சமகால இந்தியக் கலை சினிமாவில் அச்சு அசலான கிராமத்தின் யதார்த்த வாழ்வைத் தனது திரைப்படங்களில் பிரதியெடுப்பவர் ரிமா தாஸ். நுட்பமான வாழ்க்கைக் கூறுகளைத் திரையில் பதியமிடுவதன்வழி அஸ்ஸாமிய சினிமாவை, உலக சினிமாவின் அகண்டப் பரப்பில் அங்கப்படுத்தியவர். அவர் 2017ஆம் ஆண்டு இயக்கிய ‘கிராமராக் இசைக்கலைஞர்கள்’ (Village Rockstars) ஆஸ்கர் போட்டிக் களத்தில் பங்கேற்று உலகப் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது.
கடந்த ஆண்டு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து, பார்வை யாளர்களை மீண்டும் வியப்பில் ஆழ்த்தியது. முதல் பாகத்தைவிடக் கூடுதலான வீர்யத்துடனும் பரந்துபட்ட கண்ணோட்டத்தோடும் இரண்டாம் பாகத்தை ரிமா தாஸ் வடிவமைத்திருந்தார்.
இந்தியக் கலை சினிமா, கடந்த இரு தசாப்தங்களில் உருவான இயக்குநர்களால், ‘இடை நிலை சினிமா’ (Middle Cinema) என்கிற சரிந்த இருப்புக்குள் ஐக்கிய மாகிவிட்டிருந்தது. இப்படிப்பட்டச் சூழலில், ஒரு சிலரே முந்தைய காலக்கட்டக் கலை சினிமாவின் முழுமைத்துவத்தைத் திரையில் தீபமாக ஏந்திக்கொண்டு தரமான பார்வையாளர்களுக்கு அகவெளிச் சத்தை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் ரிமா தாஸ்.
ரிமா தாஸின் படங்களில் அப்படி யென்ன சிறப்பம்சம் இருக்கிறது எனக் கேள்வியெழுப்பினால், கலை சினிமாவில் மேவியிருந்த புனைவுத் தன்மையின் இறுக்கத்தைத் தளரச்செய்து, சமூகம் மற்றும் குடும்பம் சார்ந்த யதார்த்தத்தை நுண்மையான காட்சி வெளிகளில் திரையில் கொணர்ந்தது எனப் பதில் கூறலாம். சத்யஜித் ராய் இயக்கிய ‘பதேர் பாஞ்சாலி’, அன்றைய திரைப்பரப்பின் கூடுமான வரையறைக்குள் சொல்ல முடிந்த படம் எனில், ரிமா தாஸின் படங்கள் இன்றைய நவீன திரையணுகலின் வரையறையைத் தொட்டிருப்பவை என அழுத்த மாகக் கூறவேண்டும்.
‘கிராம ராக் இசைக் கலைஞர்கள்’ படத்தின் இரண்டாம் பாகம், முந்தைய படத்தில் முதன்மை கதாபாத் திரமாக வரும் துனுஎன்கிற சிறுமியின் வாழ்வனுபவத்தை ஏழு ஆண்டுகள் கழித்துத் தொடர்கிறது. துனு இப்போது பதின்ம வயதை எட்டிவிட்டவள்.
சிறுமியாக இருந்தபோதிருந்த அதே குணவியல்பு மாறாமல் மரம் ஏறுவது, ஆற்றில் நீந்துவது என அவள் இயற்கையுடன் இயைந்த வாழ்வைப் பேணுகிறாள். மக்கள் பெருக்கத்தால் இன்றைய நகரங்களில் நிலவும் நெருக்கடியான புறச்சூழலில், சிறார்கள் விளையாட இடமின்றியும் துணையின்றியும் கைபேசி, கணினி உள்ளிட்ட டிஜிட்டல் அடிமைத்தனத்தால் ஆட்கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.
இயற்கை எனும் களம் தரும் ஆனந்தத்தின் எந்தத் தொடர்பையும் உணரமுடியாமல் இறுக்கமடைந்த இயந்திரத் தலை முறையாக உருவேற்றப்பட்டிருக்கி றார்கள். இன்னும் உயிர்த்திருக்கும் கிராமங்களின் இயற்கை மட்டுமே அவர்களுக்குள் புதைக்கப்பட்டுவிட்ட மகிழ்ச்சியை, சுதந்திரத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். இதை துனு மட்டுமல்ல, அவளைச் சுற்றிவரும் சிறார்களின் கூட்டமும் பார்வையாளர்களுக்கு அறிவார்த்த மான குறியீடாக உணர்த்து கிறது.
இயற்கையின் வினைகள் உலகத்துக்கு ஒத்திசைவை அளிப்பது மட்டும்தானா? இல்லை, பெற்ற தாயின் கோபமும் அதற்குண்டு. பேராசைமிக்க மனிதர்களால் நெருக்கடிக்கு உள்ளாக்கும்போதெல்லாம், தயவு பாராமல் பேரிடர்களை உருவாக்கித் தன்னிருப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும்தானே அதன் சீரிய கடமை. படத்தின் முதல் பாகத்தில் வரும் வெள்ளம் தரும் அழிவைவிட, சில ஆண்டுகள் கழித்து வந்த இரண்டாம் பாகத்தில் மழையும் வெள்ளமும் அதிகப்பட்டிருப்பதைக் காட்சிப்படுத்தியதின்வழி சூழலியல் அபாயம் குறித்துப் படம் விசனப்பூர்வமாகப் பேசுகிறது.
இரண்டு பாகங்களிலுமே துனுவும் அவளுடைய அன்னையும் பேணிப் பாதுகாக்கும் பொருளியல் ஆதாரமான வயல்வெளியை வெள்ளம் சூறையாடிவிடுகிறது. பெற்ற பிள்ளைக்கு உணவூட்டும் தாயைப் போல் அந்நிலத்தில் நெல் பயிரிட்டு மகிழ்ச்சியுடன் உழைக்கும் காலம் படத்தில் கவித்துவத்துடன் சொல்லப் பட்டிருக்கிறது. சீற்றமெடுத்துப் பெருகும் தீவிர மழை ஒரே நாளில் அனைத்துப் பயிர்களையும் நாசப் படுத்திவிட, துயரத்தின் மேல் படரும் துயரமாக, துனுவின் அம்மாவும் நோய்வாய்ப்படுகிறாள். ஆட்டோ வாகனம் ஒன்றில் மருத்துவமனைக்குச் செல்ல முயல்கிறார்கள்.
ஆனால், கிராமத்தை விட்டு வெளியேறும் ஒற்றைப் பாதையில் மறித்துக் கிடக்கும் மரமொன்று அவர்களது பயணத்தைத் தடைசெய்கிறது. துனுவின் அன்னை அந்த நடுப்பாதையிலேயே சிகிச்சை பெறும் வாய்ப்பின்றி உயிரை விடுகிறாள். இந்தக் காட்சியின் யதார்த்தக் கட்டமைப்பு பார்வை யாளரான நம்மை அதிர வைத்து விடுகிறது.
உண்மையிலேயே நமது கண்ணெதிரே நிகழும் அநியாயமான சாவைத் தடுக்க வழியின்றி நாமும் உறைந்து நிற்பதைப் போன்ற நேரடி அனுபவத்தை நம்முள் செலுத்தும் காட்சி இது. படத்தின் முதல் பாகத்தில் ஓர் அற்புதமான காட்சி வரும். வெள்ளத் துக்கு முன்பு மழை பெய்யும்போது, துனு தன்னுடைய பொம்மைக் கிதாரை வாசலுக்கு எடுத்துவந்து வாசிப்பதைப் போல் பாவிப்பாள்.
சில வினாடிகளே வரும் இக்காட்சியில், கிதார் இசை மீதான அவளது தீவிரப் பற்று வெளிப்படுத்தப்பட்டிருக்கும். மழை அவளது வாழ்வுக்குப் பெருந்துயரம்தான் எனினும், அவளது இசையார்வத்தைத் தூண்டும் உற்ற காரணியாகவும் வடிவெடுக்கிறது. ஒரு சிறந்த இயக்குநர் மட்டுமே இத்தகைய காட்சிகளை வடிவமைக்க முடியும். மனம் திறந்து கூறினால், இந்திய சினிமாவில் அதி யதார்த்த சினிமாவை நிறுவிய சத்யஜித் ராயின் கலைத்துவ வாசனையின் சமகாலத் தொடர்ச்சியாக ரிமா தாசை நாம் தயக்கமின்றி மதிப்பிடலாம்.
முதல் பாகத்தின் இறுதிக்காட்சியில், துனுவின் அன்னை உண்மையான கிதார் ஒன்றைச் சுமந்தபடி வீட்டுக்கு நடந்துசெல்லும் காட்சியுடனும் அதனை துனு வாசித்துப் பழகும் பின்னணியுடனும் படம் முடிவடையும். அன்னையின் பேரன்பும் துனுவின் இசை நம்பிக்கையும் இக்காட்சிகளில் மிளிரும்.
அடுத்த பாகத்தில், தனது கிராம உறவுகளை உள்ளடக்கிய ஒரு ராக் இசைக்குழுவை துனு வைத்திருக்கிறாள். அனைத்துத் தடைகளையும் தாண்டி அவளது இசைக்கனவு வளர்ந்துசெல்கிறது. ஆயினும், தாயின் மரணம், வெள்ளத் தால் நேர்ந்த பொருளாதாரச் சீரழிவு ஆகியவற்றால் அவளது கனவில் விரிசலும் வளர்ந்தபடி உடன் தொடர்கிறது.
இயற்கைக்கும் இசைக்குமான அவளது தடையற்ற ஊடுபாவு தலைக் கைவிடாமல் பத்திரப்படுத்தி முடிவடை கிறது படத்தின் இரண்டாம் பாகம். சென்ற வருடத்துக்கான ஆஸ்கர் விருதுப் போட்டியில் இந்தியக் குழுவினர் நியாயமான முறையில் தேர்வுசெய்திருந்தால், ‘கிராம ராக் இசைக்கலைஞர்கள்’ முதல் பாகத் தைப் போல இரண்டாம் பாகமும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். விருது பெறுகிறதோ இல்லையோ இந்திய சினிமாவின் நவீனக் களமாக்கத்தை உலகத்துக்குப் பெரு மிதத்துடன் காட்டும்விதமாக அது அமைந்திருக்கும்.
- viswamithran@gmail.com