இந்து டாக்கீஸ்

மீனா பெயரைக் கேட்டுப் பதறிய விஜய்! | ப்ரியமுடன் விஜய் 22

Guest Author

மாஸ் ஹீரோவாக உயரும் ஒரு நடிகருக்கு நவரசங்களும் வசப்பட்டிருக்க வேண்டும். நவரசங்களில் அவர் எந்த உணர்ச்சியை வெளிப் படுத்தினாலும் அது ரசிகர்களைக் கவர வேண்டும். நடிப்பு என்பதே தெரியாமல், வெகு இயல்பாக நடிக்கக்கூடிய நடிகர்கள் இன்றைக்கு வந்துவிட்டார்கள். இந்திய சினிமாவில், தென்னிந்திய சினிமாவில் ‘மெத்தட் ஆக்டிங்’ என்பதைத் தங்களை அறியாமலேயே பயன்படுத்தப் பழகிவிட்ட இயல்பான நடிகர்களின் எண்ணிக்கைப் பெருகிவிட்டது. ஆனால், அவர்களால் எல்லாம் மாஸ் ரசிகர்களைக் கவர முடியுமா என்றால், நிச்சயமாக முடியாது. அவர்கள் விமர்சகர்களை வேண்டுமானால் கவரலாம்.

ஆனால், ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டு விட்ட ஒரு மாஸ் நாயகன், துரும்பைக் கிள்ளிப் போட்டாலும் ‘ஆஹா ஓகோ’ என்று கொண்டாடுவார்கள். தங்கள் இதயத்தில் இடம்பிடித்துவிட்ட மாஸ்நாயகன் வில்லத்தனம் செய்தாலும் ரசிப்பார்கள். ஏன், கதாநாயகியிடம் எல்லை மீறிக் காதல் செய்தாலும், அதை ரசிக்கும் மனோபாவம் வெகுஜன ரசிகர்களிடம் இருப்பதை தியாகராஜ பாகவதர் காலம் தொட்டுப் பார்த்து வருகிறோம். ரசிகர்கள் இப்படி வாரி அணைத்துக்கொள்ளும் ஒருவர்தான் காலம்தோறும் திரையுலகை ஆள்கிறார்கள். விஜய் அந்த வரிசையில் வரும் மாஸ்
நாயகன்தான். தன்னை அணுவணு வாகக் கொண்டாடுகிறார்கள் எனும் போது, ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பையும் ஈடுபாட்டையும் கொடுக்கலாம், ரிஸ்க் எடுக்கலாம் என்கிற எண்ணம் இருந்தால் மட்டும்தான் ஒரு சக்சஸ்ஃபுல் மாஸ் ஹீரோவால் தனக்குக் கிடைத்த ஸ்டார்டமை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதை, காதல் படங்களில் நடித்து வரிசையாக வெற்றி கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே விஜய் உணர்ந்து விட்டார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், ‘ஷாஜகான்’ படத்தில் விஜய் காட்டிய ஈடுபாடும் உழைப்பும் அப்படிப்பட்டது.

விஜய் கதையை ஒப்புக்கொண்ட பிறகு, இரண்டாம் முறை அவ ரைச் சந்திக்கும் போது அவர் கேட்டார், ‘இவ்வளவு பொயட்டிக் லவ் ஸ்டோரில இவ்வளவு ஆக்‌ஷனுக்கு வாய்ப்பு அமைஞ்சது பெரிய லக்! உண்மைக் காதலர்கள் என்றால் எவ்வளவு ரிஸ்க் எடுத்தாவது அசோக் சேர்த்து வைப்பான் என்பதில் ரியலாவே ‘ஆக்‌ஷன்’ வந்துடுது. அதுவும் இல்லாம, பொண்ணு, பையன் ரெண்டு தரப்புலயும் லவ்வுக்கு எதிர்ப்பு இருக்கும்போது ரெண்டு சைடையும் சமாளிச்சு சேர்த்து வைக்கணும்கிறதுல இருக்கிற ரிஸ்க் முழுக்க ஆக்‌ஷன்ல இருந்தாதான் கன்வின்ஸ் ஆகும்’ என்று ஒரு திரைக்கதை எழுத்தாளரைப்போல் சொன்னார்.

‘ஆமா சார்.. பெண்ணைக் கூட்டி கிட்டுப் போற சேசிங் ரசிகர்களைப் பதற்றப்படுத்தணும். காதலியை பைக்கில கூட்டிகிட்டு வரும்போதும் பெண்ணோட ஆட்கள் துரத்தணும்; அவங்களை பொதுச் சாலைகள்ல பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாத வகையில அசோக் எப்படி சமாளிக்கி றான்னு விஷுவல் பண்றதுதலதான் விஷயம் இருக்கு. அதேமாதிரி, அசோக் பெண்ணை கொண்டுபோய் சேர்க்க முடியாம மாட்டிக்கும்போது ஹீரோ பண்ற ஃபைட்ல லாஜிக்கும் ரியாலிட்டியும் இருக்கணும். அந்த ஃபைட் சட்டுனு முடிஞ்சிட்டா, அதுல அழுத்தம் இருக்காது. அதனால் முதல் சேஸிங், அதன் தொடர்ச்சியா மார்க்கெட்ல நடக்கிற பைட்டை 6 நிமிடம் வைக்கலாம்’ என்றேன்.

விஜய் அதிர்ந்து போய் ‘என்ன சார் சொல்றீங்க. இது நான் இதுவரைக்கும் பண்ணாத விஷயமா இருக்கே! அவ்வளவு பெரிய ஃபைட் ஐடியாவை எந்த மாஸ்டரை வச்சு ‘எக்ஸிக்யூட் பண்ணலாம்னு நினைக்கீறீங்க?’ என்று கேட்டார். நான் ஹீரோவின் எண்ணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, ‘உங்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்?’ எனக் கேட்டேன். ஏனென்றால் அவர் யாரைப் பரிந்து ரைத்தாலும் அவர்களிடம் கதைக் களம் கோருவதை என்னால் பெற்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. விஜய், ‘ஜாகுவார் தங்கம்’ என்றார். உடனே ஓகே சொன்னேன்.

ஜாகுவாரிடம் சேசிங் அதன் தொடர்ச்சியாக வரும் மார்க்கெட் சண்டைக் காட்சியின் நீளம், கிளை மாக்ஸில் வரும் ரயில் ஃபைட் அதில் தேவைப்படும் நம்பகத் தன்மையையும் சொல்லி, பல ஆங்கிலப் படங்களின் சண்டைக் காட்சிகளை அவருக்கு ‘ரெஃபரென்ஸாகக் கொடுத்தேன். அதையெல்லாம் உள்வாங்கிக் கொண்ட ஜாகுவார், ‘உங்க எதிர் பார்ப்பு என்னன்னு புரியுது. கமல் சார், சரத்குமார், அஜித், சத்யராஜுன்னு பல மாஸ் ஹீரோக்களுக்கு ஃபைட் கம்போஸ் பண்ணியிருக்கேன். முதல் முறையா விஜய் சார் இந்தப் படம் கொடுத்திருக்கார். அதைவிட பம்பர் மாதிரி நீங்க சிச்சுவேஷன் கொடுத்துட்டீங்க.. வாங்க உட்கார்ந்து ஒர்க் அவுட் பண்ணுவோம்’ என்றவர், ஈகோ காட்டாமல் எனது ஐடியாக்களைக் கேட்டுக் கொண்டார்.

‘பைக்கில் பெண்ணை அழைத்துக்கொண்டு வரும்போதே, பைக்கில் துரத்தும் அடியாட்களைக் காலால் விஜய் எட்டி உதைக்கிற மாதிரி பல ‘கிக்’குகளை முதல் ஃபைட்டில் வைப்போம். இது ரிஸ்க்தான்; ஆனா எனக்குத் தெரிஞ்சு, விஜய் எதுக்கும் தயாரா இருப்பார்’ என்றார். எனக்கு ஜிலீர் என அடிவயிறு கூசியது. இது எவ்வளவு பெரிய ஆபத்து என எண்ணி உள்ளுக்குள் உதைத்தது! பின்னால் பெண்ணை வைத்துக்கொண்டு காலைத் தூக்கி உதைக்கும்போது ஓட்டிக்கொண்டிருக்கும் பைக்கின் பேலன்ஸ் தடுமாறி கீழே விழுந்தால், எவ்வளவு பலமான காயம் ஏற்படும் என்று சொல்ல முடியாது; ஏனென் றால் அப்போதெல்லாம் ஹெல்மெட் போடும் வழக்கம் கிடையாது.

அடுத்த சில நாள்களில் சேசிங் ஷூட்டிங். இன்று விஜயிடம் நானும் ஜாகுவாரும் போய் பைக்கை ஓட்டிக்கொண்டே காலைத் தூக்கி கிக் செய்ய வேண்டும் என்று சொன்னோம். ‘சூப்பர்.. நான் ரெடியாகிக்கிறேன்’ என்றார். அதோடு அவர் நிற்கவில்லை. லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி வாங்கிக்கொண்டு, அவர் வீட்டுக்கு அருகிலிருந்த மாநகராட்சி விளையாட்டுத் திடலுக்குப் போய், அதிகாலை 2 மணிக்கு பைக்கை ஓட்டியபடியே காலைத் தூக்கி உதைத்துப் பார்த்து பயிற்சி எடுத்திருக்கிறார். பிறகு தனது நண்பன் ஒருவருக்கு கை, கால் முட்டிகளுக்கு ‘நீ கேப்’ போட்டு, அவரை பைக்கில் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டே உதைத்துப் பார்த்து அதிகாலை 5 மணி வரை பயிற்சி எடுத்திருக்கிறார். மறுநாள் சேசிங் படப்பிடிப்பில் பைக்கை ஓட்டிக் கொண்டே விஜய் காலைத் தூக்கி உதைக்கும் லாகவத்தைப் பார்த்து ‘ஸ்டண்ட்மேன்’கள் எல்லாரும் ‘தலைவா.. உங்க அளவுக்கு முடியாது’ என்று விஜய்க்கு ராயல் சல்யூட் வைத்தார்கள். ஆனால், அதையும் மீறி மார்க்கெட்டில் பைக்கின் குறுக்கே இன்னொரு பைக் நுழைந்தபோது ஸ்கிட் ஆகி விஜயும் அவரது பைக்கில் பயணித்த பெண்ணும் தூக்கி எறியப்பட்டார்கள். பலத்த அடி. அடுத்த ஐந்து நிமிடத்தில் ‘ஓகே நான் ரெடி’ என்று ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து வந்துவிட்டார் விஜய்.

தொடக்கத்தில் இருந்த அதே ஈடுபாட்டுடன் கிளை மாக்ஸ் ஃபைட்டிலும் ரிஸ்க் எடுத்தார். ஒரு தலையாகக் காதலித்த ரிச்சாவை ரிஸ்க் எடுத்து அவருடைய காதலருடன் சேர்த்து வைக்கும் ரயில் சண்டைக் காட்சியில், ஓடும் ரயில் பெட்டியின் மீது ஏறி ரயிலின் வேகத்துக்கு அவரும் ஓடியது, நகரும் ரயில் பெட்டியின் மீது கடகடவென்று ஏறி திரும்பி உதைப்பது என பல அட்டகாசங்களைச் செய்தார் விஜய். ரயில் சண்டைக் காட்சியில் ‘ரோப்’ பயன்படுத்தப்பட்டாலும் ரோப்பை உடம்பில் பொருத்திக்கொண்டு ஆக்‌ஷன் செய்வது மிகுந்த பெயின் கொடுக்கக்கூடியது. நீங்கள் மணிக் கணக்கில் ரோப்பில் தொங்கச் சொன் னாலும் தொங்குவார் விஜய்.

இன்றைக்கு விஷுவல் எஃபெக்டும் ‘வெர்சுவல் புரொடக்‌ஷனும் வந்து விட்ட காலத்தில் இதுபோன்ற காட்சிகளில் மாஸ் ஹீரோக்கள் நோகாமல் நொங்கு சாப்பிடுகிறார்கள். ஆனால், அன்றைக்கு விஜய் உண்மையாகவே ரிஸ்க் எடுத்ததால்
தான், இந்த இரண்டு சண்டைக் காட்சிகளுக்காக ஆடியன்ஸ் திரும்பத் திரும்ப வந்தார்கள். அதேபோல் விஜயின் காதல் தோல்வியில் இருந்த வலியைத் தங்களுடையதாக எண்ணி அதைச் சுமந்து செல்ல தினசரி மீண்டும் மீண்டும் வந்து 20 முறை வரை பல ரசிகர்கள் பார்த்ததால்தான் படம் 125 நாள்கள் ஓடியது.

இந்தப் படத்தில் மீனாவை ஒரு பாடலுக்கு ஆட வைக்கலாம் என்று நான் சொன்னபோது விஜய் பதறிவிட்டார். ‘அண்ணா.. மீனா ரசிகர்களோட பொக்கிஷம். அவங்க நல்ல டான்ஸர். எதுக்கும் அவங்ககிட்ட கேட்டுப் பாருங்க’ என்றார். மீனாவோ ‘விஜயோட டான்ஸ் ஆடுறதுல ரொம்ப ஹேப்பி; அவரோட சின்சியாரிட்டிக்காகவும் அவர் ஆடுற ஸ்டைலுக்காகவும் நான் அவர் கூட ஆடணும்.” என்று மகிழ்ச்சி யுடன் ஒப்புக்கொண்டார். ‘சரக்கு வச்சிருக்கேன்’ என்கிற அந்தப் பாடல் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது. ‘ஷாஜகான்’ நாள்களைப் பற்றிப் பகிர இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இப்போதைக்கு இத்துடன் முடிக்கிறேன். அரசியலில் அடிவைத்திருக்கும் விஜய் அண்ணாவுக்கு என் வாழ்த்துகள்” - அ.ரவி

(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT