அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவொற்றியூர் திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோயில் இஷு சக்திபீடமாகப் போற்றப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253-வது தேவாரத் தலம் ஆகும். பிரளய காலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிய உலகம் தோற்றுவிக்கப்படும். அப்போது பிரம்மதேவர் தோன்றி, உயிர்களைப் படைப்பார்.
ஒரு பிரளய காலம் வந்த சமயத்தில், உலகம் அழிவதை பிரம்மதேவர் விரும்பவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். யாகத்தின் இடையே அக்னி வடிவில் தோன்றிய சிவபெருமான், உலகம் அழியாமல் காப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது.
பிரளயம் நீங்கி உலகம் மீண்டும் தொடங்கிய சமயத்தில் எழுந்தருளியதால், இத்தலத்து ஈசன், ‘ஆதிபுரீஸ்வரர்’ என்றும், பிரளய வெள்ளத்தை விலகச் செய்ததால் (ஒற்றச் செய்ததால்) இத்தலம் ‘திருவொற்றியூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் சிவபெருமான் பாணலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் பைரவர் , நாய் வாகனம் இல்லாமலும், துர்கையம்மன் காலடியில் மகிஷாசுரன் இல்லாமலும் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர், அம்பிகை வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், தல விருட்சங்கள் - அத்தி, மகிழம், தீர்த்தங்கள் - பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம், ஆகம பூஜை - காரணம், காமீகம் என்று அனைத்தும் இரண்டு என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
மூன்று அம்பிகையர் தரிசனம்: சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருள்புரிகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு, சிற்பி ஒருவர், மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்தப் பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. இதன் காரணமாக உயிரை விடத் துணிந்தார் சிற்பி. அவர் முன்னர் தோன்றிய பார்வதி தேவி, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயல் தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி அருளினார். சிற்பியும் அவ்வாறே செய்தார்.
திருவொற்றியூர் தலத்தில் அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி ஞான சக்தியாகவும், இத்தலத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள மேலூரில் அருள்பாலிக்கும் திருவுடைய நாயகி இச்சா சக்தியாகவும், இத்தலத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயலில் அருள்பாலிக்கும் கொடியிடை நாயகி கிரியா சக்தியாகவும் போற்றப்படுகின்றனர்.
சுயம்வர புஷ்பாஞ்சலி: திருவொற்றியூர் தலத்து விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடை நாயகி (திரிபுரசுந்தரி), வட்டப்பாறை அம்மன் இருவரும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். திரிபுரசுந்தரி அம்பாளுக்கு கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் வடிவுடையம்மன், நான்கு கரங்களுடன், அபய வரத முத்திரையுடன் பக்தர்களின் குறை கேட்கும் விதமாக, வலதுபுறம் தலை சாய்த்தபடி அருள்பாலிக்கிறார். தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, புஷ்பாஞ்சலி சேவையில் அருள்பாலிக்கிறார். திருமணத் தடை உள்ளவர்கள் அம்பாளுக்கு இச்சேவை புரிந்து வழிபாடு செய்கின்றனர். இச்சேவை ‘சுயம்வர புஷ்பாஞ்சலி’ என்று அழைக்கப்படுகிறது.
வட்டப்பாறை அம்மன்: மதுரையை எரித்துவிட்டு, உக்கிரத்துடன் கிளம்பிய கண்ணகி, இத்தலத்துக்கு வருகிறாள். அப்போது சிவபெருமானும், அம்பிகையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். கண்ணகி வருவதை கவனித்த சிவபெருமான், அவளது கோபத்தைத் தணிப்பதற்காக, தான் விளையாடிக் கொண்டிருந்த தாயக்கட்டையை உருட்டி, அருகில் இருந்த கிணற்றில் விழச் செய்தார்.
தாயக்கட்டையை எடுக்க, கிணற்றுக்குள் இறங்கினாள் கண்ணகி. அந்த சமயம், சிவபெருமான் அங்கிருந்த வட்டப்பாறையை வைத்து கிணற்றை மூடிவிடுகிறார். சற்று நேரத்தில், கண்ணகி பாறையின் வடிவில் எழுந்தருளினாள். அதன் காரணமாக, கண்ணகி ‘வட்டப்பாறை அம்மன்’ என்று பெயர் பெற்றாள். பின்னாட்களில் பாறை அருகே, அம்மனுக்கு சிலை வைக்கப்பட்டது.
வட்டப்பாறை அம்மனின் கோபத்தை தனிப்பதற்காக, ஆதிசங்கரர், அம்மன் சந்நிதியில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். திருவொற்றியூர் திரிபுரசுந்தரி சமேத தியாகராஜர் கோயில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. கஜபிருஷ்ட வடிவில் சுவாமியின் கருவறை விமானம் அமைந்துள்ளது. ராஜ கோபுரத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய வடிவுடையம்மன் சந்நிதி உள்ளது.
இடதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம் அருகே நந்திதேவர் அருள்பாலிக்கிறார். கொடிமரத்தின் மேற்கே மாணிக்க தியாகராஜர் சந்நிதி, மூலவர் சந்நிதி, நடராஜர் சந்நிதி அமைந்துள்ளன. மூலவர் ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியபடி, கவசம் சார்த்தப்பட்டு நாக வடிவில் சிவலிங்கத் திருமேனியில் சதுர வடிவ ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தலம் சுந்தரர், சங்கிலியாரை மணந்து கொண்ட தலமாகும். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் சுந்தரரின் திருமணம் நடந்தேறியது, அப்போது சிவபெருமான் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார்.
இந்த விழா, ‘மகிழடி சேவை’ என்று அழைக்கப்படும். கலிய நாயனாரின் அவதாரத் தலம் என்பதால், இக்கோயிலில் அவருக்கு தனி சந்நிதி உண்டு. பட்டினத்தடிகள் முக்தி பெற்ற தலமாக இத்தலம் விளங்குகிறது. சத்குரு தியாகராஜ சுவாமிகள், வீணை குப்பய்யரின் வேண்டுகோளுக்கு இணங்க திருவொற்றியூர் வடிவுடையம்மன் மீது 5 கீர்த்தனைகளை தெலுங்கு மொழியில் இயற்றியுள்ளார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர், காளமேகப் புலவர், இரட்டைப் புலவர்கள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார், வள்ளலார் போன்றோரும் திருவொற்றியூர் சுவாமி, அம்பாள் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடிவுடையம்மன் வழிபாடு: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் 5, வில்லியநல்லூர் கண்டியூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு அக். 5-ம் தேதி நவசண்டி மஹா யாகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குலதெய்வ குடும்பத்தார், வில்லியநல்லூர், கண்டியூர் கிராமவாசிகள் செய்து வருகின்றனர். கூடுதல் விவரங்களுக்கு 9444042055, 9443001017 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.