உலகத் தரத்துக்கு நிகரான கலாச்சாரம், நாகரீகம், கட்டிடக்கலை ஆகியவற்றில் தமிழர்கள் உயர்ந்து நிற்கின்றனர். அதை பறைசாற்றும் விதமாக கிபி 7-ம் நூற்றாண்டில், நின்ற சீர் நெடுமாறன் ஆட்சியில் உருவாக்கப்பட்ட (தென்காசி மாவட்டம்) திருமலாபுரம் பாசுபதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
பல்லவர் குடவரைக் கோயிலுக்கு மாறுபட்ட முறையில் பாண்டியன் குடவரைக் கோயிலில் சதுர வடிவ ஆவுடையாருடன் லிங்கேஸ்வர மூர்த்தி பாறையிலேயே வெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நின்றசீர் நெடுமாறனின் இயற்பெயர் சேந்தன் மாறன். மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவில் இவரது பெயரால் அமைந்த சேர்ந்தமரம் என்ற ஊருக்கு 2 கிமீ தொலைவில் திருமலாபுரத்தில் இக்கோயில் உள்ளது.
இப்பகுதி முழுவதும் பரவலாக பெரிய குன்றுகள் அமைந்துள்ளதால் பாண்டியர் ஆட்சியில் இந்த உள்நாட்டுப் பிரிவுக்கு கல்லகநாடு எனவும்ஊருக்கு திருமலைபுரம் எனவும் பெயரிடப்பட்டது. வண்ணாச்சிப் பாறை என்ற குன்றின்வடப்புற அடிவாரத்தில் குடவரைக் கோயில் தரையிலிருந்து ஆறடி உயரத்தில் அமைந்துள்ளது. வடக்குப் பார்த்த முன் மண்டபத்துடன் அதன் உள்ளே மேல்புறம் பக்கவாட்டில் கிழக்கு நோக்கிய கருவறையுடன் காணப்படுகிறது.
முன் மண்டப முகப்பில் தோரணவாயில் போன்ற கலையம்சத்துடன் இரு முழுத்தூண்களும் இரு அரைத்தூண்களும் உள்ளன. இத்தூண்கள் மேலேயும், கீழேயும் சதுரமாகவும் நடுவில் எண்பட்டையாகவும் அமைந்துள்ளன. தூணின் மீது வட்ட வடிவில் மலர்ந்த தாமரை, யானை, மீன், காளை முதலியவற்றின் உருவங்கள் உள்ளன. இரு அரைத் தூண்களை ஒட்டி பாறையின் விளிம்பில் இரு தீப மாடங்கள் காணப்படுகின்றன. கருவறை மூலவராக பாசுபதேஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
குருஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையேயான மகாபாரதப் போர் தொடர்ந்து பதினெட்டு நாட்கள் நடைபெற்றது. இதில் கங்கையின் மைந்தனான பிதாமகர் பீஷ்மரை வெல்வதற்காக குந்திதேவியின் மைந்தன் அர்ச்சுனன் பல காலம் ஈசனை தியானித்து பாசுபத அஸ்திரவரம் பெற்றான் என்பது புராண வரலாறு. அவ்வாறு அர்ச்சுனன் தவமிருந்த வனப்பகுதி திருமலாபுரம் என தல வரலாற்றில் சொல்லப்படுகிறது.
அர்ச்சுனனுக்கு அஸ்திர வரம் அளித்த தலம் என்பதைக் குறிக்கும் விதமாக இத்தல ஈசனுக்கு பாசுபதேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டு உள்ளது. முன் மண்டப தரைப்பகுதியில் பாறையிலிருந்தே வெட்டி வடிவமைக்கப்பட்ட பெரிய நந்தி சிற்பம் உள்ளது. முகமண்டப தென் சுவரில் மேற்கிலிருந்து கிழக்காக நின்ற கோலத்தில் விநாயகர், திருமால், நடன கோலத்தில் ஆடல் வல்லான் சிற்பங்கள் உள்ளன.
விநாயகரின் உருவம் நான்கு கரங்களுடன் உள்ளது. மேல் வலக்கரம் பாசத்தையும், மேல் இடக்கரம் அங்குசத்தையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கரம் வயிற்றிலும், கீழ் வலக்கரம் தொடையிலும் உள்ளன. நீண்ட துதிக்கை வயிற்றில் சுருண்டு மோதகத்தை ஏந்தியுள்ளது.
நின்ற கோலத்தில் திருமால் கம்பீரமாக அருள்பாலிக்கிறார். அவரது மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளன. பக்கவாட்டில் உள்ள கீழ் இடக்கரம் இடையின் மீது உள்ளது. கீழ் வலக்கரம் மலரை ஏந்தியுள்ளது. கால்களை சதுர வடிவில் வைத்து ஆடும் நிலையில் இங்குள்ள சிவனின் சிற்பம் விளங்குகிறது. இதனை சதுர தாண்டவம் என்பர்.
இச்சிவனுக்கு நான்கு கரங்கள் உள்ளன. மார்பில்தடித்து உருண்ட புரிநூல் உள்ளது. மேல் இடக்கரம் தோளுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. வலக்கரம் தமருகத்தைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கரம் மிருகசீருட முத்திரை காட்டுகிறது. கீழ் இடக்கரத்தில் மலர் உள்ளது.
கருவறையை நோக்கி கீழ்ப்புற சுவரில் உள்ள பிரம்மாவின் உருவம் இடையில் பஞ்சகச்சம் அணிந்து நின்றகோலத்தில் 4 கரங்களுடன்உள்ளது. மேல் வலக்கரம் கமண்டலத்தையும், மேல் இடக்கரம் அக்கமாலையையும் கீழ் வலக்கரம் புத்தகத்தையும் தாங்கி கீழ் இடக்கரம் இடையின் மீதும் உள்ளன.
இக்குகைக் கோயிலின் மகத்துவமிக்க சிறப்பு இதன் முக மண்டப விதானத்தில் உள்ள வண்ண மூலிகை ஓவியமாகும். இது, கிபி 9-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனின் ஆட்சியில் (காலம் கிபி 815 - 862) ஓவியரான மதுரை ஆசிரியர் இளங்கௌதமன் என்பவரால் அஜந்தா ஓவிய பாணியில் வரையப்பட்ட ஓவியமாகும். முகமண்டப தூண் ஒன்றில் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபதேவன் (காலம் கிபி 1132-1162) கல்வெட்டு உள்ளது.
அமைவிடம்: தென்காசி மாவட்டம், சுரண்டை - கடையநல்லூர் நெடுஞ்சாலையில் 12 கிமீ தொலைவில் உள்ளது.