மின்சாரம் நாடக மேடைக்கு வந்து சேராத 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, அது நாடக மேடைக்குள் நுழைந்த 20ஆம் நூற்றாண்டின் தொடக்கமான முதல் இருபதாண்டுகள் வரையில், தமிழ் நாடகத்தில் ஒரு புரட்சிப் பெண்ணாகப் புகழ்பெற்று விளங்கியவர் பாலாமணி.
அவரை அடியொற்றிப் பல பெண்கள் நாடகக் கம்பெனிகளுக்குத் தலைமை வகிக்கத் தொடங்கினர். அப்படிப்பட்டவர், தன் வாழ்வின் கடைசி காலக்கட்டத்தில் வறுமையில் வாடி இறந்தார். அவரது இறுதிச் சடங்கு செய்யத் தேவைப்பட்ட தொகையை, அவரது குழுவில் பணியாற்றிய சி.எஸ்.சாமண்ணா, பலரிடமும் கேட்டுத் திரட்டவேண்டியிருந்தது.
மின்சாரத்தின் வரவு, பாடல்கள் நிறைந்திருந்த கம்பெனி நாடகங்களுக்கும் மேலை நாடக மரபினை உள்வாங்கிக் கொண்டு பிறந்த, பயில் முறை (அமெச்சூர்) நடிகர்களை உருவாக்கிய சபா நாடகங்களுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெருக்கியது. ‘செவ்வக வடிவில் உயரமாக நிர்மாணிக்கப்பட்ட மேடைக்கு, மஞ்சள் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சிய மின் விளக்குகள், நாடகக் கலைஞர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் திடமான ஓர் ஒளிச்சுவரை உருவாக்கின.
இது, 20ஆம் நூற்றாண்டின் அறிவியல் கலையாகப் பிறந்த திரைப்படத்தைக் காணும் அனுபவத்துக்குப் பார்வையாளர் களை ஆயத்தப்படுத்தியது’ என்று குறிப்பிடுகிறார், திரை விமர்சகரும் தத்துவ, பண்பாட்டு, உளவியல் நோக்கில் தமிழ் சினிமாவை ஆய்வு செய்ய முயன்றவருமான வெங்கடேஷ் சக்கரவர்த்தி.
ஒளியும் ஒலியும் வடிவமும்: சங்கரதாஸ் சுவாமிகள் பாய்ஸ் கம்பெனி நாடகங்களின் வழி கொண்டு வந்திருந்த ஒழுங்கு, அதிலிருந்து அடியோடு துடைத்துப் போடப்பட்டிருந்த மலிவான கேளிக்கைகள், அவரது மறைவுக்குப் (1922) பிறகு, மீண்டும் பெரிய நடிகர்களின் கம்பெனி நாடகங்களில் தலைதூக்கின.
சிறார் நடிகர்கள் வளர்ந்து, வயது கூடி பெரிய நடிகர்களாகப் புதிய கம்பெனிகளைத் தொடங்கியபோது, ஒழுக்கமும் நாடக ஒத்திகையும் உறுதியாகக் கடைப்பிடிக்கப்பட்டன. சில நாடகக் குழுக்களைத் தவிர, பெரும்பாலான கம்பெனிகளின் நிகழ்த்து முறையில், பாடல்கள், கொச்சையான நடனம், நாலாந்தர நகைச்சுவை ஆகியன முக்கிய அங்கங்களாக நிலைபெற்றன.
கம்பெனி நாடகங்களிடமிருந்து இவற்றைக் கடன் வாங்கிக்கொண்ட தமிழ் வெகுஜனப் பேசும்படம், அவற்றை, இன்றளவும் தனது தொங்கு தசைகளாக வளர்த்து வைத்திருப்பதும், அவற்றுக்குப் பெரும்பகுதி பார்வையாளர்களின் ரசனைப்பூர்வ ஏற்பும் ஆதரவும் புத்தாயிரத்திலும் தொடர்வதும் கழித்துக் கட்டவேண்டிய மிச்ச மிருக்கும் எச்சங்கள்! கம்பெனி நாடகங்களின் இந்தப் பொழுது போக்கு அணுகுமுறையை, கதையும் வடிவமும் கோரினால் தவிர உதறிவிடலாம் என்கிற இணைப் போக்காக, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பயில் முறை நாடகங்கள் உருவெடுத்தன.
ஏனென்றால், அவற்றில் பாடல் களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது. உரையாடல் முக்கியத்துவம் பெற்றது. மேலும், பயில் முறை நாடக சபைகள், கட்டுப்படுத்தப்பட்ட மேற்கத்திய கதையாடல் முறையான ‘மூன்று அங்க முறை’யை (Three-act structure), எடுத்தாண்ட கதைகளில் பரீட்சித்துப் பார்த்து வெற்றி கண்டன. அத்துடன், ஒலிவாங்கியின் வரவால், பயில் முறை நாடக நடிகன், கத்திப் பேசி மிகை நடிப்பை வெளிப்படுத்த அவசியமில்லாமல் போனது. இதனால் பாடும் திறமையும் குரல் வீச்சும் பயில் முறை நடிகர்களுக்கு முக்கியத் தகுதியாகக் கொள்ளப்படவில்லை.
விளைவாக, நாடகத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிராத வர்கள், தங்கள் ஓய்வு நேரத்தில் நாடகக் கலையில் புகழ்பெற விரும்பி, பயில் முறை சபா நாடகங் களில் ஈடுபடத் தொடங்கினர். வழக்கறிஞர்கள், அரசாங்க உயர் பொறுப்பில் இருப்பவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஆங்கிலக் கல்விப் பெற்று அரசாங்கப் பணிகளில் கைநிறைய சம்பாதித்து வந்த மேட்டுக்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கலை ஆர்வமுடன் பயில் முறையில் நடிக்க முன்வந்தனர்.
இவ்வாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபாடு கொள்ளவும், சபா நாடகம் என்கிற இவ்வகையில் பல புதிய குழுக்கள் உருவாகவும் காரணமாக அமைந்தவர்தான் பம்மல் சம்பந்த முதலியார். அப்பா தமிழாசிரியர், அவரே பல நூல்களின் பதிப்பாளர் என எழுத்து, இலக்கியத்துடன் இணைந்திருந்த குடும்பச் சூழ்நிலை, சம்பந்தனாரை இளம் வயதிலேயே ஏராளமான தமிழ், ஆங்கில நூல்களை வாசிக்க வைத்தது.
அதனால் அவர் 15 வயதிலேயே எழுதவும் தொடங்கினார். பள்ளி, கல்லூரியில் தமிழ், ஆங்கில நாடகங்களில் ஆர்வமுடன் நடித்தார். அதன் தொடர்ச்சி யாக, 20வது வயதிலேயே 1891இல் மதராஸ், ஜார்ஜ் டவுனில் ‘சுகுண விலாச சபா’ என்கிற பயில் முறை நாடகக் குழுவைத் தொடங்கினார்.
மேலைக் கதைகளின் தாக்கம்: முதல் முயற்சியாக ‘ஸ்திரீ சாகசம்' என்கிற கம்பெனி நாடகமொன்றைத் தழுவி, உரைநடை வடிவில் எழுதி, ‘புஷ்பவல்லி’ என்கிற தலைப்புடன் அதை அரங்கேற்றி நடித்தார். பின்னர், ‘லீலாவதி - சுலோசனா’ என்கிற தனது முதல் நாடகத்தை அவர் எழுதி தனது 24வது வயதில் நடித்து அரங்கேற்றம் செய்தார்.
ஒரே இளவரசனைக் காதலிக்கும் இரண்டு சகோதரிகளின் கதை இது. பிரெஞ்சு தேசத்திலிருந்து 16ஆம் நூற்றாண்டில் புறப்பட்டு, உலகின் அனைத்து மொழிகள், பண்பாட்டிலும் சிறு சிறு மாற்றங்களுடன் இடம்பிடித்து, நிலங்களைக் கடந்த கதையாக மாறிய ‘சிண்ட்ரெல் லா’வின் கதையைத்தான் சம்பந்தம், ‘லீலாவதி - சுலோசனா’வாக இந்தியப் புராணிகத் தன்மையுடன் படைத்தார்.
முதல் நாடகம் மட்டுமல்ல, பம்மலாரின் பெரும் பாலான நாடகங்கள் மேலைக் கதைகளின் தாக்கத்தில் இந்தியத் தன்மையுடன் ‘மூன்று அங்க முறை’யில் எழுதப்பட்டவைதான். அப்படிப்பட்டவரை ஆங்கிலேய மகாகவி ஷேக்ஸ்பியரின் நாடகங் கள் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.
அவருடைய உலகப் புகழ்பெற்ற நாடகங்களில், ‘Hamlet’ நாடகத்தை ‘அமலாதித்யன்’ என மொழிபெயர்த்தார். ‘As You like it’ நாடகத்தை ‘நீ விரும்பியபடியே..’ ஆக்கினார். ‘Macbeth’ நாடகம் அவரால் ‘மகபதி’யானது. ‘Cymbeline’ நாடகம் ‘சிம்மளநாத’னாகவும் ‘Merchant of Venice’ நாடகம் ‘வணிபுர வாணிக’னாகவும் உருவெடுத்து மேடையேறி மேட்டுக்குடி ரசிகர் களை வெகுவாகக் கவர்ந்தது.
ஆங்கில நாடகங்களைத் தமிழ்ப்படுத்தியபோது மூல நாடகங்களின் மையக் கருவும் அதன் உணர்ச்சித்தன்மையும் குன்றாதவாறு பார்த்துக்கொண்டார். அதேநேரம், கற்பனையான முடியாட்சி காலத் தையும் இந்திய, ஆசிய நிலப்பரப்பையும் அதற்கேற்பக் கதாபாத்திரங் களுக்கு இந்திய, தென் னிந்தியத் தன்மையுடனும் பெயர்களைச் சூட்டி, ஷேக்ஸ்பியரின் கதா பாத்திரங்களுடைய பூர்வாசிரமத்தை மாற்றினார்.
பம்மல் சம்பந்தரின் குறுக்கீடு: ஆங்கில நாடகங்கள் மீது ஏற்பட்ட ஈர்ப்பைப் போலவே, இந்தியப் புராண மரபில் தமிழில் அதிகமும் எடுத்தாளப்படாத கதைகளையும், எடுத்தாளப்பட்டு தேய்மானம் கண்ட கதைகளையும் புதிய நோக்கில் நாடகங்களாகப் படைத்தார். அவற் றில் அவருடைய ‘சந்திர ஹரி’ நாடகத்தை, ஒரு வெற்றிகரமான இளம் வழக்கறிஞர், எவ்வாறு 20ஆம் நூற்றாண்டின் தமிழ் நாடகப் பரப்பில் ஓர் அதிரடியா னக் குறுக்கீடாக நிகழ்த்திக் காட்டினார் என்பற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
அதுவரை தெருக்கூத்து மரபிலும் பின்னர் கம்பெனி நாடக மரபிலும் விடிய விடிய நிகழ்த்தப்பட்டு வந்த ‘ஹரிச்சந்திரா’ நாடகத்தின் கதை, தலைப்பு ஆகியவற்றைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு, பொய்யை மட்டுமே பேசுபவனாகச் சந்திர ஹரியைச் சித்தரித்திருந்தார்.
இதுபோன்ற அங்கதமும் எள்ளலும் மிகுந்த அவரது நாடக அணுகுமுறையைப் பின்பற்றி, பின்னாளில் சுயமரியாதை, திராவிட இயக்க நாடகக் கலைஞர்கள் புகழ்பெற்ற புராணக் கதைகளை ‘உல்டா’ நாடகங்களாக உரு வாக்கிப் பகுத்தறிவுப் பிரசாரம் செய்வதற்கான தொடக்கப் புள்ளி என ‘சந்திர ஹரி’யைக் கூறலாம்.
ஒரு கட்டத்தில் சமூகக் கதைகளை நோக்கி நகர்ந்த பம்மல் சம்பந்தம், ‘தாசிப்பெண்’, ‘மனோகரன்’, ‘உத்தம பத்தினி’, ‘சபாபதி’, ‘இரண்டு நண்பர்கள்’, ‘கள்வர் தலைவன்’, ‘முற்பகல் செய்யின் பி்ற்பகல் விளையும்’, ‘இந்தியனும் ஹிட்லரும்’, ‘கலையோ காதலோ’ உள்ளிட்ட பல தொழில்முறை நாடகங்களை எழுதி, அவற்றை பயில் முறை என்கிற நிலையிலிருந்து உயர்த்தி, வெற்றிகரமான தொழில்முறை நாடகங்களாக நடத்திக்காட்டினார்.
அவற்றில் பம்மலார் தனது பதிப்பாக எழுதிய ‘மனோகரா’, 70 ஆண்டுகளைக் கடந்து தமிழ் நாடக மேடையில் ஆயிரத்துக்கும் அதிகமான முறை நிகழ்த்தப்பட்டு, தொடர்ந்து செல்வாக்கு செலுத்தியது. அதை நடத்தாத நாடக சபாக்களோ, கம்பெனிகளோ இல்லை. பின்னாளில் கலைஞரின் கதை வசனத்தில் ‘மனோகரா’ திரைப் படமாக வெளிவந்தது.
காங்கிரஸ் ஆட்சிக்கு மாற்றாக ‘பராசக்தி’ திரைப்படம் திரைவெளியில் முன்னெடுத்த திராவிட அரசியலை, ‘மனோகரா’ முன்னகர்த்தியது. பம்மலாரின் பங்களிப்பு இத னோடு முடிந்துபோனதா என்றால் இல்லை… அவர் தமிழ் சினிமாவுக்கும் பல வகையிலும் படியளந்தார். குறிப்பாக, அவர் திரைக்கதை சொல்லிக்கொடுத்த விதம்.. அக்கால கட்டத்தின் அரிய நிகழ்வு..
(விழிகள் விரியும்)
- jesudoss.c@hindutamil.co.in