அகத்தைத் தேடி 66: பால்வழி மண்டலங்களின் சுழல் ஆட்டம்!

நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கியால் படம் பிடிக்கப்பட்ட அக்காட்சி இரண்டு சுருள் பால்வழி மண்டலங்களின் (SPIRAL GALAXIES) சுழல் நடனத்தைப் படம் பிடித்திருக்கிறது.

ஆமாம் நடனமேதான்!

ஒன்றை ஒன்று தழுவிக்கொள்வதுபோல் தொட வருவதும் தூரப் போவது மாய் இரண்டு பாலவழி மண்டலங்களும் சுற்றிச் சுழன்று நடனமாடுகின்றன.

பூமியிலிருந்து நூறு மில்லியன் ஒளி ஆண்டுகள் தாண்டி இந்நடனம் நடைபெறுவ தாக அக்குறிப்பு தெரிவிக்கிறது. இத்தகைய பிரபஞ்ச நடனம் (COSMIC DANCE) அரிதினும் அரிதான நிகழ்வு என்பதாக வானியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய சுருள் பால்வழி மண்டலங்களின் சுழல் ஆட்டம் சூஃபி ஞானிகளின் சுழல் ஆட்டத்தை ஒத்திருக்கிறது.

சூஃபி நடனம் என்பது உடல் சார்ந்த ஒரு பிரார்த்தனை வடிவம். காற்று வீசும்போது மரக்கிளைகள் எப்படி அசைய வேண்டும் என்று முயல்வதில்லை. தங்களை அசைக்கும் மெல்லிய காற்றிடம், அவை தங்களை அப்படியே ஒப்புக்கொடுத்து விடுகின்றன. இத்தகைய சரணாகதி தத்துவமே சூஃபி நடனத்தின் சூட்சுமம்.

ஒளியில் ஆடும் பொடித் தூசுகளைப் போல் அசைய வேண்டும். உங்களை அசைக்க விரும்பும் இயக்கத்திடம் அப்படியே சரணாகதி ஆகி விடுங்கள் என்கிறார் கவிஞர் ஜலாலுதீன் ரூமி. சின்னக் குழந்தைகள் பம்பரம்போல் வேகமாய் கிறுகிறுவென்று சுற்றுவார்கள். தலை அப்படியே சுற்றும்; மனத்தைக் கடந்து செல்லும் வழியாக இதைப் பயன்படுத்துகின்றனர். இவ்வழி சென்றால் இறைநிலையின் விளையாட்டு மைதானத்தை அடையலாம்.

நான் ஒருமுறை சூஃபிகளின் நடனச் சடங்கை காணச் சென்றி ருந்தேன். அழைத்துச் சென்றவர் ஒரு இஸ்லாமியப் பெருமகனார். என் தாயாரின் மனநலனுக்காக அவர் சிகிச்சை அளித்து வந்தார்.

தஞ்சாவூரில் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இருண்ட தெருவின் கடைசியில் நிழல்போல நின்றது அக்கட்டிடம். உள்ளே மிகவும் மங்கிய வெளிச்சம். அது இருட்டுக்கு மேலும் கருமை ஏற்றியது. அங்கே நிலவிய நிசப்தம் அடிவயிற்றைக் கலக்கியது.

காற்றில் அசையும் மலர்கள்

அந்தக் கூட்டத்தில் விசித்திரமான லாந்தர் விளக்குகள், சரவிளக்குகள் தொங்கின. அவற்றிலிருந்து வெளிச்சம் மஸ்லின் துணிபோல் வெளிப்பட்டு கசிந்தது. இருபது பேருக்கு மேற்பட்ட மனிதர்கள் இப்படி ஓசைப்படாமல் நடமாட முடியுமா? அவர்கள் அணிந்திருந்த கூம்பு வடிவ வெண்ணிறத் தொப்பியும், வெண்ணிற ஆடையும் அவர்களைப் பூக்களைப் போல் தோன்றச் செய்தன. நீண்ட காம்புடன் கூடிய வெண்ணிற மலர்கள் காற்றில் மெல்ல அசையும் மலர்கள். அவர்கள் மெல்ல அசைந்தனர். மெல்லச் சுழன்றனர்.

ஒரு கை மேல் நோக்கியும், மற்றொரு கை கீழ் நோக்கியும், பார்வை கைகளின் மீதும் படிந்தபடி சுழன்றாட ஆரம்பித்தனர். அங்கே இசை ஏதும் கேட்டதாக நினைவில்லை. ஆனால் அவர்கள் இசையை உண்டு பண்ணியதாக ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டது. என் உடல் அதிர்ந்தது.

அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சுழன்றாலும் சட்டென்று அந்த தனிச் சுழல் மறைந்து ஒரு பெரிய மலர் வெண்ணிற இதழ்களுடன் ஆடுவதாய் தோற்றம் கொண்டனர். விர் விர்ரென்று அப்படி ஒரு சுழலாட்டம் நான் பார்த்ததே இல்லை. வீடு மறைந்து வானக நடுவே அவர்களின் ஆட்டம் சுழன்று சென்றது.

அவர்களோடு வானம் சுழன்றது. வானத்து மீன்களும் நிலவும் சுழன்றாடி பெரும் மெளனச் சூறா வளியில் எது மனிதர் எது விண்மீன் எது வானம் என்று தெரியாது ஆடிச்சுழன்றனர்.

என் தலை சுழன்றது. உடல் சுழன்றது. சுழன்று சுழன்று மேலே செல்வதும் மிதப்பதுமாய் இருந்தேன். எத்தனை நாழிகை சென்றதோ அறியேன். கழிந்தது நாழிகைகளா யுகங்களா என்று தெரியாமல் காலம் என்னைக் கடந்து சென்றது. காலமற்ற நிலையில் இருத்தல் எப்படி இருக்கும் என்ற காலாதீத உணர்வு என்னை ஆட்கொண்டது.

என் காதில் கடலின் அலைகள் ஆடும் சப்தம் கேட்டது. என் கண்ணுக்குள் விண்மீன்கள் சுழன்று ஆடின. நான், ஆடி ஆடி கரைவதுபோல் இருந்தது. நான் காணாமலே போனபோது, என் கைகளை யாரோ இறுகப் பற்றினார்கள். புன்னகைத்தபடி என் முன்னால் நின்றார் அந்த இஸ்லாமிய பெருமகனார்.

“அம்மா ஒரு முறை இங்கே வந்தால் போதும்! சரியாகி விடுவார்!”

நடந்ததை எல்லாம் அப்பாவிடம் சொன்னேன். அவர் அரசாங்க மருத்துவரையே நம்பினார்.

அம்மாவுக்கு ஆங்கில மருத்துவம் செய்தோம். அவரது மனநோய் குறைந்தது. உடம்பு வீழ்ந்துவிட்டது. 41 வயதில் மறைந்தாள் என் அன்னை.

அண்ணாந்து பார்க்கிறேன். நீள் வட்டமாய் நீண்டு கிடக்கும் பால்வழி மண்டலம் சுழல்கிறது. பேரண்டமே பெண்ணாய் அம்மாவாய் என்னை நோக்கி இருகரம் நீட்டியபடி சுழல்வதுபோல் பிரமை தட்டுகிறது.

(தேடல் தொடரும்)

தஞ்சாவூர்க்கவிராயர்

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE