தன்னிடம் அடைக்கலம் தேடி வருகிற எல்லாக் காதலர்களையும் சேர்த்து வைக்கும் ஒருவன், தன்னுடைய காதலில் தோற்று நிற்பதுதான் 2001இல் வெளிவந்த ‘ஷாஜகான்’ படத்தின் கதை. புத்தாயிரத்தின் புத்தம் புதுக் காதல் கதையாக வெளியாகி, 125 நாள் ஓடிய இப்படத்தில், உணர்வு பொங்கும் காதல் காட்சிகளுக்கு இணையாகச் சண்டைக் காட்சிகளும் பேசப்பட்டன. ‘ஆக்ஷனில் விஜயின் அர்ப்பணிப்பு மிகுந்த அடுத்த கட்டப் பாய்ச்சல்’ என்று விமர்சகர்கள் சிலிர்த்தனர். அதுவரை டீன் இளைஞன் என்கிற தோற்றத்திலிருந்து சற்று முதிர்ந்த 30 வயதுக்குரிய முதிர்ச்சியான விஜயின் அழகில் சொக்கிய ரசிகைகள் அவரை மனதில் பச்சை குத்திக்கொள்ள வைத்தது ‘ஷாஜகான்’. இப்படத்தை எழுதி, இயக்கிய அறிமுக இயக்குநர் அ.ரவி, இயக்கினால் விஜயை மட்டுமே வைத்து எனது முதல் படத்தை இயக்குவேன்’ என்கிற மன உறுதியுடன் பிடிவாதமாக மாரத்தான் ஓடி அதைச் சாதித்தார். ‘ஷாஜகான்’ படம் உருவான நாள்களை தனது மனப் பதிவாக ப்ரியமுடன் பகிரத் தொடங்குகிறார்:
“நான் உதவி இயக்குநராக சினிமாவில் 92இல் நுழைந்தபோதுதான் விஜய் அறிமுக மான ‘நாளைய தீர்ப்பு’ படம் ரிலீஸ் ஆகிறது. உண்மையிலேயே அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. தமிழ், தெலுங்குப் படங்களில் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது விஜய் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து விட்டிருந்தார். எங்கே பார்த்தாலும் யாரைக் கேட்டாலும் சினிமா என்றால் ‘விஜய்..விஜய்..’ என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கணத்தில் முடிவு செய்தேன; எனது முதல் படத்தில் விஜய்தான் ஹீரோ என்று.
ஆனால், சினிமாவில் என்னை யாருக்குமே தெரியாது. அதுவே விஜயை இயக்கிவிட்டால் படம் வெளியான ஒரே இரவில் நான் யார் என்பது தெரிந்துவிடும் என்று நம்பினேன். அப்படித்தான் விஜய்க்காக ‘ஷாஜகான்’ படத்தின் கதையை எழுதினேன். திரைக்கதை தயாரானதும் விஜயை நெருங்கிக் கதை சொல்லப் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டேன். அவர் அருகில்கூட நெருங்க முடியவில்லை. வேறு வழியே இல்லை என்கிற நிலையில், விஜய் அப்போது நடித்துக் கொண்டிருந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படப்பிடிப்புத் தளத்துக்குப் போய், அப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஒளிப்பதிவு உதவியாளரின் உதவியுடன் விஜய் காரவேனை விட்டுக் கீழே இறங்கும் போது பார்த்துப் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். அப்படியும் அவரை நெருங்க முடியவில்லை.
அப்போது விஜய் எந்த அளவுக்குப் பிரபலமாக இருந்தாரோ, அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சாரும் பிரபலமாக இருந்தார். யார், எவர் என்றெல்லாம் பார்க்காமல், நல்ல கதையுடன் உதவி இயக்குநராகக் கொஞ்சம் அனுபவத்தை சேர்த்துக்கொண்டு தன்னைத் தேடி வந்து கதை சொல்லி அசத்தும் இளைஞர்களை இயக்குநராக அறிமுகப்படுத்தினார். இதனால் வரிசையாக வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய இந்தத் துணிச்ச லான செயல்பாட்டால், புதிய புதிய கதைகள், புதிய புதிய திறமைகள் எனத் தமிழ் சினிமாவே பெரும் கொண்டாட்டமாக மாறியிருந்தது. 100 நாள் படங்களும் வெள்ளி விழா படங்களும் வரிசை கட்டி வந்து கொண்டிருந்தன. தொழிலில் நேர்மையையும் கடைப்பிடித்து வந்தார். அதன் காரணமாக விஜய் ஆர்.பி.சௌத்ரி சாருக்குத் தொடர்ந்து கால்ஷீட் கொடுத்து வந்தார். தமிழை விடத் தெலுங்கு சினிமா மிகப்பெரிய மார்க்கெட். தமிழில் 3 படம் தயாரித்தால் தெலுங்கில் ஒரு படம் தயாரிப்பார். இதனால் சௌத்ரி சார் சென்னையில் ஒரு வாரம், ஹைதராபாத்தில் ஒரு வாரம் எனப் பறந்துகொண்டே இருப்பார்.
அவ்வளவு பிஸியான தயாரிப்பாளரைச் சந்தித்துக் கதை சொல்லி ஓகே செய்து விட்டால், விஜயை வைத்து முதல் படத்தை இயக்கிவிடலாம் என்று உறுதியாக நம்பினேன். ஆனால், ஒரு நாள் சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தைப் பார்த்து வருவோம் என்று சென்றபோது, அங்கே ஒரே திருவிழாக் கூட்டம். படப்பிடிப்பில் இருக்கும் பட வேலைகளுக்காக வந்துபோகும் புரொடக்ஷன் ஆள்கள் என்று நினைத்தேன். ஆனால் எல்லாரும் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள். சிலர் 40 வயதிலும் இருந்தார்கள். ஏதோ பொறி தட்ட, எதற்கும் இருக்கட்டும் என்று சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போதுதான் தெரிந்தது.
அன்று அங்கே நான் பார்த்தவர்கள் அனைவருமே சௌத்ரி சாரிடம் கதை சொல்ல வாய்ப்புக் கேட்டு தவம் கிடப்பவர்கள் என்பது. அது 1998 -99 காலக்கட்டம். சௌத்ரி சார் காலையில் அவரது அலுவல கத்துக்கு 9 மணிக்கு நுழைந்தால், நான் அவருக்கு முன் அங்கே போய் நின்று ‘குட்மார்னிங்’ சொல் வேன். அவர் நாளை காலை ஹைதராபாத் கிளம்புகிறார் என்றால், நான் முதல் நாள் மாலையே ரயிலேறிப்போய் இறங்கி, ஹைதராபாத் அலுவலகத்தில் அவர் உள்ளே நுழையும்போது ‘குட்மார்னிங்’ சொல்வேன். இப்படி ஒரு வருடம் தினசரி அவருக்கு ‘சின்சியர் அட்டென்டன்ஸ்’ போட்டுக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ‘யாருய்யா இவன்? இப்படி வெறியா துரத்துறான்’ என்று கேட்டு என்னை நினைவில் வைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்.
இந்தச் சமயத்தில் ஒரு கனவுபோல் சமுத்துரு என்கிற என்னுடைய ஹைதராபாத் நண்பர் சௌத்ரி சாருடன் நல்ல நட்பில் இருப்பது நினைவுக்கு வந்தது. அந்தக் கணத்தில் மனம் ஜிலீர் என்று உணர்ந்தது. உடனே ஹைதராபாத்துக்குப் போய் அவரிடம், ‘எப்படியாவது சௌத்ரி சாரிடம் என்னை அறிமுகம் செய்து வையுங்கள்’ என்றேன். அவரோ ‘நான் அறிமுகப்படுத்தினால் என் பெயர் கெட்டுவிடக் கூடாது; முதலில் கதையை என்னிடம் சொல்; அறிமுகப்படுத்துவதா, வேண்டாமா என்று நான் முடிவு செய்கிறேன்’ என்றார். ஒருநொடி கூடத் தயங்காமல் அவருக்குக் கதையைச் சொன்னேன். ‘அட்டகாசம்.. உறுதியா உன்னை அறிமுகப் படுத்துகிறேன்’ என்று ஹைதராபாத் வந்திருந்த சௌத்ரி சாரிடம் அடுத்த நாளே என்னை அறிமுகப்படுத்தினார். ஆனால், சௌத்ரி சாரோ.. ‘யோவ்… வாய்யா பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார். கதை கேட்கவில்லை.
ஆனால், நான் விடுகிற மாதிரி இல்லை. அவரை சென்னையிலும் ஹைதராபாத்திலும் விடாமல் தொடர்ந்துகொண்டிருந்தேன். இவன் நம்மை ஒருபோதும் விடமாட்டான் என்று நினைத்தாரோ என்னவோ… ‘இன்னைக்கு உன்னோட கதையக் கேட்டுர்றேன்’ என்று உட்கார்ந்தார். அவருடைய ஹைதராபாத் அலுவலகத்தில் கதை சொன்னேன். கதையைக் கேட்டு முடித்தவர்; ‘செம்மையா இருக்குய்யா.. சரி யாரு ஹீரோ..?’ என்று கேட்டார். நான் அரை நொடி கூட யோசிக்காமல் ‘விஜய்தான் சார்’ என்றேன். அவ்வளவுதான்.. ‘யோவ்.. விஜய்கிட்ட ஏதுய்யா கால்ஷீட்.. அவர் அடுத்த மூணு வருஷம் பிஸி. அவரை நான் டிஸ்டர்ப் பண்றதா இல்ல; நான் சொல்ற ஹீரோக்களுக்குப் போய் கதை சொல்லு’ என்றவர், கொஞ்சம் யோசித்துவிட்டு.. ‘நீ சொல்றது சரிதான்யா.. கிளைமாக்ஸ்ல முதுகுல வாங்குன கத்திக்குத்தோட ஹீரோயினையும் லவ்வரையும் ரயில்ல தப்பிக்க வச்சுட்டு ஹீரோ அழறான் பார்த்தியா..! அந்த சீன் விஜயோட அக்மார்க் பிராண்ட்யா… சரி.. நீ நாளைக்கு காலையில சென்னைக்கு வந்துடு.. விஜயை ட்ரை பண்ணுவோம்’ என்று சொல்லிவிட்டார். நாள்கள் ஓடின.
ஒரு நாள் எஸ்.ஏ.சி.சாருக்கு போன் போட்ட சௌத்ரி சார்.. ‘ஒரு புதுப் பையன். நல்ல காதல் கதை. கேட்டுப் பார்க்கிறீங்களா?’ என்றார். எதிர்முனையில் ‘ஓ.. லவ் ஸ்கிரிப்டா! உடனே அவரை என் வீட்டுக்கு வரச்சொல்லுங்க..’ என்று சொல்ல.. ‘யோவ் உனக்கு நேரம் நல்லா இருக்குய்யா.. சாலிகிராமத்துக்கு ஓடு..!
அடுத்த அரை மணி நேரத்துக்குள் அங்க இரு!’ என்று துரத்தினார். சென்னை தி.நகரிலிருந்து சாலிகிராமம் விஜய் வீட்டுக்கு 20 நிமிடத்தில் பைக்கில் பறந்தேன். வேர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்ததும் எஸ்.ஏ.சி.சாரின் அசிஸ் டென்ட், ‘சௌத்ரி சார் அனுப்பின அசிஸ்டென்ட் டைரக்டரா?’ என்று கேட்டார். வார்த்தை வராமல் மூச்சு வாங்க தலையாட்டினேன். ‘உள்ள போங்க.. சார் அனுப்பச் சொன்னார்’ என்றார்.
ஹாலில் உட்கார்ந்திருந்தார் எஸ்.ஏ.சி. ‘தம்பி உட்காருப்பா.. முதல்ல தண்ணி குடிச்சுக்கோ.. டீ வரும்.. குடிச்சுட்டு ஒரு மணி நேரத்துல கதையச் சொல்லு. பட்.. ஒரு கண்டிஷன். கதை பிடிச்சாதான் ஃபர்தரா உங்கிட்ட பேசுவேன்’ என்று கறாராகச் சொல்லிவிட்டு கதையைக் கேட்கத் தொடங்கினார். விஜய் வீட்டின் தேநீர் சுவையும் இதமான சூடும் ஒருவித உற்சாகத்தைக் கொடுத்திருந்தது. கதையைச் சொல்லி முடித்ததும் உற்சாகமான எஸ்.ஏ.சி. சில திருத்தங்களைச் சொன்னார். எஸ்.ஏ.சிக்குக் கதை பிடித்த விஷயத்தை சௌத்ரி சாருக்குச் சொல்லிவிட்டுக் காத்திருந்தபோது, அடுத்து வந்த மூன்றாம் நாள் அதிகாலையில் விஜய் சாருக்குக் கதை சொன்னேன். கதையைக் கேட்ட போது அவர் உண்மையில் மூச்சு விடுகிறாரா என்று சந்தேகம். அவ்வளவு ‘சைலண்ட்’ ஆகக் கதையைக் கேட்டு முடித்தவர்; கதை பிடித்ததா, இல்லையா என்று எதுவும் சொல்லாமல் அமைதியாக எழுந்து உள்ளே போய் தன் அறையின் கதவைச் சாத்திக்கொண்டார். எனக்கு இதயம் முரசுபோல இடிக்கத் தொடங்கியது. எஸ்.ஏ.சி.சாரின் உதவியாளர் வந்து ‘நீங்க போகலாம்’ என்றார். என் கண்கள் கலங்கி உடையத் தயாரானபோது அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு வெளியே வந்து பைக்கை உதைத்தேன்.
- அ.ரவி
(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்