பொதுமக்களுக்காகவும் மன்னர்களுக் காகவும் நடத்தப்பட்டு வந்த தமிழ் நாடகக் கலையை வளர்ப்பதில் சங்க காலத்தில் பாணர்களும் விறலியர்களும் புகழ்பெற்று விளங்கினார்கள். பின்னர் பொதுவியல் மரபின் நீட்சியாகத் தமிழ்க் கூத்து மரபு உருவாக, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல அதிரடிச் சீர்திருத்தங் களைச் செய்து கூத்து மரபில் பலவற்றைக் கழித்துக்கட்டிச் செம்மை செய்தார் சங்கரதாஸ் சுவாமிகள். அதைச் சிறார்களுக்குத் திருத்தமான உரையாடல்களுடன் கூடிய இசை நாடகங்களாகப் பயிற்றுவித்து ‘பாய்ஸ் கம்பெனி’களுக்குத் தோற்றம் கொடுத்தார்.
இவ்வகை பாலர் நாடகக் குழுக்கள், கட்டற்று மேடையைப் பயன்படுத்திய மூத்த நாடகக் கலைஞர்களுக்குப் பெரும் சங்கடமாகவும் சவாலாகவும் மாறி வெற்றிபெற்றன. நாடகம் என்பதைக் கட்டுக்கோப்பாக நடத்திக் காட்டியதுடன் மிக முக்கியமாக நாடக மொழியில் தமிழின் ஆட்சியைத் தலைநிமிரச் செய்தார். மொழியின் கொச்சைகளைக் களைந்து நீக்கினார்.
பாய்ஸ் கம்பெனிகளில் நாடகம் பயின்று, வயதில் முதிர்ந்து கலையில் தேர்ச்சிபெற்ற கலைஞர்கள், தங்களுக்கென்று தனித்தனியாக நூற்றுக்கும் அதிமான புதிய நாடகக் கம்பெனிகளைத் தொடங்கினர். சங்கர தாஸின் சீர்திருத்தங்கள், பாலாமணி அம்மாள் போன்ற பெண்களையும் நாடகக் கலையை நோக்கி இழுத்தது. பின்னாளில் தமிழ் நாடகத் தந்தை எனப் பெயர் பெற்ற பம்மல் சம்பந்த முதலியாரும் சங்கரதாஸின் நாடகப் பிரதிகளால் பெரிதும் தாக்கமுற்றார்.
அவர், சென்னையில் தோற்று வித்த சுகுண விலாச சபையானது, பாடல்களை அரங்க மொழியிலிருந்து அப்புறப்படுத்திய பயின்முறை என்கிற சுயாதீன நாடக முறை, மேற் கத்தியத் தாக்கத்துடன் தமிழுக்கு அறிமுகமானது. எழுத்து, இயக்கம், நடிப்பு, பயிற்சியளித்தல் எனப் பல தளங்களில் இடையறாத அவரின் நாடகச் செயல்பாடுகள் தந்த தூண்டு தலால் தமிழகத்தில் பல பயின்முறை நாடகக் குழுக்கள் புதிதாகத் தோற்றம் கண்டன. இக்குழுக்களில் பங்கேற்ற பலரும் கல்வியறிவும் நாடக ஆர்வமும் மிகுந்த செல்வந்தர்களாக விளங்கினார்கள்.
பெருகிய பயின்முறைக் குழுக்கள்: பம்மலாரின் வெற்றியைக் கண்ட சென்னையைச் சேர்ந்த பலர், புதிய பயின்முறை நாடகக் குழுக்களைத் தொடங்கினர். அவற்றில் ரங்கசாமி நாயுடுவின் ஆலந்தூர் அரங்கவிலாஸ் கம்பெனி, நாராயண ஐயரின் ஆரிய கான சபா, சி.வெங்கடாசல முதலியாரின் ஆலந்தூர் ஒரிஜினல் கம்பெனி போன்றவை வரவேற்பைப் பெற்றன.
பயின்முறை நாடகக் குழுக்கள் முதல் 20 ஆண்டுகளைக் கடந்த போது தொழில்முறை நாடகக் குழுக்களாக வளர்ச்சி பெற்றன. சி.கன்னையா, ஜெகநாத ஐயர், சச்சிதானந்தம் பிள்ளை, பக்கிரிராஜா, சீனிவாச பிள்ளை, பழனியா பிள்ளை, சின்னையா பிள்ளை ஆகியோர் தொழில்முறை நாடகக் குழுக்களை லாபகரமாக நடத்துவதில் சிறந்து விளங்கி னார்கள். சுகுண விலாச சபையும் தொழில் முறை நாடகக் குழுவாக வளர்ச்சி கண்டது.
நடிப்பு ஆர்வம் இருந் ததே தவிர, எழுத்தில் புலமையற்ற பலரும் பயின்முறை நாடகத்தில் வெற்றிபெறும்போது நம்மால் ஏன் முடியாது என்று பல தமிழ்ப் புலவர்கள், நாடகத் துறைக்குள் அதிரடியாகக் களமிறங்கினர். அவர்களில் முத்துசாமிக் கவிராயர், புலவர் ஏகை சிவசண்முகம் பிள்ளை, கிருஷ்ணசாமி பாவலர், மதுரகவி பாஸ்கரதாஸ் ஆகியோரின் வருகை, இலக்கியச் செழுமையுடன் கூடிய எளிய உரையாடல் மொழியையும் புரட்சிகரமான பாடல்களையும் தமிழ் நாடகத்துக்கு வழங்கியது.
விடுதலை வேள்வியில் தமிழ் நாடகம்: இவர்களில், ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் ‘மதுரகவி பாஸ்கரதாஸ்’ என்று பாராட்டிப் பெயர் சூட்டப்பெற்ற வெள்ளைச்சாமி, காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தைக் களமாகக் கொண்ட நாடகங்களையும் எழுதி அரங்கேற்றி, நடித்தார்.
அவற்றில், விடுதலை வேட்கை கொண்ட புரட்சிப் பாடல்களை எழுதி, அனைவரும் பாடுவதற்கு ஏற்ற வகையில் எளிய வர்ண மெட்டுகளுடன் தன்னுடைய நாடகங்களில் இடம் பெறச் செய்தார். இப் பாடல்கள் நேரடியாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்ததால் தீயெனப் பற்றிப் பரவின. இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாத தாஸ், காதர் பாட்ஷா போன்ற சக நாடகக் கலைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாஸ்கரதாஸ் மட்டுமே 29 முறை கைது செய்யப்பட்டார். கிட்டப்பா, சுந்தராம்பாள் தொடங்கி பின்னாளில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வரை பாஸ்கரதாஸின் தேசப்பக்தி புரட்சிப் பாடல்களைப் பாடத் தயங்கவில்லை. பாஸ்கரதாஸ் பற்ற வைத்த நெருப்பு பல நாடகக் குழுக்களுக்கும் பரவியது.
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் எழுதிய ‘கதரின் வெற்றி’, ‘தேசியக்கொடி’, கவிஞர் எஸ்.டி. சுந்தரம் எழுதிய ‘கவியின் கனவு’, சாமிநாத சர்மா எழுதிய ‘பாணபுரத்து வீரன்’ (இந்த நாடகத்தை மதுரகவி பாஸ்கரதாஸும் நூற்றுக்கணக்கான முறை மேடையேற்றினார்) உள்ளிட்ட பல நாடகங்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. அந்த அளவுக்கு மக்கள் இந்த நாடகங்களை ஆதரித்தனர். இதனால் புராண நாடகங்களுக்குள்ளும் புராணத் திரைப்படங்களுக்குள்ளும் விடுதலைப் பாடல்கள் நுழைந்தன.
மகாகவி பாரதி, நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம், பூமி பாலக தாஸ், ராஜா சண்முக தாஸ், லட்சுமண தாஸ், இசக்கிமுத்து வாத்தியார், ரங்கராஜ் வாத்தியார், கோவை ஐயா முத்து, கவியோகி சுத்தானந்த பாரதியார், எஸ்.டி.சுந்தரம் உள்ளிட்ட பல பெரும் கவிகளின் விடுதலை, தேசப்பக்திப் பாடல்கள் புராண நாடகங்களுக்குள்ளும் திரைப்படங்களிலும் கதைப் போக்கில் பொருத்தப்பாட்டுடன் இணைக்கப்பட்டன.
விடுதலை, தேசபக்திப் பாடல் களைப் பாடி, நாடகங்களில் நடித்து விடுதலை கனல் மூட்டிய கலைஞர் களில், மதுரகவி பாஸ்கரதாஸ், விசுவநாத தாஸ், எம்.எம். சீனிவாசலு, கே.எஸ்.அனந்தநாராயணன், எம்.ஆர். கமல வேணி, கே.பி. ஜானகி, எம்.எஸ்.ராஜம், கே.பி. சுந்தராம்பாள், எஸ்.வி. வாசுதேவன், டிகே சண்முகம் சகோதரர்கள், எம்.எம். சிதம்பரநாதன், அப்துல் காதர், பி.எம்.கமலம், டி.ஆர்.கோமளம் எனத் தங்கள் கலை வாழ்க்கையைச் சுதந்திர வேள்விக்கு அர்ப்பணித்த கலைஞர்களின் பட்டியல் நீளமானது.
