ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் அருகே சேவாரில் உள்ள பிரஜேந்திர பிஹாரிஜி கோயில், வித்தியாசமான கோயிலாக விளங்குகிறது. பொதுவாக கிருஷ்ணர் கோயில்களில், கிருஷ்ணருக்கு ஜோடியாக ராதாவே இருப்பார். ஆனால் இந்தக் கோயிலில் கிருஷ்ணர் ருக்மிணி சத்தியபாமாவுடன் அருள்பாலிகிறார்.
சேவார் கோட்டைக்கு முன்னால் பிரஜேந்திர பிஹாரிஜி கோயில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகாராஜா ஜஸ்வந்த் சிங் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மகாராஜா தனது பேரன் பிரஜேந்திர சிங்கின் பிறப்பை கொண்டாடும் வகையில் கட்டியதாக கூறப்படுகிறது.
பொதுவாக மன்னர்கள் வெற்றியை கொண்டாடும் விதத்தில்தான் கோயில் கட்டுவார்கள். ஆனால் மகாராஜா தனது பேரனின் வருகைக்காக கட்டியதால் இந்த கோயிலில் ஸ்ரீநாத்ஜி கோயிலில் கடைபிடிக்கும் மங்கள ஆரத்தி, சயன ஆரத்திகள் நடக்கின்றன. குழந்தை எட்டு மணி சுமாருக்கு தானே எழுந்திருக்கும். அதனால் காலை 8 மணிக்கு மங்கள ஆரத்தி. மாலையில் 5 மணிக்கு சயன ஆரத்தி நடைபெறும்.
இந்த கோயில் கட்டுவதற்காக பன்ஷி பஹார் பகுதியிலிருந்து சிவப்பு கல் கொண்டு வரப்பட்டது. அதில் செய்த அற்புத சிற்பங்களை கோயிலில் காணலாம். அரண்மனை போன்ற பின்பகுதிக்கு நுழைய நான்கு வழிகள் உள்ளன. அவை ராஜஸ்தானிய வளைவுகளுடன் கூடிய நுழைவு வழிகளாக உள்ளன. அதன் வழியே உள்ளே நுழைந்தால் முதலில் ஒரு பரந்த பகுதி - ஜக்மோகன் பகுதி - அதாவது பிரார்த்தனை பகுதி. அடுத்துள்ள கருவறைக்குள் மூன்று சிலைகள் உள்ளன. நடுவில் கருப்பு நிற கிருஷ்ணன் சிலை.
அவருக்கு இருபுறமும் ருக்மணி, சத்தியபாமா அருள்பாலிக்கின்றனர். அவர்களே லட்சுமியின் வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. ருக்மணி, சத்தியபாமா சிலைகள் வெள்ளை பளிங்கு கல்லில் செய்யப்பட்டுள்ளன. இந்த கோயில் மூலவர் மகாராஜா பேரன் பெயரிலேயே பிரஜேந்திர பிஹாரி என அழைக்கப்படுகிறார். இவர் வேண்டும் வரம் அருளும் இறைவனாக போற்றப்படுகிறார்.
இந்த கிருஷ்ணர் குழந்தை வடிவம் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்பவே தரிசனம். இங்கு கிருஷ்ண ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப் படுகிறது. தேரோட்ட வைபவமும் நடைபெறுகிறது. கோயிலை சுற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். ஒரு வங்கியும் இயங்குகிறது. இந்த வருமானத்தில் கோயில் பிரசாதம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.