இந்து டாக்கீஸ்

வாழ்க்கையைவிட விஜய் பெரிதாக நினைப்பது! | ப்ரியமுடன் விஜய் 25

செய்திப்பிரிவு

தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ‘ஒக்கடு’ மிகப்பெரிய ஹிட்! அதில், ஹீரோவின் அப்பா, மகனை அவ்வளவு நேசிப்பார். அவனைக் கபடி விளையாடச் சொல்வார். ‘நீ எப்படியாவது போலீஸ் ஆபீஸர் ஆகணும்’ என்று சொல்வார். இதை ‘கில்லி’யில் அப்படியே திருப்பிப் போட்டுவிட்டேன். மகன் கபடி விளையாடுவதை விஜயோட அப்பா வெறுப்பார். அப்பாவுக்குத் தெரியாமல் கபடி விளை யாடி ஜெயித்துக்கொண்டு வந்த கோப்பை களையெல்லாம் அவரது கண்ணில் படாமல் வீட்டில் ஒளித்து வைப்பார். அதற்கு விஜயின் தங்கை உதவியாக இருப்பார்.

வாழ்க்கையிலும் சரி கபடி விளை யாட்டிலும் சரி கண்ணியமாக இருக்கிற ஒரு இளைஞன் கதாபாத்திரம் எனும்போது, விஜய் விளையாடும் கபடி சினிமாவுக்கான ஒப்பேற்றலாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எனவே ‘ஆத்தென் டிக்’ கபடி குறித்து முறையான ஆய்வு செய்தோம். அப்போது, கர்நாடகா - தமிழ்நாடு அணிகளுக்கிடையில் புதுச் சேரியில் நடந்த போட்டியை அனுமதிபெற்று வீடியோ ஷூட் செய்து, அதை எடிட் செய்து ஒரு சிடி ஆகத் தயார் செய்து விஜய்க்கு கொடுத்து அதைப் பார்க்கும்படி செய்தேன். அதைப் பார்த்த விஜய், ‘கபடியில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றனவா?’ என்று ஆச்சரியப்பட்டார். கபடி பயிற்சி எடுத்துக் கொள்ளவும் ஒப்புக்கொண்டார்.

அத்துறையில் பிரபலமான ராஜேந்திரன், குணசேகரன் ஆகிய இரண்டு மாஸ்டர் களை அமர்த்தினோம். பயிற்சிக்கும் சரி, படப் பிடிப்புக்கும் சரி ஒரிஜினல் கபடி பிளேயர்ஸை அழைத்து வந்தார்கள். படத்தில் வரும் நடுவர்களும் மாவட்ட, மாநில அளவில் போட்டிகளுக்கு அழைக்கப்படும் அசலான நடுவர்கள்தான். படத்தில் இடம்பெற்ற கபடி ஒரிஜனல் விதிகளோடுதான் இருக்கும். விஜய்க்கான கபடி பயிற்சியை நேரு ஸ்டேடியத்தில் கொடுத்தோம். அப்போது வடசென்னையில் நடந்த ஒரு கபடிப் போட்டிக்கு விஜயை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். விஜய்தான் போய் கப் கொடுத்துவிட்டு வந்தார்.

கபடி மேட்ச் காட்சிகளைப் படம் பிடித்த போது விஜய் தனது நடிப்பில் கொடுத்த ‘என்ஹான்ஸ்மென்ட்’ என்பது வேற லெவல். ஒரு பிரபலமான கபடி டீமின் நம்பர் ஒன் பிளேயர் என்பவன் எவ்வளவு ஸ்டைலாக, அலர்ட்டாக கபடி ரைடு போவான், கேட்ச் பிடிப்பான் என்பதையெல்லாம் அவர் பயிற்சியின் வழியாக உள்வாங்கிக்கொண்டு, அவ்வளவு அழகாக ஷூட்டிங்கின்போது வெளிப்படுத்தினார். தொடையையும் புறங்காலையும் ஸ்டைலாகத் தட்டிவிட்டுக் கொண்டு, அவர் கபடி ரைடு போகும் ஸ்டைல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கதையைக் கேட்டு, தனது கதாபாத்திரத்தை அவர் மனதில் இருத்திக்கொண்டுவிட்டால், அதன்பிறகு நாம் அவரை முழுமையாக நம்பலாம். அந்த அளவுக்கு நாம் எதிர்பார்ப்பதைவிட 200 மடங்கு கூடுதலாகக் கொடுத்துவிடுவார். அவர் பிறந்ததிலிருந்து சினிமாவில் இருக் கிறார். அவ்வளவு நடிகர்களைப் பார்த்தவர். பள்ளிக்கூடமும் கல்லூரியும் போய் வந்த நேரம் தவிர, அவர் தன்னுடைய அப்பாவின் படப்பிடிப்பில்தான் இருந்திருக் கிறார். அப்பா கதையை, கதாபாத்திரங்களை எப்படி உருவாக்குகிறார் என்பதைக் கவனித்து வளர்ந்திருக்கிறார். சினிமா என்பது விஜயைப் பொருத்தவரை ‘லார்ஜர் தான் லைஃப்’. மாஸ் கேரக்டர் என்றாலும் வேலு கதா பாத்திரத்தின் கண்ணி யத்தை அவ்வளவு அழகாகப் புரிந்துகொண்டு, தனலட்சுமியைக் காப்பாற்றி பத்திரமாக, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப் போராடு வதை அவ்வளவு எனர்ஜியாகச் செய்தார்.

2004இல் ‘கில்லி’ திரைப்படம் வெளியானபோது ‘விஜயின் கபடி டீம் செமி ஃபைனலில் தோற்றுவிட்ட பிறகு எப்படி கிளைமாக்ஸில் வரும் ஃபைனல் மேட்ச்சில் கலந்துகொண்டது?’ என்று விமர்சகர்கள் சிலர் கேட்டார்கள். விஜய் டீம் ‘பெஸ்ட் ஆஃப் த்ரீ மேட்ச்’சாக தேர்ந்தெடுக்கப்பட்டது. விஜயின் தங்கை, தன்னுடைய அண்ணனுக்குக் கபடி என்பது எத்தனை பெரிய கனவு என்பதை எடுத்துச் சொல்ல, வேலு வென்ற கோப்பை களையெல்லாம் காட்டி ‘இது அண்ணன் லீக் மேட்ச்ல ஜெயிச்ச கப், இது செமி ஃபைனல்ல வாங்கின கப். இதெல்லாம் நம்ம வீட்டு ஷோ கேஸ்ல இருக்க வேண்டியவை’ என்று காண்பிப்பார். இந்த உணர்ச்சிகரமான காட்சியிலேயே அந்தச் சந்தேகத்துக்கான பதிலை வைத்திருந்தேன்.

தமிழுக்கு ஏற்ப கதையில் ஏற்படுத்திய மாற்றங்களை விஜயிடம் சொல்லியிருந் தாலும் கபடி கிளைமாக்ஸை விஜயிடம் சொல்லவில்லை. வர்மக் கலையைப் பயன் படுத்தி அடிக்கும் முத்துப்பாண்டியை அவரது ஸ்டைலிலேயே அடித்து வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். விஜய், வில்லனை அவனது பாணியிலேயே தாக்கிவீழ்த்துவார் என்று ஆடியன்ஸ் எதிர்பார்க்க வில்லை. அந்தக் கிளைமாக்ஸ் அவ்வளவு பேசப்பட்டது மட்டுமல்ல; முத்துப்பாண்டியின் வர்ம அடிகளைப் பெற்று முடங்கி விழும் காட்சியில் விஜய் கொடுத்த பெர்ஃபாமென் ஸுக்கு ரசிகர்கள் தியேட்டரில் கதறத் தொடங்கிவிட்டார்கள். அப்படியொரு நேச்சுரல் ஆக்டிங் கொடுத்தார் விஜய்.

விஜய் கபடி மேட்ச்சில் அணிந்து ஆடும் ஜெர்ஸி சட்டையில் 10 என்கிற எண்ணைப் பொறித்து வைத்திருந்தோம். அதற்குக் கார ணம், அது சச்சின் டெண்டுல்கர் அணியும் ஜெர்சியில் இடம் பெற்ற எண். இப்போது ‘கில்லியை எடுத்திருந்தால் தோனி அணியும் ஜெர்சியின் நம்பரான 7ஐ கொடுத்திருப்பேன்.

தனலட்சுமி கதாபாத்திரத்துக்கு நிறையப்புதுமுகங்களைத் தேர்வு செய்து வரிசையாக ‘ஸ்கிரீன் டெஸ்ட்’ எடுத்துப் பார்த்தோம். அப்போது தயாரிப்பாளர் ரத்னம் சார், அவரது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கிக்கொண்டிருந்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் த்ரிஷா நடித்துக் கொண்டிருந்தார். ரத்னம் சார்.. ‘இந்தக் கதைக்கு த்ரிஷா சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன்’ என்றார். எனது உதவி இயக்குநர் வித்யா ரெட்டியும் த்ரிஷாவை தனலட்சுமியாக ஃபீல் செய்தேன். ரொம்பவே நல்லா ஃபீல் பண்ணினேன் என்றார். உடனே த்ரிஷாவை அழைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்து பார்த்தபின் ஒப்புக் கொண்டேன்.

கிளைமாக்ஸில் மகனை முத்துப்பாண்டியிடம் மோதவிடமால் போலீஸ் ஆபிசரான அப்பா விஜயைக் கைது செய்துக்கூட்டிக்கிட்டுப் போவார். அப்போது முத்துப்பாண்டி தனலட்சுமியை கூட்டிப்போக ‘இங்கப் பார் போலீஸ் ஸ்டேஷன்ல பூந்து அவனைக் கொன்னுடுவேன்..’ என்று உதார் விட்டு கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போவார். அப்போது கையை உதறும் தனலட்சுமி: “கிழிச்ச.. நீ உண்மையான ஆம்பளையா இருந்தா நீ இந்த இடத்துல அவனை அடிச்சுட்டு வா.. அப்ப நான் உங்கூட வரேன்” என்று சவால் விடுவார். அதுதான் கிளைமாக்ஸின் மிக முக்கியமான இடம். அந்தக் காட்சியில் மட்டுமல்ல; வேலு மாதிரி ஒரு நல்லவனை, வல்லவனை, வீரன் மேல் மனதுக்குள் ஏற்பட்ட பிடிப்பை, வெளிப்படுத்த முடியாமல் அல்லாடும் காட்சிகளில் த்ரிஷா தனலட்சுமியாக வாழ்ந்திருப்பார் என்றே சொல்ல வேண்டும்.

‘கில்லியில் தியாகராஜன் சாரையும், ஊர்வசிமேடத்தையும் நடிக்க வைக்க முயற்சி செய்தோம். அது நடக்கவில்லை. ஒரு பிளாக் பஸ்டர் படம் உருவாவது இயக்குநர் கையில் மட்டுமே கிடையாது. இதுவொரு டீம் எஃபர்ட்! என்னுடைய ஒளிப்பதிவாளர் கோபிநாத் மிகப்பெரிய பலம். வசனகர்த்தா பரதன் ஒரு கில்லி, ‘வேட்டைக்காரன்’ பட இயக்குநர் பாபு சிவன், சாந்தகுமார், ஜவஹர், வித்யா ரெட்டி, நாகேந்திரன், சூர்யா, ரஜினி என எனது உதவி இயக்குநர்கள் டீமில் இருந்த ஒவ்வொருவரும் அபாரத் திறமைசாலிகள். அவர்கள் இந்தக் கதையை சும்மாவே விடமாட்டார்கள். ‘டப்பிங் சமயத்தில் பல அட்டகாசமான வசனங்களை அவர்கள்தான் இணைத்தார்கள்.

‘கில்லி’யின் இசையமைப்பாளர் வித்யா சாகர் சாருக்கு ஆக்‌ஷன் படங்கள் அவ்வளவு பிடிக்கும். பல பிளாக் பஸ்டர் ஆக்‌ஷன் படங்களுக்குத் தன்னுடைய மெலடி பாடல்களைக் கொடுத்துவிடக் கூடியவர். அப்படிப்பட்டவரிடம் ‘இந்தக் கதையில் இருக்கும் ‘டெம்போ’வை பாடல்களுக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தேன். அதை ஏற்றுக்கொண்டு அவர் இசையமைத்துக் கொடுத்தார். அப்படித்தான் ‘கில்லி’ ஆல்பம் மொத்தமாக ஹிட் பாடல்களால் நிறைந்தது.

20 வருடங்கள் கழித்து ‘கில்லி’ கடந்தஆண்டு திரையரங்குகளில் வெளியான போது, இரண்டாம் நாள் படம் பார்க்கத் திரையரங்கு போயிருந்தேன். முதல் ரிலீஸ்போன்றே திரையரங்கு அல்லோலகல்லோலப் பட்டது. 8 வயது 10 வயது சிறார்கள் எல்லாம் ‘முத்துப்பாண்டி வாரான்.. முத்துப்பாண்டி வாரான்..’ என்று டென்ஷ னோடு கத்திக்கொண்டிருந்தார்கள்.. இடை வேளையின்போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணிடம் போய் ‘என்ன உங்கள் பிள்ளைகள் இவ்வளவு டென்ஷனாக இருக்கி றார்கள்?’ என்றேன். அவர்: “இவங்க ரெண்டு பேருமே ஃபர்ஸ்ட் டைம் பார்க்குறாங்க.. நான் முதல் ரிலீஸில் 20 வருஷத்துக்கு முன் இரண்டு முறை பார்த்தது” என்றார். ‘கில்லி’ எல்லா காலத்துக்குமான ஒரு படமாகிவிட்டதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி - தரணி

(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT