இந்து டாக்கீஸ்

‘காதலன்’ படத்தில் வெட்டப்பட்டேன்! - பத்மப்ரியா நேர்காணல்

நட்சத்திரன்

முதல் படத்திலேயே சிவாஜி கணேசனின் ஜோடி. அதுவும் ஸ்ரீதர் இயக்கத்தில். படம் ‘வைர நெஞ்சம்’. அடுத்த படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டிய’னில் எம்.ஜி.ஆரின் கதாநாயகி. இவ்வளவு பரபரப்பான, அழுத்தமான அடித்தளம் அமைவது அபூர்வம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் அமையப்பெற்ற பத்மப்ரியாவின் தற்போதைய நிலை என்ன? (1995இல் வெளியான அவரது நேர்காணல் இது).

“சிவாஜி சார், எம்.ஜி.ஆர் சாருடனெல்லாம் சேர்ந்து நடிக்கும் பாக்கியம் எனக்குத் தொடர்ந்து கிடைத்தது. பிறகு நல்ல வேடங்கள்கூடக் கிடைத்தன. ‘உறவு சொல்ல ஒருவன்’ படத்தில் பேராசை கொண்ட ஒரு பெண்ணாக நடித்திருந்தேன். என்னை எங்கே பார்த்தாலும் ரசிகர்கள் 'ஆசை.. ஆசை.. ஆசை..’ என்று கத்துவார்கள். ‘பெருமைக்குரியவள்’ படத்தி லும்கூட நல்ல ரோல்தான்.

தேவர் சாரின் படத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்கும் என் கணவரைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டு வரும் கதாபாத்திரம் எனக்கு. மாமியார் இறந்துவிட, அதைச் சொல்லி அனுப்பியும் கணவன் வராத தால் நானே கொள்ளி வைத்து விட்டு வெடித்துக் கதறுவதாகக் காட்சி. காட்சி யைப் பார்த்து முடித்த தேவர், ‘இந்தக் காட்சி எப்படி வருமோன்னு முதல்லே கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா நீங்க எதிர்பார்த்ததைவிட நல்லா செய்துட்டீங்கம்மா’ என்று பாராட்டினார்.

குறைந்த எண்ணிக்கையில் கன்னடப் படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு அங்கே மிக நல்ல பேரு இருக்கு. என்னை அங்கே ‘தென்னகத்தின் ஹேமமாலினி’ம்பாங்க. ராஜ்குமாருக்கு சாருக்கு ஜோடியாக நான் நடிச்ச ‘சங்கர் குரு’ படம் சில்வர் ஜூப்ளி ஹிட். ஆனால், அதைத் தமிழில் எடுத்தப்போ (திரிசூலம்) என் ரோலுக்கு ஸ்ரீப்ரியாவைப் போட்டாங்க. ரொம்ப வருத்தமாயிருந்தது.

‘எங்க சின்னராசா’ படத்தில் சரஸ்வதி ஏற்ற முக்கிய ரோலுக்கு முதலில் என்னைத்தான் பாக்யராஜ் கூப்பிட்டார். ‘மேக்-அப் டெஸ்ட்’ எடுத்துட்டு ‘என்னம்மா இது..! என்னதான் தலையிலேயே டை அடிச்சாலும் உங்ககிட்டே இளமை ஊஞ்சல் ஆடுது. எனக்குச் சித்தி வேஷம் தோற்றம் உங்களுக்கு ஒத்து வராது போலிருக்கே’ அப்படின்னார். எப்படியெல்லாம் தடங்கல் பாருங்க.

இன்றைக்குக் கூட நியூஸ்ல படிச்சேன். லதா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா இவங்க எல்லாம் கூட அம்மா வேஷத்தில் நடிக்க ஒத்துக்கிட்டு இருக்காங்கன்னு. எனக்கு 31 வயசுதான் ஆகுது. என்னை ஏன் அம்மா வேஷங்களுக்கு கூப்பிடுறாங்க? அக்கா, அண்ணி, இந்த மாதிரி வேஷம் எல்லாம் இல்லையா? அவ்வளவு ஏன் யாராவது ஒருவர் தன் படத்திலே இப்பவும் என்னை ஹீரோயினா போடட்டும். எடுபடலேன்னா சினிமாலேர்ந்து விலகத் தயார்!

‘காதலன்’ படத்தில் பிரபு தேவாவின் அம்மாவாக நடிக்கக் கூப்பிட்டாங்க. முதல்ல தயங்கினேன். பிரபு தேவாவின் அம்மான்னு ஏன் நினைக்கணும்? எஸ்.பி.பியின் மனைவி ரோல்னு நினைச்சுக்குங்க’ என்றார் டைரக்டர் ஷங்கர். ‘கேளடி கண்மணி’ ராதிகா மாதிரி ஒரு பிரேக் கிடைக்கும்னு நினைச்சேன். எஸ்.பி.பி. சார்கூட சில இன்டிமேட் காட்சியெல்லாம் கூட எடுத்தாங்க. ஆனா அதையெல்லாம் எடிட்டிங்கில் வெட்டிட்டாங்க. கடைசில படத்தைப் பார்த்தால் குடத்தைத் தூக்கிட்டுப் போற மாதிரி ஒரு காட்சியும், பீர் பாட்டிலைக் கொடுக்கிற மாதிரி ஒரு காட்சியில்தான் நான் இருக்கேன். ஷங்கரிடம் கோபப்பட்டேன். ‘பாட்டெல்லாம் ரொம்ப ஹிட்டாயிடுச்சும்மா. அதனால மத்த எதையும் குறைக்க முடியலம்மா’ என்றார். இதுக்கு மனைவி இல்லாமல், எஸ்.பி.பி. தானே பிரபுதே​வாவை வளர்க்கிற மாதிரி காண்பிச்சிருக்கலாம்’.

SCROLL FOR NEXT