தூய்மையான காதல் என்பது உள்ளத்தில் தொடங்கி உடலின் தேவையைக் கடந்து மீண்டும் உள்ளத்தில் அழுத்தமாக நிலைகொள்வது. இத்தகைய குணங்களைத் தன்னகம் கொண்ட மனிதர்களைப் பிரதி பலிக்கும் கதாபாத்திரங்கள்தான் காதலைக் காவியமாக்கி நமது பார்வைக்குப் பரிசாகத் தருபவை. இதற்கு ‘தேவதாஸ்’ திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு பண்பட்ட எடுத்துக்காட்டு.
உலக சினிமாவிலும் இளம் வயது தொட்டு முதுமைப் பருவம் வரை நீடிக்கும் காதல் காவியங்கள் நிறையவே புனையப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்திய, தமிழ் சினிமா கையாண்ட மிகை உணர்ச்சி சித்திரிப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
அந்தந்தச் சமூகங்களின் இறுக்க நிலைப்பாடுகளுடனான வாழ்வியல் யதார்த்தத்தைச் சிறிதும் பிசகாமல் புனைந்தவை. அவ் விதத்தில், 2024ஆம் வருடம் வெளி வந்த ‘தொடுதல்’ (Touch) என்கிற ஐஸ்லாந்து நாட்டுப் படம், ஐஸ்லாந்து இளைஞனான கிறிஸ்டோபருக்கும் ஜப்பானிய யுவதியான மிகோவுக்கும் இடையே ஏற்படும் நாடு கடந்த காதல் குறித்த உணர்வோட்டச் சித்திரம்.
படத்தின் தொடக்கத்தில், வயோ திகப் பருவத்தில், மறதி நோய்க்கு ஆட்பட்டவராக இருக்கிறார் கிறிஸ் டோபர். அவருடைய மருத்துவர், ‘நிறைவேறாத ஆசைகள் ஏதேனும் இருந்தால் உடனே நிறைவேற்றி விடுங்கள், நீங்கள் முழு மறதியை அடைய இன்னும் அவகாசமிருக் கிறது’ என்று அறிவுறுத்துகிறார்.
50 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வசித்த காலத்தில் அங்குக் காதலுறவு கொண்ட ஜப்பானியப் பெண்ணான மிகோவைச் சந்திக்கும் ஆவல் மேலெழுகிறது. அதன்பின், கிறிஸ் டோபர் மேற்கொள்ளும் பயணத் தினூடாக, மிகோவுடனான அவரது இளமைக் காலப் பரிமாற்றங்களும் அவளைத் தேடிச் செல்லும் நிகழ்காலப் பயணமுமாக மாறி மாறி காட்சிகள் திரையில் விரிகின்றன.
1960களின் பிற்பகுதி. இளைஞனான கிறிஸ்டோபர் லண்டனில் உள்ள பள்ளியொன்றில் பயில்கிறான். அவனது இடதுசாரி மனப்பான்மை யிலான அரசியல் பார்வையின் காரண மாக, பள்ளி நிர்வாகம் அவனை வெளியேற்ற முனைகிறது. தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதைக் கைவிட்டு, நிப்பான் என்கிற ஜப்பானிய உணவு விடுதியில் பாத்திரங்களைக் கழுவும் பணியில் சேருகிறான் கிறிஸ்டோபர். அந்த விடுதியை நடத்தும் தகாகஷியின் மகளான மிகோவின் மீதான காதலுணர்வு அவனை மெல்ல மெல்லச் சிறந்த சமையல் கலைஞனாகவும் உருவெடுக்க வைக்கிறது.
படம் நெடுக, இருவரது காதலுணர்வின் பிணைப்பைச் சித்திரிக்கும் காட்சிகள் சற்றும் மிகைபடாத நமது சமூக மட்டத்தில் நிகழ்வது போலவே அசலானயதார்த்தம் கலந்த கவித்துவ அணுக லுடன் சொல்லப் பட்டிருக்கின்றன. இப்படியொரு காதலை நாம் இயக்குநர் இமயம் பாரதி ராஜாவின் ‘முதல் மரியாதை’ படத்தில், அதன் வெகுஜன அம்சங் களைத் தாண்டி, மனம் ஆழ்ந்து பார்த்திருக்கிறோம்.
காதலைத் தாண்டி, ஜப்பானிய உணவு வகைகளின், மது வகைகளின் சுவை மற்றும் ஹைக்கூ கவிதைகளின் செறிவான அர்த்தம் குறித்த விவரணைகளையும் விளம்பியபடியே படம் நகர்கிறது. படத்தை இயக்கிய ஐஸ்லாந்து சினிமாவின் புகழ்பெற்ற படைப்பாளரான பல்தசர் கொர்மகூர் ஜப்பானியக் கலாசாரத்தின்மீது கொண்டிருக்கும் அளவு கடந்த பற்றும் பிரமிப்பும் ஆவணப் பதிவாகவும் ஓர் இணையோட்டத்தைக் கதைக்குள் கொண்டிருப்பதை நாம் கண் கூடாகப் பார்க்கலாம்.
ஐஸ்லாந்திலிருந்து லண்டனுக்குப் பயணப்பட்டு நிப்பான் உணவு விடுதிக்குச் செல்கிறார் கிறிஸ்டோபர். 50 ஆண்டுகள் கடந்த நிலையில், அவ் விடம் பச்சை குத்தும் அங்காடியாக உருமாறியிருக்கிறது. ஏமாற்றத்துடன் தங்குமிடம் திரும்புகிறார். எனினும் இடையறாத தேடலில், நிப்பான் உணவுவிடுதியில் உடன் வேலைசெய்த பெண்மணியைச் சந்தித்துவிடுகிறார்.
50 வருடங்களுக்கு முன்னதாகவே மிகோவை அவளது தந்தை ஜப்பானுக் குத் அழைத்துச் சென்றுவிட்டதாக அவள் கூறி, மிகோவின் விலாசத்தைத் தருகிறாள். காதலித்தும் காமமுற்றும் தன்னிடம் எதுவும் சொல்லாமல் பிரிந்து விட்ட மிகோவைக் காண கிறிஸ்டோபர் ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். தன்னைப் போலவே வயோதிகப் பருவத்திலிருக்கும் மிகோவை அவர் சந்திக்கிறார்.
கிறிஸ்டோபரது மகவை வயிற்றில் சுமப்பதை அறிந்த தனது தந்தை தகாகஷி அவர்களைப் பிரிக்கும் எண்ணத்தில் அவளை ஜப்பானுக்கு அழைத்துவந்ததை விவரிக்கிறாள் மிகோ. கிறிஸ்டோபருக்குச் சமை யல் கலையைக் கற்றுத்தரும் அன்பைக் காட்டும் தகாகஷிக்குக் காதலின்மீது துவேஷமில்லை. மாறாக, ஒரு துன்பியல் சம்பவம் அதற்கான காரணமாகப் படத்தில் சுட்டப்படுகிறது. மிகோவின் தாய், ஹிரோஷிமாவின் மீது அமெரிக்கா வின் அணுகுண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவள்.
அப்படிப் பாதிக்கப்பட்டவர்களின் சந்ததிகளுக்குப் பல நோய் விளைவுகள் ஏற்பட்டிருப்பதை அனுபவப்பூர்வமாகக் காணும் தகாகஷி, தனது மகளின் காதலைத் தடுக்க முடிவெடுக்கிறார். இந்த முடிவு பிறப்பெடுத்தபின் துயர் வாழ்வைச் சந்திக்கப்போகும் வருங்காலச் சந்ததி மீதான பேரன்பு கொண்ட அக்கறையாக அவரிடம் வெளிப்படுகிறது.
ஆயினும், கிறிஸ்டோபரின் மகவை வயிற்றில் சுமக்கும் மிகோவை குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் அவர், அக்குழந்தை யைப் பிள்ளையில்லாத தம்பதி யொன்றுக்குத் தத்துக் கொடுத்து விடுகிறார். வயோதிகப் பருவத்தில் மிகோவைச் சந்திக்கும்போதுதான் கிறிஸ்டோப ருக்குத் தனக்குப் பிறந்த பிள்ளையான அகிரா குறித்துத் தெரியவருகிறது. மகிழ்வான அதிர்ச்சி கொள்கிறார். அந்தப் பிள்ளை வளர்ந்து தற்போது ஒரு சமையல் கலைஞனாக வளர்ந்து, உணவுவிடுதியொன்று நடத்துவதாகச் சொல்கிறாள் மிகோ.
இருவரும் அன்றிரவு அவ்விடுதிக்குச் செல்கி றார்கள். அனைத்து ஆரோக்கியமான தோற்றத்துடன் அகிரா அவர்களுக்கு முன் நிற்கிறான். இருவரும் தனது பெற்றோர் என்று அவனுக்குத் தெரியாமல் உபசரிக்கிறான். கிறிஸ்டோபரும் மிகோவும் கைகோத்த படி சாலையில் நடக்கிறார்கள். படம் நிறைவடைகிறது.
வயோதிக கிறிஸ்டோபராக வரும் எகில் ஓலஃப்சன்னும் படத்தின் உணர்வெழுச்சிக்கு ரத்தம் பாய்ச்சும் உயிர்நாடி. மிகோவாக வரும் கோகி நுட்பமான தேர்ந்த உணர்ச்சி வார்ப்பைத் திரையளித்திருக்கிறார். மென்மையான கதைக்கு ஒத்தடம் தருவதுபோல பெர்க்ஸ்டன் ஜோர் கல்ஃப்சன்னின் கூருணர்வான ஒளிப்பதிவு.
படத்திற்குள் ஒவ்வொரு காட்சி யிலும் பரவும் இசை செவி யின்பம். அதை ஈந்த ஹோக்னி எகில்சன்னின் கைகளுக்கு நமது முத்தம்தான் உரிய பரிசாக விளங்கமுடியும். ஒலஃபுர் ஜோகன் ஒலஃப்சன் எழுதிய நாவலை அதே தலைப்புடன் பல்தசர் இயக்கியிருக்கும் இப்படத்துக்கு இருவருமே ஒன்றிணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.
பல்தசரின் திரைநுட்பத்தை அறிந்தவர்கள், நாவலின் புனைவுத் தன்மையிலிருந்து மேலுயர்ந்து ஒரு தனித்துவமான திரைவடிவைப் படம் பெற்றிருக்கிறது என்பதை எளிதாக உணரமுடியும். காதலை உன்னதக் கணங்களுடன் சித்திரிப்பதைக் கடந்து, நாவலுக்கும் சினிமாவுக்குமான வடிவப் பாய்ச்சலையும் இந்தப் படம் எடுத்துக்காட்டியிருக்கிறது.
- viswamithran@gmail.com