இந்து டாக்கீஸ்

‘ஆடு’ம் மனிதர்கள்! | மாற்றுக் களம்

திரை பாரதி

இனம், மொழி, மதம் ஆகிய கலாச்சாரத் தளங்கள், காலந்தோறும் பல மாறுதல்களுக்கு உள்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், சாதி எனும் கட்டுமானம் மட்டும், குணம் மாறாத ஒரு கொடிய வேட்டை விலங்கைப் போல் மனித மனங்களில் மறைந்து வாழ்ந்தபடி இருக்கிறது.

அதற்கு நிகழ்காலத்தின் ரத்த சாட்சியமாக சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து வருகின்றன. சக மனிதனை இவ்வாறு படுகொலை செய்யும் சாதி எனும் நஞ்சு, நம்மை அண்டிப் பிழைக்கும் விலங்குகளைக்கூட ஊடுருவிக் கொல்லும் என்பதைப் பொட்டில் அறைந்து சொல்கிறது 22 நிமிடங்கள் ஓடும் ‘பாஞ்சாலி’ என்கிற குறும்படம். சர்வ நிச்சயமாக உண்மைச் சம்பவத்திலிருந்து எழுதப்பட்டது என்பதை உணர வைக்கின்றன கதையும் களமும்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் வறண்ட கிராமம் ஒன்றில் கதை நடக்கிறது. அங்கே ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்தான் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர். அவர் வீட்டில் வளர்க்கும் ஆடுகளைக் கூலிக்கு மேய்த்துக் கொடுக்கிறார் ஒடுக்கப்பட்டச் சாதியைச் சேர்ந்த மாடசாமி. பெற்றோரை இழந்த தன்னுடைய 10 வயது பேரன் மாயன், தன்னைப் போல் ஆடு மேய்க்காமல் படித்து வேறு வேலைக்குப் போக வேண்டும் என்று அவனுக்காக வெயிலில் வாடி வதங்குகிறார் மாடன்.

பேரனோ தனக்கென ஓர் ஆடு வாங்கி வளர்க்க நினைக்கிறான். கடன் வாங்கி அவனது ஆசையை நிறைவேற்றும் மாடனையும் மாயனையும் அந்த ஊரை விட்டே வெளியேற வைக்கிறது ஒரு சாதி ஆணவப் படுகொலை. கொல்லப்பட்டது யார் என்பதை இக்குறும்படத்தைப் பார்த்து அறிந்துகொள்ளும்போது உங்கள் மனம் உடைந்து நொறுங்கிப் போகலாம்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமியும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான குறும்படப் போட்டியில் பங்குகொண்ட 600 இந்திய மொழிக் குறும்படங்களிலிருந்து சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகளை இது வென்றிருக்கிறது. இப்படத்தைத் திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பவர் ஆர்.சுப்ரமணிய பாரதி. கதை, வசனத்தை பொதுவுடமைச் செயற்பாட்டாளர் என்.கலையரசன் எழுதியிருக்கிறார்.

விருது நிகழ்ச்சியில் விருது வழங்கி கௌரவம் செய்தவர் மத்திய இணையமைச்சரான எல்.முருகன். மாடனாக நடித்திருக்கும் சக்கரை முருகன், அவருடைய பேரனாக நடித்திருக்கும் சிறுவன் தீபக், கிராமத் தலைவராக நடித்திருக்கும் விதுரன் ஷாகீர் தொடங்கி அத்தனை பேரும் அந்த மண்ணின் மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த இயக்குநரையும் கதாசிரியரையும் அடையாளம் காட்டுகிறாள் இந்தப் ‘பாஞ்சாலி’.

SCROLL FOR NEXT