ஆனந்த ஜோதி

சண்டிகேஸ்வர நாயனார் முக்தி பெற்ற திருஆப்பாடி

பனசை பாக்யலெஷ்மி

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருஆப்பாடி என்னும் வீராக்கண் திருவாய்பாடியில் மிகப் பழமையான கோயிலில் பெரியநாயகி அம்பாளுடன் பாலுகந்தீஸ்வரர் (பாலுகந்தநாதர்) அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இத்தலம் நாற்பதாவது தலமாகும்.

‘அண்டமார் அமரர் கோமான் ஆதியெம் அண்ணல் பாதம் கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாப ரத்தைக் கண்டவன் தாதை பாய்வான் காலற எறியக் கண்டு சண்டியார்க்கருள் கள் செய்த தலைவர் ஆப்படியாரே’ என்று திருநாவுக்கரசரின் தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது.

எல்லா உலகங்களுமாய், தேவர் தலைவராய், எல்லோருக்கும் ஆதியாய் உள்ள அண்ணலாரின் திருவடிகளை மனத்துள் கொண்டு, மணலால் விசார சருமர் லிங்க வடிவத்தை அமைத்து பூஜை செய்ய, அதனை கண்ட அவர் தந்தையாகிய எச்சதத்தன் சிவபூஜையை அழிக்க ஓடி வருகிறார். விசாரசருமர் அவர் கால்களை வெட்டியதைக் கண்டு, அவருக்கு சண்டீசர் என்ற பதவியை திருஆப்பாடி பெருமான் அருளிச் செய்தார்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பதவி உயர்வு, பணி இடமாற்றம் விரும்புவோர் இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் நன்மைகள் நிறையும் என்பது ஐதீகம். சிவன், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளில் ஒருவரான சண்டிகேஸ்வரர் 63 நாயன்மார்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர். அருகில் உள்ள சேய்ங்களூர் இவரது அவதார தல மாகவும், திருவாய்ப்பாடி முக்தி பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

பாலுகந்தநாதர் மூலஸ்தானத்தின் அருகிலேயே சண்டி கேஸ்வரர் அருள்பாலிப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும். எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமர். இவர் தன் இளம் வயதில் அனைத்தும் கற்றார். ஏழாவது வயதில் குல முறைப்படி உபநயனம் நடந்தது.

சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கன்றுக்குட்டி தன்னை மேய்க்கும் இடையனை முட்ட பாய்ந்தது. உடனே அவன் கம்பால் அடித்தான். இதை கண்டு விசாரசருமர் தானே பசுக்களை மேய்த்தார்.

தாயன்புடன் இவர் மேய்த்ததால் முன்னை விட அவை அதிக பால் கொடுத்தன. விசாரசருமர் எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருந்ததால் மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தார். இருந்தாலும் பசுவின் சொந்தக்காரருக்கு சரியான அளவு பால் கிடைத்து வந்தது. விசாரசருமரின் இந்த செயலை பார்த்து சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர்.

இவரது தந்தையும் இதைக் கேள்விப்பட்டு மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமர் எப்போதும் போல் நீராடி விட்டு, தன் பூஜைகளை தொடர்ந்தார். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தார். இதனைப் பார்த்த தந்தை அவரை அடித்ததுடன் பால்குடங்களையும் தட்டிவிட்டார்.

சிவ பூஜையில் ஆழ்ந்த விசாரசருமர் பூஜைக்கு இடையூறு செய்த தந்தையை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி அவர் கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப் பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமர் மீண்டும் சிவ பூஜையில் ஆழ்ந்தார்.

இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து ‘என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய், இனி நானே உனக்கு தந்தையாவேன்’ என கூறி விசாரசருமரை தன் மார்போடு அணைத்துக் கொண்டார். விசாரசருமரை தன் தொண்டர்களுக்கு எல்லாம் தலைவன் ஆக்கினார். தான் உண்ட அமுது, பரிவட்டம், மாலைகள் யாவும் விசாரசருமருக்கே என்று உரிமையாக்கி சண்டீசர் பதவியும் தந்து தன் சடைமுடியில் இருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து அவருக்கு சூட்டினார் ஈசன்.

SCROLL FOR NEXT