எதிர்பார்க்காத தருணங்களில் கதாபாத்திரங்களின் உருமாற்றம் அல்லது கதையின் உருமாற்றம், கதைக்கு வலுச் சேர்ப்பதோடு பார்வையாளர்களின் பேராதரவையும் பெறும் என்பதைப் பல்வேறு திரைப்படங்களில் நான் கண்டிருக்கிறேன். வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மைக்கு எதிர்மறையாக அந்தக் கதாபாத்திரம் தன்னை வெளிப் படுத்தும்போது பார்வையாளர்களுக்கு எதிர்பாராத ஓர் ஆனந்த அதிர்ச்சி ஏற்படுகிறது.
ஆங்கிலத்தில் இதை ‘வாவ் ஃபேக்டர்’ என்பார்கள். அது போன்ற ஓர் அசாத்திய, ஆனந்தமான தருணம், அந்தக் கதாபாத்தி ரத்தின் மீது பார்வையாளர்களுக்கு ஈர்ப்பை அதிகரிக்கும். அந்தக் கதாபாத்திரம் அவர்களுக்கு நெருக்கமாக அமையும். அந்தக் கதாபாத்திரத்தைக் கொண்டாடுவார்கள்.
உதாரணமாக ‘16 வயதினிலே’ படத்தில் வரும் சப்பாணி, ஊரில் உள்ள அனைவருக் கும் முதுகு பிடித்து விட்டு காசு பெற்றுக் கொள்ளும் ஒரு கதாபாத்திரம். எதிர்மறைக் கதாபாத்திரமான பரட்டை ஒவ்வோர் உரையாடலின் முடிவிலும், “இது எப்படி இருக்கு?” என்கிற வசனத்தை உச்சரிக்கும். சப்பாணியின் மீது காதல் கொண்ட கதா நாயகி, “யாராவது இனி உன்னைச் சப்பாணி என்று அழைத்தால் ‘சப்’ என்று அறைந்து விடு” என்பாள்.
இப்பொழுது பரட்டை சப்பாணியை “இங்கே வாடா” என்று அழைக்கும்போது, சப்பாணி பரட்டையின் அருகே சென்று சப்பென்று கன்னத்தில் அறைந்துவிட்டு “இது எப்படி இருக்கு?” என்று அவன் பேசிய வசனத்தை அவனுக்கே பேசிக் காட்டிவிட்டு நடக்கும்போது, மொத்தத் திரையரங்கமும் கொந்தளித்துக் கைதட்டியது. சப்பாணியோடு அவர்களின் மனம் கைகோத்துக் கொண்டது. சப்பாணி யின் செயலுக்கு ஆதரவு நல்கினார்கள். இந்த ‘எதிர்பாராமை’, கதாபாத்திரத்துக்கு மட்டுமன்றி அந்தத் திரைப்படத்துக்கான வெற்றிக்கான ஊக்கிகளில் ஒன்றாகவும் அமைகிறது.
அம்பியும் லிங்குவும்: இப்படியாக ஒரு திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியர் வடிவமைக்கும் ஒரு கதாபாத்திரத்தின் தன்மை, கண நொடியில் விலகி வேறொரு திசையில் பயணிக்கும்போது, அது ரசிகர்களைப் பெரும் உற்சாகத்துக்குள் தள்ளிவிடும். அந்தக் கதாபாத்திர மாற்றம் உவப்பாக மாறிய தருணங்களும் உண்டு, பார்வையாளர்களுக்குக் கசப்பாக மாறிய உதாரணங்களும் உண்டு. ஆகவே திரைக்கதையில் மிகக் கவனமாக அந்தக் கதா பாத்திரத்தின் மனமாற்றத்தை முடிவு செய்யவேண்டும்.
‘அந்நியன்’ திரைப்படத்தில் அம்பியை ரவுடிகள் அடித்து நொறுக்கி ஒரு சாக் கடையில் விட்டெறிவார்கள். அப்போது, அந்நியன் அம்பியிடமிருந்து வெளிப்பட்டு அந்த முரடர்களைத் துவம்சம் செய்வான். அம்பி ஒரு நசை என்று நினைத்துக் கொண்டு படத்தைத் தொடர்ந்து கொண்டி ருந்த பார்வையாளன், ‘அந்நியன்’ வெளிப் பட்டவுடன் படத்துக்குள் இழுக்கப்பட்டு அந்தக் கதாபாத்திரத்தை ரசிக்கத் தொடங்கு கிற இடம்.
இது போன்ற காட்சி, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘போக்கிரி ராஜா’, ‘ராஜாதி ராஜா’, ‘இம்சை அரசன்’ போன்ற படங்களில் கதாபாத்திர இடமாற்றம் நிகழும்போது நடக்கும் நாடகீயத் தருணங்கள் பார்வையாளர்களைக் கொள்ளைகொள்ளும். ‘அங்காடித் தெரு’ திரைப்படத்தில் ஜவுளிக்கடையின் மேனேஜரைப் பார்த்துக் கதை நாயகன் உள்பட மொத்தக் கடை ஊழியர் களும் நடுங்குவார்கள்.
முதல் பாதியில் வேலை நேரத்தில் இளைப்பாறியதற்காக மேனேஜர் லிங்குவை அடித்துத் துன்புறுத்துவார். மேனேஜர் கதாநாயகியைத் தனியறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்யும்போது அவள், “என்னால முடியல லிங்கு” என்று கதறுவாள்.
சட்டென ஆத்திரம் கொண்ட லிங்கு, இனிப்புத் தட்டால் மேனேஜரை அடிக்கத் தொடங்குவான். அக் காட்சியில் திரையரங்குகள் கரவொலியால் நிறைந்தன. லிங்கு கதாபாத்திரத்தைப் பொருத்தவரை, அவன் கதாநாயகன் அல்ல. ஆனாலும் எளிய மனிதனிடம் காணக் கிடைக்கும் கோபம் அதிகாரத்துக்கு எதிராகச் சட்டெனவெளிப்படும்போது ரசிகர்களைக் கவர்கிற இடமாக அது மாறியது. அது எளிய மனிதன் நாயகனாக ஒளிர்கிற பொன் தருணம்.
மலர் டீச்சரின் நடனம்: இதே போன்று ‘பிரேமம்’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியான மலர் டீச்சரிடம் ‘ஆண்டு விழா மேடையில் நடனம் ஆடுவதற்கு நீங்கள் எனக்கு உதவ வேண்டும்’ என்று கேட்பான். அவளும் ‘நடனத்தில் எனக்கு அரைகுறை ஞானம்தான்’ என்று அரை மனதோடு சம்மதிப்பாள். அவள் நடனம் பயிற்றுவிக்கும் காட்சி, மிகச் சாதாரணமான காட்சியாக நகர்ந்த வண்ணம் இருக்கும்.
மெதுவாக அந்த இசையை ஒலிக்கவிட்டு, மெல்ல மெல்ல நடனமாடத் தொடங்கும் மலர் டீச்சர், சட்டென ஒரு கணத்தில், உச்சஸ்தாயியில், அதிவேகப் புயல் நடனத்தை நெளிவு சுளிவு களுடன் பிரமாதமாக வழங்கும்போது, மலர் கதாபாத்திரம் நாயகனை மட்டுமன்றிப் பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மலர் டீச்சரைத் தமிழகமும் கேரளமும் நேசிக்கத் தொடங்கிய தருணம் அது. அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றி அந்த நொடியில் தொடங்கி ரசிகர்களின் மனதில் பூக்களை மலரச் செய்தது.
‘மாநாடு’ திரைப்படத்தில் கதாநாயகன் ஒரே நாளுக்குள் திரும்பத் திரும்ப மாட்டிக் கொள்வான். அவன் மரணித்தால் மறுபடியும் அதே நாளே தொடங்கும். அன்றைய நாளில் முதலமைச்சரைக் கொல்ல காவல்துறை அதிகாரி தலைமையில் பெரும் முயற்சி நடக்கும். இது தெரிந்த கதாநாயகன் முதல்வரைக் காப்பாற்ற முயல்வான். காவல் அதிகாரியோ அவனைத் தடுக்க முயல்வார். அவன் இறந்து போவான். மறுபடியும் அந்த நாள் தொடங்கும். அவன் முதல்வரைக் காப்பாற்ற முயல்வான்.
காவல் அதிகாரி கொல்வான். ‘டைம் லூப்’ என்கிற இந்தக் காலச் சுழல் கதாநாயகனுக்கு மட்டும் நடக்கும். அதே சுழலில் சென்று அவன் முதல்வரைக் காப்பாற்றிவிட்டான் என்று திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் குறை யொன்றுமில்லை. ஆனால், எதிர்பாராத தருணமாகக் காவல் அதிகாரிக்கும் அதே நாளின் காலச் சுழல் நிகழத் தொடங்கும். இப்போது திரைக்கதை இன்னும் வலு வடைந்து இருவரும் மீண்டும் பிறந்து, இறந்து சண்டையிட்டு இறந்து, பிறந்து, கொன்று, இறுதியில் கதாநாயகன் முதல்வரைக் காப்பாற்றி விடுவான்.
இப்படிக் ‘காலச் சுழல்’ என்கிற கருத் தாக்கம் கொண்ட அந்தத் திரைக் கதையின் எதிர்பாராத தன்மைதான் பார்வையாளருக்கு அதீத சுவாரசியத்தையும் ஆவலையும் வழங்கியது. அந்தத் திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததற்கு இரண்டு எதிர் பாராமைகள் காரணம் என்று சொல்லலாம்.
முதல்வரைக் காப்பாற்றும் கதையில், கதாநாயகனுக்கு ஒரே நாளின் காலச் சுழல் ஏற்படுவது முதல் எதிர்பாராமை. இரண்டாவது எதிர்பாராமை, எதிர்மறை கதாபாத்திரத்துக்கும் அதே நாளின் காலச் சுழல் ஏற்படுகிறது. இந்த எதிர்பாராமை திரைக்கதையில் நாயகனுக்கான சவாலை மேலும் கடினமாக்கி, அதை அதிக வலிமையுடையதாக மாற்றிவிட்டது. திரைக்கதையில் இது போன்ற பல தருணங்கள் கதாபாத்திரத்துக்கு அழகு சேர்ப்பதோடு, கதைக்கும் திரைக்கதைக்கும் அழகும் வலிமையும் சேர்க்கும். திரைப் படத்தின் வெற்றிக்கும் வழிகாட்டும்.
- vasantabalan@gmail.com