இந்து டாக்கீஸ்

பாடல்களை வெளியேற்ற விரும்பியவர்! | கண் விழித்த சினிமா 13

ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ் சினிமா பேசத் தொடங்கியிருந்தபோது, மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த நாடகம், நடனம், இசைக் கச்சேரி ஆகிய வற்றுக்கு அச்சுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்தன. சினிமாவைக் கண்டு கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சுகுண விலாச சபாவின் பம்மல் சம்பந்தம், ரங்கவடிவேலு ஆகியோர், அவர்களின் புகழ்பெற்ற புராண நாடகமாகிய ‘காலவா ரிஷி’ (1932) திரைப்படமாவதில் ஈடுபடுகின்றனர் என்கிற தகவல், பத்திரிகைகளை சினிமாவின் பக்கம் தலையைத் திருப்ப வைத்தது.

‘தி இந்து’, ‘ஆனந்த விகடன்’, ‘மணிக்கொடி’ ஆகிய பத்திரிகைகள் அதைப் பற்றி படத்துடன் செய்தி வெளியிட்டன. ‘மணிக்கொடி’ ஒருபடி மேலே சென்று படப்பிடிப்பு நடந்த பாம்பாய்க்கே போய், ஸ்டுடியோவில் படத்தின் நாயகன் பி.பி.ரங்காச்சாரி என்ன செய்துகொண்டிருந்தார், படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என வருணனை செய்து எழுதியிருந்தது.

பம்மலாரின் பல நாடகங்கள் பேசும்பட யுகத்தின் தொடக்கத்தி லேயே திரைப்படமானதற்கு அவற்றின் மேடை வடிவம், கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்லும் தன்மையுடன் இருந்தது முக்கிய மான காரணம். தவிர, அவர் நாடகங்களை 3 மணி நேரத்துக்குள் சுருக்கியிருந்தது திரைப்படத்தின் கால அளவுக்குக் கச்சிதமாகப் பொருந்தியது.

எடுத்துக்காட்டாக, அவரது அரிச்சந்திரா நாடகம் 3 மணி நேரம் என்கிற கால அளவில் உரையாடலை மட்டுமே கொண்டு நிகழ்த்தப்பட்டுவந்தது. இந்த நாடகத்தின் ஐந்து அங்க வடிவமைப்பையும் வசனங்களையும் அப்படியே எடுத்தாண்ட ‘சம்பூர்ண ஹரிச்சந்திரா’ (1932), தமிழ் வசனங்கள் மட்டுமே இடம்பெற்ற முழுமையான இரண்டாவது தமிழ் பேசும் படம்.

பாடல்களே இல்லாமல் ஹரிச்சந்திரா நாடகத்தைப் பம்மலார் நிகழ்த்தி வந்த நிலையில், ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வி.எஸ்.சுந்தரேச ஐயர் ஹரிச்சந்திரனாகவும் கொலம்பியா ரெக்கார்ட் பாடல்கள் மூலம் புகழ்பெற்றிருந்த டி.ஆர்.முத்துலட்சுமி சந்திரமதியாகவும் நடித்த இப்படத்தில் 16 பாடல்களை இடம்பெறச் செய்தது, பம்மலாரின் சீர்திருத்த நாடக அணுகுமுறையின் மீது விழுந்த பெரும் கத்திக் குத்து என்றே சொல்லலாம்.

புதிய அணுகுமுறை: நாடகத்திலேயே பாடல்களைக் கழற்றிவிட விரும்பிய பம்மலார், தற்காலக் கதைகள், சமகாலப் பொதுக்கருத்துகளைப் பிரதிபலித்த, அடுக்கு மொழி தவிர்க்கப்பட்ட யதார்த்த வசனம், மேடையைப் பயன்படுத்திய விதம், காட்சியமைப்புகளில் புதுமை, நடிக்கும் முறையில் நடிகர்களிடம் அளவான ஆராவாரமற்ற நடிப்பையும் உச்சரிப்பில் நவீனத்தையும் சாத்தியமாக்கியது என மேடையி லேயே சாதித்துக் காட்டினார்.

மேல் தட்டு மக்கள், படித்து பதவிகளில் இருப்பவர்கள், அறிஞர்கள், கலை யுலகினர் ஆகியோரைத் தன் பிரம் மாண்டத் தயாரிப்புகளால் நாடக அரங்கம் நோக்கி இழுத்தார். அதே போல், துன்பியல் கதைகளை நகைச்சுவை கலந்து படைத்து மேடைக்குக் கொண்டுவந்தார். நடிகர் கள் யாரும் கூடுதலாக ஒரு வார்த்தை கூடச் சேர்த்துப் பேசக் கூடாது என்பதில் கண்டிப்புக் காட்டினார்.

நாடகங்களில் முக்கியக் கதாபாத்திரம் வசனம் பேசி நடித்துக் கொண்டிருக்கும்போது உடனிருக் கும் துணைக் கதாபாத்திரங்கள் உணர்ச்சியற்ற நிலையில் தட்டை யான முகபாவத்துடன் இருப்பதை பம்மலார் ‘அவல் மென்று கொண் டிருப்பது’ என்று விமர்சித்தார். அப்படி இருப்பவர்களை இயல்பான, உறுத்தாத செய்கைகளை (by-play) செய்யும்படிக் கற்றுக்கொடுத்தார்.

இசையை, நாடகத்தின் கதை நகர்வுக்கான கருவியாக்க விரும்பாத பம்மலார், பாடல்களுக்குப் பதிலாகக் காட்சியின் உணர்ச்சித்தன்மையைப் பிரதிபலிக்கும் பின்னணியாகப் பயன்படுத்திக்கொண்டார். சில நாடகங்களில் ‘அனாதி’யின் குரலாக (Voice over) மிக முக்கியமான இடத்தில் பாடல் ஒன்றை ஒலிக்கச் செய்து நாடகக் காட்சியிலேயே ‘மாண் டேஜ்’ தன்மையை முயன்றார்.

படவுலகில் செலுத்திய தாக்கம்: தமிழ் சினிமா பேசத் தொடங்கியபோது, நாடகத்தில் பாரிய சீர்த்திருந்தங்களைச் சாத்தியப்படுத்திய பம்மல் சம்பந்தனார் போன்ற ஒரு மிகச் சிறந்த ஆளுமையை மட்டும் அது உள்ளிழுத்துக்கொள்ளத் தவறியிருந் தால், அதன் தொடக்கமே அபத்தத்தின் வனாந்தரமாக மாறியிருக்கும்.

பம்மல் சம்பந்தரின் ‘காலவா ரிஷி’ நாடகத்திலிருந்து அதைத் திரைப்படமாக்க பம்பாய் சாகர் பிலிம் கம்பெனியால் அழைக்கப்பட்டார். சுகுண விலாச சபையில் பம்மலாரின் சகாக்களில் ஒருவராக இருந்த டி.சி.ரங்கவடிவேலு, பம்மலாரின் நாடகத்திலிருந்து திரைக்கதையை எழுதினாலும் பம்மலாரின் வசனங்களை அப்படியே எடுத்தாண்டார். ஆனால், படத்தில் 28 பாடல்களைப் பயன்படுத்தியிருந்தனர்.

தமிழின் முதல் முழுமையான பேசும் படமாக வெளியான ‘காலவா ரிஷி’யை (1932) கண்ட பம்மலார், திரைப்படத்துக்காக ஒரு நாடகத்தைத் தழுவும்போது அதை எவ்வாறு குறைத்து, எதையெல்லாம் நீக்கவேண்டும் என்பதைத் தாமே எடுத்துக்காட்ட விரும்பியபோதுதான், தனது ‘சதி சுலோச்சனா’ நாடகத்தைத் திரைப்படமாக இயக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அதற்கு அவரே ‘சினேரியோ’ (திரைக்கதை) எழுதி பரிட்சித்துப் பார்த்து வெற்றி கண்டார்.

அந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றதுடன் தனது 62ஆம் வயதில் ஒரு கதாபாத்திரத்திலும் திரையில் தோன்றி நடித்தார். திரைக்கதையை ஒரு கச்சிதமான கலையாக அணுகிய அவரின் திறன், ஹாலிவுட்டின் திரைக்கதை இலக்கணத்தை, கிழக்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு வந்து தமிழ் சினிமாவில் படமெடுத்த எல்லிஸ் ஆர்.டங்கன் போன்றவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததாக இருக்கவில்லை.

(விழிகள் விரியும்)

- jesudoss.c@hindutamil.co.in

SCROLL FOR NEXT