இந்து டாக்கீஸ்

மதுவிலிருந்து விடுதலை! | சினிப்பேச்சு

செய்திப்பிரிவு

இன்றைய முன்னணி இயக்குநர்கள் பலரும் ‘பாட்டில் ராதா’ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்துவிட்டு அப்படத்தைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், இன்று மாநிலத்தின் முக்கியப் பிரச்சினையாகப் பெரும் சீரழிவை உருவாக்கியிருக்கும் மதுப் பழக்கத்துக்கு எதிரான படமாக, அதேநேரம் ரசிக்கத்தக்க விதத்தில் ஒரு பொழுதுபோக்கு படமாகவும் உருவாகியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக் கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக் ஷன்ஸ் - பலூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. தினகரன் சிவலிங்கம் என்கிற புதுமுக இயக்குநரின் படைப்பாக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நான்கு முக்கிய முதன்மைக் கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘குருசோமசுந்தரம் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோய் விட்டேன்’ எனக் கூறியிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். படம் குறித்து அதன் தயாரிப்பாளர், இயக்குநர் பா.ரஞ்சித் கூறும்போது: “இந்தக் கதையை தினகர் என்னிடம் தந்தபொழுது அதிலிருந்த உண்மைத் தன்மை என்னை வெகுவாகத் தாக்கியது. வசனங்கள் இன்றைய நம் வாழ்வுக்கு நெருக்கமான உணர்வைத் தந்தன. இந்தப் படம் ரசிக்க மட்டுமல்ல; மது அருந்துபவர்களிடம் மனமாற்றத்தையும் உருவாக்கும்” என்றார்.

நியூசிலாந்து எதற்காக? - ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் - 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் மூத்த நடிகர் மோகன் பாபு பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள பான் இந்தியப் படம் ‘கண்ணப்பா’. சைவ மதத்தின் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பரின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படத்தில், ‘டைட்டில்’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதுடன், படத்துக்கான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார் விஷ்ணு மஞ்சு. முகேஷ் இயக்கியிருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் அறிமுக மாகிறார்.

இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்பட முன்னணித் தென்னிந்திய நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஹாலிவுட்டின் ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம், வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதைச் சென்னையில் நடத்திய ஊடகச் சந்திப்பு வாயிலாகப் படக் குழுவினர் அறிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விஷ்ணு மஞ்சு: “எதற்காகப் படத்தை நியூசிலாந்தில் எடுத்தீர்கள் என்று கேட்கிறீர்கள். கண்ணப்பாவின் கதை 3ஆம் நூற்றாண்டில் நடக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் நீர், காற்று, நிலம், வனம் என அனைத்தும் எவ்வளவு பசுமையாக, மாசு இல்லாமல் இருந்திருக்கும். அப்படியொரு இடத்தை உலகம் முழுவதும் தேடிப்பார்த்தபோது, நியூசிலாந்து நாடு தான் சரியான இடமாக இருந்தது.

கடவுள் வரைந்த கடைசி ஓவியம் என்றால் அது நியூசிலாந்துதான். நம் நாடும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால், இப்போது அப்படியில்லை. அதனால்தான் அங்கு படப்பிடிப்பு நடத்தினேன். படத்தில் நீங்கள் பார்க்கவிருக்கும் லேண்ட்ஸ்கேப்களை கிராபிக்ஸ் என்று நினைத்துவிடாதீர்கள். அத்தனையும் லைவ் லொகேஷன்கள். அந்த அளவுக்கு நீர், வனம் என அனைத்தும் மிக அழகாகவும் உண்மையாகவும் தெய்விகத் தன்மையுடனும் இருக்கும்” என்றார்

SCROLL FOR NEXT