அமெரிக்காவின் மிக்ஷிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகத் திரைப்படக் கல்வியைப் பயிற்றுவித்து வருபவர் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன். தமிழ், இந்திய சினிமா வரலாற்றுக்குத் தன்னுடைய ஆய்வெழுத்துகளின் வழியாகத் தொடர்ந்து செழுமை சேர்த்து வரும் இவரின் புதிய நூல் ‘ஆளுமைகள் எனும் ஆடி’. தமிழின் குறிப்பிடத்தக்க ஆவணப்பட இயக்குநராகவும் இயங்கிவரும் இவர், கடந்த 2019இல் வெளியான ‘கட்டுமரம்’ என்கிற சுயாதீனத் திரைப்படத்தின் மூலம், ஓர் இயக்குநராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது தன்னுடைய சொந்தக் கிராமத்தைக் கதைக் களமாகக் கொண்டு ‘தங்கம்’ என்கிற தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்து தமிழ் திசைக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல்:
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், திரைப்படக் கல்வியைப் பன்னாட்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்.
மாணவர்கள் இன்று ‘மின்னணுக் குழந்தைகள்’ ஆக இருக்கிறார்கள். ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற கருவிகளை உடலின் அங்கம்போல் நினைக்கிறார்கள். ஓர் உலக சினிமா குறித்தோ, அதன் இயக்குநர் பற்றியோ, அப்படம் உருவான மேக்கிங் வீடியோ வைக் காட்டி அவர்களுடைய அலை பாயும் மனதைக் கட்டுக்குள் கொண்டு வர அக்கருவிகளே உதவவும் செய் கின்றன.
அதேநேரம், ஒரு பாடத்தை அவர்களால் ஆழ்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நாம் முயற்சி எடுக்கும் போது, இக்கருவிகளின் சாளரங்கள் அவர்களைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. நான் இருபது ஆண்டுகளுக்கு முன் பன்னாட்டு மாணவர் களுக்குக் கற்பிக்கத் தொடங்கிய காலத்தில் அரிதான படங்களைக் காணும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
இன்று, ‘டிஜிட்டல் ரெஸ்டோரேஷன்’ காரணமாக அத்தகைய அரிதான படங்களும் கிடைக் கின்றன. தவிர இன்று சப் டைட்டில்களுடன் கிடைக்கும் எந்தவொரு சிறந்த படத்தையும் உலகின் எந்த மூலையிலிருந்தும் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டிப் பாடம் நடத்த முடிகிறது. டிஜிட்டல் யுகம் மாணவர் களுக்குப் பெரிய ‘எக்ஸ்போஷர்’ ஆக இருந்தாலும் ஆழமாகக் கற்பதில் அவர்களுக்கு ஈடுபாட்டை உருவாக்க ஓர் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது.
‘விளாகர்’களுக்குக் கிடைக்கும் கவனம், ஆவணப்படங்களுக்குக் கிடைப்பதில்லை. ஓர் ஆவணப்பட இயக்குநராக இந்தப் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மிகுந்த அர்ப்பணிப்புடன் உரு வாகும் ஆவணப்படங்கள் தமிழில் தற்போது அதிகரித்திருக்கின்றன. ஆர்.பி.அமுதன் போன்ற ஆவணப் படச் செயற்பாட்டாளர்கள், ஆவணப்படங்களை மக்களிடமும் மாணவர் களிடமும் எடுத்துச்செல்ல ஆண்டு முழுவதும் ஆவணப்பட விழாக்களை நடத்துகிறார்கள். இதில் ஆவணப்பட இயக்குநர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்களுடன் உரையாடுகி றார்கள். இந்தத் தொடர்ச்சியான செயல்பாடு, ‘விளாகர்’களையும் மெல்ல மெல்லத் தரமான பாதைக்கு நகர்த்தும் என நான் நம்புகிறேன்.
அதற்குக் காலமெடுக்கலாம். இன்று நெட்ஃபிளிக்ஸ் மாதிரியான ஓடிடி தளங்கள், ஆவணப்படங்களுக் கென்றே தனி ‘பிரிவு’க்கு இடமளித் திருக்கின்றன. இது, திரைப்படம், இணையத் தொடர்களைப் போலவே ஆவணப்படங்களையும் காணும் வாய்ப்பைப் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. ‘அமெரிக்கன் ஃபேக்டரி’ போன்ற பிரபலமான ஆவணப் படங்களை நெட்ஃபிளிக்ஸ் தானே தயாரிக்கவும் செய்து வருகிறது.
அவர்களுக்கு இருக்கும் பொருளா தார வசதி, ஆஸ்கர் வரை அதை எடுத்துச் சென்று விருதையும் வென்று விடுகி றார்கள். ஆனால், சீரிய சிந்தனையுடன் சமூக மாற்றத்தை, கவனத்தைக் கோரும் பொதுவான ஆவணப்பட இயக்கத்துடன் இந்த மாற்றத்தை, ஒப்பிட முடியாது.
ஆவணப்பட இயக்குநர்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு கிடைக்கும்விதமாக அரசுகளும் ஓடிடி நிறுவனங் களும் தொலைக்காட்சிகளும் பட விழாக்களும் அவர்களை நிபந்தனையற்று ஆதரிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் செல்லூலாய்டு காலத்திலிருந்து இன்றைய டிஜிட்டல்யுகம் வரை பொது ஆவணப்பட இயக்கத்தில் இயங்கும் படைப் பாளிகள், செயற்பாட்டாளர்களுக்கு இருந்துவரும் சவால்கள் நீங்கும்.
விடுபட்ட சினிமா வரலாற்றை மீளாய்வு செய்து எழுதுதல் என்கிற உங்களின் செயல்பாட்டுக்கான உந்துதலைத் தந்தது எது?
திரைப்படக் கல்வி என்று வரும்போது அதில் சினிமா வரலாற்றை அறிந்து கொண்டு, சினிமா உருவாக்கத்தை மாணவர்கள் கற்பது முக்கிய மானது என நினைக் கிறேன். கடந்த காலத்தின் படைப்புகள், படைப்பாளிகள், அவர்கள் இயங்கிய படத் தயாரிப்பு மையங்கள், அவை பின்பற்றிய பட உருவாக்க முறை, ஆகியவற்றை ஆய்வு செய்து கற்பிப்பதன் வழியாக ஒரு மொழியின் சினிமா எவ்வாறு அதன் பண்பாட்டை, அழகியலைப் பிரதி பலிக்கும் கண்ணாடியாக விளங்கியது என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.
அதைத் தற்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். ‘மெட்ராஸ் ஸ்டுடியோஸ்’ (Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema) என்கிற எனது ஆய்வு நூலில் 1947க்கு முன்பு பத்தாண்டுகள் அதன்பிறகு பத்தாண்டுகள் தமிழ் சினிமாவை ஆய்வு செய்து வெளியிட்டேன். அதைப் பன்னாட்டு மாணவர்களுக்குக் கற்பித்தபோது நல்ல வரவேற்பு இருந்தது.
உங்களுடைய ‘கட்டுமரம்’ படத்துக்குச் சர்வதேசப் படவிழாக் களில் கிடைத்த வரவேற்பு பற்றிக் கூறுங்கள்..
நண்பர்கள் மிஷ்கின் மற்றும் அருண்மொழி உதவியுடன் எடுத்த ‘கட்டுமரம்’ சர்வதேச அளவில் 50 முக்கியமான திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுத் திரையிடலும் பாராட்டுகளும் பெற்றது.
படத்தைப் பார்த்த என்னு டைய மாணவர்களில் ஒருவர், ‘இதை ஏன் நீங்கள் எல்.ஜி.பி.டி.க்யூ’ திரைப் பட விழாக்களுக்கு அனுப்பக் கூடாது என்று கேட்டார். அவர் குறிப்பிட்டதை ஏற்று உலகின் மிக முக்கியமான பால் புதுமையினர் படவிழா என்று பார்க்கப்படும் கலிபோர்னியாவின் ‘ஃபிரேம்லைன்’ (Frameline) ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு அனுப்பினேன்.
அங்கே அதிகாரபூர்வமாகத் தேர்வு பெற்று இரண்டு முறை ‘பிரைம் டைம்’ நேரத்தில் திரையிடப் பட்டது. உலகின் பிரபலமான மற்ற பால் புதுமையினர் பட விழா இயக்குநர்கள் எல்லாம் ‘ஃபிரேம்லைன்’ படவிழாவில் ‘கட்டுமரம்’ படத்தைப் பார்த்ததால், அதைத்தங்கள் படவிழாவுக்கு வரவேற்றார் கள். இப்படிக் ‘கட்டுமரம்’ படத்தின் உலகப் பயணம் தொடர்ந்தபடி யிருக்கிறது.
தற்போது நீங்கள் இயக்கி முடித் துள்ள ‘தங்கம்’ படம் குறித்துக் கூறுங்கள்..
எனது சொந்த ஊர் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வழுதூர். அங்கும் விக்கிரமசிங்க புரத்திலும் படமாக்கப்பட்டது. காணாமல்போன தன்னுடைய அக்காவைத் தேடி ஒரு கிராமத்துக்கு வரும் பெண் காவலரைச் சுற்றிப் புனையப்பட்டிருக்கும் கதை. க்ரைம் படங்களுக்குப் பெயர்போன பிரெஞ்சு இயக்குநரான சாப்ராலுக்கு அஞ்சலியாகவும் இப்படம் அமைந்துள்ளது. தங்கம் என்கிற பெண் போலீஸாக முதன்மைக் கதாபாத்திரத்தில் ஃபர்சானா பழங்கல் நடித்திருக்கிறார். அவருடைய காதலன் மாயன் ஒரு சினிமா காதலன்.
மாயனாக ராஜீவ் ஆனந்த் நடித்தி ருக்கிறார். இன்னும் சில முக்கியமான கதாபாத்திரங்களில் விஜி, ஜீவா செம்மலர், பிரபலப் பாடகி மாளவிகா சுந்தர், தம்பி பிரபாகரன், நேதாஜி எனப்பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்து குமார்.
இசையமைப்பாளர் திவாகர் சுப்ரமணியன். ஒலியமைப்பை கணேஷ் நந்தகுமாரும் கலை இயக்கத்தை பிரதீப் செரியனும் கையாண்டிருக்கி றார்கள். நான் அமெரிக்கா புறப்படுகிறேன். படத்தின் பின் தயாரிப்பு வேலை கள் அனைத்தையும் ‘ஆன்லைன்’ வழியாகச் செய்துகொள்வது என்று திட்டமிட்டிருக்கிறோம். வெகு விரை வில் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடுவோம்.
- jesudoss.c@hindutamil.co.in