இந்து டாக்கீஸ்

விஜய் கதையைத் தேர்ந்தெடுக்கும் விதம்! | ப்ரியமுடன் விஜய் 21

Guest Author

இன்றைக்கு, பூங்காக்கள், மால்கள் போன்ற பொது இடங்களில், மக்கள் மிகநெருக்கமாகப் பயணிக்கும் பேருந்துகள், மெட்ரோ தொடர் வண்டிகளில் இன்றைய கணினி யுகக் காதலர்கள் மிக நெருக்கமாக, நடந்துகொள்வதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.

பாலியல் ஈர்ப்பால் மனதில் கருக்கொள்வது உறுதியாகக் காதல் அல்ல. அது தன் தேவையை அடைந்தபிறகு, சம்பந்தப்பட்ட இருவரிடமிருந் தும் நிழல்போல் கடந்து போய்விடும். ஆனால், ஒரு தூய காதல் என்பது, பாதுகாப்பு உணர்வைத் தருவது. நேர்மையிலிருந்து துளிர்ப்பது. இருவரது மனதிலும் பரஸ்பரக் காதல் ஏற்பு உறுதியான பிறகு கைகோத்து நடப்பது, ஒரே பைக்கில் பயணிப்பது இவையெல்லாம் தவறில்லைதான். ஆனால், அதற்கும் நாகரிக எல்லை இருக்கிறது. அதைத் தூய காதலில் காண முடியும்.

மாறாக, கல்வி கற்று முன்னேற ஓடும் பெண்ணை, வேலை செய்து குடும்பத்தைக் கைதூக்கிவிட வேண்டும் என்கிற கனவைக் கொண்டிருக்கிற பெண்ணைக் காதல் என்கிற பெயரால் தொந்தரவு செய்து அவளை மடைமாற்றுவதுபோல் ஓர் அயோக்கியத்தனம் ஏதுமில்லை. ‘இவனைக் கரம் பற்றினால் நம்மைப்பாதுகாப்பான்; அதற்குரிய குறைந்த பட்சத் தகுதியுடன் இருக்கிறான்’ என்று பெண் நம்பி வந்து கரம் கோக்க ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டக் காதல் எல்லாத் தடைகளையும் கடந்து வரும் என்று நம்பு கிறவன் நான். அதனால்தான்:

இதயங்களே..
சாதி..
மதம்..
மொழி..
நிலம்..
இவற்றைக் கடந்து வரும்
காற்றைப் போல்
காதலையும்
சுவாசிப்போம்..

என்கிற கவிதை எழுதப்பட்ட வாழ்த்து அட்டையை நாயகன் அசோக் (விஜய்) விரும்பி வாங்குவதுபோல் ‘ஷாஜகான்’ படத்தில் காட்சி வைத்தேன். அப்படிப்பட்ட அசோக், பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவியான மஹியின் (ரிச்சா) மீது ஒருதலையாகக் காதலை வரித்துக்கொண்டு அவளிடம் அதைச் சொல்லத் தயங்கு கிறான். அவனுடைய நண்பர்கள், ‘யார் யாரோ லவ்வுக்கெல்லாம் ஹெல்ப் பண்ண எங்களைக் கூப்பிடுற; ஆனா, உன்னோட லவ்வை மட்டும் அந்தப் பொண்ணுகிட்ட சொல்ல மாட்டேங்கிற?’ என்று சட்டையைப் பிடித்து உலுக்குவார்கள். அவன் ‘அது என்னால் முடியாது’ என்கிறான். ‘ஏன்டா முடியாது?’ என நண்பர்கள் அதட்டிக் கேட்பார்கள். அப்போதுதான் அவன் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன்னிலை மறந்துவிட்ட தன்னுடைய நண்பன் கிரியை அழைத்துக்கொண்டுபோய் காட்டுவான்.

திருமண வயதை அடைந்து தனியனாக இருக்கும் ஓர் ஆண், தற்சார்பு மிக்கவனாக, வாழ்க்கையில் ஓரளவுக்கு வெற்றிபெற்றவனாக ஆன பின்னும்கூட, அவன் காதலிப்ப தற்கான தகுதியை அடைந்தபிறகும் கூட, ஒருதலைக் காதலை, ஒரு பெண் மீது திணிப்பது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு மோசமான பின்விளைவுகளை உருவாக்கும் என்பதை கிரி - ஆயிஷா ஃபிளாஷ் பேக் வழியாகச் சொன்னேன்.

