இந்து டாக்கீஸ்

மன்னிப்புக் கேட்ட விஜய்! | ப்ரியமுடன் விஜய் - 18

Guest Author

நான் சினிமாவில் இயக்குநர் ஆக முயன்றதை எனது வீட்டில் எப்படி ஆதரிக்கவில்லையோ; அப்படித்தான் என் மகன் விஜய் சினிமாவுக்கு நடிக்கச் செல்வதையும் தொடக்கத்தில் நானும் ஆதரிக்கவில்லை. ஒரே மகன்; ஒரு நடிகனாக வெயிலிலும் மழையிலும் அவன் ஏன் கஷ்டப்பட வேண்டும்.

நாம் தான் அவனுக்கும் சேர்த்து சம்பாதிக்கிறோமே என்று நினைத்தேன். ஆனால், என்னுடைய பெற்றோர் என்னைத் தடுத்தபோது எனக்கு எவ்வளவு பிடிவாதம் இருந்ததோ, அதே பிடிவாதம் விஜய்க்கும் இருந்தது. விஜயின் விருப்பத்துக்கு இனி தடை போட முடியாது என்று தெரிந்த பிறகு, அவரை நாம் இயக்குவதைவிட, நம்மைவிடப் பெரிய இயக்குநர்களிடம் போய் அவருக்கு வாய்ப்புக் கேட்போம் என்று முடிவு செய்தேன்.

அவனை ஒரு போட்டோ ஷூட் எடுத்தேன். அதை ஒரு ஒளிப்பட ஆல்பமாக போட்டுக்கொண்டு நான் முதலில் சென்றது பாரதிராஜாவிடம். ஆல்பத்தை வாங்கிப் பார்த்த அவர்; ‘யோவ் என்னய்யா.. வெளையாடுறியா? நீ எவ்வளவு பெரிய இயக்குநர், மகனை நீயே இயக்குறதுல என்ன உனக்கு சிக்கல்.. எல்லாம் சரியா வரும். யோசிக்காமல் பண்ணு’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அவர் சொன்னதை மனதளவில் நான் ஏற்றுக்கொண்டாலும், இன்னும் சில இயக்குநர்களையும் முயன்று பார்ப்போம் என்று நாடினேன். அவர்களும் அதே பதிலையே சொல்ல, பிறகு தான் ‘நாளைய தீர்ப்பு’ கதையை விஜய்க்காக எழுதினேன். அது தோல்வியாக முடிந்தாலும் விஜயிடம் நடிப்புத் திறமையும் ஒரு நல்ல நடிகனுக்குரிய தொழில் ஒழுக்கமும் இருப்பதைப் படப்பிடிப்பின்போது அறிந்து கொண்டேன். உண்மையிலேயே அவன் மனதளவில் வளர்ந்துவிட்டான் என்பதைப் புரிந்துகொண்டேன். அதன்பிறகு அவரை வைத்து ‘ரசிகன்’ படத்தை இயக்கினேன்.

அது வெள்ளி விழா வெற்றியாக அமைந்து விஜயை ‘பாக்ஸ் ஆபீஸ்’ நாயகன் ஆக்கியது. அந்த வெற்றியை மேலும் சில படங்களில் உறுதிப்படுத்த வேண்டும் என்றே ‘தேவா’, ‘விஷ்ணு’, ‘மாண்புமிகு மாணவன்’ ஆகிய படங்களை விஜயை வைத்து வரிசையாக இயக்கி வெற்றி கொடுத்தேன். நீ இப்படியெல்லாம் சரியாக நடந்துகொள்ள வேண்டும், இதையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் ஒருமுறை கூட விஜயிடம் சொன்னதில்லை.

சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் பிறர் என்றாலும் அறிவுரை சொல்லி ஒருவர் கேட்பதைவிட, பட்டறிவு வழியாகக் கிடைக்கும் பாடம்தான் வாழ்க்கையை நல்வழியில் அமைத்துகொள்ள உதவும் என்று நம்புகிறவன் நான். அதுவுமில்லாமல், பெற்றோர் நல்ல ரோல் மாடலாக நடந்து கொண்டால், பிள்ளைகளும் அதை உறுதியாகப் பிடித்துக்கொள்வார்கள் என்பதிலும் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு.

அப்படித்தான் எனது இயக்கத்தில் வரிசையாக நடித்தபோது, என்னிடம் நிறையக் கற்றுக்கொண்டார். ஒரு திரைப்படம் உருவாவதில் முறையான திட்டமிடுதல் எவ்வளவு முக்கியமானது, அதில் நடிகர்களுடைய பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கண்கூடாகப் பார்த்துத் தெரிந்து கொண்டார்.

அங்கே கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் அவரை ‘சின்சியர் ஆக்டர்’ ஆக மாற்றியது என்பேன். விஜயால் படப்பிடிப்பு தாமதமானது என்கிற பேச்சுக்கு இப்போதுவரை அவர் இடம் கொடுத்த தில்லை. தான் சம்பந்தப்பட்டக் காட்சிகளின் ஷெட்யூல்கள் தொய்வில்லாமல் நடக்கும்படி வேகம் காட்டியும் அதேநேரத்தில் தரமாகவும் நடித்துக் கொடுக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொண்டார்.

படப்பிடிப்புக்குப் பிறகு கொண்டாட்டம் எதிலும் ஈடுபடாமல் ஒரு நடிகன் நன்றாகத்தூங்கி எழுந்தால்தான் அவனது மூளைக்கு நல்ல ஓய்வு கிடைக்கும், நடிப்பு என்பது உடல்மொழி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அறிவு சம்பந்தப் பட்டது, அதற்கு மூளைக்கு போதுமான ஓய்வு தேவை என்பதைப் புரிந்துகொண்டார்.

இரவு போதுமான அளவு தூங்கினால்தான் காலையில் சிக்கிரம் எழுந்து ‘ஒர்க் அவுட்’ செய்து உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள முடியும் என்பதை கண்டுபிடித்துக் கொண்டார். நடிப்பின்போது எவ்வளவு நடிப்பைக் கொடுத்தோமோ, அதே அளவுக்கான உழைப்பை ‘டப்பிங்’கிலும் கொடுக்க வேண்டும், அதேபோல் ‘டப்பிங்’கைக் காலம் தாழ்த்தாமல் பேசிக்கொடுக்க வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்து மாக இருப்பார்.

தானாகப் பார்த்து, நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வது வேறு, நாம் கற்றுக்கொடுக் கிறோம் என்பதே தெரியாமல், நெருக்கடியான சூழ்நிலைகளில் கற்றுக்கொள்ள வைப்பது என்பது வேறு. விஜய் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். ஒரு நடிகனுக்குப் படப்பிடிப்புத் தளமும் டப்பிங் தியேட்டரும் திரையரங்குகளும் மட்டுமே திரை யுலகம் அல்ல என்பது புரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, அவனை நம்பிப் பெரும் பணத்தை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களின் வலி, அவர்களின் பிரச்சினைகள் எப்படிப் பட்டவை என்பதை விஜய் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். அதற்கென்றே ஒரு நெருக்கடியான சந்தர்ப்பம் அமைந்தது.

பொதுவாக ஒரு நடிகரால் தயாரிப்பாளர் தரப்புக்குச் சிக்கல் ஏற்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டால், அந்தப் புகாரை விசாரிக்க அழைப்பார்கள். அப்போது அந்த நடிகர் சுட்டுப் போட்டாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரமாட்டார். நடிகர் சார்பில் அவருடைய தரப்பை எடுத்துக்கூற அவருடைய மேனேஜர் தான் வருவார்.

ஆனால், விஜய் சில்வர் ஜூப்ளி படங்கள் கொடுத்த பிறகு, அவர் மீதான ஒரு விசாரணைக்கு அவரை நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அழைத்துப் போனேன். அப்போது நான் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தேன். நான் நினைத்தால், ‘மகன் வரமாட்டான் என்று திமிராகச் சொல்லியிருக் கலாம். அப்படிச் சொல் வது அறமல்ல. ஏற்றுக் கொண்ட பதவிக்கு அது அழகல்ல. அப்படிச் செய்தால் ஸ்டார் ஆகிவிட்ட ஒரு நடிகனின் அப்பாவுக்கும் அது இழுக்குதான்.

நடந்தது இதுதான். ‘பூவே உனக்காக’ வெள்ளி விழா வெற்றிக்குப் பின், லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் விக்ரமன் அடுத்த படத்தை இயக்கினார். அதில் விஜய் நடித்து வந்தார். படப்பிடிப்பில் இயக்குந ருக்கும் விஜய்க்கும் ஏதோ கருத்து வேறுபாடு. அதில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்துவிட்டார். படத்தின் இயக்குநர் ‘பேக் அப்’ சொல்லாமல், படப்பிடிப்புத் தளத்தி லிருந்து கடைசி துணை நடிகரும் நகரக் கூடாது எனும் போது, நாயக நடிகன் எப்படி அங்கிருந்து வரலாம்? ஆனால், விஜய் வந்துவிட்டார்.

அந்தப்புகாரின்போதுதான் நான் விஜயை அழைத்துக் கொண்டுபோய் விசாரணையில் உட்கார வைத்தேன். விசாரணைக்குப் பின், அதே படநிறுவனத்துக்கு விஜய் வேறொரு படம் நடித்துக் கொடுப்பார் என்று உறுதியளித்துவிட்டு விஜயைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.

அந்தப் படம் தான் ‘ப்ரியமுடன்’. நாயக நடிகன் என்பவன் தயாரிப்பாளர்களின் ப்ரியத்துக்குரியவனாக மாற வேண்டும் என்பதை அந்த நிகழ்வின் வழியாக விஜய் கற்றுக்கொண்டார். இன்னொரு நிகழ்வு. என்னுடைய உதவி யாளர் சி.ரெங்கநாதனை ‘கோயமுத்தூர் மாப்ளே’ படத்தின் மூலம் இயக்குநர் ஆக்கி னேன். எம்.எஸ்.வியின் மகன் கோபி தான் தயாரிப்பாளர்.

வி.ஜி.பி. பொழுதுபோக்குப் பூங்காவில் படப்பிடிப்பு. அப்போது விஜய்க்கு அங்கிருந்த சாலையோரம் உட்கார வைத்து மேக்கப் போட்டிருக்கிறார்கள். என்ன நினைத் தாரோ தெரியவில்லை; நமக்கு மேக்கப் ரூம் கொடுக்காமல் மக்கள் வந்துபோகிற பொது வெளியில் வைத்து மேக்கப் போடுகிறார்களே என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கோபித்துக்கொண்டு கிளம்பிய விஜய், நேராக வீட்டுக்கு வந்து அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டார்.

ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்தது. கொஞ்ச நேரத்தில் தயாரிப்பாளர் கோபி எனக்கு போன் செய்து ‘தம்பி.. என்ன ஏதுன்னு சொல்லாமல் கிளம்பி வந்துவிட்டார்’ என்று கூறினார். நான் அவரையும் ரங்கநாதனையும் உடனே கிளம்பி வீட்டுக்கு வரச் சொன்னேன். அவர்கள் அடுத்த 1 மணி நேரத்தில் வந்துவிட்டார்கள். அவர்கள் முன் விஜயை உட்கார வைத்து, ‘இயக்குநர், தயாரிப்பாளர் இரண்டு பேரிடம் மன்னிப்புக் கேள்.

இன்றைய ஒரு நாள் ஷூட்டிங் செலவை யார் கொடுப்பது’ என்றேன். விஜய் மன்னிப்புக் கேட்டார். வட்டிக்குக் கடன் வாங்கிப் படமெடுப்பவர்தான் தயாரிப்பாளர். அவருக்கு லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை; ஆனால் நாயக நடிகனால் அவர் நஷ்டத்துக்கு உள்ளாகக்கூடாது என்று உணர வைத்தேன். அதன்பிறகு தான் தன்னையொரு தயாரிப்பாளர்களின் நாயகனாக உயர்த்திக்கொண்டார்.

(ப்ரியம் பெருகும்)
- எஸ்.ஏ.சந்திரசேகரன்
படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT