இந்து டாக்கீஸ்

ஓர் ஓவியம் ஆயிரம் சொற்களைப் பேசுகிறது! | திரைசொல்லி 17

விஸ்வாமித்திரன் சிவகுமார்

காலத்தைத் துளைத்துச் செல்லும் எத்தகைய நிகழ்வுகளும் வெள்ளம் பெருக்கெடுத்த ஆற்றைப்போல் கண்முன் நிற்காமல் கடந்து சென்றுவிடுகின்றன. அவற்றின் சாதக பாதகங்களை மனிதநேய விழுமியத்தோடு பதிவில் உறைய வைத்துக் கடமை யாற்றுவது இலக்கியம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலைவடிவங்களே. சென்ற நூற்றாண்டிலிருந்து இவை அனைத்தையும் உள்வாங்கிய தன்னெழுச்சியுடன் வீறுகொண்டு நடை போடுவது சினிமா என்னும் மாயப் பொக்கிஷம்.

கலைக்குப் புனைவெதார்த்தம் என்கிற வரையறை இருப்பினும், மனித இனத்தின் மத்தியில் அன்பும் அமைதியும் செழித்தோங்க வேண்டிய இயல்பெழில் மிகுந்த கனவைக் கண்ணயராமல் கண்ட படியே தொடர்கிறது. அத்தொடர்ச்சியின் நிகழ்சான்றாக வெளிவந்திருக்கிறது ‘நோரா’ (Norah) என்கிற சவுதி அரேபியத் திரைப்படம்.

ஒரு தூரிகைக் கனவு: சினிமா ஒளிரத் தொடங்கி நூறாண்டுகளைக் கடந்த பின்னும் விரல் விட்டு எண்ணும்படியே சவுதி அரேபியாவிலிருந்து திரைப்படங்கள் வந்திருக் கின்றன. கதை நுட்பம் சார்ந்தும் கலைநுட்பம் சார்ந்தும் அரபு சினிமா சாதித்திருக்கிற நிறை வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கையில், அவை இடைப் பாதையிலேயே தேங்கி நிற்பவைதான். ஆயினும் படைப்பின் விரிவுமனம் அப்படியே வேடிக்கை பார்க்குமா என்ன? ‘நோரா’, அரபு சினிமாவின் வீரியமான பெருமைகளுள் ஒன்றாகத் தன்னைப் பொருந்தச் செய்திருக்கிறது.

திரை மேதை அப்பாஸ் கியாரஸ்தமி கடைப்பிடித்த ஈரானிய சினிமாவைப் போல் எளிமையான, சுவாரசியமான படத்தின் கதை, 90களின் பிற்பகுதியில் நடக்கிறது. சவுதி அரேபியாவில் கலை சார்ந்த அனைத்து வெளிப்பாடுகளும் தடைசெய்யப்பட்டிருந்த காலம். பணி நியமன ஆணையுடன் ஆசிரியர் நடேர் ஒரு கிராமத்துக்கு வருகிறார். அங்குள்ள ஆண் சிறார்களுக்குக் கல்வி போதிப்பதே அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி.

அது வரை மதப்போதனையை மட்டுமே காதில் கேட்டுக்கொண்டிருந்த சிறுவர்களுக்கு நடேரின் அறிவார்ந்த உரையாடல் ஈர்ப்பைத் தருகிறது. நடேர் உண்மையில் ஓர் ஓவியர். வரையும் ஆற்றலை உள்ளத்துக்குள் முடக்கிக்கொண்டு வேறு வழியின்றி ஆசிரியப் பணிக்கு வந்தவர்.

எனினும் அவருள் வீறிட்டெழும் கலையாற்றல் தணிந்தபாடில்லை. மாணவர்களுக்கு ஓர் அறிவுப்போட்டி வைக்கிறார். நயாஃப் என்பவன் சரியாகப் பதில்கூற, பாராட்டும் விதத்தில் அவனது உருவத்தைப் பிரதியெடுக்கும் ஓவியத்தைச் சில நிமிடங்களில் வரைந்து பரிசளிக்கிறார்.

நயாஃப் அந்த ஓவியத்தை வீட்டுக்கு எடுத்துச்செல்ல, அவனுடைய அக்காள் நோரா அதனைக் கண்டு வியப்புறுகிறாள். தன்னையும் ஓர் ஓவியமாகக் காணவேண்டும் என்று விழைவு கொள்கிறாள். அதனை நாடு கடந்து சென்று ஓர் ஓவியக் காப்பகத்தில் (Art Museum) காட்சிப் பொருளாக வைக்கவேண்டும் என்கிற கனவும் அவளுள் எழுகிறது. ஆனால் நிலவும் சூழலில் அந்நிய ஆண்களிடம் அவள் ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்குக்கூட உரிமையில்லை.

காட்சிக்கு வரும் ஓவியம்: எனவே, தினசரி செல்லும் மளிகைக் கடைக்காரரின் உதவியை நாடுகிறாள். அவர் நோராவுக்குத் தடைசெய்யப்பட்ட பத்திரிகைகளை ரகசியமாக விற்பனை செய்பவர். ஊருக்குத் தெரிந்தால் அவரது பிழைப்பில் மண் விழுந்துவிடும்.

இது தெரிந்தும், நோராவின் அத்துமீறும் உணர்வை மதிக்கும் அவர், புரட்சிகர உளவியல் கொண்டவராக நமது கண்களுக்குப் படுகிறார். நோராவின் ஓவிய விருப்பத்தை நடேரிடம் தெரிவிக் கிறார். அந்த மளிகைக் கடைக்கு வாய்ப்பிருக்கும்போதெல்லாம் நோராவை வரவழைத்து, மறைமுகமான உள்பகுதியில் அமர்ந்தபடி பகுதி பகுதி யாக ஓவியத்தைத் தீட்டுகிறார் நடேர்.

ஒரு தருணத்தில், அடிப்படைவாத குணப்போக்குக் கொண்ட கிராமத்தா ருக்கு இது குறித்த சந்தேகம் எழ, கடைக்காரர் நையப் புடைக்கப்படுகிறார். உள்ளூர் அதிகாரியின் துணைகொண்டு நடேர் வேறு ஊருக்குப் மாற்றப் படுகிறார். ஆயினும் அவர் அங்கிருந்து செல்லும் முன் ஓவியம் முழுமையடைந்து விடுகிறது.

காலம் கருணையின் திசையில் நடைபயில, நோராவின் கனவு நனவாகும் படத்தின் இறுதிக்காட்சி. ஓவியக் காப்பகத்தில் நின்று நடேரால் வரையப்பட்ட தனது அற்புதத் தோற்றத்தாலான ஓவியத்தை நோரா பார்க்கிறாள். நாமும் அவளோடு முதன்முதலாகப் பார்க்கிறோம். அடிமைத் தளைகளைக் கட்டறுக்கும் பெண்மையின் வலிமையைப் பார்வை யில் பதிந்திருக்கும் அந்த ஓவியத்தோடு படம் நிறைவடைகிறது.

நடேர் மற்றும் நோராவுக்கு இடையே இருப்பது தூய்மையான ஓவிய உறவு மட்டுமே. தடைசெய்யப்பட்டக் கலைச் செயல்பாட்டைச் சுதந்திரமான எதிர் காலத்துக்குக் கையேந்திச் செல்லும் கலைப்புரட்சியாளராக நடேரும், அவரது புரட்சியை இருப்பில் தாங்கி நிலைப்பவளாக நோராவும் சித்திரிக்கப்படுகிறார்கள்.

படத்தின் இயக்குநரான தவ்விக் தன்னுடைய சிறுவயதில் கலைவாழ்வு சார்ந்த அடக்குமுறை களைக் கண்ணில் கண்டவர், அனுப விக்கவும் செய்தவர். நீண்டகாலக் காத்திருப்புக்குப் பிறகு இப்படத்தை இயக்கி சவுதி அரேபிய சினிமாவில் ஒரு நம்பிக்கையொளியை ஏற்றியிருக்கிறார். கான் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட முதல் சவுதி அரேபியத் திரைப்படம் என்கிற சிறப்பிடத்தையும் ‘நோரா’ வகிக்கிறது.

நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார் தவ்விக்: “90களின் காலக்கட்டத்தில், எனது நாடான சவுதி அரேபியாவில் அனைத்துக் கலையாக்கங்களும் அனுமதிக்கப்படவில்லை. பல கலைஞர்கள் தங்கள் மீது செலுத்தப்பட்ட அழுத்தம் காரணமாகத் தங்களது கலை வாழ்க்கையை இடைநிறுத்திக் கொண்டனர்.

35 ஆண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு இப்போது எல்லாம் மாறிவிட்டது, அந்த நேரத்தில் தங்கள் சமூகத்தால் வித்தியாசமாகவோ அல்லது வெளியாள்களாகவோ அந்தக் கலைஞர்கள் கருதப்பட்டபோதிலும் தமது படைப்பாற்றலை உயிரோடு வைத்திருக்க முடிந்த சிறப்புமிக்க மனிதர்களைப் பற்றியது இந்தப் படம்.”

படத்தின் தொடக்கத்தில் ‘ஓர் ஓவியம் ஆயிரம் சொற்களைப் பேசுகிறது’ என்கிற எழுத்துக் குறிப்பு இடம்பெறும். அதனை மேன்மையான குணத்தை மெய்மைப்படுத்தும் விதமாக, ‘நோரா’ திரைப்படம் ‘ஆயிரம் ஓவியங்களை நம்முள் வரைந்துகாட்டுகிறது’ என்று இறுதியாகச் சொல்லத் தோன்றுகிறது.

- viswamithran@gmail.com

SCROLL FOR NEXT