இந்து டாக்கீஸ்

வேலையின்னு வந்துட்டா விஜய் ஒரு டார்லிங்! | ப்ரியமுடன் விஜய் 24

Guest Author

கடந்த 2004இல் வெளியான ‘கில்லி’ படத்தைத் தமிழ் சினிமாவின் அதிரடி ஹிட் எனக் கொண்டாட வைத்தார் இயக்குநர் தரணி. வில்லனிடமிருந்து காப்பாற்ற நாயகியை அழைத்துக்கொண்டு தப்பிக்கும் நாயகன், பெரும் அடியாள் கூட்டத்துடன் நாயகனை அசராமல் துரத்தும் வில்லன் என்கிற ‘டாம் & ஜெர்ரி’ ஓட்டம்தான் படம். திரைக்கதையின் பெரும் பகுதி, ஒரு ‘ரோட் மூவி’யாக வேகமெடுத்துப் பாயும்விதமாக இருக்க வேண்டும் என்கிற இயக்குநரின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு, ஒளிப்பதிவில் அதகளம் செய்திருந்தார் கோபிநாத். வித்யாசாகரின் பாடல்களும் பின்னணி இசையும் இயக்குநர் - ஒளிப்பதிவாளரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாக அமைந்திருந்தது.அப்படிப்பட்ட ‘கில்லி’ திரைப்படம் 20 ஆண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டு மறு வெளியீடு கண்டபோது, புதிய படம் ரிலீஸ் ஆனதுபோல திரையரங்குகள் விழாக் கோலம் பூண்டன. 2 வாரங்கள் ஓடி 10 கோடி ரூபாய் வசூலித்தது. தலைமுறை கடந்து கொண்டாடப்பட்டிருக்கும் ‘கில்லி’யை உருவாக்கிய தரணி, படம் உருவான நாள் களை ப்ரியமுடன் இங்கே பகிர்ந்திருக்கிறார்:

“சிலரை மட்டும் ‘மச்சான் அவன் கில்லிடா..!’ என்று சொல்வார்கள். கில்லியாக இருப்பவர்களை, எவ்வளவு சிக்கலான இடத்தில் மாட்டிவிட்டாலும் எவ்வளவு பெரிய கூட்டத்துக்குள் தூக்கிப் போட்டாலும் எல்லாருக்கும் தண்ணிக்காட்டிவிட்டு முழு ஆளாக வந்து நிற்பார்கள். ‘கில்லி’யில் விஜய் ஏற்ற வேலு கதாபாத்திரமும் அப்படிப் பட்டதுதான். ‘கில்லி’ படம் உருவானதே சர்ப்பிரைஸ்தான். என்னுடைய உதவி இயக்கு நர்களுடன் ‘ஒக்கடு’ தெலுங்குப் படம் பார்க்க ஜெயபிரதா தியேட்டருக்குப் போயிருந்தேன்.

படம் ஓட ஓட என்னுடைய மூன்று கதைகள் அதற்குள் இருப்பதைப் பார்த்தேன். ஒரு கபடி வீரனின் கதை, காதலியை லைட் ஹவுஸில் ஒளித்து வைப்பது இன்னொரு கதை என இரண்டு கதைகள் என்னிடம் இருந்தன. அப்படம் ஒரு ரோட் மூவியாகவும் இருந்தது. ஹாலிவுட்டிலிருந்து ரோட் மூவிகள் வந்து ஹிட் அடித்துக்கொண்டிருந்தன. அந்த ஜானர் அப்போது தமிழில் இல்லை. எனவே தமிழில் ஒரு ரோட் மூவி எடுக்கலாம் என்று கதை தயார் செய்துகொண்டிருந்தேன். அதுவும் ‘ஒக்கடு’வில் இருந்தது. அடுத்த நாள் எனது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சாரைப் போய்ப் பார்த்தேன். அப்போது அவர், ‘பார்த்தேன் ரசித்தேன்’ தெலுங்கு ரீமேக் படத்தின் டப்பிங் பணியில் இருந்தார்: ‘சார் நேற்று ஒரு படம் பார்த்தேன். விஜய் நடித்தால் நல்லாயிருக்கும்’ என்றேன். உடனே அவர், ‘ஆச்சர்யமா இருக்கு தரணி! நேத்து விஜயைச் சந்திச்சேன். அப்போ அவர் என்கிட்ட ‘ஒக்கடு தமிழ் ரீமேக்கைத் தரணியை வச்சுப் பண்ணலாமா?’ன்னு கேட்டார். இது நானே எதிர்பார்க்காத கோ இன்சிடண்ட்!’ என்றார். ‘ஒக்கடு’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையையும் ரத்னம் சார் வாங்கிவிட்டார்.

உடனே வேலையைத் தொடங்கினேன். தமிழுக்காக நிறைய மாற்றங்கள் செய்தேன். முதல் கட்டமாக எனது வசனகர்த்தா பரதனை அழைத்துக்கொண்டு ஹைதராபாத் போய் ‘ஒக்கடு’ படத்தின் கதாசிரியர், இயக்குநர் குணசேகரைச் சந்தித்தேன்: ‘சார் இது உங்க குழந்தை. ஆனால், அதற்கு பூ, பொட்டு வச்சு, புத்தாடை போட்டு, தமிழ் வெர்ஷனுக்கு வேற மாதிரி அலங்காரம் செஞ்சிருக்கோம். அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லி ஓகே வாங்க வந்தோம்’ என்றேன். மாற்றங்களைக் கேட்ட அவர், ‘ரொம்ப நல்லா இருக்கு; வாழ்த்துகள்’ என்றார். அதன்பிறகு விஜயிடம் கதையை சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்து ரத்னம் சாரிடம் சொன்னேன். விஜய் பதறிப்போய்.., ‘என்ன சார் இது..!? ‘ஒக்கடு’ சேஞ்சஸ் தேவைப்படாத படம்ன்னு எனக்குத் தோணுச்சு.. அதுலயே சேஞ்சஸ் பண்ணினா சரியா வருமா?’ என்று சொல்லியிருக்கிறார். இதை அறிந்து, கதை சொல்லச் சென்றபோது, ‘சின்ன சின்ன மாற்றங்கள்தான்; நீங்க இதுவரைக்கும், ரஜினி சாரோட ‘தம்பிக்கு எந்த ஊரு’ மாதிரியான காமெடி பண்ணினது இல்ல. அதை இதுல வெச்சிருக்கோம்.'’ என்றேன். கொஞ்சம் யோசித்தார். அருகிலிருந்த ரத்னம் சார்: ‘நம்ம புரொடக்‌ஷன்ல தரணி ‘தூள்’ பண்ணியிருக்கார்’ என்றார். விஜய் அதன்பிறகு எதுவும் கேட்கவில்லை.

இதற்கிடையில் என்னுடைய ஒளிப்பதி வாளர் கோபிநாத்தை ‘ஒக்கடு’ படம் பார்க்க வைத்தேன். அவர் படத்தைப் பார்த்துவிட்டு, ‘என்னய்யா.. படம் இது! எனக்குப் பிடிக்கல’ என்றார். அவர் சொன்னதை நான் மனதில் போட்டுக்கொள்ளாமல் ‘நீங்க தயாரா இருங்க, நாம பண்ற படம் வேற ஒண்ணா இருக்கும்’ என்று சொன்னேன். அவர் எப்போதுமே என்னை நம்பக்கூடியவர். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களில் ‘கில்லி’க்கு மட்டும்தான் ‘மானிட்டர்’ வைத்துக் கொண்டோம். அந்த அளவுக்கு எங்கள் இருவருக்கும் இடையில் புரிதலின் அலைவரிசை ஒரேமாதிரி இருக்கும்.

அடுத்து ‘ஒக்கடு’ வில்லன் பிரகாஷ்ராஜுக்குப் பதிலாக, தமிழில் வேறொரு வரைப் போட்டுவிடுவது என்று 8 பேருக்கு மேக்-அப் டெஸ்ட் எடுத்தேன். ‘டூயட்’ படத்தில் தொடங்கி பிரகாஷ்ராஜ் எனக்கு நண்பர். அவருடைய கதாபாத்திரத்துக்கு நான் வேறு நடிகர்களை வைத்து மேக்கப் டெஸ்ட் எடுப்பதைக் கேள்விப்பட்டு, ‘தரணி.. நீ கடைசியில எங்கிட்டதான் வந்து நிக்கப்போற பார்த்துகிட்டே இரு’ என்றார். அதேமாதிரி அவரிடம்தான் போக வேண்டியிருந்தது. அவர் ‘ஏய்.. இப்ப எதுக்குப்பா இங்க வந்தே?’ என்றார். ‘இல்ல பாஸ் உங்ககிட்ட ஒரு கதை சொல்லணும்’ என்றேன். ‘கதையைக் கேட்டவர் ‘டேய்.. ரொம்ப நல்லா இருக்குப்பா!’ என்று பாரட்டினார். ‘நீங்க நடிச்ச ‘ஒக்கடு’ படத்தின் கதைதான் இது’ என்றேன். பிரகாஷ் ராஜ் ஆச்சரியப்பட்டார். நடிக்கவும் உடனே ஒப்புக் கொண்டார்.

மாமல்லபுரத்தில் 7 ஏக்கரில் திருவல்லிக்கேணி செட் போட்டிருந்தோம். அங்கே படப்பிடிப்புக்கு வந்த பிரகாஷ் ராஜ், ‘யோவ்.. என்னய்யா இது.. புதுசா மானிட்டர்லாம் வச்சு ஷூட் பண்றே?’ என்றார். ‘இல்ல பாஸ்.. கண்டினியூட்டி ஃபாலோ பண்ண மானிட்டர் வேணும்ன்னு என்னோட அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ் கேட்டாங்க’ என்றேன். ‘சரி இப்போ என்னா சீன்.. நான் என்ன செய்யணும்?’என்றார்.. ‘நீங்க த்ரிஷாவைப் பார்த்துடுறீங்க.. ஹாய் செல்லம்ம்ம்’ன்னு சந்தோஷமும் ஆச்சரியமும் கலந்த தொனியில கத்திச் சொல்லணும்’ என்றேன். அப்படி அந்தப் படத்தின் ஐகானிக் வசனமாக மட்டுமல்ல; இன்றைக்கும் பிரகாஷ் ராஜின் அடையாள வசனமாகவும் மாறிவிட்ட ‘ஹாய் செல்லம்..’ என்பது எனக்கு ஸ்பாட்டில் தோன்றிய வசனம்தான்.
அதேமாதிரிதான் விஜய் சாரை ஜீப்பைத் தூக்கச் சொன்னதும்! படப்பிடிப்பு என்று வந்துவிட்டால், சொன்னதைச் செய்யும் ‘டார்லிங்’ விஜய். அவர் ஒரு ஒர்க்கஹாலிக்! உண்மையான தமிழ்நாட்டுக் கபடி விளையாட்டை அதன் ஆதன்ட்டிசிட்டி மாறாமல் கொண்டுவர வேண்டும்; விஜயை ஒரு உண்மையான கபடி வீரனாகவே சித்தரிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக விஜய்க்குக் கபடி பயிற்சி கொடுக்க முடிவு செய்து அதை அவரிடம் சொன்னேன். - தரணி

(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT