இந்து டாக்கீஸ்

என் நம்பிக்கை வீண் போகாது! | ப்ரியமுடன் விஜய் - 19

Guest Author

எந்தத் துறையாக இருந்தாலும் ‘வெற்றி’ என்பதுதான் அங்கீகாரத்துக்கான நுழைவாயில். சினிமாவிலோ ‘வெற்றி’ மட்டும்தான் கணக்கில் கொள்ளப்படும். தோல்விகள் கொடுத்தால், ஏற்கெனவே பெற்றிருக்கும் வெற்றிகளை அதிலிருந்து கழித்து விடுவார்கள். ஓர் இயக்குநராக எனது முதல் படம் ‘அவள் ஒரு பச்சை குழந்தை' எனக்குத் தோல்வி. அந்தத் தோல்வி கொடுத்த பாடம்தான் இரண்டாவது படத்தை வெற்றியாகக் கொடுத்துவிடவேண்டும் என்கிற தீவிரத்தை ஏற்படுத்தியது.

விஜயின் அறிமுகப்படமும் அவ்வளவாகப் போகவில்லை. அதில் அவனுக்கு வலி இருந்தாலும் தனக்குள் இருந்த நடிகனை அப்பாவுக்குக் காட்டிவிட்டோம் என்கிற தன்னம்பிக்கை அவனிடம் ஒளிர்வதைக் கண்டேன். அடுத்து ‘செந்தூரப் பாண்டி’ வெற்றிப் படம் என்றாலும், அதை முழுமையான விஜய் படம் என்று சொல்ல முடியாது. அந்த வெற்றியில் விஜயகாந்துக்கு அதிகப் பங்கிருக்கிறது. இதற்கிடையில், ‘சந்திரசேகர் கையில் நிறையப் பணம் இருக்கிறதுபோல; பையனை வைத்து ரிஸ்க் எடுக்கிறார்’ என்று விமர்சித்தவர்கள் எல்லாம், ‘ரசிகன்’ வெள்ளி விழா படமானதும் விஜயை அங்கீகரித்தார்கள். அப்படத்தில் பெற்ற வெற்றியை அடுத்தடுத்த படங்களில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறை விஜயிடம் தீவிரம் கொண்டது.

ஒப்புக்கொண்ட கதைக்கு நேர்மையாக இருக்க வேண்டும்; அதற்காக ஹோம் ஒர்க் செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரை திட்டமிடல், படப்பிடிப்பு ஆகியவற்றில் இயக்கு நருக்கு உதவ வேண்டும். அறிமுக இயக்குநர் என்றால் தன்னிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பதை அவர்களுக்கு முதல் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே உணர்த்திவிட வேண்டும், பாடல் காட்சி படப்பிடிப்புக்கு முதல் நாள் நடன ஒத்திகையில் ஈடுபட வேண்டும் என்பதில் தொடங்கி பலவற்றில் பொறுப்பாக இருப்பார். அந்தப் பொறுப்புதான் அவரிடம் இப்போதுவரை தொழில் பக்தியாக வளர்ந்து நிற்கிறது. அந்தத் தொழில் பக்தியே அவரை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் விஜய் நடித்து முடித்து, டப்பிங் பேசிக் கொடுத்தபிறகு அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் என்னைச் சந்தித்து, ‘எவ்வளவு அற்புதமான பிள்ளையைப் பெற்று வைத்திருக்கிறீர்கள் சார்! சினிமாவில் இவ்வளவு ‘டிசிப்பிளிண்டு ஆர்டிஸ்ட்’ ஆக இருக்கிறதுதான் பெரிய டாஸ்க்! விஜயோட இந்தக் குணம் உங்ககிட்டேயிருந்து வந்திருக்கிறது’ என்று வியந்து சொல்வார்கள். அதைக் கேட்கும் போதெல்லாம் உள்ளம் பூரித்து விடுவேன்.

இந்த ‘டிசிப்பிளிண்டு ஆர்ட்டிஸ்ட்’ என்பதில் தீயப் பழக்கங்களிலிருந்து விலகி இருப்பது, படப்பிடிப்புக்குச் சொல்லப்பட்ட நேரத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாக ஸ்பாட்டில் இருப்பது ஆகிய இரண்டும் முக்கியமானது. இந்த நேரம் தவறாமையில் நடிகர் திலகம் சிவாஜி அவர்களிடம் ஒருமுறைகூடத் தோற்றுவிடக் கூடாது என்பதில் ‘ஒன்ஸ்மோர்’ படப்பிடிப்பின்போது நானும் விஜயும் மிகக் கவனமாக இருந்தோம். ஆனால், ஒரே ஒரு நாள் என்னையும் விஜயையும் அந்தப் பெருமகன் தோற்கடித்துவிட்டார்.

‘வசந்த மாளிகை’ உள்பட நடிகர் திலகத்தின் 7 படங்களில் உதவி இயக்குநராகப் பணி யாற்றியவன் நான். நான் நாடகத்திலிருந்து வந்தவன் என்பதால், அந்த நாள்களில் என் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். அவரை நான் இயக்க வேண்டும் என்பது எனது ஆசை களில் ஒன்று. ஆனால் அப்போது அது நிறைவேறவில்லை. இப்போது விஜய் படத்தில் எப்படியாவது அவரை கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்றேன். அதற்கு சி.வி.ராஜேந்திரன் உதவினார்.

‘ஒன்ஸ்மோ’ருக்காக, எல்.வி.பிரசாத்தின் ‘இருவர் உள்ளம்’ படத்தின் தாக்கத்தில் ஒருகதையைத் தயார் செய்துகொண்டு போய் நடிகர் திலகத்திடம் சொன்னேன். ‘ஒரு முடிவோடதான் வந்திருக்க.. கதையக் கேட்கும் போதே தெரியுது. நல்லா பண்ணியிருக்க.. நான் நடிக்கிறேன்.. நல்ல கதை, நல்ல கேரக்டர்ங் கிறதுக்காக இல்ல.. உனக்காக நடிக்கிறேன் சேகர்.. நம்ம நீண்ட கால உறவுக்காக’ என்று சொன்னார். இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். அந்தப் படத்தில் அவரை ஜீன்ஸ் டீசர்ட் போட வைத்தேன்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு கீழ்ப்பாக் கத்தில் ஒரு வீட்டில் நடந்தது. அவருக்கு 7 மணிக்கு கால்ஷீட் சொன்னால் 6 மணிக்கே ஸ்பாட்டில் இருப்பார் என்று தெரியும். அதனால், 4 மணிக்கு நல்ல தூக்கத்தில் இருக்கும் விஜயை எழுப்பி, ரெடியாக்கி, 5.30 மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் இருப்போம். தாமதம் தவிர்க்க ஒரே காரில் போய்விடுவோம். நாங்கள் போய்ச் சேர்ந்த அரை மணி நேரத்தில் மிகத் துல்லியமாக ஸ்பாட்டில் வந்து இறங்கி கைக்கடிகாரத்தைப் பார்ப்பார் சிவாஜி. மாறாக ஒரு நாள் 7 மணிகால்ஷீட்டுக்கு 5.30 மணிக்கே வந்து வீட்டின்காரிடாரில் நாற்காலியில் கம்பீரமாக உட்கார்ந் திருக்கிறார். அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஷாக்! நாங்கள் அந்த வீட்டின் மற்றொரு வாசல் வழியாக உள்ளே நுழைந்து ஓசை படாமல் உள்ளே போய் அவர் முன் நின்று ‘அண்ணே குட்மார்னிங்’ என்றேன். ‘பின் பக்கமா வந்தா.. எனக்குக் கண்ணு தெரியாதுன்னு நினைப்போ?’ என்றாரே பார்க்கலாம். அதுதான் நடிகர் திலகம்!

நேரம் தவறியமைக்கு ‘ஒன்ஸ்மோர்’ படப்பிடிப்பில் ஒரு சம்பவம். சிவாஜி உள்பட எல்லாரையும் வைத்து அன்றைய காட்சியை எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். சிம்ரனைத் தவிர எல்லாரும் வந்துவிட்டார்கள். நடிகர் திலகம் காலை 7 மணிக்கே வந்துவிட்டார். 8 மணி கால்ஷீட்டுக்கு 9.50க்கு வந்து சேர்ந்தார் சிம்ரன். தமிழ் சினிமாவின் தலைமகன் மேக்கப் போட்டு சும்மா உட்கார்ந்திருக்கிறாரே என்று எனக்கு டென்ஷன் ஏறிக்கொண்டே வந்தது. எனது பதற்றத்தைப் பெரியவர் கவனித்துக்கொண்டே இருந்தார். சிம்ரன் உள்ளே நுழைந்ததுமே சிவாஜி சார் ‘எந்த ஊரும்மா நீ?’ என்று சிம்மக் குரலில் ஆங்கிலத்தில் கேட்டார். ‘லேட்டாக வருகிறாய்’ என்கிற கண்டிப்பான அவரின் தொனி புரிந்துவிட்டதால் உடனே கோபித்துக்கொண்டார் சிம்ரன். சிவாஜி யாரென்று தெரியாமல் இந்தப் பெண் இப்படி ரியாக்ட் செய்துவிட்டாரே என்று எனக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. ‘அவரை யாரென்று நினைத்தாய்..? பாலிவுட்டின் ராஜ்கபூரும் திலீப் குமாரும் சிவாஜி சாரை ‘அண்ணா..’ என்று அழைப்பார்கள் என்பது உனக்குத் தெரியுமா? லதா மங்கேஷ்கர் அவரைத் தன் சொந்த அண்ணனாகவே கொண்டாடி வருகிறவர் என்பதாவது உனக்குத் தெரியுமா? எங்களுக்கு அவர்தான் தமிழ் சினிமா.

இது எதுவும் தெரியாமல் நீயெல்லாம் எதற்கு சினிமாவுக்கு நடிக்க வந்தாய்?’ நீ உடனே இங்கிருந்து கிளம்பு. பேக்கப்..!’ என்று கத்திவிட்டேன். எனது கோபத்தை கவனித்துக்கொண்டிருந்த பெரியவர் என்னை அழைத்தார். ‘சேகர்.. எதுக்குப்பா கோபிக்கிறே? அது வடநாட்டுப் பெண்.. என்னைப் பத்தி தெரியாதது அந்தப் பெண்ணோட தப்பா?.. இப்போ என்ன சீன் எடுக்கணுமோ அதுல கவனத்தை வை..’ என்றார். மதிய இடைவேளையில் சிவாஜி கணேசன் பற்றி எனது அசோசியேட்டிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட சிம்ரன் ஆடிப்போய் விட்டார். எவ்வளவு பெரிய லெஜண்டிடம் நாம் முகத்தைக் காட்டிவிட்டோம் என்று அழுதுவிட்டார். பிற்பகல் படப்பிடிப்பு தொடங்கியபோது நடிகர் திலகத்தின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தவர், ‘I am acting in this film along with you is the gift of my lifetime Sir’ என்று சொல்லி மன்னிப்புக் கேட்க.. ‘ஆல் த பெஸ்ட் மை சைல்ட்..’ என்று சிம்ரன் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார். அந்த சிம்ரன்தான் 15 வருடம் தமிழ் சினிமாவின் ட்ரீம் கேர்ள்.

‘ஒன்ஸ்மோ’ரில் விஜய் கற்றுக்கொண்டது நிறைய..! எப்படி அமைதியாக இருப்பது என்பதில் தொடங்கி இப்போது அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுக்கொள்கிறேன். சினிமா விலும் குடும்ப வாழ்க்கையிலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் விஜய், பொது வாழ்க்கையிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு. அதை நிச்சயமாக அவர் நிறைவேற்றுவார் என்று அவரின் உறுதியை, பிடிவாதத்தை, உழைப்பின் மீதான காதலை அறிந்தவன் என்கிற முறையில் நம்புகிறேன். என் நம்பிக்கை வீண் போகாது.

- எஸ்.ஏ.சந்திரசேகரன்

(ப்ரியம் பெருகும்)
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT