இந்து டாக்கீஸ்

மேகங்களை விலக்கிய ‘மேனகா’ | கண் விழித்த சினிமா 16

ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ் நாடகத்தின் பொற்காலம் என்று 19ஆம் நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகளையும் இருபதாம் நூற்றாண்டின் முதல் 30 ஆண்டுகளையும் வரையறுத்துவிடலாம். பேசும் படங்களுக்குக் கிடைக்கத் தொடங்கிய அதிதீவிர வரவேற்பால், நகரங்கள் தோறும் தோன்றியிருந்த நாடக அரங்குகள், திரையரங்குகளாக மாற்றம் கண்டன.

கந்தசாமி முதலியாரிடம் நடிப்புப் பயிற்சி பெற்ற டி.கே.எஸ். சகோதரர்களின் பால சண்முகானந்த சபா போன்ற வெகு சில குழுக்களைத் தவிர, துரதிர்ஷ்டவசமாக எழுபதுக்கும் அதிகமான கம்பெனி நாடகக் குழுக்கள் 30களில் வரிசையாக மூடப்பட்டன. சில நாடகக் குழுக்கள் தங்களின் சபா பெயரில் ‘டாக்கீஸ்’ என்கிற பெயரைச் சேர்த்துக்கொண்டு பட நிறுவன மாக மாறிப் பிழைக்க வேண்டிய நிலையும் உருவானது.

ரத்தமும் சதையுமான நடிகர் கள், கதாபாத்திரங்களாக மேடை யில் உயிர்பெறும் அற்புதத்தைக் காணக் காத்திருந்த கண்கள், மேடையின் முன்திரையானது கீழிருந்து சிறிது சிறிதாக அழகாக மடிந்தபடி மேலெழுந்து செல் வதைக் கண்ட காலம் ஒரு பகல் கனவுபோல் ஆனது.

மடிந்தபடி மேலெழுந்த திரைக்குப் பின்னால் இப்போது உயிருள்ளநடிகர்கள் இருக்க வில்லை, மாறாக அங்கே வெண்திரை இருந்தது. அதில் கதா பாத்திரங்கள் கறுப்பு - வெள்ளை பிம்பங்களாக உயிர்பெற்று வந்தன. அவை உருவாக்கிய மாயம், பார்வையாளர்களை மட்டு மல்ல; வேலையிழந்த கம்பெனி நாடகக் கலைஞர்களையும் மினு மினுக்கும் திரையுலகம் நோக்கி நகர்த்தியது.

மூன்றாம் ‘தர’ப்பு: தங்களுக்கான அறிவுத் தேடலையும் ரோல் மாடல்களையும் படிப்பினைகளையும் பார்வையாளர் கள் திரையில் தேடத் தொடங்கினார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த திரையில், அவர்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ற பல வண்ணக் கதா பாத்திரங்களை ஆழமாகவும் அழுத்தமாகவும் படைத்து அவர் களை ஆற்றுப்படுத்தவேண்டும் என்கிற பொறுப்பை உணர்ந்த பல படைப்பாளிகள் பேசும்படக் காலத்தின் முதல் 10 ஆண்டுகளில் தோன்றி, தமிழ் சினிமாவைக் கண் விழிக்கச் செய்தனர்.

அவர்களில், கம்பெனி நாடக நடிகர்கள், நாடகாசிரியர்கள், இசைக்கலை ஞர்கள், கவிஞர்கள் எனக் கலை யில் ஊறித் திளைத்த வர்கள் இருந்தனர். மற்றொரு தரப்பினரோ ஐரோப்பியத் தாக்கம் பெற்ற பயின்முறை நாடகக் குழுக்களில் இயங்கி மேலெழுந்து வந்தவர்கள். மூன்றாவதாக ஒரு தரப்பு பேசும்பட உலகில் புகழுடன் வணிக வெற்றியையும் சாதித்தது.

அவர்கள் வழக்கறிஞர்களாக, அரசுப் பணிகளை விட்டு விட்டு வந்தவர்களாக, பரம்பரையாக வட்டித் தொழில் உள்ளிட்ட பிற தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழில்துறைக் குடும்பங்களைச் சேர்த்த வர்களாக, திரைப் படத்தையும் ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாகக் கருதி வந்தவர்கள். இந்த மூன்றாம் தரப்பினரால் சினிமாவின் தரமும் எப்படி உயர்ந்ததோ, அதேபோல் அது தரம் தாழ்ந்து தரையில் விழுந்து புரளவும் இவர்களில் பலர் காரணமாக அமைந்தனர்.

அதைப்பற்றியெல்லாம் பின்னால் விரிவாக ஆராய்ந்து அறிந்து தெளிவோம். தொடக்கக் காலத்தின் தமிழ் டாக்கீ என்பது, உள்ளடக்க ரீதியாக மேன்மையுறக் கைதூக்கி விட்ட கலைஞர்களை ஒரு பறவைப் பார்வையாக நோட்டம் விட்டபடி கடந்து செல்லலாம். சிலரைக் கூர்ந்து நோக்கி அலசி எடை போட்டுப் பார்க்க வேண்டிய அவசிய மும் ஏற்படலாம்.

மயிலாப்பூர் கந்தசாமி: தமிழ் நாடக ஆளுமைகளில், சென்னையின் மயிலாப்பூரைச் சேர்ந்த பெற்றோருக்கு 1874இல் பிறந்தவர் கந்தசாமி முதலியார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றபோது அங்கே அவர், ‘ஷேக்ஸ்பியர் நாடகங்’களைத் துணைப் பாடமாகப் படித்தார். அதைப் பயிற்றுவித்த கந்தசாமியின் ஆங்கிலேய ஆசிரியரான மில்லர், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விளக்கிச் சொல்லி பாடம் நடத்த, ஒரு நடிகரைப் போன்ற உடல்மொழி, உச்சரிப்புடன் அவர் விவரித்ததில் மனமொன்றிப்போய், நாடகத்தின் பால் ஈடுபாடு கொண்டார்.

ஒரே மகனான எம்.கே.ராதா பிறந்த சில ஆண்டுகளில் காதல் மனைவியை இழந்த கந்தசாமி, வேறு வாழ்க்கைத் துணையைத் தேட மனமின்றி, தன் சோகத்தைத் துரத்த நாடகக் கலையின் மீதான ஈடுபாட்டைத் தீவிரப்படுத்தினார். அப்படிச் சுகுண விலாச சபாவுக்கு நடிக்க வந்த மயிலாப்பூர் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைதான் கந்தசாமி.

அவருக்கு முதலில் சிறுசிறு: வேடங்கள் கொடுத்த பம்மல் சம்பந்தம், ‘மனோகரன்’ நாடகத்தை எழுதிஅரங்கேற்றிய போது, தொடக்கத்தில் பலரும் ஏற்கத் தயங்கிய வில்லி கதா பாத்திரமான ‘வசந்த சேனை’யை ஏற்று, பெண் குரலில் பேசி நடித்து மேடையை அதிர வைத் திருக்கிறார். இதைப் பற்றிப் பம்மல் சம்பந்தம் குறிப்பிடும் போது: “எவரும் விரும்பாத வேடத்தை முதல் முதலில் எங்கள் சபையில் அன்று பூண்டவர் ம.கந்தசாமி முதலியார்.

எனது அண்ணனின் நண்பர்” என்று பதிந்திருக்கிறார். பல பாலர் நாடகக் குழுக்களுக்கும் பெண்களால் நடத்தப்பட்டு வந்த பெரிய குழுக்களுக்கும் நாடக ஆசிரியராக அவர் பெரும்பணி ஆற்றினார். தாம் பயிற்றுவித்த காலத்தில் தன்னு டைய மகன் எம்.கே.ராதாவைப் போலவே அனைவரிடமும் அன்பு காட்டினார். அது மட்டுமல்லாது; திரையுலகில் தன்னுடைய மாண வர்கள் அனைவரது வளர்ச்சியிலும் அக்கறை காட்டினார்.

பெயர் பெற்றுக்கொடுத்த ‘மேனகா’ - ஆங்கில இலக்கியங்களையும் ஆங்கில நாடகங்களையும் படித்துத் தேர்ச்சி பெற்றதால், தமிழ் நாடகம் தொடர்ந்து புராணக் கதைகளையே கட்டிக்கொண்டு அழுவதை கந்தசாமி வெறுத்தார். ‘வள்ளி திருமணம்’, ‘அரிச்சந்திர மயானக் காண்டம்’, ‘அல்லி அரசாணி மாலை’, ‘பவளக்கொடி’, ‘சாவித்திரி’ ஆகிய நாடகங்களே அதிகமும் நடத்தப்பட்டன. அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து, நாடகக் கலையின் மீது மக்கள் சலிப்பு கொள்ளும் முன்பாக, அவர்களுக்குத் தங்களைப்போன்ற தற்கால மனிதர்களின் கதையை ஏன் நாடகமாகக் கொடுக்கக் கூடாது என்று தேடினார்.

அப்போது மேற்கத்திய நாவல்களைத் தழுவியும், அவற்றின் உரிமை பெறாமல் கதைக் கருக்களை எடுத்தாண்டும் பின்னாளில் வழக்கில் சிக்கிய துப்பறியும் கதையாளர் ஜெ.ஆர்.ரங்கராஜுவின் வரவேற்பைப் பெற்ற நாவல்கள் பலவற்றை முதல் முதலாக நாடக வடிவத்துக்கு மாற்றி அரங்கேற்றி யவர் கந்தசாமி தான். அவற்றில் ‘ராஜாம்பாள்', ‘ராஜேந்திரா', ‘சந்திரகாந்தா', ‘மோகன சுந்தரம்' போன்ற துப்பறியும் நாவல்களின் நாடக வடிவம், கந்தசாமி முதலியாரின் நெறியாள்கையிலும் அவரிடம் நடிப்பு பயின்று வளர்ந்த மாணவர் களின் நடிப்பிலும் பெரும் புகழ் பெற்றன. இவை அத்தனையும் பின்னாளில் திரைப்படங்களாயின.

இந்த வரிசையில், வடுவூர்துரைசாமி ஐயங்கார் எழுதிய ‘மேனகா' நாவலை, நாடகமாக்கி முதன் முதலாக அரங்கேற்றியவர் கந்தசாமி முதலியார். சமூகத்துப்பறியும் கதை பாணிதான் வடுவூர் துரைசாமி ஐயங்காருடை யது. ஆனால், காப்பியடிக்காமல் அசலாக எழுதக் கூடியவர். ஷெர்லாக் ஹோம்ஸுக்கே சவால் விடும் திகம்பரச் சாமியார் என்கிற பரபரப்பான கதாபாத்திரம் இவர் படைத்ததுதான்.

ஒரு கதைக் களத்துக்குள் ஏராளமான கதாபாத்திரங்களைப் படைத்து, அவற்றை இணைக்கும் புள்ளியில் கவனமும் கச்சிதமும் காட்டிய முன் னோடி தமிழ் ‘பல்ப் பிக்ஷனிஸ்ட்’. என்றாலும், அவர் தன்னு டைய கதாபாத்திரங்களின் சிக்கல் களையும் அவற்றிலிருந்து அவை விடுபடப் போராடுவதையும் நிகழச் சாத்தியமுள்ள சாகச சம்பவங்கள் வழியாகத் தொடக்கம் முதல் இறுதிவரை வேகம் குறையாமல் நகர்த்திச் செல்லும் வெகுஜன எழுத்து முறையைக் கையாண்டார்.

இது கந்தசாமியை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாகச் சமூகத்தில் மனிதர்கள் எப்படியெல்லாம்‌ நடந்துகொள்ளக்‌ கூடாது என்பதைப் போகிற போக்கில் உணர்த்திவிட்டுப் போகும் அவரதுபாணி, திணிப்பாக இல்லாத நீதி போதனை எனக் கருதினார் கந்தசாமி. எனவேதான் மேடையில் ‘மேனகா’ வரலாறு படைக்கும் என்று நினைத்தார். அது திரையிலும் தன் தடத்தை அழுந்தப் பதித்து, தமிழ் சினிமாவை மூடியிருந்த புராண மேகங்களை விலகிச் செல்ல வைத்தது.

‘மேனகா' நாடகம் பெருவெற்றி பெற்றதுடன் திரைப்படமாகவும் ஆனபோது, அதற்கு வசனம் எழுதினார் கந்தசாமி. தன்னுடைய நாடகங்களில் நடித்துக் கொண்டி ருந்த என்.எஸ். கிருஷ்ணனை அப்படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகப்படுத்தினார். அத்துடன் முடிந்துவிடவில்லை அப்படத் தின் சாதனைகள். அது காட்டிய திசை வழி ஒரு பெரும் தொடக்கத் துக்கான அசலான, அழுத்தமான மைல்கல்லாக அமைந்தது.

(விழிகள் விரியும்)

படங்கள் உதவி: ஞானம்

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT