் கலை அழகுடன் சித்தரித்த அதேநேரம், அவர்களிடம் காணப்படும் எந்த வகை வன்முறையையும் மறைத்து, அசலான மனிதர்களிடமிருந்து பிரதியெடுத்த தன் கதாபாத்திரங்களைப் புனிதப்படுத்தாதவர் விக்ரம் சுகுமாரன். ‘மதயானைக் கூட்டம்’ என்கிற தலைப்பே,வீரம், நன்றி, பாசம்மிக்க மனிதர்கள், மூர்க் கத்தை வாழ்க்கையாக்கிக் கொண்டதை இலக்கிய அமைதியுடன் விமர்சித்தது.

ஒரு சமூகத்தின் அடையாளமாக இருக்கும் ஆண்களிடம் புரையோடிய வன்முறையை மட்டுமல்ல; பெண்களிடம் வெளிப்படும் ஆக்ரோஷத்தையும் வன்மத்தையும் அப்படத்தில் துல்லியமாக வெளிப்படுத்திக் காட்டினார். பெண்களிடம் வெளிப்படும் வன்மம் ஒரு சமூகத்தின் வேரையே சிதைக் கும் என்பதைத் தெளிவாகக் காட்டி, சாதிப் பெருமையை உரக்கச் சொன்ன படங்களின் மண்டையில் அப்படம் ஓங்கிக் குட்டியது. அதைத் தந்த விக்ரம் சுகுமாரனுக்குத் தமிழ் சினிமா வரலாற்றில் இடம் உண்டு.

SCROLL FOR NEXT