சிறையைவிடச் செயலே முக்கியம்! - தமிழ் நாடகம் சுதந்திரப் போராட் டத்தில் வீறுகொண்டு எழுந்த நேரத்தில் பம்மல் சம்பந்த முதலியார், அந்தக் கலைஞர்களுடன் தொடர்பில் இருந்தபோதும், தேசபக்தி நாடகம், என்கிற துணிபுக்குள் மறந்தும் கால் வைக்கவில்லை. மாறாக, பத்திரிகைகளின் ஆதரவைப் பெறவும் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளின் ஆதரவைப் பெறவும் தமிழ்ப்பாங்குடன் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அவர் தமிழில் அரங்கேற்றினார்.
இதனால், அவருக்கு பிரிட்டிஷ் அரசு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கி அங்கீகரித்தது. சிறையைவிட செயலே முக்கியம் என்பதில் தெளிவாக இருந்த பம்மல் சம்பந்த முதலியார், தனது புகழ்பெற்ற நாடகங்கள் திரைப்படமானபோது அவற்றின் உருவாக்கத்தில் பங்குபெற்றார்.
வளர்ந்துகொண்டிருந்த பேசும்படக் கலைக்குள் மூழ்கி அதன் நெளிவு சுழிவுகளைக் கற்றார். ‘காலவா ரிஷி’ (1932), ‘சதி சுலோச்சனா’ (1934 - கதை, வசனம், இயக்கம், நடிப்பு), ‘மனோகரா’ (1936 - கதை, வசனம், இயக்கம், நடிப்பு), ‘ரத்னாவளி’ (1935), ‘யயாதி’ (1938), ‘ராமலிங்க சுவாமிகள்’ (1939), ‘சந்திரஹரி’ (1941), ‘ஊர்வசி சாகசம்’ (1940), ‘தாசிப் பெண்’ (1943), ‘சபாபதி’ (1941), ‘வேதாள உலகம்’ (1948) ஆகிய படங்கள் பம்மலாரின் நாடகங்களே! பேசும்பட உலகில் தான் பெற்ற பல ஆண்டு அனுபவம் அனைத்தும் உடனடியாகவும் அடுத்து வரும் தலைமுறைக்கும் பயனளிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் ‘தமிழ் பேசும்படக் காட்சி’ என்கிற 90 பக்க வழிகாட்டி நூலினை எழுதி 1937இல் வெளியிட்டார். இதில், ‘சினேரியோ’ என்கிற திரைக்கதை எழுதும் கலையின் அடிப்படைகளை மிகத் தெளிவாக அவர் விளக்கியிருக்கிறார்.
தமிழ் சினிமா பேசத் தொடங்கி 6 ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில் அவர் சிரத்தையுடனும் எளிய மொழியிலும் எழுதி வெளியிட்ட இந்நூலில், ஒரு படத்தை உருவாக்கும் முன் திரைக்கதை எழுதி முடிக்கப்பட வேண்டும், அதன்பின் நடிகர்கள் தேர்வு, ஒத்திகை, இசைக்குழு, அரங்கப் படப்பிடிப்பு, வெளிப்புறப் படப்பிடிப்பு, படத்தொகுப்பு என ஒரு படம் உருவாகும் அத்தனை நிலைகளையும் கற்றுக்கொடுக்கும் வழிகாட்டியாக இந்த நூலை அவர் அளித்தது, தமிழர்கள் திரைப்படக் கலையில் திறமுடன் விளங்க வழிகாட்டிய ஒன்று.
பம்மலாரின் சுகுண விலாச சபையில் சிறு சிறு வேடங்களில் நடித்த ஒருவர், தமிழ் நாடகத்திலும் பின்னர் தமிழ் சினிமாவிலும் தாக்கம் செலுத்தினார். புதுமைகளுக்காகவே புகழ்பெற்ற அவர்தான் கந்தசாமி முதலியார். அவரது குறுக்கீடு தமிழ் சினிமாவுக்கு எப்படிப்பட்ட விழிப்பைக் கொடுத்தது?
(விழிகள் விரியும்)
படங்கள் உதவி: ஞானம்
- jesudoss.c@hindutamil.co.in