இந்து டாக்கீஸ்

விஜயகாந்திடமிருந்து விஜய்க்கு வந்த கதை! | ப்ரியமுடன் விஜய் - 11

Guest Author

ஈரம் வற்றாத கீழ தஞ்சையின் கோயில் நகரமான குடந்தைக்கு அருகருகில் அமைந்துள்ள இரண்டு ஊர்கள் நல்லமாங்குடி - கயத்தூர். தமிழ் சினிமாவுக்குப் புத்தொளி பாய்ச்சிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்து, வளர்ந்தது நல்லமாங்குடி என்றால், காதலை திரை வெளியில் கௌரவம் செய்த இயக்குநர் எஸ்.எழில் பிறந்து, வளர்ந்தது கயத்தூர். எழில் எழுதி, இயக்கி 1999இல் வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ விஜய்க்கொரு ஜாக்பாட் திரைப்படம். அதுவரை பல காதல் கதைகளில் நடித்திருந்தாலும், விஜயை ஒரு காவியக் கதாநாயகன் ஆக்கியது, கதையும் இசையும் பின்னிப் பிணைந்திருந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’.

சினிமாவில் பாடகன் ஆகும் ஆசையுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தவன் குட்டி. அவன் வீட்டருகே புதிதாகக் குடியேறுகிறாள் கல்லூரி மாணவியான ருக்மணி. குட்டியைப் பார்த்திராத அவள், அவன் குரலுக்கும் பாடல்களுக்கும் மனதில் இடம் கொடுக்கிறாள். ஆனால், அவன்தான் குட்டி என்பது தெரியாமலேயே அவனை ஒரு கெட்டவன் என நினைத்துக் கொள்கிறாள். சூழ்நிலைகளும் அதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. ஒரு கட்டத்தில் ருக்மணி பார்வை இழக்கக் குட்டியே காரணமாகிவிடுகிறான். ருக்மணியை உயிருக்கு உயிராக மனதில் வரித்துக்கொண்ட அவன், அதன்பின்னர் அவளுக்காக என்ன செய்கிறான், குட்டியை ருக்மணி எப்போது அடையாளம் கண்டாள் என்பதுதான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் கதை. கடந்த 25 ஆண்டுகளாக வயது வேறுபாடின்றி அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் அந்தப் படம் உருவான நாள்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் எஸ்.எழில்:

“ஆட்டோமோபைல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு, சினிமா கனவுடன் சென்னைக்கு வந்தேன். கதை, வசன கர்த்தாவாகப் பெரும் சாதனை படைத்த என்.பிரசன்ன குமாரின் பரிந்து ரையில் இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகரன் இருவரிடமும் அடுத்தடுத்து பணியாற்றினேன். அதன்பின்னர் ‘சக்கரை தேவன்’ என்கிற பிரம்மாண்டப் படத்தை இயக்கிய ஜெ.பன்னீர் தொடங்கி, புதுமைகளின் காதலர் ராதா கிருஷ்ணன் பார்த்திபன் சார் வரை பல இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவத்துக்குப் பின் படம் இயக்கத் தயாரானேன்.

வெற்றிகளைக் குவித்த ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. ஆனால், எப்படிக் கதை சொன்னால் மக்களுக்குப் பிடிக்கும் என்பதில் வெற்றி இயக்குநர்கள் அனைவரும் ‘ஜனரஞ்சகம்’ என்கிற ஒற்றைப் புள்ளியில் சந்திப்பவர்கள். இந்த அம்சத்தை மனதில் வைத்துக்கொண்டு நான் எழுதிய கதைதான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. மனிதத் துயரங்களை நகைச்சுவை எனும் கேன்வாஸில் வார்த்து பல மாஸ்டர் பீஸ் படைப்புகளைத் தந்த மகா கலைஞன் சார்லி சாப்ளின். அவருடைய ‘சிட்டி லைட்ஸ்’ படத்தின் இன்ஸ்பிரேஷனில் நான் எழுதியதுதான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. திரைக்கதை தயாரானதும் பிரபு, கார்த்திக் தொடங்கிப் பல பெரிய ஹீரோக்களிடம் கதை சொன்னேன்.

‘சக்கரை தேவ’னில் தொடங்கி கேப்டனும் இப்ராஹிம் ராவுத்தரும் எனக்கு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர். அந்த உரிமையில் கேப்டனிடம் இந்தக் கதையைச் சொன்னேன். அவர், ‘நீ இதை ராவுத்தரிடம் சொல்’ என்றார். ராவுத்தர் கதையைக் கேட்டுவிட்டு, ‘விஜி.. இப்போ மாஸ் எண்டெர்டெயினர் பண்ணிக்கிட்டு இருக்கிறார். இந்தக் கதையை யாராவது யூத் ஸ்டார் பண்ணினா செம்மையா இருக்கும்’ என்று கரெக்டாகச் சொன்னார். பாண்டியராஜன் சாரிடம் சொன்னேன். அவர், என்னை குஷ்பு மேடத்திடம் அனுப்பினார். அவருக்குப் போய்ச் சொன்னதும் கதை ரொம்பப் பிடித்துப் போய், என்னை இரண்டு பட நிறுவனங்களுக்கு அனுப்பினார். அந்த நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள் கதையைக் கேட்டுவிட்டு, ‘கண் தெரியாத கதாநாயகி என்பது நெகட்டிவ் கேரக்டராக இருக்கிறது’ என்று ரிஜெக்ட் செய்தார்கள்.

சரி.. இனி பெரிய ஹீரோக்கள் கிடைக்க மாட்டார்கள்; வடிவேலுவை வைத்து இந்தக் கதையை இயக்கிவிடுவோம் என்று முடிவு செய்தேன். ‘சக்கரை தேவ’னில் தொடங்கி அவரும் பழக்கமாகியிருந்தார். அவர் கதையைக் கேட்டுவிட்டு, ‘ஜென்டில்மேன்’ தயாரிப்பாளர் குஞ்சுமோனிடம் கதை சொல்ல அனுப்பினார். அதுவும் தாமதமானது. அப்போதுதான் என்னுடைய நண்பர்கள், ‘இந்தக் கதையில் கமர்ஷியல் சேர்த்தால், யூத் ஹீரோக்களுக்குப் பிடித்துவிடும்’ என்றார்கள்.


அதன்பிறகு திரைக்கதையில் மீண்டும் மாற்றங்கள் செய்துவிட்டு, பிரசாந்த்திடம் கதை சொல்லிவிட்டுக் காத்திருந்தேன். அதுவும் நகரவில்லை. இந்தச் சமயத்தில்தான் சூப்பர்குட் பிலிம்ஸ் சௌத்ரி சாரிடம் கதை சொல்லும் ஒரு வாய்ப்பை ‘டிராக்’ சுரேஷ் சார் ஏற்படுத்திக்கொடுத்தார். கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. முரளியை வைத்து அந்தப் படத்தைச் செய்வது என்று முடிவெடுத்தார். ஆனால், திடீரென்று முரளிக்கு கதை பிடிக்காமல் போக, ‘என்னையா இது.. இவ்வளவு நல்ல கதையை இப்படி ஆளாளுக்கு ரிஜெக்ட் பண்றாங்க!?’ என்று நூற்றுக்கணக்கான கதைகளைக் கேட்ட அனுபவம் கொண்டவரான சௌத்ரி சார் சொன்னார். பிறகுதான் அவர், ‘விஜயிடம் போய் கதை சொல்லுய்யா.. அவர் என்னதான் சொல்றாருன்னு பார்த்துவிடுவோம்’ என்று அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொடுத்தார்.

கதையைக் கேட்ட விஜய்.. ‘கதை ரொம்ப நல்லா இருக்கு.. நான் சொல்றேன்’ என்றார். விஜய் சொன்ன பதிலை சௌத்ரி சாரிடம் வந்து சொன்னேன். அவர், ‘யோவ்.. நாளைக்கு வா.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து போவோம்’ என்று மறுநாள் பிரசாத் லேப்பில் ரெக்கார்டிங்கில் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரிடம் அழைத்துக்கொண்டு போனார். சௌத்ரி சாரைப் பார்த்ததும் பதறிய எஸ்.ஏ.சி., ‘தம்பி நேத்தே எங்கிட்ட கதை ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டானே!’ என்றார். ‘ஆனா.. அவர் இந்தக் கதையைப் பண்றாரா, இல்லையான்னு சொல்லலையே?’ என்றார் சௌத்ரி சார். உடனே மருத்துவமனையில் இருக்கும் விஜயைப் போய் பார்த்துக் கேட்கும்படி எங்களை அனுப்பினார் எஸ்.ஏ.சி. இடைவிடாத படப்பிடிப்பால் முதுகுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார் விஜய். அவரை ஷோபா அம்மா பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நேரில் போய் பார்த்து நலம் விசாரித்தோம். வலியையெல்லாம் மறந்து எங்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். விடைபெறும்போது ‘கதை ரொம்ப நல்லாயிருக்கு, நான் நடிக்கிறேன் சார்’ என்று சொல்லிக் கைகுலுக்கினார்.

இந்தக் கதையில் சண்டைக் காட்சி வைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், விஜயிடம் கதை சொல்ல சௌத்ரி சார் ஏற்பாடு செய்ததும் இரண்டு சண்டைக்காட்சிகள் வைக்க பொருத்தமான சூழ்நிலைகள் இருப்பதைக் கவனித்து அதை ‘பிக்ஸ்’ செய்து கொண்டேன். ஆனால், கதை சொல்லும்போது விஜயிடம் சண்டைக் காட்சிகள் இருப்பதைச் சொல்லவில்லை. பிறகு ஒரு நாள் விஜய், ‘எனக்கு இரண்டு ஃபைட் வேண்டும்’ என்றார். அதைக் கேட்டு நான் சிரித்தேன். ‘ஏன் சிரிக்கிறீங்க?’ என்றார். ‘இல்ல சார்.. நான் உங்ககிட்ட கதை சொல்லும்போது ஃபைட் இருக்கிறதை சொல்லல’ என்றேன். ‘மறைக்கிறீங்களா..!’ என்று அவரும் சிரித்தார். அப்போது விஜயிடம் ஒரு விஷயம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இவர் இவ்வளவு வளர்ந்த பிறகும் தொடர்ந்து அறிமுக இயக்குநர்களை எப்படி நம்புகிறார். அறிமுக இயக்குநர்களுடன் பணியாற்றும்போது ஏற்படும் சிக்கல்களை எப்படி ஹேண்டில் செய்வார்?! அதை இப்போது நாம் அவருடன் பணியாற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

- எஸ்.எழில்

(ப்ரியம் பெருகும்)

படங்கள் உதவி ஞானம்

SCROLL FOR NEXT