இந்து டாக்கீஸ்

ஒரு முந்திரிக்காட்டு வீரனின் கதை! | வ.கௌதமன் நேர்காணல்

திரை பாரதி

முரளி, சிம்ரன் நடிப்பில் ‘கனவே கலையாதே’ படத்தை இயக்கித் திரையுலகில் நுழைந்தவர் வ.கௌதமன். வீரப்பன் வாழ்க்கையைப் பேசிய ‘சந்தனக் காடு’ என்கிற தொலைக்காட்சி நெடுந்தொடர் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது.

பின்னர், எழுத்தாளர் நீல.பத்ம நாபனின் ‘தலைமுறைகள்’ நாவலுக் குத் திரைக்கதை எழுதி, இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்திருந்த ‘மகிழ்ச்சி’ 2010இல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில் ‘தமிழ்ப் பேரரசுக் கட்சி’யைத் தொடங்கிய இவர், ஜல்லிக்கட்டு மீதான தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், நெய்வேலி நில ஆர்ஜிதம், தமிழ் மீனவர் மீதான இலங்கையின் தாக்குதல் ஆகியவற்றை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தியவர்.

ஒரு பக்கம் கள அரசியல். மறுபக்கம் திரை அரசியல் என இயங்கும் வ.கௌதமன், தற்போது உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் ‘படையாண்ட மாவீரா’ படத்தை எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்கு நடுவில் இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த நேர்காணலின் ஒரு பகுதி:

திரையுலகிலிருந்து அரசியல்களத்துக்கு உங்களை அழைத்துக் கொண்டு வந்தது எது? - சினிமாவிலிருந்து நான் அரசிய லுக்குப் போனதாக எல்லாரும் நினைக் கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. அரசியல்தான் என்னை சினிமாவை நோக்கி அனுப்பியது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஆக்கனூர்பாளையம் என்கிற கிராமம்தான் எனது சொந்த ஊர். என் அப்பா வடமலை தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கப் போராளி.

1971இல் பிறந்து 8 மாதக் கைக் குழந்தையாக இருந்த என்னை, கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்துக்குத் தூக்கிச் சென்று பெரியார் முன் நீட்ட, அவர்தான் எனக்கு கௌதமன் எனப் பெயர் சூட்டியிருக்கிறார். பின்னர், பொதுவுடைமை இயக்கம் முன்னெடுத்த தொழிலாளர்களுக்கான உரிமைப் போராட்டங் களால் ஈர்க்கப்பட்டதால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யில் சேர்ந்து, முழுநேரக் கட்சி ஊழியர் ஆகி விட்டார். தோழர் தமிழரசனுக்கும் புலவர் கலியபெருமாளுக் கும் உயிர் நண்பராக விளங்கியவர்.

வீட்டைப் பார்த்துக் கொண்டு, நிலத்தில் விவசாயம் செய்து எங்களைக் கரையேற்றியவர் அம்மா.ஆனால், அப்பா ஒரு தீவிரத் தோழராக மாறி, தனது நிலத்தின் ஒரு பகுதியை ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாகக் கொடுத்துவிட்டார். தோழர் தமிழரசனுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டி காவல் துறை வீடு புகுந்து அப்பாவை அடித்துத் துவைத்து, அவருடன் என்னையும் கைது செய்து இழுத்துக் கொண்டுபோய் லாக்கப்பில் அடைத்த போது எனக்கு 13 வயது.

அதற்கு முன் எனக்கு 9 வயதாக இருந்தபோது, அப்பா அழைத்துப்போய் காட்டிய ‘சிவப்பு மல்லி’தான் நான் பார்த்த முதல் திரைப்படம். விஜயகாந்தைப் போல் சினிமாவில் ஒரு நடிகனாக வந்து அநீதிகளை ஒழிக்க வேண்டும் என்று அந்த வயதில் சினிமா மீது எனக்கு ஆர்வத்தை உருவாக்கியது அரசியல்தான். அதுதான் தற்போது போராட்டக் கள அரசியலாகவும் வெளிப்பட்டு நிற்கிறது.

கட்சி, திரைப்பட இயக்கம் என இரண்டு தளங்களை ஒரே நேரத்தில் எப்படிக் கையாள்கிறீர்கள்? - கலையைப் போராட்ட ஆயுத மாகக் கையிலேந்துவதும் நமது பண்பாடுதான். அதனால் அரசியல், திரை இரண்டையும் ஒருசேரக் கையாள்வதில் எனக்கு எந்தச் சுமையும் இல்லை. நோக்கம் சரியாக இருந்தால் இலக்கை நோக்கிய பயணம் சிதறாமல் இருக்கும். மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையும் அவர்கள் வாழும் மண்ணின் உரிமையும் பறிபோகும் போது, அதற்கு எதிராகப் போராட்டக் களத்தில் நின்று உயிரை விட்டாலும், உரிமையை மீட்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடும் செயல்பாடும்.

திரையில் உருவாக்கும் படைப்புகளில் நம் பண்பாடு, வாழ்க்கையைச் சித்தரிப்பதாகவும் நமக்காக வாழ்ந்த மாவீரர்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டு வதாகவும் இருக்க வேண்டும் என்றே எனது படங்களின் உள்ளடக் கங்களைத் தேர்வு செய்து இயங்கி வருகிறேன்.

உங்களது ‘மகிழ்ச்சி’ உணர்வு களின் தொகுப்பாக, மென்னுணர்வுப் படமாக வெளிவந்தது. ‘படையாண்ட மாவீரா’ அதிலிருந்து விலகி கமர்ஷியல் ஆக்‌ஷன் சினிமாவாக உருவாகி யிருப்பதை முன்னோட்டக் காட்சிகள் சொல்கின்றனவே? - பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கையோடு கல்லூரியில் சேராமல் சினிமாவில் சேர வேண்டும் என்று நான் சென்னைக்குக் கிளம்பிய போது, அப்பா என்னை நிறுத்திச் சொன்னார்: ‘நீ சினிமாவில உறுதியா வெல்லுவ. அப்போ நீ என்னோட உயிர் நண்பர் தோழர் தமிழரசனோட வாழ்க்கையைப் படமா எடுக்கணும்.’ அவருக்குக் கொடுத்த உறுதிமொழியை எப்படி யாவது நிறைவேற்ற வேண்டும் என்றுதான் ‘ஒரு இனமும் வனமும் சிதைந்த வரலாறு’ என்று 176 எபிசோட்களில் ‘சந்தனக் காடு’ தொடரை எடுத்தேன்.

அந்தச் ‘சந்தனக் காட்’டின்உள்ளே ‘வன்னிக் காட்’டையும் வைத்தேன். அந்த வரிசையில்தான் இப்போது ‘முந்திரிக் காட்’டில் வாழ்ந்து புரட்சி செய்த ஒரு மாவீரனின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கி யிருக்கிறேன். அதில் சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் சேர்த்து முழுநீள ஆக்‌ஷன் கமர்ஷியல் பொழுது போக்குப் படமாக உருவாக்கியிருக் கிறேன். இதில் நானே முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன்.

என்னுடைய பதின்ம வயது கதாபாத்திரத்தில் என் மகன் தமிழ் கௌதமனை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அவன் சினிமாவுக்காக எல்லா விதத்திலும் தன்னைத் தயாரித்துக்கொண்டவன். தானாகவே முயன்று மிக முக்கியமான படங்களில் நல் வாய்ப்புகளைப் பெற்று முன்னேறி வருகிறான். அதில் ஒன்று தனுஷின் எழுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இட்லிக் கடை’.

முதன்மைக் கதாபாத்திரம் பற்றியும் படக்குழு பற்றியும் கூறுங்கள்... பெண் இனத்தின் உரிமைக்காகவும் மண்ணைக் கவர்ந்து செல்ல வரும் கார்ப்பரேட்களிடமிருந்து அதைக்காப்பாற்றும் போராட்டக் களத்திலும் இறுதிவரை களமாடி மாண்ட ஒரு முந்திரிக்காட்டு மாவீரனின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைத்தான் இதில் நான் அப்படியே பதிந்திருக்கிறேன். தன்னை விலைபேசி விட்டால், அவன் வாழும் மண் ணையும் விலை பேசிவிடலாம் என்று வந்தவர்களிடம், விலை போகாத அந்த மாவீரனின் வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்கு நினை வூட்டத் தவறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் படம்.

இந்தப்படத்தில் ‘முந்திரிக் காடு’ களமென் றால், அடுத்த எனது படைப்பின் களம் வன்னிக்காடு. இந்தப் படத்தை நிர்மல் சரவணராஜ், சிங்காரம் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தயாரிக்க, குறளமுதன், உமாதேவன், பாஸ்கர், பரமேஸ்வரி, ஜனகன், அறிவுடைநம்பி ஆகிய ஆறுபேர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் கவிப்பேரரசு வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் புரட்சி பொங்கப் படைத்து அளித்திருக்கிறார்.

முக்கியக் கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கிறது. தெலுங்குப் படவுலகிலிருந்து பூஜிதாவை கதா நாயகியாக அறிமுகப்படுத்துகிறேன்.

SCROLL FOR NEXT