பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், 90க்கும் அதிகமான நேரடி, தழுவல், மொழிபெயர்ப்பு நாடகங்களை ‘உரைநடை’ வடிவில் எழுதி, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த பங்கை வகித்தவர் பம்மல் சம்பந்த முதலியார். அதேபோல் தமிழ் சலனப் படக் காலத்திலும் பின்னர் பேசும் படக் காலத்தின் முதல் பத்தாண்டுகளிலும் திரையுடனான அவரது தொடர்பு, அவருடைய நாடகங்கள் திரைக்கு இடம்பெயர்ந்ததன் வழியாக உருவானது.
1932இல் அவருடைய நாடகங்களில் ஒன்றான ‘காலவாரிஷி’ படமானதில் தொடங்கி, ஏவி.மெய்யப்பன் உருவாக்கத்தில் 1948இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘வேதாள உலகம்’ படம் வரை, பம்மலாரின் பங்களிப்பை அடுத்து வரும் அத்தியாயத்தில் விரிவாக மதிப்பிடலாம். அதற்குமுன் தனது கலை வாழ்க்கை அனுபவங்களைப் பல நூல்களாக விரிவாக எழுதி ஆவணப்படுத்திய வகையில் நாடக வரலாற்றுக்கு அரும்பணி செய்திருக் கிறார். அதற்காக அவர் என்றும் போற்றுதலுக்குரியவர் ஆகிறார்.
ஆனால், ஆண்மைய உலகமாக விளங்கிய தமிழ் நாடக உலகில் நுழைந்து, அதிர்வலைகளை உரு வாக்கிய பாலாமணி அம்மாளின் பங்களிப்பை அவர் குறைத்து மதிப்பிட்டுள்ளார். ‘நான் கண்ட நாடகக் கலைஞர்கள்’ என்கிற தனது நூலில் ஒரு துணுக்குத் தகவலைப் போல் பாலாமணியின் பங்களிப்பை, பம்மல் சம்பந்தம் புறக்கணிப்புடன் கடந்து சென்றிருப்பது வரலாற்று மாணவர் களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடும்.
ஏனென்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சுமார் 25 ஆண்டுகள் நாடக உலகில் புகழ்க்கொடி நாட்டி யவர் பாலாமணி அம்மாள். தன்னுடைய சகோதரியான ராஜாம்பாளுடன் இணைந்து, கைவிடப்பட்ட தேவரடியார்ப் பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்விதமாக முழுவதும் அவர்களைக் கொண்டே தனது நாடகக் கம்பெனியை அமைத்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.
பரதத்தை ஜனநாயகப்படுத்துதல்! - பெண்களைத் தெய்வத் தொண்டுக்கு அர்ப்பணிக்கும் சமய வழக்கம் காரணமாக, 10 முதல் 12 வயதிலேயே ‘பொட்டுக்கட்டுதல்’ என்கிற சடங்கின் மூலம் கோயிலில் உறையும் கடவுளுக்குப் பெண்கள் பலர் மனைவியாக்கப்பட்டனர். அவர் களுக்கு இசையும், சதிர் நடனமும் கற்பிக்கப்பட்டன. இப்பெண்கள் ‘தேவரடியார்’ என்கிற மதிப்புடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுமங்கலிகளாகவும் புனிதத் தன்மை யோடும் நடத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
ஆனால், கோயில் நிர்வாகம் மன்னரின் நேரடிக் கட்டுப்பாட்டி லிருந்து ஊர்த் தலைவர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டபோது, தங்களின் அன்றாட வாழ்க்கைப்பாட்டுக்கு அவர்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதுதான் அவர்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகத் தொடங்கினர். அவர்களிடம் சதிர் (பரதம்), சங்கீதம் (தமிழிசை, கர்னாடக சங்கீதம்), வீணை வாசிப்பு எனப் பல உயர்ந்த கலைகள் சிறந்துவிளங்கியபோதும் ஆண் மையச்சமூகம் அவர்களைக் கலைஞர் களாகப் பார்க்காமல் கீழான நிலைக்குத் தள்ளியதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது.
மெல்ல மெல்லச் சமூகச் சீர் திருத்தம் அடைந்து வந்த பிரிட்டிஷ் இந்தியாவில், இக்காட்டுத்தளையி லிருந்து பெண்களை மீட்டெடுக்கப் போராடினார் ஓர் ஐரிஷ் பெண்மணி. அவர்தான் ஏமி கார்மைக்கேல் (Amy Carmichael). அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏமி, 24 வயதில் இலங்கையில் சமயப்பணி செய்ய அனுப்பப்பட்டு, பின்னர் பெங்களூரு வில் சில ஆண்டுகள் பணிபுரிந்த பின்தமிழ்நாட்டுக்கு வந்தார்.
தேவரடி யாராக ஆக்கப்பட்ட பெண்களும் அவர்களின் பெண், ஆண் குழந்தை களும் சமூகத்தில் படும் பாட்டையும் கண்ணுற்ற அவர், அவர்களுக்குக் கல்வியும் மருத்துவமும் கொடுக்கும் நோக்குடன் திருநெல்வேலி அருகேயுள்ள டோனாவூரில் காப்பக மும் மருத்துவமனையும் 1913இல் அமைத்தார்.
ஆதிக்கவாதிகளின் எதிர்ப்பைச் சட்டை செய்யாமல் கோயில்களிலிருந்து பெண்களையும் சிறார்களையும் மீட்டு, காப்பகத்துக்கு அழைத்து வந்தார். இதனால், பல கோயில்களிலிருந்து தேவரடியார் பெண்கள் வெளியேறி ஏமி கார்மைக் கேலின் காப்பகத்தில் சேர்ந்து கல்வி பெற்றனர். ஏமியின் செயல்பாடுகளை அறிந்த பாலாமணியம்மாள், தன்னை ஆதரித்து வந்தவரின் மறைவுக்குப் பிறகு, ஏமியைச் சந்தித்து தன் நகைகளின் ஒரு பகுதியை அவருடைய காப்பகத்துக்கும் மருத்துவமனைக் கும் தானமாக வழங்கினார்.
ஏமியின் முன்மாதிரியைக் கண்டு தாக்கம் பெற்ற பாலாமணி, நிராதரவான தேவரடியார் பெண்களுக்குத் தன்னுடைய அரண்மனையில் அடைக் கலம் கொடுத்தார். திருமண வயதை எட்டியிருந்த பெண்களுக்குத் தன்னுடைய சொந்தச் செலவில் திருமணம் செய்துவைத்து சமூகப் புரட்சி செய்தார். இதற்காக அவர் கடும் எதிர்ப்பையும் சந்தித்தார்.
பொதுக் காரியங்களுக்கும் கோயில் திருப்பணிகளுக்கும் வாரி வழங்கி, எதிர்ப்ப வர்களின் வாயை அடைத்தார். இதன்பிறகு பாலாமணி செய்தது தான் பெரும் கலைப் புரட்சி. கோயில் அம்பலத்திலும் அரண்மனையிலும் சிக்கிக் கிடத்த பரதத்தைப் பொது வெளியில் நிகழ்த்தத் தொடங்கினார்.
பரதக் கலையை ஜனநாயகப் படுத்திய அவரின் இந்த முக்கிய நகர்வு, அக்கலையின் மீதான மரியாதையைச் சுடர்விடச் செய்தது. பாலாமணி சகோதரிகளின் சதிர் கச்சேரிகள் புகழ்பெறத் தொடங்கின. நாடகங்கள் தொடங்குவதற்கு முன் சதிர் கச்சேரி நிகழ்த்த சகோதரிகள் அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு நல்ல சன்மானத்தையும் நாடகக் கம்பெனிகள் வழங்கின. தனது துணிச்சலான முதல் நகர்வுக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்தே அவர் ‘பாலாமணி நாடகக் கம்பெனி’யை நிறுவினார்.
ஆண்களின் வேடத்தில்.. கம்பெனி தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில், பழமையான சம்ஸ் கிருத நாடகங்கள் பலவற்றுக்கு மேடை வடிவம் கொடுத்து சம்ஸ் கிருத மொழியிலேயே அவற்றை மேல்தட்டுப் பார்வையாளர்களுக்காக நடத்தினர். அதில் புகழ்பெற்று விளங்கிய ‘தாரா ஷஷாங்கம்’ நாடகத்தை அவர் தமிழில் நடத்திய போது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பெரும் சர்ச்சையும் உருவானது.
தாரா எனும் தேவலோகப் பெண், தான் பெற்ற சாபத்தால் பூமியில் ஒரு நாட்டின் இளவரசியாகப் பிறக்கிறாள். சாப விமோசனம் பெற்று தேவலோகம் திரும்பத் தனது காதலன் சந்திரனின் (ஷஷாங்க்) முன்னாள் முழு நிர்வாணமாக நின்று அவனுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும்.
இந்த நாடகத்தில் தாராவாக நடித்த பாலாமணி, நிர்வாணக் காட்சியின் போது, பெட்ரோமாக்ஸ் விளக்கால் ஒளியூட்டப்பட்ட வெள்ளைத் திரைக்குப் பின், ஆடையில் லாமல் நிற்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கி நடித்தார். இக்காட்சியில் ஆபாசம் ஏதுமின்றி, ஒளியையும் திரையையும் திறம்படப் பயன் படுத்திய பாலாமணியின் அரங்கத் தொழில்நுட்பத் திறமையே வெளிப்பட்டது. இக்காட்சியைப் பற்றிய பேச்சுப் பரவி, மதராஸ் மாகாணத்தின் பல ஊர்களிலிருந்து ‘தாரா ஷஷாங்கம்’ நாடகத்தைக் காண கும்ப கோணத்துக்கு நாடக ரசிகர்கள் படையெடுத்தனர்.
இதையடுத்து, பிரிட்டிஷ் அரசு மயூரத்திலிருந்து (மயிலாடு துறை) ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்கிற பெயருடன் சிறப்பு ரயில் சேவையை நடத்தியது. நாடகத்தின் வெற்றியும் அது பேசுபொருளானதும் ஆதிக்கசாதியினரின் நிம்மதியைப் பறித்தது. அவர்கள் நேரம் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர். பாலாமணி இறந்து 10 ஆண்டுகள் கழித்து அந்த நாடகத்தைத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தடை செய்தனர்.
பாலாமணியின் நாடகச் சாதனை களில் ‘டம்பாச்சாரி விலாசம்’ என்கிற முதல் சமூக நாடகத்தை நடத்தியது மட்டுமல்ல; ஆண்கள் நடித்து வந்த பல வேடங்களை ஏற்று நடிக்கும் பெண் நடிகர் என்கிற வழக்கத்தைத் தொடங்கி வைத்தப் பெருமையையும் அவரே தட்டிச் சென்றார். ‘டம்பாச்சாரி’ விலாசம் நாடகத்தில் இளம் டம்பாச்சாரியாகவும் பம்மல் சம்பந்தம் எழுதிய ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாகவும் ஆண் வேடம் தரித்து நடித்தவர் பாலாமணி.
கலைவாழ்வின் இந்தச் சாதனைகளுக்கு மணி மகுடமாக, தனது பொது வாழ்க்கையில் கருணை மிகுந்த பெண்ணாக விளங்கிய பாலாமணி, ஏமி கார்மைக்கேலின் பணிகளைப் பார்த்து அவருக்கு உதவி யதுடன், தேவரடியார் பெண்களைச் சிறந்த கலைஞர்களாக உரு வாக்கியது சமூகத்தின் மனதில் தேவரடியார் குறித்த களங்கத்தையும் இறுக்கத்தையும் குறைத்தது.
இந்த இரண்டு புரட்சிப் பெண்களின் தொடக்கச் செயல்பாடுகள், இரு பத்தாண்டு களுக்குப் பின்னர் டாக்டர் முத்துலட்சுமி முன்னெடுத்து சட்டமன்றத்துக்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்திய ‘தேவதாசி ஒழிப்புச் சட்ட முன்வரைவு’ பின்னாளில் சட்டமானது. இது சுதந்திர இந்தியாவின் சமூக வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல். தேவதாசி ஒழிப்புச் சட்டங்களை 50களுக்குப் பின் பல மாநிலங்கள் நிறைவேற்ற தமிழகமே இந்தியாவுக்கு வழிகாட்டியது.
விழிகள் விரியும்