பூட்டானிய சினிமாவை கியனட்சே நோர்புவும் திபெத் திய சினிமாவை டென்சிங் சோனமும் ரிது சாரினும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசென்றனர். அவர்கள் அளவுக்கு நேபாளத்தில் சிறந்த இயக்குநர்கள் உருவாகவில்லை. காலத்தின் கருணை மனம் அப்படியே இருந்துவிடுமா என்ன?
2022ஆம் வருடம் புதிய இயக்குநர் பிக்ரம் சப்கோடா ‘தபால்காரன்’ (Halkara) என்கிற திரைப்படத்தை இயக்கி, பின்னடைவிலிருந்த நேபாள சினிமாவை மதிக்கத்தக்க உயரத்துக்கு நகர்த்தியிருக்கிறார்.
கத்தார் (Qatar) நாட்டில் 2022இல் உலகக் கோப்பைக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அது மத்தியக் கிழக்கு, வளைகுடா நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் உலகக் கோப்பைக்கான விளையாட்டும்கூட. இதன் காரண மாக, கத்தாரை நவீனமயப்படுத்தும் கடினமான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளில் அங்கு பிழைப்புத் தேடி வந்திருக்கும் நேபாளியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
ஏறக்குறைய கொத்தடிமைகளாகவே நடத்தப்பட் டார்கள். அந்தப் போட்டியைத் தனது நாட்டில் நடத்த கத்தார் உரிமை பெற்ற நாட்கள் தொடங்கி, 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைப்பளுவைத் தாங்கவியலாமல் நோய்வாய்ப்பட்டு இறந்துபோயினர். இவர்களில் நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கையைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர். உலகளாவிய கவனத்தைப் பெறாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் திரைவிரிகிறது ‘தபால்காரன்’.
கடிதங்களை மீட்பவன் படத்தின் தொடக்கத்தில், சவப் பெட்டியில் சடலம் ஒன்று காட்டப்
படும். அதனைச் சுற்றி மற்ற புலம் பெயர் தொழிலாளர்கள் சோகத் துடன் நின்றிருப்பார்கள். மரணித்தவர் நேபாளி. எனவே அவரது கிராமத் துக்குத் தகவல் தெரிவிக்கும்பொருட்டு ஒரு கடிதம் அனுப்பப்படும். இதுவரை, எத்தனையோ உலகப் படங்களைக் கண்டு அனுபவம் கொண்ட நாம், இப்படத்தின் கதைக்களமும் புலம் பெயர் தொழிலாளர்கள் மீதான வதைகளை விவரிக்கப்போகிறது என்று கணித்துக் காத்திருப்போம்.
ஆனால், படத்தின் அடுத்த கட்ட நகர்வு, அனுப்பப்படும் கடிதம் வந்தடையும் நேபாளக் கிராமத் துக்குத் தடாலடியாக வந்தடைகிறது. உலக சினிமாவின் எதிர்பாராத திருப்பங்களிலான திரைக்கதையாக் கங்களில் ஒன்றாக இப்படத்தின் கதையோட்டம் முழுக்கவே அந்தக் கிராமத்தில் நிகழ்கிறது. பாதிக்கப் பட்டோரை விடுத்து, அவரை எண்ணி ஏங்கி வாழும் சுற்றத்தாரைப் பற்றிய சித்திரமாக விரிவடையும் படத்தின் கதை, நமது ஆர்வத்தை மேலும் சுடர்விடச் செய்கிறது.
நேபாளத்திலிருந்து வெளிநாட்டுக் குப் புலம்பெயரக் காத்திருப்பவன் ராம். சூழல் தகவமையும்வரை, உள்ளூரில் தற்காலிகத் தபால்காரனாகப் பணியேற்கிறான். சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு நடந்து சென்று தபால்களைச் சேர்ப்பிக்கவேண்டும். தனது கடந்தகால வாழ்வின் துயர அனுபவங்களால் குடிப்பழக்கம் கொண்டவனாக இருக்கிறான். அப்படி அவன் குடித்திருக்கும் வேளை, திருடர்கள் அவனை வளையமிடுகிறார்கள். பணத்தை எடுத்துக் கொண்டு, தபால் உறைகளைக் கிழித்து உள்ளிருக்கும் கடிதங்களைச் சிதறடிக்கிறார்கள். குடிமயக்கம் தெளிந்து ராம் விழித்தெழுந்து கடிதங்களைச் சேகரிக்கிறான். கடிதத்தின் முகவரியில் பதிந்திருக் கும் கையெழுத்தைக் கவனித்து உள்ளிருக்கவேண்டிய கடிதத்தை இணைக்கிறான். ஒரு கடித உறை மட்டும் மீதி. சுற்றிப் பார்க்க, அதிலிருக்க வேண்டிய கடிதம் அருகேயுள்ள நீர் நிலையில் மிதக்கிறது. ஈரத்தால் எழுத்துகள் மங்கிப்போன அதனை எடுத்து வெயிலில் காயவைத்தும் பயனில்லை. அந்தக் கடிதத்தைத் தவிர்த்து மற்றவற்றை உரிய முகவரியில் சேர்ப்பிக்கிறான்.
ஒளிமொழியின் உரையாடல்!: மியா குமாரி திருமணமான இளம் பெண். மணம் முடிந்த கையுடனே அவளுடைய கணவனான கமல், கத்தாருக்குப் பிழைப்புத்தேடி புலம்பெயர்ந்து சென்றவன். இரண்டு வருடங்கள் முன்புவரை தொடர்ந்து வந்துகொண்டிருந்த அவனுடைய கடிதங்கள் அதன் பின்பு வராததால் அவனைப் பற்றிய நினைவுகளில் ஏக்கத்துடன் காத்திருப்ப வள். அதேவேளை, அவன் இறந்திருக்கக் கூடும் என்று ஊரில் பேசிக்கொள்வதை நம்பியும் நம்பாமலும் சஞ்சலத்துடன் வாழ்கிறாள். ராமைக் காணும்போது, ‘தனக்குக் கடிதம் வந்திருக்கிறதா?’ எனக் கேட்கிறாள். ராம், ‘இல்லை’ என்றதும் மீண்டும் அவளது துக்க மடர்ந்த காத்திருப்பு தொடர்கிறது. படம் தொடங்கும்போது, அவளது பின்புறமாகத் தொலைவில் ஒளிப்பதிவுக் கோணம் நிலைத்து அவளது காத்திருப்பை உளவியல் சிரத்தையோடு காண்பிக்கும்போதே ஒளிப்பதிவின் தீவிரத்தன்மை நம்மை ஆக்கிரமித்து விடுகிறது.
இவ்விதமாக, படம் முழுக்கவே உரையாடல்களைக் குறைத்து முகங் களின் நுட்ப வெளிப்பாடுகளை மௌனமாக மையப்படுத்தும் ஒளிப்பதிவின் உணர்வடர்ந்த அணுகுமுறை, படத்தைச் சிற்பச் செழுமைக்குக் கொண்டு செல்கிறது.
மியா மீது ராம் கொள்ளும் உள்ளார்ந்த ஈர்ப்பால் அந்தக் கிராமத்திலேயே சில நாள்கள் தங்குகிறான். கணவன் துணையிழந்த அவளும் அவன்மீது ஈர்ப்பு கொள்கிறாள். இருவரும் தமது விருப்பத்தைச் சொல்லும் தருணங்கள் கூடினாலும், இறுக்கமான மௌனத்தில் விலகிச் செல்கிறார்கள். முதல் காட்சியில் சடலமாகக் காட்டப்பட்டவனே மியாவின் கணவனாக இருக்க வேண்டும் என யூகித்திருக்கும் நமது கற்பனையைத் திரைக்கதையின் மாயாஜாலம் வேறொன்றாகத் திருப்புகிறது. மியாவின் கணவன் கமல் உயிரோடு வந்து நிற்கிறான். இறந்தவன், அவ்வப்போது படத்தில் சோகச் சித்திரமாக வந்துசெல்லும் ஒரு முதிய தம்பதியின் மகன். ராம் மீதான காதலுணர்வு பெருகியிருக்கும் மனோகதியில், தனது கணவனை மியா எதிர்கொள்ளமுடியாமல் தத்தளிக்கிறாள். ஆயினும் எல்லை தாண்டமுடியாத வேதனையோடு அவனைப் பிரியத் துணிகிறாள்.
இலங்கையின் அரிய கலைஞர் இருவருக்கும் இடையேயான காதலுணர்வு படத்தில் வெகு இங்கித மாகக் கையாளப்பட்டிருக்கிறது. இக்கட்டான சூழலில் உள்ளார்ந்து எழும் காதலுணர்வை இலங்கை திரைப் படைப்பாளர் பிரசன்னா விதானகே இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆகஸ்ட் மாத சூரியன்’ (August Sun) என்கிற படத்தி லும் நாம் காணலாம்.
தமிழ்ப் போராளிகள் கடத்திச் சென்றிருப்பார்கள் என எண்ணி அவனைத் தேடி தமிழ் நிலத்துக்குள் பயணப்படும் சிங்களப் பெண்ணான சமரிக்கும் (நிம்மி கரஸ்கமா) அவளுடன் துணையாகச் செல்லும் சமன் குணவர்த்தனாவுக்கும் (பீட்டர் டி அல்மெய்தா) இடையே உள்ளூரும் மெல்லிய காதலு ணர்வு பற்றிய காதை. கடல்வழி பயணத்தின்போதான இருவரது மன நெருக்கத்தைப் பிரசன்னா விதானகே மிகவும் நாகரிக மாகப் பதிந்திருப்பார்.
விவரிக்கவிய லாத வயத்தி லமைந்த இத்தகைய காதலுணர்வைச் சொல்ல நிறையக் கலைத்தேர்ச்சி கொண்டிருக்க வேண்டும். தனது முதல் படத்திலேயே இதனைச் சாதித் திருக்கும் நேபாள இயக்குநர் பிக்ரம் சப்கோடாவை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
படத்தை நேர்த்தியான முழுமைக்கு நகர்த்துவதில் ராமாக நடித்த மகேஷ் திரிபாதியும் மியா குமாரியாக நடித்த பினிதா தாபா மஹரும் பெரும் பங்காற்றியுள்ளனர். அடுத்ததாக ஒளிப்பதிவு மற்றும் இசையின் மென்மையான படர்வு அந்த அழகிய கிராமத்தின் யௌவனத்தை அப்படியே பிரதி செய்கிறது. ‘மனித குலத்தின் ஆற்றமுடியாத துக்கங்களைச் சில கடிதங்களை வைத்தே ஒரு படத்தில் உணர்வூட்ட முடியுமா’ என யாராவது கேள்வி
யெழுப்பினால், அதற்கு ஒரு பெருமிதமான உதாரணமாக ‘தபால்காரன்’ படத்தை நாம் சுட்டிக்காட்டலாம்.
-தொடர்புக்கு: viswamithran@gmail.com