‘படத்துக்கு ‘ஷாஜகான்’ என்று ஏன் தலைப்பு வைத்தீர்கள்?’ என்று என்னுடைய பல நண்பர்கள் கேட்டிருக்கி றார்கள். இந்திய வரலாற்றில் ஒரு பெண்ணுக்காகக் கட்டப்பட்ட ஒர் நினைவாலயம் இன்று ‘யுனெஸ்கோ’ பட்டியலில் இடம்பிடித்த வரலாற்றுச் சின்னமாக விளங்கிவரும் தாஜ்மஹால்.

தன் மனைவியின் மீதான காதலை, அவள் மறைந்த பிறகு ‘வானளாவ’ கட்டிய ஷாஜஹான் ஒரு பேரரசனாக இருந்தபோதும்கூட, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி யின் அருகிலிருந்து காக்க முடியாதபடி கிளர்ச்சியாளர்களை அடக்கப் போர்க் களத்தில் நின்று மனைவியை மரணத்துக்குக் கொடுத்துவிட்டான். அந்தக் குற்றவுணர்வுடன் அவனுடைய காதலின் வலியும் சேர்ந்ததால் தான் நமக்கு தாஜ்மஹால் கிடைத்தது.

அதேபோல், என்னுடைய நாயகன் அசோக், அபயம் என்று கேட்டு வருகிற அத்தனை காதலர்களையும் தன் நண்பர்கள் படையுடன் இணைந்து சேர்த்து வைக்கிறான். அப்படிப் பட்டவன்தான் நண்பனின் காதலில் பெரும் பிழை செய்தவனாகக் குற்றவுணர்வுடன் வாழ்ந்து கொண்டி ருக்கிறான். தன் காதலியின் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தெரிய வந்தபோது, உடைந்து போகவில்லை. அதை அவன் மனப் பூர்வமாக ஏற்றுக்கொள்கிறான். நண்பனுக்கு உதவுகிறோம் என்று உணர்ச்சிவசப்பட்டுத் தான் காட்டிய அவசரத்தால் இரண்டு பேரின் வாழ்க்கை நொறுங்கிய பின்னர் தான், விரும்பிய பெண்ணின் மனதில் நாம் இருக்கிறோமா இல்லையா என்பது தெரியாமல் அவளை நெருங்கக் கூடாது என்கிற பக்குவத்தைப் பெறுகிறான்.

‘அவள் மனசுல நான் இருக்கேனா இல்லையான்னு தெரியாம லேயே அவசரப்பட்டுட்டோமேடா..’ என்று நண்பன் கிரி கதறும்போது: ‘அவ சாகலடா.. நான்தாண்டா அவளக் கொன்னுட் டேன்; என்ன மன்னிச்சிர்றா’ என்று கையைப் பிடித்து அசோக் கெஞ்சும் காட்சி, காதலுக்கு உதவுவதாக காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளும் இளைஞர்களுக்கு, தூது செல்பவர் களுக்குச் சூடு போட்டதுபோல் அமைந்து, ரசிகர்களை வெகுவாக டிஸ்டர்ப் செய்தது.

விஜய் கதையைக் கேட்டுவிட்டு, பிடித்ததா, பிடிக்கவில்லையா என்று எதுவும் சொல்லாமல் இறுக்கமான முகத்துடன் எழுந்து போய்விட்டது என்னைக் கொல்லாமல் கொன்றது. பெருத்த ஏமாற்றத்துடன் 20 நிமிடத்தில் கடந்த தூரத்தை, 2 மணி நேரம் கடந்து, வழி நெடுக வண்டியை நிறுத்தி டீ குடித்து மனதைத் தேற்றிக்கொண்டு சூப்பர் குட் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தேன். இதற்குள் சௌத்ரி சார்.. ‘யோவ்.. ரவி வந்துட்டானாய்யா.. எங்கய்யா போய் தொலைஞ்சான்..?’ என்று டென்ஷனாக அறை யிலிருந்து வெளியே வந்துகேட்பதும் உள்ளே போவது மாக இருந்திருக்கிறார். நான் போய் இறங்கி உள்ளே நுழைந்ததுமே அப்போது ஆபீஸ் பாய் சௌத்ரி சாரின் அறைக்குள் ஓடினார்.

வெளியே வந்த சௌத்ரி சார் “யோவ் கலக்கீட்டய்யா..! விஜய்கிட்ட சுத்தமா கால்ஷீட் இல்ல. ஆனா, இப்போ அவர் பண்ணிகிட்டு இருக்கிற ஒவ்வொரு படத்துக்கும் இடையில கிடைக்கிற கேப்ல படத்தை எடுத்துடுவோம்னு சொல்லிட்டார். அப்புறம் கதை அவரை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சுன்னு சொன்னார்.

அப்புறம் பிகினிங் ஃபைட், கிளை மாக்ஸ் ஃபைட் இரண்டையும் நீ எப்படி ஷூட் பண்ணப் போறேன்னு சொன்னதும் அவருக்குப் புடிச்சிருக்கு!

‘அவரு என்ன ஸ்டண்ட்மேனா இருந்தவரா’ன்னு கேட்டு உனக்கு காம்ப்ளிமெண்ட் வேற கொடுத்திருக் கிறாரு.. சீக்கிரம் டிஸ்கஷனை முடி’’ என்றார். நொடிக்குள் கோடம்பாக்கம் எங்கும் தகவல் பரவிவிட்டது. ‘இவரு விஜய வச்சு படம் பண்றாராமா?’ என்று என்னைக் கிண்டல் செய்தவர்கள் எல்லாம் ஓடிவந்து கைகுலுக்கி ‘‘சாரிப்பா.. ஆல் தி பெஸ்ட்’’ என்றார்கள்.

அடுத்த நாளே என்னை அழைத்த சௌத்ரி சார் ‘யோவ்.. விஜய் உன்னைப் பார்க்கணும்கிறார்.. பிரசாத் ஸ்டுடியோ போய்ப் பார்’ என்றார். உடனே அங்கே போய் காராவேனை நெருங்கியபோது, விஜயின் உதவியாளர் ‘நீங்க ரவியா?’ என்று கேட்டு என் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் கதவைத் திறந்தார். ‘‘வாங்க ரவி” என்று வரவேற்ற விஜய்: “உண்மையச் சொல்லனும்னா.. நீங்க சொன்னது ஹீரோவை நெகட்டிவ் பாய்ண்ட் ஆஃப் வியூல வைக்கிற ஸ்கிரிப்ட். ஆனா அதுல ஒரு நேர்மை இருக்கு. இந்தக் கதைய நான் சூஸ் பண்ணாமப் போயிட்டா, அது சரியில்லன்னு தோணுச்சு. அதனாலதான் யோசிச்சு முடிவெடுக்க ஒரு மணிநேரம் எடுத்துக் கிட்டேன். மனுஷங்களுக்குச் சேரவேண்டிய கண்ணெல்லாம் நேரா மண்ணுக்குப் போய்கிட்டிருக்கு’ன்னு.. அசோக் சொல்ற அந்த கண் தான மேட்டர் எல்லாம் ரொம்ப தரமா இருக்குங்க. முக்கியமா ஆக்‌ஷன் சீக்குவென்ஸை எப்படி எடுத்துட்டுப் போகலாம்னு நீங்க சொன்ன ஐடியா ரொம்ப பிடிச்சிருந்துது. ஸ்டண்ட் டைரக்டர் யாருங் கிறதை சீக்கிரம் முடிவு பண்ணுவோம்’ என்று பாராட்டி அனுப்பி வைத்தார்.

நடிப்பு, நடனம், சண்டை, நகைச் சுவை என அத்தனை அம்சங்களிலும் சிறந்து விளங்கும் ஒரு டாப் கிளாஸ் நட்சத்திரத்துக்குக் கதை சொல்லி அசத்தியது பெரிய விஷயமல்ல; அதை நாம் எப்படி ஷூட் செய்து அவர் நம் மேல் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றப் போகிறோம் என மிரட்சியாக இருந்தது. சொல்வது எளிது. செயல்?

- அ.ரவி

(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT